உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்/38

விக்கிமூலம் இலிருந்து

9

எப்போதும் வேலையிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு வீடு திரும்பி வரும் நிகலாய், ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக நேரம் கழித்துத் திரும்பி வந்தான். வந்தவன் தன்னுடைய உடுப்புகளைக்கூட, களையாமல் கைகளைப் பதறிப்போய் பிசைந்துகொண்டே சொன்னான்;

“நீலவ்னா! நம்முடைய தோழர்களில் ஒருவன் சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டானாம். யாராயிருக்கலாம்? என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை....”

தாயின் உடம்பு ஆட்டம் கண்டு அசைந்தது.

“பாவெலாயிருக்குமோ?” என்று ஓர் ஆசனத்தில் உட்கார்ந்துக் கொண்டே மெதுவாகக் கேட்டாள் அவள்.

“இருக்கும்!” என்று தோளை அசைத்துக்கொண்டே சொன்னான் நிகலாய்: “ஆனால் அவனை மறைத்து வைப்பதற்கு நாம் என்ன செய்வது? அவனை எங்கே கண்டுபிடிப்பது? அவனைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு நான் தெருத் தெருவாய்ச் சுற்றி அலைந்தாய்விட்டது; அலைந்தது முட்டாள்தனம்தான். ஆனால், நாம் ஏதாவது செய்தாக வேண்டுமே. நான் பழையபடியும் போகிறேன்....”

‘நானும் வருகிறேன்’ என்று கத்தினாள் தாய்.

“நீங்கள் இகோரிடம் போய், அவனுக்கு ஏதாவது விஷயம் தெரியுமா? என்று தெரிந்துகொண்டு வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, அவன் அவசர அவசரமாக வெளியேறினான்.

தாய் தன் தலை மீது ஒரு சவுக்கத்தை எடுத்துப் போர்த்திக்கொண்டு அவனைத் தொடர்ந்து தெருவுக்கு விரைந்து சென்றாள்; அவள் மனத்தில் நம்பிக்கை நிறைந்திருந்தது. அவளது கண்கள் செவ்வரி படர்ந்து அசைந்தன; அவளது இதயம் படபடத்துத் துடித்து., ஒடுகின்ற மாதிரி அவளை வேகமாக விரட்டியடித்தது. அவள் தன் தலையைக் குனிந்தவாறே எதிரிலுள்ள எவற்றையுமே பார்க்காமல் நான் எதிர்பார்த்துச் செல்வதை எதிரே கண்டுவிடலாம் என்ற எண்ணத்தோடேயே சென்று கொண்டிருந்தாள்.

“நான் அங்கே அவனைக் கண்டுவிட்டேன் என்றால்!”— அவளது இந்த நம்பிக்கையே அவளை விரட்டி விரட்டி முன்னேறச் செய்தது.

பொழுது உஷ்ணமாயிருந்தது. அவளும் களைத்துப்போய் மூச்சுவிடத் திணறினாள். இகோரின் வீட்டுப் படிக்கட்டுக்குச் சென்றவுடன் அவளால் ஒரு அடி கூட முன்னே செல்ல முடியவில்லை. அவள் நின்றாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். திடீரென ஒரு கூச்சலிட்டுக் கண்களை மூடிக்கொண்டுவிட்டாள். அந்த வீட்டு வாசலில், தனது பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக்கொண்டு நிகலாய் வெஸோவிஷிகோவ் நிற்பது போலத் தோன்றியது! அவள் மீண்டும்பார்த்தபோது அங்கு யாரையுமே காணோம்.

‘இது என் மனப் பிராந்திதான்!’ என்று நினைத்துக்கொண்டே படியேறினாள். காதுகளைத் தீட்டிக் கேட்டாள். வெளிமுற்றத்தில் யாரோ மெல்ல மெல்ல நடக்கும் காலடியோசை அவள் காதில் விழுந்தது. அவள் படியேறி மேலே சென்று, கீழே பார்த்தாள். மீண்டும் அதே முகம். அதே அம்மைத் தழும்பு. விழுந்த முகம் தன்னைப் பார்த்ததும் புன்னகை புரிந்தவாறு நிற்பதைக்கண்டாள்.

“நிகலாய்! நிகலாய்!” என்று கத்திக்கொண்டே ஏமாற்றத்தால் வேதனையடைந்த இதயத்தோடு அவனை நோக்கி ஒடினாள். “நீ போ போ” என்று தன் கையை ஆட்டிக்கொண்டே அமைதியாகச் சொன்னான் அவன்.

அவள் விடுவிடென்று மாடிப் படியேறி இகோரின் அறைக்கு வந்தாள். அங்கு அவன் ஒரு சோபாவில் படுத்திருப்பதைக் கண்டாள்.

“நிகலாய் ஓடி வந்துவிட்டான் சிறையிலிருந்து” என்று அவள் திக்கித் திணறினாள்.

“எந்த நிகலாய்?” என்று கரகரத்த குரலில் கேட்டுக்கொண்டே தலையணையிலிருந்து தலையைத் தூக்கினான்; “இரண்டு நிகலாய் இருக்கிறார்களே”

“வெஸோவ்ஷிகோவ் அவன் இங்கே வந்து கொண்டிருக்கிறான்.

“சபாஷ்!”

இந்தச் சமயத்தில் நிகலாய் வெஸோவ்ஷிகோவே அறைக்குள் வந்து விட்டான். உள்ளே வந்ததும் அவன் கதவைத் தாழிட்டான்; தன் தொப்பியை எடுத்துவிட்டு, தலையைத் தடவிக்கொடுத்தான். லேசாகச் சிரித்துக்கொண்டே நின்றான். இகோர் முழங்கைகளை ஊன்றி எழுந்து கொண்டு, தலையை அசைத்தவாறு சொன்னான்:

“வருக, வருக....”

நிகலாய் பல்லைக் காட்டிப் புன்னகை புரிந்தவாறே தாயிடம் நெருங்கி அவள் கையைப் பற்றினான்.

“நான் மட்டும் உன்னைச் சந்தித்திராவிட்டால், மீண்டும் சிறைக்கே திரும்பி போயிருப்பேன். எனக்கு நகரில் யாரையுமே தெரியாது. தொழிலாளர் குடியிருப்புக்குத் திரும்பிப் போயிருந்தாலோ ஒரே நிமிஷத்தில் அவர்கள் என்னைப் பிடித்திருப்பார்கள். ஏனடா முட்டாள் தனமாய் சிறையிலிருந்து தப்பியோடி வந்தோம் என்று நினைத்துக்கொண்டு அங்குமிங்கும் சுற்றித் திரிந்தேன். திடீரென்று நீலவ்னா தெரு வழியாக ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். உடனே அவளுக்குப் பின்னாலேயே நானும் ஓடி வந்தேன்.

“சரி, நீ எப்படி வெளியே வந்தாய்?” என்று கேட்டாள் தாய்.

அவன் அந்தச் சோபாவின் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு தோளைக் குலுக்கிக்கொண்டு பேசத்தொடங்கினான்.

“சந்தர்ப்ப விசேஷம்தான்! கிரிமினல் கைதிகள், சிறையதிகாரியைப் பிடித்து உதைத்துக்கொண்டிருந்தார்கள், அப்போது நான் காற்று வாங்கியவாறு வெளியே உலாவிக்கொண்டிருந்தேன். அந்தச் சிறையதிகாரி ஒரு தடவை எதையோ திருடினான் என்பதற்காக, அவனுக்குப் போலீஸ் படையிலிருந்து கல்தா கொடுத்தார்கள். இப்போதோ இந்தப் பயல் ஒவ்வொருத்தனையும் நோட்டம் பார்த்துத் திரிவதும், உளவு சொல்வதுமாகவே இருந்தான். இவனால் யாருக்குமே நிம்மதி கிடையாது. எனவேதான் அவர்கள் அவனைப் பிடித்து மொத்தினார்கள். ஒரே குழப்பமாக இருக்கவே. சிறையதிகாரிகள் விசில்களை ஊதிக்கொண்டு நாலா பக்கங்களிலிருந்தும் ஓடி வந்தார்கள். நான் சிறைக் கதவுகள் திறந்து கிடப்பதைப் பார்த்தேன். அதற்கு அப்பாலுள்ள மைதானச் சவுக்கத்தையும் ஊரையும் பார்த்தேன்; மெதுவாகக் கனவில் நடப்பது மாதிரி நடந்து வெளியே வந்தேன். தெருவுக்குள் பாதி தூரத்துக்கு மேல் வந்த பிறகுதான் எனக்கே நினைவு தெளிந்தது. உடனே யோசித்தேன், எங்கே போவது? திரும்பிப் பார்த்தேன். அதற்குள் சிறைக் கதவுகள் மூடிவிட்டதைக் கண்டேன்....”

“ஹூம்!” என்றான் இகோர். “ஏன் ஐயா! நீங்கள் பேசாமல் திரும்பிப் போய்க் கதவைத் தட்டி, அவர்களைக் கூப்பிட்டு, ‘ஐயா, என்னை மன்னியுங்கள். கனவான்களே! நான் ஏதோ சிறு பிழை செய்துவிட்டேன். பொறுத்தருளுங்கள்” என்று சொல்லிப் பழையபடியும் உள்ளே போயிருக்கலாமே.

“ஆமாம்” என்று கூறிச் சிரித்தான் நிகலாய். “அது முட்டாள்தனம். யாரிடமும் எதுவும் சொல்லாமல் நான் இப்படி ஓடிவந்துவிட்டதானது, என்னுடைய தோழர்களுக்குச் சரியென்று பட்டிராது. சரி அப்படியே போய்க்கொண்டிருந்தேன். எதிரே ஒரு சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. ஒரு குழந்தையைப் புதைப்பதற்காகப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களோடு நானும் சேர்ந்து, சவப்பெட்டிக்குப் பக்கமாகச்சென்று என் தலையைத் தொங்கவிட்டவாறு. யாரையுமே நிமிர்ந்து பார்க்காமல் நடந்துவந்தேன். இடுகாட்டில் நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து காற்று வாங்கினேன். அப்புறம் திடீரென எனக்கு ஒரு யோசனை வந்தது....”

‘ஒரே ஒரு யோசனைதானே?” என்று கேட்டு விட்டு, பெருமூச்செறிந்தான் இகோர். “உன் தலையிலே பல யோசனைகளுக்குத் தான் இடமிருக்காதே என்று நினைத்தேன்.”

வெஸோவ்ஷிகோவ் வாய் நிறைந்து சிரித்தான்; தலையை அசைத்துக் கொண்டு பேசினாள்;

“ஓ என் மூளை முன்னை மாதிரி காலியாய் இல்லை! என்ன இகோள் இவானவிச்! உனக்கு இன்னும் சிக்குக் குணமாகவில்லையா?”

“ஒவ்வொருவரும் தம்மால் முடிந்ததைச் செய்கிறார்கள்” என்று ஈரமாய் இருமியவாறு பதிலளித்தான் இகோர்; “சரி உன் கதையை ஆரம்பி”

“அப்புறம் நான் இங்கே இருக்கிற பொதுஜனப் பொருட்காட்சி சாலைக்குள்ளே நுழைந்தேன். உள்ளே சென்று, அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தவாறே யோசித்தேன்; இனிமேல் எங்கே போவது? என்மீது எனக்குக் கோபம் கூட வந்தது. அத்துடன் பசி வேறே! மீண்டும் தெருவுக்கு வந்தேன். மனமே கசந்து போய், எரிச்சலோடு நடந்து வந்தேன். போலீசார் ஒவ்வொருவரையும் கூர்ந்து. கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன், “சரிதான், என்னை மாதிரி மண்னுறுப் பிறவியாக இருந்தால். நான் சிறிது நேரத்தில் எவனாவது ஒரு நீதிபதி முன்னால்தான் இழுத்துப் செல்லப்படுவேன்” என்று நினைத்தேன். இந்தச் சமயத்தில் திடீரென்று என்னை நோக்கி நீலவ்னா ஓடிவருவது தெரிந்தது. நான் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றேன்; பிறகு அவளைப் பின் தொடர்ந்தேன். இவ்வளவுதான் விஷயம்”

“நான் உன்னைப் பார்க்கவில்லையே!” என்று குற்றம் செய்து விட்டவள் மாதிரிக் கூறினாள் தாய். அவள் நிகலாயைக் கூர்ந்து பார்த்தாள்; அவன் முன்னை விட மெலிந்துபோய் இருப்பதாக அவளுக்குப்பட்டது.

“அங்குள்ள தோழர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்” என்று தலையைச் சொறிந்துக்கொண்டே சொன்னான் நிகலாய்.

‘சரி, சிறை அதிகாரிகளைப் பற்றி உனக்குக் கவலை இல்லையா? அவர்கள்மீது உனக்கு அனுதாபம் கிடையாதா? அவர்களும்தான் கவவைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்” என்றான் இகோர். அவன் வாயைத் திறந்து உதடுகளை அசைத்தான், காற்றையே கடித்துச் சுவைத்துத் தின்பது மாதிரி இருந்தது அவனது வாயசைப்பு. ‘சரி, வேடிக்கைப் பேச்செல்லாம் இருக்கட்டும், முதலில் உன்னை எங்காவது ஒளித்து வைக்க வேண்டுமே. அது ரொம்ப நல்ல காரியம்தான்; ஆனால் லேசில் நடக்கிற காரியமா? நான் மட்டும் எழுந்து நடக்க முடிந்தால்” அவன் பெருமூச்சு விட்டவாறே தன் கைகளை மார்பின் மீது வைத்து, நெஞ்சைத் தடவிக் கொடுத்துக் கொண்டான்.

“நீ ரொம்பச் சீக்காயிருக்கிறாய், இகோர் இவானவிச்!” என்று தலையைத் தாழ்த்திக்கொண்டே, கூறினான் நிகலாய். தாய் பெருமூச்சு விட்டாள். அந்த அடைசலான சிறு அறையை கவலையோடு பார்த்தாள்.

“அது என் சொந்த விஷயம்” என்றான் இகோர். ‘அம்மா, நீங்கள் அவனிடம் பாவெலைப் பற்றிக் கேளுங்கள். சும்மா இன்னும் பாசாங்கு செய்துகொண்டிராதீர்கள்”

“நிகலாய் பல்லைக் காட்டிச் சிரித்தான்.

‘பாவெல் நன்றாகத்தான் இருக்கிறான், சௌக்கியமாயிருக்கிறான், அவன்தான் எங்களுக்குத் தலைவன் மாதிரி இருக்கிறான்; அதிகாரிகளோடு பேசுகிறான்: பொதுவாக, அவன்தான் உத்தரவு போடுகிறான். எல்லோரும் அவனை மிகவும் மதிக்கிறார்கள்.

நிகலாய் வெஸோவ்ஷிகோவ் சொல்வதைக் கேட்டவாறே தலையை அசைத்துக்கொண்டாள் தாய். நீலம் பாரித்து உப்பியிருந்த இகோரின் முகத்தையும் கடைக்கண்ணால் பார்த்தாள். அந்த முகமே அசைவற்று. உணர்ச்சியற்றுத், தட்டையாயிருப்பது போலத் தோன்றியது அவளுக்கு. அவனது கண்கள் மட்டும்தான் உணர்ச்சியோடும் உவகையோடும் ஒளி வீசிக்கொண்டிருந்தன.

“ஏதாவது தின்னக் கொடுங்களேன்—எனக்கு இருக்கிற அகோரப் பசியை உங்களால் கற்பனை கூடப் பண்ண முடியாது” என்று திடீரெனச் சொன்னான் நிகலாய்.

“அம்மா.. அதோ அரங்கிலே கொஞ்சம் ரொட்டி இருக்கிறது” என்றான் இகோர். “அப்புறம் வெளியே ஹாலுக்குப் போய், இடது புறம் இருக்கும். இரண்டாவது கதவைத் தட்டுங்கள். ஒரு பெண் வந்து திறப்பாள். அவளை இங்கே வரச்சொல்லுங்கள், வரும்போது தின்பதற்கு என்னென்ன இருக்கிறதோ. அதையெல்லாம் கொண்டுவரச் சொல்லுங்கள்.”

“எல்லாவற்றையும் ஏன் கொண்டுவரச் சொல்கிறாய்?” என்று கேட்டான் நிகலாய்.

“நீ ஒன்றும் கவலைப்படாதே. அப்படி ஒன்றும் அதிகமிராது.”

தாய் வெளியே சென்றாள். கதவைத் தட்டினாள் பதிலில்லை. அந்த அமைதியில் அவள் இகோரைப் பற்றி நினைத்தாள்:

“அவன் செத்துக்கொண்டுதான் இருக்கிறான்....”

“யாரங்கே?” என்று அறைக்குள்ளிருந்து யாரோ கேட்டார்கள்.

“இகோர் இவானவிச்சிடமிருந்து வந்திருக்கிறேன்’. என்று அமைதியாகப் பதில் சொன்னாள் தாய். “அவன் உங்களை அவனது அறைக்கு வரச் சொன்னான்.”

“இதோ வருகிறேன்” என்று கதவையே திறக்காமல் உள்ளிருந்தவாறே பதில் சொன்னாள் அந்தப் பெண். தாய் ஒரு கணம் நின்றாள். பிறகு மீண்டும் கதவைத் தட்டினாள்: உடனே கதவு திறக்கப்பட்டது. ஒரு நெட்டையான மூக்குக் கண்ணாடியணிந்த ஸ்திரீ ஹாலுக்குள் வந்தாள். தனது உடுப்பிலுள்ள மடிப்புக்களை விரித்துத் தடவிவிட்டு விட்டு, வெடுக்கென்று தாயைப் பார்த்துக் கேட்டாள் அவன்.

“உங்களுக்கு என்ன வேண்டும்?”,

“இகோர் இவானவிச் என்னை அனுப்பினான்.”

“சரி. புறப்படுங்கள். உங்களை நான் பார்த்திருக்கிறேனே” என்று அமைதியாகக் கூறினாள் அவள்; “சௌக்கியமா? இங்கே ஒரே இருட்டாகயிருக்கிறது.”

தாய் அவளைப் பார்த்தாள்; இதற்கு முன் அவளைச் சில தடவை நிகலாய் இவானவிச்சின் வீட்டில் பார்த்திருப்பதாக அவளுக்கு ஞாபகம் வந்தது.

“இவர்கள் எல்லாம் நம்மைச் சேர்ந்தவர்கள்!” என்று நினைத்துக் கொண்டாள்.

அந்தப் பெண் பெலகேயாவைத் தனக்கு முன்னால் போகச் சொன்னாள்.

“அவனுக்கு ரொம்ப மோசமாக இருக்கிறதா?” என்று கேட்டாள் அவள்.

“ஆமாம். அவன் படுத்திருக்கிறான். அவன் தின்பதற்கு ஏதாவது கொண்டு வரச்சொன்னான்.”

“அது ஒன்றும் அவசியமில்லை.”

அவர்கள் இகோரின் அறைக்குள் நுழைந்ததுமே அவனது கரகரத்த சுவாசம் அவர்கள் காதில் விழுந்தது:

“நான் என் மூதாதையர்களிடம் போய்ச் சேரப்போகிறேன், தோழா... லுத்மீலா வசீலியெவ்னா, இந்த ஆசாமி கொஞ்சங்கூட மரியாதையில்லாமல், அதிகாரிகளிடம் உத்தரவு வாங்காமல், சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டான். முதலில் இவனுக்கு ஏதாவது தின்னக் கொடுங்கள். அப்புறம் இவனை எங்காவது கொண்டுபோய் மறைத்து வைக்கவேண்டும்.”

அந்தப் பெண் அவன் கூறியதை ஆமோதித்துத் தலையை அசைத்தாள்; நோயாளியைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே சொன்னாள்:

“இவர்கள் வந்தவுடனேயே எனக்குச் சொல்லியனுப்பியிருக்கவேண்டும். இகோர், அது சரி நீங்கள் இரண்டு பொழுது மருந்தைக் கூடச் சாப்பிடாமல் விட்டிருக்கிறீர்களா? வெட்கமாயில்லை? தோழரே, என் கூட வாருங்கள். இகோரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோவதற்குச் சீக்கிரமே ஆட்கள் வந்துவிடுவார்கள்.”

“அப்படியென்றால், நீங்கள் என்னை ஆஸ்பத்திரியில் கொண்டு போடுவது என்றே தீர்மானித்துவிட்டீர்களா?”

“ஆமாம். நான் அங்கு வந்து உங்களுக்குத் துணையிருப்பேன்”

“அங்கே கூடவா! அட கடவுளே!”

“உஷ்! போதும் அசட்டுத்தனம்.”

அவள் பேசிக்கொண்டே இகோரின் மார்பின் மீது கிடந்த போர்வையை இழுத்துச் சரி பண்ணினாள். நிகலாயைக் கூர்ந்து கவனித்தாள், மருந்து பாட்டில்களைத் தூக்கிப் பார்த்து எவ்வளவு மருந்து மிஞ்சியிருக்கிறது என்பதைப் பார்த்தாள். நிதானமாக அடக்கமான குரலில் பேசினாள்; லாவகமாக நளினத்தோடு நடமாடினாள். அவனது முகம் வெளுத்திருந்தது. புருவங்கள் மூக்குக்கு மேலே கூடியிருந்தன. தாய்க்கு அவளது முகம் பிடிக்கவே இல்லை. அந்த முகத்தில் அகந்தை தொனிப்பதாக அவளுக்குத் தோன்றியது. அந்தப் பெண்ணின் கண்களில் களிப்போ பிரகாசமோ இல்லை. மேலும் அவள் அதிகார தோரணையிலேயே பேசினாள்.

“சரி, நாங்கள் இப்போதைக்கு உங்களை விட்டுச்செல்கிறோம்” என்று தொடங்கினாள் அவள். “ஆனால் நான் சீக்கிரமே திரும்பி வந்து விடுவேன். இகோருக்கு இந்த மருந்தில் ஒரு கரண்டி கொடுங்கள். அவனைப் பேசலிடாதீர்கள்.”

நிகலாயைக் கூட்டிக்கொண்டு அவள் வெளியே சென்றாள்.

“அதிசயிக்கத்தக்க பெண் அவள்!” என்று பெருமூச்சுடன் சொன்னான் இகோர். “அதிசாமர்த்தியமான பெண்: அம்மா நான் உங்களையும் அவளோடு சேர்த்துவிட வேண்டும். அவள் அடிக்கடி களைத்துச் சோர்ந்துவிடுகிறாள்”

“பேசாதே, இந்த மருந்தைச் சாப்பிடு” என்று மிருதுவாகச் சொன்னாள் தாய்.

அவன் மருந்தைச் சாப்பிட்டுவிட்டு ஒரு கண்ணை மூடிக் கொண்டான்.

“எப்படியும் நான் சாகத்தான் போகிறேன். வாயை மூடிப் பேசாதிருந்தாலும் சாகத்தான் போகிறேன்” என்றான் அவன்.

அவன் தனது அடுத்த கண்ணால் தாயைப் பார்த்தான். அவனது உதடுகள் மட்டும் லேசாகப் புன்னகை புரிந்தன. தாய் அவனது தலைப் பக்கமாகக் குனிந்து பார்த்தாள். திடீரென்று நெஞ்சில் பாய்ந்த அனுதாப வேதனையில் அவளது கண்கணில் கண்ணீர் துளிர்த்துவிட்டது.

“எல்லாம் சரிதான் —இது இயற்கைதானே! வாழ்வதிலுள்ள இன்பத்தோடு சாவதின் அவசியமும் சேர்ந்துதானே வருகிறது” என்றாள் அவன்.

தாய் அவனது நெற்றியின் மீது கை வைத்துப் பார்த்து விட்டு மெதுவாகச் சொன்னாள்:

“உன்னால் கொஞ்ச நேரம் கூடச் சும்மா இருக்க முடியாதா?”

அவன் தன் கண்களை மூடி, தனது நெஞ்சுக்குள் கரகரக்கும் சுவாசத்தைக் கேட்பது போல இருந்தான். பிறகு உறுதியோடு பேசத் தொடங்கினான்;

“சும்மா இருப்பதில் அர்த்தமே இல்லை. அம்மா. அதனால் எனக்கு என்ன லாபம்? என்னவோ இன்னும் கொஞ்ச விநாடி கால வாதனை. அப்புறம் உங்களைப் போன்ற அற்புதமான பெண்மணியோடு சில வார்த்தைகள் பேசும் ஆனந்தம் கூட எனக்கு அற்றுப்போய்விடும் அடுத்த உலகத்திலுள்ளவர்கள், இந்த உலகத்தில் உள்ளவர்களைப் போல் அவ்வளவு நல்லவர்களாயிருக்க முடியாது. அது மட்டும் நிச்சயம்.

தாய் ஆர்வத்தோடு குறுக்கிட்டுப் பேசினாள்;

“அந்த சீமாட்டி திரும்பவும் வருவாள், வந்து நான் உன்னைப் பேச விட்டதற்காக, என்னைக் கண்டிப்பாள்.”

“அவள் ஒன்றும் சீமாட்டியில்லை. அவள் ஒரு புரட்சிக்காரி நம் தோழி. ஒரு அதிசயமான பெண். அவள் கோபிக்கப் போவது என்னவோ நிச்சயம். அவள் எல்லோரையும்தான் கோபித்துப் பேசுகிறாள்.”

அவன் மிகுந்த சிரமத்தோடு உதடுகளை அசைத்துக் கொண்டு தனது அண்டை வீட்டுக்காரியின் வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். அவனது கண்கள் களிப்பெய்தி நகைத்தன. அவள் வேண்டுமென்றே அவளைக் கேலி செய்ததாகத் தாய் கருதினாள். அவனது நீலம் பாரித்த ஈரம் படிந்த முகத்தைப் பார்த்துவிட்டு, பயப் பீதியோடு தனக்குத் தானே நினைத்துக்கொண்டாள்.

“இவன் செத்துக்கொண்டிருக்கிறான்.”

லுத்மீவா திரும்ப வந்தாள். உள்ளே நுழைந்தவுடன் அவள் கதவை ஜாக்கிரதையாகத் தாழிட்டுவிட்டுத் தாயின் பக்கம் திரும்பினாள்.

“உங்களுடைய தோழர் சீக்கிரமே உடை மாற்றிக்கொள்ள வேண்டும். என் அறையை விட்டுக்கூடிய சீக்கிரம் போக வேண்டும். எனவே நீங்கள் உடனே போய் அவனுக்கு மாற்று உடைகள் வாங்கி வாருங்கள். இந்தச் சமயத்திலே சோபியாவும் இல்லாது போய்விட்டாள். அது ஒரு பெரிய சங்கடம். ஆட்களை இனம் மாற்றி வேஷம் போடுவதில் அவள்தான் மிகவும் கைதேர்ந்தவள்.”

“அவள் நாளைக்கு வருகிறாள்” என்று கூறிக்கொண்டே சவுக்கத்தை எடுத்துத் தோளின் மீது போட்டுக்கொண்டாள் தாய்.

அவளுக்கு எப்போதெப்போதெல்லாம் வேலை செய்யச் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அவளது இதயத்தில், அந்த வேலையைச் சீக்கிரமாகவும் திறம்படவும் முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிரம்பித் ததும்பும். அந்த வேலையைத் தவிர அந்தச் சமயத்தில் வேறு எதைப்பற்றியுமே அவள் சிந்திக்கமாட்டாள்.

“அவனை எந்த மாதிரி உடை தரிக்கச் சொல்ல உத்தேசம்?” என்று காரியார்த்தமான குரலில், தனது புருவங்களைச் சுழித்துக்கொண்டே கேட்டாள்தாய்.

“அதைப் பற்றிக் கவலையில்லை. அந்தத் தோழர் இன்றிரவு போயாக வேண்டும்.”

“இராத்திரி வேளைதான் மோசமானது. தெருவிலே ஜனநடமாட்டமே இருக்காது. போலீசாரும் விழிப்பாயிருப்பார்கள். இவனும் அப்படியொன்றும் கெட்டிக்காரப் பேர்வழியில்லை — உங்களுக்குத் தெரியாதா?”

இகோர் கரகரத்துச் சிரித்துக்கொண்டான்.

“நான் உன்னை ஆஸ்பத்திரியில் வந்து பார்க்கட்டுமா?” என்று கேட்டாள் தாய்.

இருமிக்கொண்டே தலையை அசைத்து ஆமோதித்தான் அவன்.

“நீங்களும் நானும் இவனது படுக்கையருகே மாறி மாறித் துணைக்கு இருக்கலாமா?” என்று தனது. கரிய கண்களால் தாயைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் லுத்மீலா. “உங்களுக்குச் சம்மதம்தானே? சரி, இப்போது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகப் போய்வாருங்கள்.”

அவள் அதிகாரம் கலந்த அன்போடு தாயின் கரத்தைப் பற்றி அவளை வாசல் நடைக்குக் கூட்டிச் சென்றாள். வாசல் நடையைக் கடந்து வெளியே வந்ததும், லுத் மீலா நின்று கொண்டே பேசினாள்

“நான் உங்களை இப்படி வெளியே விரட்டியடிக்கிறேன் என்பதை எண்ணி மனம் புண்பட்டுப்போகாதீர்கள். அவனோடு பேசிக் கொண்டிருட்பது அவனுக்கு ரொம்ப ஆபத்து. அவன் பிழைக்கக்கூடும் என்றே நான் இன்னும் நம்புகிறேன்....”

அவள் தன் கரங்களை இறுகப் பற்றி அழுத்தினாள். அவள் பிடித்தபிடியில் எலும்புகளே நொறுங்கும் போலிருந்தது; கைகளைப் பிடித்தவாறே அவள் கண்களை மூடினாள். இந்தப் பேச்சு தாயைக் கலவரப்படுத்தியது.

“அட கடவுளே என்ன சொல்லுகிறீர்கள்?” என்று குழறினாள் தாய்.

“சரி போகிறபோது எங்கேயாவது ஒற்றர்கள் நிற்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு போங்கள்” என்று மெதுவாகச் சொன்னாள் லுத்மீலா, அவள் தன் கரங்களைத் தன் முகத்துக்கு நேராக உயர்த்தி நெற்றிப் பொருத்துக்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டாள். அவளது உதடுகள் துடித்தன; முகம் சாந்தமடைந்தது.

“எனக்குத் தெரியும்” என்று பெருமிதத்தோடு சொன்னாள் தாய்.

வெளி வாசலுக்குச் சென்றவுடன் அவள் ஒரு நிமிஷம் அங்கேயே நின்று தன்னுடைய துப்பட்டியைச் சரி செய்துகொண்டே சுற்றுமுற்றும் கூர்மையோடு, எனினும் வெளிக்குத்தெரியாமல், கவனித்துக் கொண்டாள். கூட்டத்தில் கூட ஒற்றர்களை அடையாளம் கண்டு தீர்மானிப்பதில் அவள் அநேகமாகத் தவறுவதே இல்லை. அவர்களது எடுப்பாய்த் தெரியும் கவனமற்ற நடை, அவர்களது அசாதாரணமான பாவனைகள், சோர்வும், எரிச்சலும் நிறைந்த அவர்களது முகபாவம், இவற்றிற்கெல்லாம் பின்னால், மோசமாக ஒளிந்துகொண்டிருக்கும் அவர்களது கூரிய கண்களிலே மறைந்துகிடக்கும். குற்றம் நிறைந்த அச்சம் கொண்ட நோக்கு— பலவற்றையும் அவள் நன்கு தெரிந்து வைத்திருந்தாள்.

ஆனால் இந்தத் தடவையோ அவள் அந்த மாதிரி முகங்கள் எதையும் காணவில்லை. எனவே தெரு வழியாக அவசர அவசரமாக நடந்து சென்றாள். அவள் ஒரு வண்டியை வாடகைக்குப் பிடித்துக்கொண்டு, வண்டிக்காரனை மார்க்கெட்டுக்கு ஓட்டிச் செல்லும்படி உத்தரவிட்டாள். மார்க்கெட்டில். அவள் நிகலாய்க்காக வாங்க வேண்டிய துணிமணிகளைத் தேர்ந்தெடுப்பதில் விடாப்பிடியாய் பேரம் பேசி விலையைக் குறைத்துக் கேட்டாள். அத்துடன் தன்னுடைய குடிகாரக் கணவனால்தான் இந்த மாதிரியான நிலைக்குத் தான் வந்துவிட்டதாகவும், அவனுக்கு மாதாமாதம் ஒவ்வொரு புதுச்சட்டை துணிமணி எடுத்துக் கொடுக்க நேர்ந்துவிட்டதாகவும் ஒரு பொய்க்கதையையும் கடைக்காரனிடம் கூறினாள். அவளது கட்டுக்கதையைக் கேட்டு, கடைக்காரர்கள் கொஞ்சம் கூட மசியவில்லை. இருந்தாலும் அதுவே அவளுக்கு ஒரு பெரும் ஆனந்தத்தைத் தந்தது. வழியிலே அவளுக்கு இன்னொரு எண்ணம் உதித்தது. நிகலாய்க்குப் புதிய துணிமணிகள் வாங்க வேண்டிய அவசியத்தைப் போலீஸ்காரர்களும் உணரக் கூடுமென்றும், எனவே அவர்கள் தங்களது ஒற்றர்களை மார்க்கெட்டுக்கும் அனுப்பியிருக்கக் கூடுமென்றும் அவள் நினைத்தாள். எனவே புறப்பட்டுச் சென்றது போலவே மிகுந்த ஜாக்கிரதையோடும் கவனத்தோடும் அவள் இகோரின் அறைக்குத் திரும்பி வந்தாள். பிறகு அவள் நிகலாயுடன் நகரின் எல்லைவரை காவலாகச் சென்றாள். அவர்கள் தெருவில் ஆளுக்கொரு பக்கமாக நடந்து சென்றார்கள். நிகலாய் தலையைத் தாழ்த்திக்கொண்டு தத்தித்தத்தி நடந்து செல்வதையும், அவன் அணிந்திருந்த நீளமான பழுப்பு நிறக் கோட்டினால், அவனது கால்கள் அடிக்கடி முட்டிக்கால் தட்டிக் கொள்வதையும், மூக்கின் மீது வந்து விழுந்து மறைக்கும். தொப்பியை அவன் அடிக்கடி பின்னால்தள்ளிவைத்துக் கொள்வதையும் கண்டு தாய்க்குச் சிரிப்பாயும் மகிழ்ச்சியாயும் இருந்தது. ஆள் நடமாட்டமே அற்ற ஒரு சந்தில், அவர்கள் சாஷாவைச் சந்தித்தார்கள்; நிகலாயைப் பார்த்துத் தலையை அசைத்து விடைபெற்றுக்கொண்டு தாய் வீட்டுக்குத் திரும்பினாள்.

“ஆனால் பாவெல் மட்டும் இன்னும் சிறையிலேயே இருக்கிறான்.... அந்திரேயும்....” என்று துக்கத்தோடு நினைத்துக்கொண்டாள் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/38&oldid=1293145" இலிருந்து மீள்விக்கப்பட்டது