உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்/4

விக்கிமூலம் இலிருந்து

4

ஒரு நாள் இரவு பாவெல் சாப்பாட்டுக்குப்பின், ஜன்னலின் திரையை இழுத்து தன் தலைக்கு மேலாகவுள்ள ஆணியில் தகர விளக்கை மாட்டினான். பிறகு ஒரு மூலையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தான். அவனது தாய் பண்ட பாத்திரங்களைக் கழுவிவிட்டு சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்; மெதுவாக அவன் பக்கம் சென்றாள். அவன் தலையை உயர்த்தி தன் தாயிடம் வந்த காரியத்தை வினவும் முகபாவத்தோடு அவனை ஏறிட்டுப் பார்த்தான்.

“ஒன்றுமில்லை. பாஷா! ஒன்றுமில்லை!” என்று முனகிவிட்டு, அவன் மீண்டும் சமையலறைக்குச் சென்றாள்; அவளது புருவங்கள் மட்டும் தைரியமற்று நெளிந்து கொடுத்தன. பிறகு அவள் தனது சிறிது நேரச் சிந்தனைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு, கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட்டு மீண்டும் தன் மகனை நெருங்கினாள்.

“நீ எப்போது பார்த்தாலும் எதையோ படித்து வண்ணமாயிருக்கிறாயே. அதைத்தான் கேட்க எண்ணினேன்” என்று அமைதியாகச் சொன்னாள் அவள்.

அவன் புத்தகத்தை மூடினான்.

“உட்கார், அம்மா!”

அவனது தாய் சிரமப்பட்டுக் கீழே உட்கார்ந்து, முதுகை நிமிர்த்தினாள்; ஏதோ ஒரு முக்கிய விஷயத்தைக் கேட்பதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டாள்.

பாவெல் அவளைப் பார்க்காமலேயே பேச ஆரம்பித்தாள்; அவனது குரல் தணிந்திருந்தபோதிலும், அது ஏனோ உறுதி வாய்ந்ததாக இருந்தது.

"நான் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. தெரியுமா? இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றன. இவையெல்லாம் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் அச்சிடப் பெறுகின்றன. இந்தப் புத்தகங்களோடு அவர்கள் என்னைக் கண்டுபிடித்தால் என்னைச் சிறையில்தான் போடுவார்கள். சிறையில்தான்! ஏன் தெரியுமா? நான் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேனே. அதனால்தான், புரிந்ததா?”

திடீரென அவளுக்கு மூச்சு முட்டியது. அவள் தன் கண்களை அகலத் திறந்து மகனைப் பார்த்தாள். அவன் ஒரு அன்னியன் போலத் தோன்றியது அவளுக்கு: அவளது குரல் கூட மாறிப்போயிருந்தது: அந்தக் குரலின் ஆழமும் அழகும் செழுமையும் நிறைந்து இருப்பதாகத் தோன்றியது. அவன் தனது அரும்பு மீசையைத் திருகினான்; குனிந்து நின்ற புருவங்களுக்கு மேலாக, ஒரு மூலையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் தன் மகனைக் கண்டு பயந்தே போனாள்; மகனுக்காகப் பரிதாபப்பட்டாள்.

“நீ ஏன் இப்படிச் செய்கிறாய். பாஷா?” என்று கேட்டாள்.

“ஏன் என்றால் —-நான் உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று அவன் அமைதியாகவும் தெளிவாகவும் சொன்னான்.

அவனது குரல் மிருதுவாக இருந்தது. எனினும் உறுதி வாய்ந்திருந்தது. அவனது கண்களில் அசைவற்ற ஒரு ஒளியும் நிறைந்திருந்தது. தன் மகன் ஏதோ ஒரு பயப்படக்கூடிய ரகசியமான காரியத்துக்குத் தன்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்துவிட்டான் என்ற உணர்ச்சி அவளது இதயத்தில் கிளர்ந்தது. வாழ்க்கையில் எதுவுமே தடுக்க முடியாதவைதாம் என்றே அவள் கருதினாள்; எனவே அதைப்பற்றி அவள் மேலும் கேட்காமல் அடங்கிப் போனாள். துன்பமும் துக்கமும் இதயத்தை அழுத்த வார்த்தையின்றி அமைதியாக அழுதாள் அவள்.

“அழாதேயம்மா” என்று அன்பும் ஆதரவும் நிறைந்த குரலில் சொன்னான் பாவெல்: ஆனால் அவளுக்கோ அவன் பிரிவதற்கு விடை பெறுவது போலத் தோன்றியது.

“நாம் எந்த மாதிரி வாழ்கிறோம் என்பதைக் கொஞ்சமாவது எண்ணிப்பார். அம்மா. உனக்கு நாற்பது வயதாகிறது. இதுவரை நீ என்னத்தைக் கண்டு விட்டாய்? அப்பா உன்னை அடித்தார்— அவரது தொல்லைகளையெல்லாம் வாழ்வின் கசப்பையெல்லாம் உன்னையடிப்பதன் மூலம் அவர் தீர்த்துக்கொண்டார் என்று இப்போது உணர்கிறேன் நான். கசப்புணர்ச்சிதான் அவரை ஆட்கொண்டிருந்தது. ஆனால் இந்த மாதிரிக் கசப்பும் தொல்லையும் எங்கிருந்து வருகின்றன என்பதை அவர் அறிந்துகொள்ளவே இல்லை. அவர் முப்பது வருஷகாலமாய் உழைத்தார்; இந்தத் தொழிற்சாலை இரண்டு கட்டிடங்களாக இருந்த காலத்திலிருந்து அவர் வேலை பார்த்தார். இப்போழுதோ அவை ஏழு கட்டிடங்களாகப் பெருகிவிட்டன.”

அவன் சொல்வதை ஆர்வத்தோடும் பயத்தோடும் அவள் கேட்டாள். மகனின் கண்கள் அழகாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. தன் மார்பை மேஜையின்மீது சாய்த்தவாறு கண்ணீர் படிந்து ஈரம் பாய்ந்த அவளது முகத்துக்கு நேராகக் குனிந்து, தான் புரிந்துகொண்டுள்ள உண்மையைப் பற்றி பிரசங்கத்தைத் தொடங்கினான் பாவெல். இளமையின் முழுப்பலத்தோடும், மாணவன் ஒருவனது அறிவின் அகந்தையோடும் உண்மையின் மீதுள்ள பரிபூரண விசுவாசத்தோடும் தனக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த விஷயங்களைப் பற்றி அவன் பேசினான். தாய்க்காகப் பேசியதை விடத் தன்னைப் பரீட்சித்துக் கொள்ளவே அவன் பேசினான். சில வேலைகளில் அவன் வார்த்தைகள் கிடைக்காமல் பேச்சை நிறுத்தினான். அப்போது கண்ணீர்த் திரைக்கு அப்பால் ஒளி செய்யும் அன்பான கண்களைக் கொண்ட, தன் தாயின் வேதனை நிறைந்த முகம் தன்னெதிரே இருப்பதை உணர்ந்து கொண்டான். அந்தக் கண்கள் அவனைப் பயத்தோடும் வியப்போடும் பார்த்தன. அவனோ தன் தாய்க்காக அனுதாபப்பட்டான்; மீண்டும் பேச ஆரம்பித்தான். இப்போதோ, அவன் அவளைப் பற்றியும் அவளது வாழ்வைப் பற்றியுமே பேசினான்.

“இதுவரை நீ என்ன சுகத்தைத்தான் அனுபவித்திருக்கிறாய்? நீ சிந்தித்து மகிழ்வதற்கு சென்று போன உன் வாழ்க்கையில் என்ன இருக்கிறது?” என்று கேட்டான்.

அவள் கேட்டுக்கொன்டிருந்தாள். தலையை மட்டும் சோர்வாய் ஆட்டினாள். இதுவரை அறியாத புதுமையான உணர்ச்சி, இன்பமும் துன்பமும் கலந்த ஏதோ ஒரு உணர்ச்சி தனது நொந்து போன இதயத்துக்குள் குடிபுகுந்து அதை இதப்படுத்திச் ககமூட்டுவதுபோல அவளுக்குத் தோன்றியது. அவளைப் பற்றியும் அவளது வாழ்க்கையைப் பற்றியும் யாரேனும் பேசுவதைக் கேட்பது, இதுதான் அவளுக்கு முதல் தடவை. மகனது வார்த்தைகள் அவளது மங்கி மக்கிப்போன பழைய நினைவுகளை, எந்தக் காலத்திலேயோ செத்தொழிந்து தேய்ந்து போன பழைய இளமைக் கால சிந்தனைகளை நினைவுக்குக் கொண்டுவந்தன. வாழ்க்கையின் மறைந்து போன மங்கலான அதிருப்தி உணர்வுகள் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தன. அப்போது அவன் தன் தோழிமாரோடு வாழ்க்கையைப் பற்றி, அனைத்தையும் பற்றி எவ்வளவோ பேசியிருக்கிறாள். ஆனால் அவளது தோழிகளும், ஏன் அவளும் கூட, தங்களது வாழ்க்கையின் துன்ப துயரங்களைப் பற்றிக் குறைப்பட்டுத்தான் பேசிக் கொண்டார்களேயன்றி, அதற்குரிய காரணத்தை ஆராய முனையவில்லை. ஆனால் இப்போதோ அவளது மகன் அவளெதிரே உட்கார்ந்திருந்தான். அவனது கண்களும் முகமும் பேச்சும் வெளியிடுவதெல்லாம் அவனது இதயத்தின் அடித்தளத்தையே தொட்டன. தன் தாயின் வாழ்க்கையை நன்றாகப் புரிந்து, அவளது துன்ப துயரங்களைப் பற்றி அவளிடமே அனுதாபத்தோடு பரிந்து பேசும் தன் மகனைக் கண்டு அவளது மனத்தில் பெருமை உணர்ச்சி நிரம்பித் ததும்பியது.

ஆனால் தாய்மார்கள் என்றும் அனுதாபத்துக்குரியவராகவே ஆவதில்லை.

அதுவும் அவளுக்குத் தெரியும். அவன் பெண்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொன்னவை அனைத்தும் கசப்பான எனினும் ஊரறிந்த உண்மைகள்தான். எனினும், அவளது இதயத்தில் பலவிதமான உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்து. இயல்புக்கு மீறிய அன்போடு இதம் செய்து சுகமூட்டுவதாகத் தோன்றியது.

“நீ என்னதான் செய்ய விரும்புகிறாய்?” என்று அவனது பேச்சில் குறுக்கிட்டுக் கேட்டாள் அவள்


“முதலில் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்: பிறகு மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களான நாம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நம்முடைய வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது என்பதை நாம் கண்டுபிடித்துத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்!”

உறுதியும் அழுத்தமும் நிறைந்த அவனது நீலக் கண்களில் அப்போது மென்மையும் அன்பும் கலந்த ஒரு ஒளி நிறைந்திருப்பதைக் காண, அவளுக்குக் குதூகலமாயிருந்தது. அமைதி நிறைந்த இளம் புன்னகை அவளது இதழ்களில் நெளிந்தது. எனினும் அவளது கன்னச் சுருக்கங்களில் கண்ணீர்த் திவலைகள் இன்னும் துடிதுடித்துக் கொண்டுதானிருந்தன. வாழ்க்கையின் கசப்பைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்துவிட்ட தன் மகனைப் பற்றிய அவளது பெருமை உணர்ச்சி ஒரு புறம்; மற்றவர்கள் பேசுவதற்கு மாறாக அவன் பேசுவது, அவன் உட்பட்ட இச்சமூகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் பழகிக் காய்த்துப்போன வாழ்க்கையை எதிர்த்து அவன் தன்னந்தனியனாகப் போராட்ட முனைந்து நிற்பது. அவன் இன்னும் இளைஞனாக இருப்பது— முதலிய விஷயங்களால் ஏற்பட்ட அவளது நிதான புத்தி ஒரு புறம்: இவ்வித இரு உணர்ச்சிகளுக்கிடையிலகப்பட்டு அவள் தடுமாறினாள். எனவே, அவள் அவனிடம் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட நினைத்தாள்.

“கண்ணே, நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட, முடியும்?”

ஆனால், திடீரென்று, சற்றே அன்னியனாக, ஆனால் பெரும் அறிவாளியாகத் தன் முன்னே தோன்றும் மகனைப் பற்றிய பரவசத்திலிருந்து விடுபட அவள் விரும்பலில்லை.

பாவெல் தன் தாயின் இதழ்களில் தோன்றிய புன்னகையை, அவளது முகத்தில் தெரிந்த கவன உணர்வை அவளது கண்களில் மிதந்த அன்பை —எல்லாம் கண்டான். உண்மையை அவள் உணர வைத்துவிட்டோம் என்று தோன்றியது. தனது வார்த்தைகளின் சக்தியால் ஏற்பட்ட இளமைப் பெருமிதம் அவனுக்குத் தன் மீதுள்ள நம்பிக்கை! வெகுவாக உயர்த்தியது. அவன் சிரித்துக்கொண்டும், முகத்தைச் சுழித்துக் கொண்டும் உணர்ச்சிமயமாகப் பேசினான்; சமயங்களில் அவனது பேச்சில் பகைமை உணர்ச்சி ஒலி செய்தது. ஆனால் இந்த மாதிரிக் கடுமை கலகலக்கும் வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டு அவனது தாய்க்கு நெஞ்சில் பயம்தான் அதிகரித்தது. எனவே அவள் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு தன் மகனை நோக்கி மெதுவாகக் கேட்டாள்.

“இதெல்லாம் உண்மையா, பாஷா?”.

“ஆமாம்!” என்று உறுதியோடு பதிலளித்தான் அவன். மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்தினால், மனிதர்களிடையே உண்மையைப் பரப்பியவர்களைப் பற்றியும் அப்படிச் செய்தவர்களை மக்களின் எதிரிகள் மிருகங்களைப் போல வேட்டையாடி, சிறையில் தள்ளியதையும் சித்திரவதை செய்ததையும் அவன் தாயிடம் சொன்னான்.

“நான் அந்த மாதிரி ஆட்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் தான் இந்த உலகம் செழித்து வளர்வதற்கான உரம்!” என்று ஆர்வத்தோடு கத்தினான் பாவெல்.

இந்த மாதிரி மனிதர்களைப் பற்றிய எண்ணம் அவனது தாய்க்குப் பயத்தைக் காட்டியது எனினும் நிலைமை இப்படித்தானா இருக்கிறது’ என்பதை அவள் மீண்டும் கேட்க விரும்பினாள்; ஆனால் கேட்கத் துணியவில்லை. தனக்குப் புரியாத மனிதர்களைப் பற்றிய - எனினும் தன் மகனை இந்த மாதிரியான பயங்கரமான விஷயங்களைப் பற்றிப் பேசவும் சிந்திக்கவும் கற்றுக்கொடுத்த அந்த மனிதர்களைப் பற்றிய- கதைகளை மகன் சொல்லும்போது திணறிப்போன மூச்சோடு அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கடைசியாக அவனைப் பார்த்துச் சொன்னாள்;

“சரி, பொழுது சீக்கிரம் விடியப்போகிறது. நீ போய்ப் படு; கொஞ்ச நேரமாவது தூங்கு போ.”

“நான் இப்போதே படுக்கப் போகிறேன்’ என்றான் அவன். பிறகு அவளை நோக்கிக் குனிந்து கொண்டே ‘நான் சொன்னதையெல்லாம் புரிந்து கொண்டாயா?” என்று கேட்டாள்.

“ஆமாம்” என்ற ஒரு பெருமூச்சுடன் பதில் சொன்னாள் அவள். மீண்டும் அவளது கண்ணில் கண்ணீர் சொரிந்து வழிய ஆரம்பித்தது. “இதெல்லாம் உன் அழிவு காலத்திற்குத்தான்!” என்று தேம்பினாள்.

அவன் எழுந்து அறைக்குள் நடமாடினான்.

“சரி, இப்போது நான் எங்குப் போகிறேன். என்ன செய்கிறேன் என்பது உனக்குத் தெரியும். உனக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். நீ என்னை நேசிப்பது உண்மையானால், இனிமேல் இதில் தலையிடாதே அம்மா!” என்றான் அவன்.

“கண்ணே! என் கண்ணே! இதை நீ என்னிடம் சொல்லாமல் இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் போலிருக்கிறதே!” என்று கத்தினாள் அவள்.

அவன் தாயின் கரத்தை எடுத்து இறுகப் பிடித்து அழுத்தினான்.

அவன் அன்போடு ‘அம்மா’ என்று அழைத்த சொல்லாலும், அவளது கரத்தை இதுவரை இல்லாத இனிய வாஞ்சையோடு அழுத்திப் பிடித்ததால் ஏற்பட்ட சுக உணர்ச்சியாலும் அவள் மெய்மறந்து போய்விட்டாள்.

“சரி, நான் இதில் தலையிடவில்லை” என்று தட்டுத் தடுமாறிச் சொன்னாள் அவள். “நீ மட்டும் உன்னை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளப்பா. ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்”. தனது மகனுக்கு எந்தவிதமான ஆபத்து காத்து நிற்கிறது என்பதை அறிய முடியாமல், மீண்டும் அவள் வருத்தத்தோடு சொன்னாள். “நீ நாளுக்கு நாள்

மெலிந்து கொண்டே வருகிறாய்!"

அவனது நெடிய பலம்பொருந்திய உருவத்தை அவள் அன்போடு ஏற இறங்கப் பார்த்துக்கொண்டாள்.

“உன் இஷ்டப்படியே நீ வாழப்பா. அதெல்லாம் நான் தலையிடக் கூடிய விவகாரம் இல்லை. நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். நீ மற்ற மனிதர்களோடு பேசும்போது இவ்வளவு தீவிரமாகப் பேசாதே. மனிதர்களைப் பற்றிய பயம் உனக்கு எப்போதும் இருக்க வேண்டும். அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள்; பேராசையிலும் பொறாமையாலுமே வாழ்கிறார்கள். அடுத்தவனைத் துன்புறுத்துவதில் ஆனந்தம் கொள்கிறார்கள். நீ அதை எடுத்துக்காட்டி, அவர்களைக் குறை கூறத் தொடங்கினால், உடனே அவர்கள் உன்னையும் பகைப்பார்கள். உன்னை அழித்தேவிடுவார்கள்’.

அவளது சோகமயமான வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு அவளது மகன் வாசல்படியருகே நின்றான். அவள் பேசி முடித்ததும் அவன் லேசாக நகைத்தான்.

“நீ சொல்வது சரிதான்; மனிதர்கள் கெட்டவர்களாகத் தானிருக்கிறார்கள்” என்றான் அவன். “ஆனால் உலகத்தில் நியாயம் என்று ஒன்று இருப்பதாக நான் அறிந்துகொண்டேனே, அதைப் பார்க்கும்போது இந்த மனிதர்கள் எவ்வளவோ தேவலை!” மீண்டும் அவன் நகைத்தான்; பிறகு சொன்னான் “இதெல்லாம் எப்படி ஏற்பட்டது என்பது எனக்கே தெரியாது. சிறு பிள்ளையாயிருக்கும் போது நான் யாரைக் கண்டாலும் பயப்படுவேன். பெரியவனான பிறகு எவரைக் கண்டாலும் வெறுக்கவே செய்தேன். சிலரை அவர்களது படுமோசத்தனத்தைக் கண்டு வெறுத்தேன். ஆனால் மற்றவர்களை அது ஏன் என்று எனக்கே தெரியாது; என்னவோ வெறுக்க வேண்டும் என்பதற்காக வெறுத்தேன். ஆனால் இப்போதோ எல்லாமே எனக்கு வேறுபட்டுத் தோன்றுகிறது. இது நான் மனிதர்களுக்காக அனுதாபப்படுவதால் ஏற்பட்டிருக்கக்கூடும், எப்படியானாலும், மனிதர்கள் மோசமாய் நடந்து கொள்வதற்கு எல்லா மனிதர்களும் காரணம் அல்ல என்பதை நான் உணர்ந்துகொண்டதால், என் இதயம் நெகிழ்ச்சியுற்றுவிட்டது....”

அவன் பேசுவதை நிறுத்திவிட்டு, தன் இதயத்துக்குள் கேட்கும் ஏதோ ஒரு குரலைக் கேட்டது போல் நின்றான். பிறகு அமைதியும் சிந்தனையும் நிறைந்தவாறு அவன் சொன்னான்;

“எனவே-உனக்கு நான் சொல்ல விரும்பிய உண்மை இதுதான்” “கிறிஸ்து ரட்சகரேமூமூநீ மிகவும் பயங்கரமாகத்தான் மாறிவிட்டாய்!” என்று சொல்லி அவள் மகனை லேசாகப் பார்த்தாள்.

அவன் நன்றாக தூங்கிய பிறகு, அவள் தன் படுக்கையிலிருந்து மெதுவாக எழுந்து அவனருகே சென்றாள். பாவெல் மல்லாக்கப் படுத்திருந்தான். உறுதியும் திண்மையும் உரமும் பாய்ந்திருந்த அவனது பிடிவாதத் தோற்றம் கொண்ட பழுப்பேறிய, கடுமையான முகம், வெள்ளை நிறமான தலையணையில் துலாம்பரமாகத் தெரிந்தது. அவனது தாய் காலில் ஜோடு எதுவும் அணியாமல் இரவு ஆடையில் அங்கு நின்றாள். அவளது கைகள் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தன; உதடுகள் சப்தமின்றி அசைந்தன; கன்னங்களில் பெருகும் கண்ணீர்த்துளிகள் மெதுவாக உருண்டு வழிந்து கொண்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/4&oldid=1293025" இலிருந்து மீள்விக்கப்பட்டது