உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்/36

விக்கிமூலம் இலிருந்து

7

தாயின் வாழ்க்கை ஒரு விசித்திர அமைதியோடு நடந்துகொண்டிருந்தது. சமயங்களில் இந்த அமைதி அவளுக்கு வியப்பூட்டியது. அவளது மகனோ சிறையிலிருந்தான். அவனுக்கு ஒரு கொடிய தண்டனை கிடைக்கும் என்பது அவளுக்குத் தெரியும். என்றாலும் அதைப்பற்றி அவள் நினைக்கின்ற வேளையெல்லாம் அவளையும் அறியாது அந்திரேய், பியோதர், மற்றும் எத்தனைடோர்களுடைய முகங்களும் அவளது மனத்திரையில் நிரம்பித் தோன்றும். மகனின் உருவம் அவளது கண்முன்னால் பிரமாண்டமாகப் பெருகி வளர்ந்து, அவனது விதியில் பங்கெடுக்கும் மற்ற அனைவரையும் தழுவி அணைத்து மறைத்து நிற்பதாகத் தோன்றியது. சிந்தனையினூடே தோன்றும் மற்ற எண்ணங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மகனைப் பற்றிய நினைவை மட்டும் வளர்த்துப் பெருக்குவாள். தட்டுத் தடுமாறிச் செல்லும் அந்த மெல்லிய சிந்தனைக் கதிர்கள் எட்டெட்டுத் திசைகளிலும் சென்று, எல்லாவற்றையும் தொட்டு, சகல தத்துவங்களின் மீதும் ஒளிவீசி, சகல விஷயங்களையும் ஒரு தனி உருவமாக ஒன்றுதிரட்டி ஒருமையாக உருவாக்க முயன்று கொண்டிருந்தன. எனவே அவளது மனம் ஒரே விஷயத்தின் மீது மட்டும் நிலைக்கவில்லை; தன்னுடைய மகனைப்பற்றியே ஏக்கத்தையும் பயத்தையும் மட்டுமே அவள் நினைக்கவில்லை.

சோபியா வந்தவுடனேயே எங்கேயோ சென்று விட்டு ஐந்து நாட்கள் கழித்துத்தான் திரும்ப வந்தாள்; அவள் ஒரே உற்சாகமும் உவகையும் நிறைந்த குதூகலத்தோடு வந்தாள். ஆனால் வந்த சில மணிநேரத்துக்குள்ளாகலே அவள் மீண்டும் போய்விட்டாள்; இரண்டு வாரம் கழித்துத் திரும்பவும் வந்தாள். வாழ்க்கையின் விரிவான வட்டத்தில் அவள் சுழலுவதுபோலத் தோன்றியது. இடையிடையே மட்டும் தனது சகோதரனின் வீட்டை எட்டிப் பார்த்து, அவ்வீட்டை அவள் தனது இசையாலும், உற்சாகத்தாலும் நிறைவுபெறச் செய்வதுபோலத் தோன்றியது. தாய்க்கு வரவர சங்கீதத்தில் விருப்புண்டாயிற்று. அந்தச் சங்கீதத்தை அவள் கேட்கும்போது இத சுகம் தரும் இனிய அலைகள் அவளது மார்பின் மீது மோதி மோதி, இதயத்தைக் கழுவிவிடுவது போலவும், இதயத் துடிப்பை மிகுந்த நிதானத்தோடு சமனப்படுத்துவது போலவும் தோன்றியது: மேலும் நன்றாக நீர்பாய்ச்சியதால், ஆழமாய் வேரோடிப் பாய்ந்த வித்துக்களைப்போல் அவளது சிந்தனைகள் முளைத்துக்கிளைத்துப் பரந்து பரவின, அந்தச் சிந்தனைக் கிளைகள் அந்தச் சங்கீதத்தின் மகிமையால் வார்த்தைகளாகப் பூத்து வெடித்துப் புன்னகை சொரிந்து வெளிப்பட்டன.

சோபியாவின் கச்சிதமின்மையை மட்டும் தாயால் சமாளித்துக் கொண்டு போக முடியவில்லை. சோபியா எப்பொழுதும் தான் குடிக்கும் சிகரெட்டுத் துண்டுகளையும், தனது துணிமணிகளையும் கண்ட கண்ட இடத்தில் தாறுமாறாய் விட்டெறிந்தாள். அவளது ஆரவாரமான பேச்சுக்களைத் தாங்கிக்கொண்டிருப்பதோ தாய்க்கு இதையும் விடச் சிரமமாயிருந்தது. நிகலாயோ தெளிந்த நிதான புத்தியோடும் ஆழ்ந்த பொருளமைதியோடும் தனது வார்த்தைகளை எப்போதும் அளவிட்டு உயிர்கொடுத்துப் பேசுவான்; சோபியாவின் பேச்சோ இதற்கு நேர் எதிர்மறையானதாகத் தாய்க்குத் தோன்றியது. தன்னை மிகவும் பெரியவளாகக் காட்டிக்கொள்ள விரும்பும் ஒரு குமரியைப் போலவே சோபியா நடந்துகொள்வதாகவும், அவள் மற்ற மனிதர்களையெல்லாம் விளையாட்டுச் சாமான்களைப் போலவே கருதுவதாகவும் தாய்க்குத் தோன்றியது. அவள் உழைப்பின் புனிதத்துவத்தைப் பற்றிப் பேசுவாள். ஆனால் தன்னுடைய கச்சிதமின்மையால், தாய்க்கு எப்போதும் அதிகத் தொல்லை கொடுப்பாள்; அவள் சுதந்திரத்தைப்பற்றி காரசாரமாய்ப் பேசுவாள்; என்றாலும் அவள் தனது பொறுமையின்மையாலும், வறட்டு முரண்வாதத்தாலும் பிறரை எப்போதுமே அடக்கியாள விரும்புவதாகவே தாய்க்குத் தோன்றியது. அவளது போக்கு ஒரே முரண்பாடுகள் நிறைந்ததாயிருந்தது, இதைத் தாய் உணர்ந்திருந்ததால், தாய் அவளிடம் எப்போதும் ஜாக்கிரதையாகவே நெருங்கிப் பழகினாள்; நிகலாயிடம் எந்தவிதமான நிரந்தரமான அன்புணர்ச்சி கொண்டிருந்தாளோ. அதே உணர்ச்சி அவளுக்குச் சோபியாவின் மீது ஏற்பட்டவில்லை.

நிகலாய்க்கு எப்போதுமே பிறரைப் பற்றிய சிந்தனைதான்; அந்தச் சிந்தனையோடுதான், அவன் தனது ஒரே மாதிரியான இயந்திர இயக்கம் போன்ற வாழ்க்கையை நடத்திவந்தான். காலையில் எட்டு மணிக்கு அவன் தேநீர் குடிப்பான். தேநீர் குடிக்கும்போதே பத்திரிகையைப் படித்துத் தாயிடம் செய்திகளை எடுத்துக் கூறுவான். அவன் கூறுவதைக் கேட்கும்போது, திடீரென ஓர் உண்மை அவள் உள்ளத்தில் புலனாகிச் சிலிர்க்கும்; வாழ்க்கை என்னும் இந்த மாபெரும் இயந்திரம் எப்படிக் கொஞ்சங்கூட ஈவிரக்கமின்றி மக்களையெல்லாம் அறைத்து நொறுக்கிப் பணமாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதை அவள் உணருவாள். நிகலாய்க்கும் அந்திரேய்க்கும் பல விதத்திலும் ஒற்றுமை இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. ஹஹோலைப் போலவே இவனும் மக்களைப்பற்றிக் குரோத உணர்ச்சியற்றுப் பேசினான்; வாழ்க்கை அமைப்பிலுள்ள குறைபாட்டினால்தான் மக்கள் குற்றவாளியாகிறார்கள் என்றே இவனும் கருதினான். ஆனால் புதிய வாழ்க்கை மீது இவன் கொண்டுள்ள விசுவாசம் அந்திரேயினுடையதைப்போல் அவ்வளவு தீவிரமாகவோ தெளிவாகவோ காணப்படவில்லை. இவன் எப்போதும் ஒரு நேர்மையும் கண்டிப்பும் நிறைந்த நீதிபதியைப்போலத்தான் அடங்கி அமைந்த குரலில் பேசினான். மிகவும் பயங்கரமான விஷயங்களைப் பற்றிப் பேசும்போதுகூட அவனது உதடுகளில் ஒரு சிறு அமைதி நிறைந்த வருத்தப் புன்னகையே நிழலிட்டு மறையும். அந்தச் சமயங்களில் அவனது கண்களும் இளக்கமற்று வக்கிரத்தோடு பிரகாசிக்கும். அந்தக் கண்களில் உள்ள ஒளியைக் காணும்போதெல்லாம் அவளுக்கு ஓர் உணர்ச்சி தோன்றும். இந்த மனிதன் யாரையும் எதையும் மன்னிக்கவே மாட்டான்; இவனால் மன்னிக்கவே முடியாது என்று கருதத் தோன்றும். அவனுக்கே தனது இரக்கமற்ற இந்தத் தன்மை பிடிக்கவில்லை. எனவே அவனுக்காக அனுதாபப்பட்டாள் தாய். அவன் மீது அவள் கொண்டிருந்த பாசம் நாளுக்குநாள் வளர்ந்து வந்தது.

ஒன்பது மணிக்கு அவன் வேலைக்குப் புறப்படுவான். போன பிறகு, அவள் வீட்டையெல்லாம் சுத்தப்படுத்துவாள். பிறகு மத்தியான உணவைத் தயாரிப்பாள். குளித்துவிட்டு, தூய உடைகள் அணிந்து கொள்வாள், தன் அறைக்குள் வந்து உட்கார்ந்து புத்தகங்களைப் புரட்டி அதிலுள்ள படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பாள். அவள் இதற்குள்ளாகவே. புத்தகங்களைப் படிக்கத் தெரிந்துகொண்டிருந்தாலும், மிகுந்த சிரமத்தோடும் அதிக கவனத்தோடும் தான் அவளால் அவற்றைப் படிக்க முடியும். அப்படிப் படித்தாள் அவள் சீக்கிரமே களைப்புற்றுப் போவாள்; ஒரு வார்த்தைக்கும் மறு வார்த்தைக்கும் உள்ள தொடர்பைக் கூட அவளால் உணர முடியாது. குழந்தை படங்களைப் பார்த்துக் குதூகலிப்பது போல அவளும் அப்படங்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாள். அந்தப் படங்களில் அவள் ஒரு புதிய அற்புத உலகைக் கண்டாள்; தொட்டுணர முடிவது போன்ற அந்தப் புதிய உலகத்தை அவள் அந்தப் படங்களிலிருந்து புரிந்துகொண்டாள். அவளது கண்முன்னால் மாபெரும் நகரங்களும் அழகிய கட்டிடங்களும், யந்திரங்களும். கப்பல்களும், ஞாபகச் சின்னங்களும், இன்னும் மனிதக் கரங்கள் சிருஷ்டித்த எத்தனை எத்தனையோ பொருட்செல்வங்களும் தோன்றின; அந்தப் படங்களில் அவள் இயற்கையின் படைப்பாற்றலைக் கண்டாள். பல்வேறு விதமான இயற்கைக் காட்சிகள் அவள் மனத்தைத் திகைக்க வைத்தன. வாழ்க்கை என்பது எல்லையற்று விரிந்து பெருகிக் கொண்டிருந்தது. கண்ணின் முன்னால் அவள் இதுவரையில் அறிந்திராத ஒர் அதிசயத்தை ஒரு மகோந்நதத்தை எடுத்துக் காட்டியது. அது அவளது விழிப்புற்ற இதய தாகத்திலே தனது குறையாத அழகாலும் அமோகமான வளத்தாலும் நிறைவைப் பொழிந்து கிளர்ச்சியுறச் செய்தது. விலங்கு இனங்களை விளக்கும் சித்திரப் புத்தகத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்வதில் அவளுக்கு ஒரு தனி ஆனந்தம். புத்தகம் அன்னிய மொழியிலிருந்த போதிலும், அந்தச் சித்திரங்களிலிருந்தே அவள் இந்தப் பூலோகத்தின் விசாலத்தையும், அழகையும் செல்வத்தையும் உணர்ந்தறிய முடிந்தது.

“அம்மாடி! இந்த உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது! என்று அவள் ஒரு நாள் நிகலாயிடம் வியந்து போய்க் கூறினாள்.

அவளுக்குப் பூச்சி பொட்டுக்களின் சித்திரங்களைப் பார்ப்பதில் பேரானந்தம்: அதிலும் வண்ணாத்திப் பூச்சிகளைக் காண்பதில் ஓர் அலாதி ஆசை. அவற்றின் சித்திரங்களை வியப்போடு பார்த்துக்கொண்டே அவள் பேசுவாள்.

“நிகலாய் இவானவிச்! இவை அழகாயில்லை? இந்த மாதிரியான அற்புத அழகு எங்கெங்கெல்லாம்தாம் பரந்து கிடக்கிறது. ஆனால், நமது கண்ணுக்கு அவை படுவதேயில்லை; நாம் அவற்றைக் கவனிக்காமலேயே விட்டுவிடுகிறோம். எதையுமே அறிந்து கொள்ளாமல், தங்களது கண்களைக் குளிரவைக்கும் காட்சிகளைக் காணாமல், அவற்றைத் தெரிந்து கொள்வதற்கு நேரம் இல்லாமல், ஆசை கூட இல்லாமல் மனிதர்கள் பரபரத்துத் திரிகிறார்கள். இந்த உலகத்திலே எத்தனை செல்வங்கள் இருக்கின்றன. எத்தனை எத்தனை அற்புதமான உயிரினங்கள் இருக்கின்றன என்பதை மட்டும் நாம் தெரிந்துகொண்டால் நமக்கு எவ்வளவு ஆனந்தம் ஏற்படும்? ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவருக்காக இருக்கிறது. ஒவ்வொன்றும் எல்லோருக்காகவும் இருக்கிறது —- நான் சொல்வது சரிதானே?’

“ஆமாம். ரொம்ப சரி” என்று புன்னகை செய்துகொண்டே கூறிய நிகலாய் தாய்க்கு இன்னொரு படப் புத்தகத்தைக் கொண்டுவந்து கொடுத்தான்.

இரவு நேரங்களில் அவனைப் பார்க்க எத்தனையோ பேர் வந்து போவார்கள். அவனது விருந்தாளிகளில் சிலர் முக்கியமானவர்கள். அலெக்சி வசீலியவிச்- அவன் வெளுத்த முகமும் கறுத்த தாடியும் கொண்டவன். அழகானவன்; ஆனால் மிகுந்த அழுத்தமும் அடக்கமும் கொண்ட ஆசாமி. ரமான் பெத்ரோவிச் — பருக்கள் நிறைந்த உருண்ட முகத்தை உடையவன்: எதற்கெடுத்தாலும் கசந்துபோய் நாக்கை அடிக்கடி சப்புக் கொட்டுவான். இவான் தனீல்விச்—மெலிந்து ஒடுங்கிய குள்ளப் பிறவி. கூரிய தாடியும் மெலிந்த குரலும் உடையவன்; அவசரமாக கீச்கீச்சென்றும் குத்தலாகத் துளைத்துத்துளைத்தும் பேசுவான். இகோர்மூமூ இவன் தன் உடம்பிலே வளர்ந்துவரும் நோயை நினைத்தும், தன் தோழர்களைப் பார்த்தும், தன்னைப் பார்த்ததுமே எப்போதும் சிரித்த வண்ணமாயிருப்பான். எங்கெங்கோ தூரத்தொலை நகரங்களிலிருந் தெல்லாம் பலரும் அங்கு வந்து போவதுண்டு. நிகலாய் அவர்களோடு நெடுநேரம் அமைதியாகப் பேசுவான். ஆனால் அவன் பேசுவதோ ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்—உலகத் தொழிலாளி மக்கள் பற்றித்தான்! அவர்கள் விவாதிப்பார்கள்; விவாத வேகத்தால் உத்வேகம் பெற்றுக் கைகளை ஆட்டிக்கொள்வார்கள்; அமிதமாகத் தேநீர் பருகுவார்கள். ஒரு புறத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நிகலாய் என்னென்ன அறிக்கைகள் வெளியிட வேண்டும் என்பதை யோசித்து எழுதுவான். பிறகு அவற்றைத் தன் தோழர்களிடம் வாசித்துக் காட்டுவான், அவர்கள் உடனே அந்த அறிக்கையினைப் பிரதி எடுத்துக்கொள்வார்கள்; அதன் பிறகு அவனால் கிழித்துப் போடப்பட்ட நகல் காகிதப் பிரதிகளின் துண்டு துணக்குகளையெல்லாம் பொறுக்கியெடுத்து அவற்றை எரித்துப் பொசுக்கிவிடுவாள் தாய்.

அவர்களுக்குத் தேநீர் பரிமாறும்போதே தாய் அவர்களைப் பார்ப்பாள்; தொழிலாளி மக்களின் வாழ்க்கைப் பற்றியும், விதியைப் பற்றியும். அவர்களுக்கு எப்படி உண்மையை மேலும் சிறப்பாகவும் விரைவாகவும் உணர்த்தி, அவர்களது உள்ளங்களை ஒன்றுபட்டு ஓரணியில் நிற்கச் செய்வது என்பதைப் பற்றியும் அவர்கள் உற்சாகத்துடன் பேசுவதைக் கண்டு தாய் வியப்படைவாள். அவர்கள் அடிக்கடி கோபாவேசமடைந்து பல்வேறு அபிப்பிராயங்களையும் ஆதரித்துப் பேசுவார்கள்; ஒருவரையொருவர் கடுமையாகவும் கண்டிப்பாகவும் குறை கூறிக்கொள்வார்கள், ஒருவருக்கொருவர் மனம் புண்படும்படி பேசுவார்கள்; காரசாரமாக விவாதிப்பார்கள்.

அவர்கள் அறிந்துகொண்டதை விட... தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றித் தனக்கே அதிகம் தெரியும் என்று உணர்ந்தாள் தாய். அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பணியின் மகத்துவத்தை அவர்களைவிடத் தானே தெள்ளத் தெளிவாகக் காண்பது போல அவளுக்குத் தோன்றியது. இந்த உணர்ச்சியால், கணவன், மனைவிக்கிடையே நிலவும் உறவு என்னவென்று அறியாத குழந்தைகள், கணவன் மனைவி விளையாட்டு விளையாடுவதைப் பார்ப்பது போலத் தான் அவள் அவர்களைப் பார்த்தாள். தன்னையுமறியாமலே அவள் அவர்களது பேச்சை பாவெல், அந்திரேய் முதலியோரது பேச்சுக்களோடு ஒப்பிட்டுப்பார்த்தாள். அந்த ஒப்பு நோக்கினால் இரண்டுக்கும் ஏதோ வித்தியாசம் இருப்பது போலத் தோன்றினாலும், அது என்ன என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை. சமயங்களில், தான் குடியிருந்த தொழிலாளர் குடியிருப்பிலுள்ள வீட்டில் பேசுவதைவிட, இவர்கள் ஒரேயடியாய் உரத்துக் கூச்சலிட்டுப் பேசுவதுபோல் அவளுக்குத் தோன்றியது. அதற்குத் தனக்குத் தானே விளக்கமும் கூறிக்கொண்டாள்.

“இவர்களுக்கு அதிக விஷயம் தெரியும்; எனவே அதிகமாகச் சத்தம் போட்டுப் பேசுகிறார்கள்; அவ்வளவுதான்.”

ஆனால் அடிக்கடி அவள் மனத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. அந்த மனிதர்கள் வேண்டுமென்றே ஒருவரையொருவர் கிண்டிக் கிளறிவிட்டுப் பேசுவதாகவும், தங்களது ஆர்வத்தை வேண்டுமென்றே பெரிதாக வெளிக்காட்டிக் கொள்வதாகவும். ஒவ்வொருவனும் மற்றவனைவிட, நான்தான் உண்மையை நன்கு உணர்ந்து அதைச் சமீபத்துவிட்டதாக நிரூபிக்க முயல்வது போலவும், அப்படி ஒருவன் பேசும் போது, மற்றவர்கள் ஒவ்வொருவரும் தாம்தான் உண்மையை நெருங்கி, அதை தெளிவாக உணர்ந்துவிட்டதுபோல் காரசாரமாக, உத்வேகத்தோடு பேசிக்கொள்வது போலவும் தாய்க்குத் தோன்றியது. ஒவ்வொருவனும் அடுத்தவனைவிட ஒருபடி மேலே தாவிச் செல்ல விரும்புவது போல் அவள் மனத்தில் பட்டது; இந்த உணர்ச்சி அவளது மனத்தில் ஒரு சோகச் சலனத்தை ஏற்படுத்தியது. துடிதுடிக்கும் புருவங்களோடும் இரங்கிக் கேட்கும் கண்களோடும் அவர்களைப் பார்ப்பாள். பார்த்தவாறே தனக்குத் தானே நினைத்துக் கொள்வாள்;

“இவர்கள் அனைவரும் பாஷாவையும், அவனது தோழர்களையும் மறந்தே போய்விட்டார்கள்....”

அவர்களது விவாதங்கள் அவளுக்குப் புரியாவிட்டாலும் அவள் அவற்றைக் கவனமாகக் கேட்டாள். ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உணர்ச்சியைத்தான் அவள் உணர முயன்றாள். எது நல்லது என்பதைப் பற்றித் தொழிலாளர் குடியிருப்பில் பேச்செழுந்த காலங்களில் ஏதோ ஒரு முழு உருவம் போல் கருதி அனைவரும் அதை ஒப்புக்கொள்வார்கள்; ஆனால் இங்கு இவர்கள் அதைப் பற்றிப் பேசும்போதோ அந்த நல்ல தன்மை துண்டு பட்டுச் சிதறி, சிறுமையடைந்து போவதுபோல் அவளுக்குத் தோன்றியது. அங்கு அவர்களது உணர்ச்சிகளோ ஆழமும் உறுதியும் வாய்ந்தனவாயிருந்தன, இங்கோ, இவர்களது உணர்ச்சியோ வக்கிர புத்தி படிந்து, எதையுமே வெட்டிப் பேசுவதாக இருந்தது. இங்கு இவர்கள் பழமையைத் தகர்த்தெறிவதைப் பற்றித்தான் அதிகமாகப் பேசினார்கள், அவர்களோ புதுமையை உருவாக்குவதைப் பற்றியே அதிகமாகக் கனவு கண்டார்கள். இந்தக் காரணத்தினால்தான் அவளது மகனது பேச்சும் அந்திரேயின் பேச்சும் மிகுந்த ஆழம் பொருந்தியதாகவும், அவளுக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் இருந்தன.

தொழிலாளர்களிடமிருந்து யாரேனும் நிகலாயைப் பார்க்க வந்தால் அவன் அவர்களிடம் மெத்தனமாகவும் அநாயாசமாகவும் நடந்து கொள்வதையும் அவள் கண்டாள். அவனது முகத்தில் இனிமை ததும்பும் ஒரு நயபாவம் தோன்றும்; அவனும் ஏதோ இயற்கைக்கு மாறான மாதிரி அவர்களிடம் இஷ்டப்படியெல்லாம் சில நேரங்களில் கவனக்குறைவாகவும் சில நேரங்களில் கொச்சையாகவும் பேசுவான்.

“இப்படிப் பேசினால்தான் அவர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறான் போலிருக்கிறது என்று அவன் தனக்குள் நினைத்துக் கொள்வாள்.

ஆனால் இந்த எண்ணம் - மட்டும் அவளைத் திருப்திப்படுத்தவில்லை. அவனைப் பார்க்க வந்த தொழிலாளியும் அவனிடம் மனம் விட்டுப் பேசாமல், எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டே பேசுவதாக அவளுக்குத் தோன்றியது. சாதாரணத் தொழிலாளி குடும்பப் பெண்ணான அவளோடு எவ்வளவு லகுவாகவும் தாராளமாகவும் அந்தத் தொழிலாளி பேசினானோ, அதே மாதிரி நிகலாயிடம் அவன் மனம் விட்டுப்பேசக் காணோம். ஒரு தடவை நிகலாய் அந்த அறையை விட்டுச் சென்ற சமயத்தில் அவள் வந்திருந்த இளைஞனைப் பார்த்துப் பேசினாள்:

“நீ எதற்காகப் பயப்படுகிறாய்? நீ என்ன உபாத்தியாயரிடம் பாடம் ஒப்புவிக்கின்ற சிறுவனா? இல்லையே!”

அந்த இளைஞன் பல்லைக் காட்டிச் சிரித்தான்.

“பழக்கப்படாத இடத்தில் நண்டும் கூட முகம் சிவக்கும்.. என்ன இருந்தாலும், இவர் நம்மைப் போன்றவரில்லையே”.

சமயங்களில் சாஷா வருவாள். அவள் வந்தால் வெகுநேரம் தங்க மாட்டாள். சிரிப்பே இல்லாமல் வந்த விஷயத்தைப் பற்றி மட்டுமே அவள் எப்போதும் பேசுவாள். போகும்போது தாயிடம் மாத்திரம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுப் போவாள்.

“பாவெல மிகலாய்லவிச் எப்படியிருக்கிறான்?”

“சௌக்கியமாய்த்தானிருக்கிறான்; சந்தோஷமாகத்தான் இருக்கிறான், எல்லாம் கடவுள் அருள்!”

“நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள்” என்று சொல்லி விட்டு, உடனே மறைந்து விடுவாள் சாஷா.

ஒரு முறை. பாவெலை விசாரணை செய்யாமலே அவனை அதிக காலமாகக் காவலில் வைத்திருப்பதைப் பற்றி அவளிடம் தாய் புகார் கூறினாள். சாஷா முகத்தைச் சுழித்தாள். எதுவும் பேசவில்லை ; எனினும் அவளது கை விரல்கள் மட்டும் முறுகிப் பிசைந்து கொண்டன.

தாய்க்கு அவளிடம் அந்த விஷயத்தைச் சொல்லிவிடவேண்டும் என்ற ஆசை எழுந்தது;

‘அடி, கண்ணே, நீ அவனைக் காதலிப்பது எனக்குத் தெரியும்.”

ஆனால் அதைச் சொல்வதற்கு அவளுக்குத் துணிவில்லை. அந்தப் பெண்ணின் அழுத்தம் நிறைந்த முகமும், இறுகிய உதடுகளும், வெட்டு ஒன்று துண்டு இரண்டாக விஷயத்தைப் பற்றி மட்டும் பேசும் அவளது பேச்சும் தாயின் மனத்தில் எழும் அன்புணர்ச்சியை எதிர்த்துத் தள்ளின. எனவே அவள் பெருமூச்செறிந்தவாறே தன் கையினால் சாஷாவின் கையை அழுத்திப்பிடிப்பாள், தனக்குள்ளாகவே நினைத்துக் கொள்வாள்;

“அடி, என் கண்ணே! நீ ஒரு துர்ப்பாக்கியசாலி....”

ஒரு நாள் நதாஷா வந்தாள். வந்த இடத்தில் தாய் இங்கு வந்திருப்பதைக் கண்டு அவளுக்கு ஒரே பேரானந்தம். அவள் தாயை அணைத்து முத்தமிட்டாள். பிறகு திடீரென்று அமைதி நிறைந்த குரலில் பேசினாள்:

“என் அம்மா செத்துப்போனாள். பாவம், செத்துப் போனாள்....”

அவள் தன் தலையை நிமிர்த்திச் சிலுப்பிவிட்டு, கண்களை விருட்டென்று துடைத்துவிட்டுக்கொண்டு பேசினாள்.

‘பாவம்! அவளுக்கு இன்னும் ஐம்பது வயது கூட நிறையவில்லை அவள் இன்னும் ரொம்ப நாளைக்கு உயிர் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவள் வாழ்ந்து வந்த வாழ்க்கையை விட, அவள் செத்துப்போனதே நல்லது என்றுதான் எனக்குப் படுகிறது. அவள் தன்னந்தனியாளாக, பக்கத்திலே யார் துணையுமின்றி யாருக்கும் தேவையற்றவளாக எப்போது பார்த்தாலும் என் தந்தையின் அதட்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளானவாறே வாழ்ந்தாள். இந்த மாதிரிப் பிழைப்பை வாழ்வென்று சொல்லமுடியுமா? மற்றவர்கள் ஏதேர் நல்ல காலம் வரத்தான் போகிறது என்ற நம்பிக்கையிலாவது வாழ்கிறார்கள். ஆனால் என் தாயோ நாளுக்கு நாள் அதிகப்படியான வசவுகளைக் கேட்டுக்கொண்டிருப்பதைத் தவிர, வேறு எதையுமே எதிர்பார்க்க முடியவில்லை. அந்த நம்பிக்கை அவளுக்கு இல்லை.”

“நீங்கள் சொல்வது உண்மை, நதாஷா!” என்று சிந்தித்தவாறே சொன்னாள் தாய். “நல்ல காலத்தை எதிர்பார்த்துத்தான் ஜனங்கள் வாழ்கிறார்கள். எந்தவித நம்பிக்கையுமே இல்லாவிட்டால், அது எந்த வாழ்வோடு சேர்த்தி?” அவள் அந்தப் பெண்ணின் கையைத் தட்டிக் கொடுத்தாள்: “அப்படியென்றால் நீங்கள் இப்போது தனியாகத்தான் இருக்கிறீர்கள். இல்லையா?”

“ஆமாம். தன்னந் தனியாகத்தான்” என்று லேசாகச் சொன்னாள் நதாஷா.

“அது சரி” என்று ஒரு கணம் கழித்துப் புன்னகை புரிந்தவாறே சொன்னாள் தாய். ‘நல்லவர்கள் என்றுமே அதிக நாட்கள் தனியாக வாழ்வதில்லை. நல்லவர்களோடு மற்றவர்கள் வந்து எப்போதுமே ஒட்டிக்கொள்வார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/36&oldid=1293142" இலிருந்து மீள்விக்கப்பட்டது