தாய்/43
14
ஒரு நாள் மதியம் அவள் சிறைச்சாலை ஆபீசில் பாவெலுக்கு எதிராக உட்கார்ந்து தாடி வளர்ந்து மண்டிய அவனது முகத்தை நீர்த்திரை மல்கிய கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தாள். தன்னுடைய கைக்குள் கசங்கிச் சுருண்டுபோயிருக்கும் அந்தச் சீட்டை அவன் கையில் ஒப்படைக்கும் சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தாள்.
“நான் சௌக்கியம். எல்லோரும் அப்படித்தான்” என்று அமைதியாகச் சொன்னான். “நீ எப்படி இருக்கிறாய்?”
“நானும் சௌக்கியம். இகோர் இவானவிச் இறந்து போனான்” என்று யந்திரம் மாதிரி நிர்விசாரமாய்ச் சொன்னாள் அவள்.
“உண்மையாகவா?” என்று வியந்து கேட்டான் பாவெல். அவன் மெதுவாகத் தன் தலையைத் தொங்கவிட்டான்.
“சவ அடக்கத்தின்போது போலீசார் ஒரு சண்டையைக் கிளப்பிவிட்டார்கள். ஒருவனைக் கைது செய்திருக்கிறார்கள்” என்று பரபரப்பின்றிச் சொன்னாள் அவள். சிறைச்சாலையின் உதவியதிகாரி நாக்கை மிக எரிச்சலோடு சப்புக் கொட்டிக்கொண்டே துள்ளியெழுந்தான்.
“இந்த மாதிரி விஷயங்களைப் பேசக்கூடாது என்று தெரியுமா, இல்லையா?” என்று முணுமுணுத்தான் அவன், “இங்கு அரசியலைப்பற்றிப் பேசக்கூடாது.”
தாயும் எழுந்து நின்று, தனது குரலில் குற்றபாவத்தின் சாயை படரப் பேசினாள்:
“நான் ஒன்றும் அரசியலைப்பற்றிப் பேசவில்லை ; ஒரு சண்டையைப் பற்றித்தான் பேசினேன். அவர்கள் சண்டை போட்டது உண்மை. ஒரு பையனுடைய தலையைக்கூட அவர்கள் நொறுக்கித் தள்ளிவிட்டார்கள்.....”
“எல்லாம் ஒன்றுதான். இனிமேல் பேசாமல்தான் இருக்க வேண்டும். உங்கள் சொந்த விஷயத்தைப்பற்றி அதாவது பொதுவாக உங்கள் வீட்டு விஷயத்தையும் குடும்ப விஷயத்தையும் தவிர வேறு எதையுமே இங்கு பேசக்கூடாது.”
தனது பேச்சு குழம்பிக் குழறி ஒலிப்பதை அவன் கண்டுகொண்டான். அவன் மீண்டும் மேஜையருகே உட்கார்ந்து சில காகிதங்களைப் பரபரவென்று புரட்டத் தொடங்கினான்.
“இந்த மாதிரி நீ ஏதாவது பேசித்தொலைத்தால் அப்புறம் இதற்கு பதில் சொல்ல வேண்டியது நான்தான்” என்று சோர்ந்து போய்ச் சொன்னான் அவன்.
அவன்மீது பதிந்துநின்ற கண்களை அகற்றாமலே, தாய் தன் கையிலிருந்த துண்டுச் சீட்டை பாவெலின் கைக்குள் விறுட்டென்று திணித்தாள். அப்புறம் நிவர்த்தி நிறைந்த நிம்மதியுணர்ச்சியோடு பெருமூச்சு விட்டாள்.
“எதைப்பற்றித்தான் - பேசுவது என்பதே எனக்குத் தெரியவில்லை....” என்றாள் தாய்.
“எனக்கும்தான் தெரியாது” என்று கூறிச் சிரித்தான் பாவெல்.
“அப்படியானால், இங்கு வருவதிலேயே அர்த்தமில்லை” என்று எரிச்சலோடு சொன்னான் அதிகாரி, “எதைப்பற்றிப் பேசுவது என்று தெரியாவிட்டால், இங்கு ஏன் வருகிறீர்கள்? வந்து எங்கள் பிராணனை ஏன் வாங்குகிறீர்கள்?.....”
‘விசாரணை சீக்கிரம் நடக்குமா? என்று கேட்டாள் தாய்.
“பிராசிக்யூட்டர் சில நாட்களுக்கு முன் வந்திருந்தார். சீக்கிரமே நடக்குமென்று சொன்னார்.....”
அவர்கள் இருவரும் அர்த்தமற்றுப் பேசிக்கொண்டிருந்தார்கள், அன்பும் பரிவும் நிறைந்த கண்களோடு பாவெல் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். அவன் முன்னிருந்ததைப்போல இப்போதும் மிகுந்த அமைதியும் நிதானமும் நிறைந்து விளங்குவதாக அவளுக்குத் தோன்றியது. அவனது தோற்றத்தில் அப்படியொன்றும் மாற்றமில்லை. கைகள் வெளுத்திருந்தன; தாடி வளர்ந்திருந்ததால், வயதில் அதிகமானவனாகத் தோன்றினான். அவ்வளவுதான். அவள் அவனிடம் இன்பகரமான விஷயம் எதையாவது சொல்ல விரும்பினாள். நிகலாயைப் பற்றித்தெரிவிக்க விரும்பினாள். எனவே சுவையற்ற தேவையற்ற விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த தொனியிலேயே அவள் பேசத் தொடங்கினாள்:
“உன்னுடைய ஸ்வீகார புத்திரனை அன்றைக்கு நான் பார்த்தேன்......”
பாவெல் விஷயம் புரியாமல் அவளது கண்களையே பார்த்தான். நிகலாய் வெஸோவ்ஷிகோவின் முகத்திலுள்ள அம்மைத் தழும்புகளை அடையாளம் சொல்வதற்காக, அவள் தன் கை விரல்களால் தன் கன்னத்தில் தட்டிக்கொட்டிக் காட்டினாள்.
“அவன் இப்போது சரியாயிருக்கிறான். அவனுக்குச் சீக்கிரமே ஒரு வேலை பார்த்துவைக்க வேண்டும்.”
பாவெல் புரிந்துகொண்டான். தலையை ஆட்டியபடி மகிழ்ச்சி நிறைந்த கண்களோடு பதிலிறுத்தான்.
“அப்படியா? ரொம்ப நல்லது” என்றான் அவன்.
“ஆமாம், இவ்வளவுதான் விஷயம்” என்று முடித்தாள் அவள். அவனது மகிழ்ச்சி அவளது இதயத்தைத் தொட்டது; அதன் காரணமாகத் தன்மீது திருப்திகொண்டாள்.
அவளது கரத்தை இறுகப்பற்றி அவளுக்கு விடைகொடுத்தான்.
“நன்றி, அம்மா!”
அவர்கள் இருவரது இதயங்களும் ஒன்றையொன்று நெருங்கிப் பழகிக்கொண்டதால் ஏற்பட்ட ஆனந்த வெறி அவளது தலைக்குள் காரமான மதுவெறியைப்போல் மேலோங்கிக்கிறங்கியது. அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவனது கையை மட்டும் பற்றிப் பிடித்தாள் அவள்.
வீட்டுக்கு வந்தவுடன் சாஷா தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். தாய் பாவெலைப் பார்த்துவிட்டு வரும் நாட்களிலெல்லாம் அவளும் வந்து செல்வது வழக்கம். அவள் பாவெலைப் பற்றி எதுவும் கேட்பதில்லை; தாயாகவே. அவனைப்பற்றி எதுவும் சொன்னால் கேட்பாள். இல்லாவிட்டால் தாயின் கண்களையே வெறித்து ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருப்பதோடு திருப்தியடைந்துவிடுவாள். ஆனால், இந்தத் தடவையோ அவள் ஆர்வத்தோடு வாய்விட்டுக் கேட்டுவிட்டாள்.
“சரி. அவன் எப்படி இருக்கிறான்?”
“நன்றாயிருக்கிறான்.”
“அவனிடம் அந்தச் சீட்டைக் கொடுத்து விட்டீர்களா?”
“ஆமாம். அதை அவன் கையில் மிகுந்த சாமர்த்தியத் தோடு கொடுத்துவிட்டேன்......”
“அவன் அதைப் படித்தானா?”
“அங்கேயா? அது எப்படி முடியும்?”
“ஆமாம் நான் மறந்துவிட்டேன்” என்று மெதுவாகக் கூறினாள் அந்தப் பெண். “நாம் இன்னும் ஒரு வார காலம் சரியாக ஒரு வாரகாலம் — முழுவதும் காத்திருக்க வேண்டும், இல்லையா? சரி, அவன் ஒத்துக்கொள்வான் என்று நினைக்கிறீர்களா?”
சாஷா முகத்தை நெரித்துச் சுழித்து, தாயையே கூர்ந்து நோக்கினாள்.
“நான் எப்படிச் சொல்லமுடியும்?” என்றாள் தாய். “இதில் ஒன்றும் ஆபத்தில்லையென்றால் அவன் ஏன் சம்மதிக்கக் கூடாது!”
சாஷா தன் தலையை உலுக்கிக்கொண்டாள்.
“சரி. இந்த நோயாளிக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? அவனுக்குப் பசியெடுத்துவிட்டது” என்றாள் அவள்,
“அவன் எதுவும் தின்னலாம். இரு, இதோ நான் போய்.....”
அவள் சமையலறைக்குள் சென்றாள். சாஷாவும் மெதுவாக அவளைப் பின்தொடர்ந்து சென்றாள்.
“நானும் உதவட்டுமா?”
“வேண்டாம், வேண்டாம்.”
தாய் அடுப்பின் பக்கமாகக் குனிந்து ஒரு பாத்திரத்தை எடுத்தாள்.
“பொறுங்கள்.....” என்று அமைதியாகச் சொன்னார் அந்தப் பெண்.
அவளது முகம் வெளுத்து, கண்கள் வேதனையுடன் விரிந்தன. அதே சமயம் அவள் நடுங்கும் உதடுகளோடு அவசர அவசரமாக முணுமுணுத்துப் பேசினாள்:
“நான் உங்களிடம் ஒன்று கேட்க நினைத்தேன். அவன் சம்மதிக்கமாட்டான் என்பது மட்டும் எனக்கு நிச்சயம் தெரியும். நீங்கள் அவனிடம் அது விஷயமாய் மன்றாடிக் கேட்டுக்கொள்ள வேண்டும். அவனது தேவை இப்போது இங்கு மிகவும் அத்தியாவசியமானது. எடுத்துக்கொண்ட கொள்கையின் வெற்றிக்காக, அவன் இதற்குச் சம்மதிக்கத்தான் வேண்டும் என்று சொல்லுங்கள். அவனது உடல் நலத்தைப்பற்றி நான் மிகவும் பயந்துகொண்டிருப்பதாகச் சொல்லுங்கள். உங்களுக்கே தெரியும்—இன்னும் விசாரணைக்குரிய நாளைக்கூட நிர்ணயிக்கவில்லையே.....”
அவள் மிகுந்த சிரமத்தோடு பேசுகிறாள் என்பது நன்றாகத் தெரிந்தது. அவள் ஏதோ ஒரு மூலையைப் பார்த்தவாறே நிமிர்ந்து நின்றாள். குரல் மட்டும் தடுமாறியது. சோர்ந்துபோய் தன் கண்ணிமைகளை மூடி, உதடுகளைக் கடித்துக்கொண்டாள். இறுகப் பிடித்து மடக்கிய அவளது கைவிரல்கள் சொடுக்குவிட்டுக் கொள்வதுகூடத் தாய்க்குக் கேட்டது.
இந்த மாதிரியான கொந்தளிப்பைக் கண்டு, பெலகேயா மனம் புரிந்துகொண்டு அவளைத் துக்கத்தோடு தழுவியணைத்துக் கொண்டாள்.
“அடி. என் கண்ணே!” என்று அவள் மிருதுவாகச் சொன்னாள். “அவன் தன்னைத் தவிர வேறு யார் பேச்சையுமே கேட்க மாட்டான்—-எவர் பேச்சையும் கேட்க மாட்டான்!”
அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் இறுகத் தழுவியவாறே மௌனமாக நின்றார்கள், பிறகு சாஷா தாயின் கரங்களைத் தன் தோள் மீதிருந்து மெதுவாக விலக்கிவிட்டு, நடுக்கத்துடன் சொன்னாள்:
“ஆமாம், நீங்கள் சொல்வது சரி. இதெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனம், என்னவோ உணர்ச்சியில்.......”
திடீரென அவள் அமைதி பெற்று சாவதானமாகச் சொன்னாள்: “ரொம்ப சரி, வாருங்கள். நோயாளிக்கு உணவு கொடுக்கலாம்.”
அவள் இவானின் படுக்கையருகே சென்று அமர்ந்தபோது, அவனை நோக்கித் தலையை வலிக்கிறதா என்பதைப் பரிவோடு கேட்டுக்கொண்டாள்.
“அதிகம் இல்லை. எல்லாமே கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது. பலவீனமாய் இருக்கிறது” என்று கூறிக்கொண்டே அவளது முன்னிலையில் ஏற்பட்ட உணர்ச்சிக் குழப்பத்தால் இன்னது செய்வதென்று தெரியாமல் போர்வையை மோவாய்க்குக் கீழாக இழுத்துவிட்டுக்கொண்டான் இவான். அமிதமான ஒளியைக் கண்டு கூசுவது மாதிரி கண்களைச் சுருக்கிக்கொண்டான். அவளது முன்னிலையில் சாப்பிடுவதற்கே அவனுக்கு வெட்கமாயிருக்கிறது என்பதை சாஷா உணர்ந்து கொண்டாள். எனவே அவள் எழுந்து வெளியே சென்றாள். இவான் எழுந்து உட்கார்ந்து அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“அ... ழ.... கி தான்” என்று முணுமுணுத்துக் கொண்டான்.
களிப்பு நிறைந்த நீலக்கண்களும் நெருக்கமாக வளர்ந்திருந்த சிறு பற்களும் ஆண்மை குடிபுகாத பாலியக் குரலும் பெற்றிருந்தான் அவன்.
“உனக்கு என்ன வயதாகிறது?” என்று ஏதோ நினைத்தவாறே கேட்டாள் தாய்.
“பதினேழு..”
“உன் பெற்றோர்கள் எங்கே?”
“கிராமத்தில், பத்து வயதிலிருந்து நான் இங்குதான் இருக்கிறேன், பள்ளிக்கூடப் படிப்பை முடித்தவுடனேயே நான் நகருக்கு ஓடிவந்துவிட்டேன். உங்கள் பேரென்ன. தோழரே!”
இந்த வார்த்தையைச் சொல்லி அவளை அழைக்கும்போது அந்த வார்த்தை எப்போதும் அவள் உள்ளத்தைத் தொடும். அவள் குழப்பமடைவாள்.
“நீ ஏன் தெரிந்துகொள்ள விரும்புகிறாய்?” என்று புன்னகையோடு கேட்டாள் அவள்.
சிறிது நேரம் தத்தளித்துத் தயங்கிவிட்டு, அவன் விளக்கினான்:
“கேளுங்கள், எங்களோடு கல்விக் குழாத்தில் பங்கெடுத்து வந்த ஒரு மாணவன்—அதாவது எங்களுக்கு வகுப்பு நடத்திய ஒரு மாணவன் பாவெல் விலாசவின் தாயைப்பற்றி எங்களுக்கு எடுத்துக் கூறினான். மே தினக் கொண்டாட்டம் ஞாபகமிருக்கிறதா?”
தாய் தலையை அசைத்துக்கொண்டே தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கேட்டாள்.
அவன் தான் முதன் முதல் நமது கட்சியின் கொடியைப் பகிரங்கமாக ஏந்திப் பிடித்தவன்” என்று அந்தப் பையன் பெருமையோடு கூறினான். அந்தப் பெருமையுணர்ச்சி தாயின் உள்ளத்திலும் எதிரொலி எழுப்பியது.
“நான் அப்போது இல்லை. அந்த மாதிரி நாங்களும் தனியாகக் கொண்டாட விரும்பினோம். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. நாங்கள் கொஞ்சம், பேர்தான் இருந்தோம். இருந்தாலும், வருகிற வருஷத்தில் நாங்கள் கட்டாயம் நடத்தித்தான் பார்க்கப் போகிறோம். பாருங்களேன்!”
எதிர்காலச் சம்பவங்களைக் கற்பனை செய்து பார்க்கும் உத்வேகத்தால் அவனுக்கு மூச்சுக்கூடத் திணறியது.
“சரி, நான் விலாசவின் தாயைப் பற்றித்தானே சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று கையிலிருந்த கரண்டியை ஆட்டிக்கொண்டே பேசத் தொடங்கினான் அவன்.” அவளும் அதன் பின்னர் கட்சியில் சேர்ந்துவிட்டாள். அது ஒரு பெரிய அதிசயம் என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்.”
தாய் வாய் திறந்து புன்னகை புரிந்தாள்; அந்தப் பையனுடைய புகழுரையைக் கேட்பதில் அவளுக்கு ஆனந்தம் தோன்றியது. ஆனந்தத்துடன் கூச்சக் கலக்கமும் இருந்தது.
“நான்தான் விலாசவின் தாய்!” என்று அவள் அவனிடம் சொல்ல விரும்பினாள். என்றாலும் அந்த வார்த்தைகளை உள்ளடக்கிக்கொண்டு தனக்குத்தானே ஏளன பாவத்தோடு கூறிக்கொண்டாள்;
“நான் எவ்வளவு பெரிய முட்டாள்!”
திடீரென்று அவள் அவன் பக்கமாகக் குனிந்து உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாள்;
“இன்னும் கொஞ்சம் சாப்பிடு. நீ சீக்கிரமே குணமாகி எழுந்து நடமாட வேண்டும். நாம் எடுத்துக்கொண்ட கொள்கைப் போருக்காக!
தெருக்கதவு திறந்தது. தெருவிலிருந்து குளிர்ந்த ஈரம் படிந்த இலையுதிர்காலக் காற்று உள்ளே வீசியது. செக்கச் சிவந்த கன்னத்தோடு சிரித்துக்கொண்டே சோபியா வாசலில் நின்றுகொண்டிருப்பதை, தாய் கண்டாள்.
“நான் சொல்வதைக்கேள். துப்பறிபவர்கள் எல்லாம் என்னை மாப்பிள்ளை மாதிரி வட்டம் போட்டுத் திரிகிறார்கள். நான் சீக்கிரமே இங்கிருந்து போயாக வேண்டும்.... சரி. இவான், உனக்கு எப்படி இருக்கிறது? தேவலையா? நீலவ்னா, பாவெலிடமிருந்து ஏதாவது செய்தியுண்டா? சாஷா இங்கிருக்கிறாளா?”
சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டே ஏதேதோ கேள்விகள் கேட்டாள். அந்தக் கேள்விகளுக்கு அவள் பதிலை எதிர்நோக்கவில்லை. அவள் தாயையும் அந்தப் பையனையும் தனது சாம்பல் நிறக்கண்களால் பரிவோடு நோக்கித் தழுவினாள். தாய் அவளைக் கவனித்துப் பார்த்தவாறே தனக்குள்ளாக நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.
“நானும் நல்லவர்களில் ஒருவனாகக் கருதப்படுகிறேன்!”
மீண்டும் அவள் இவானின் பக்கமாக குனிந்து பார்த்துச் சொன்னாள், “சீக்கிரமே குணம் அடைந்து, எழுந்து நடமாடு, மகனே!
பிறகு அவள் சாப்பாட்டு அறைக்குள் சென்றாள். அங்கு சோபியா சாஷாவுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டாள்:
“அவள் இதற்குள்ளாகவே முன்னூறு பிரதிகள் எடுத்து முடித்துவிட்டாள். இந்த வேகத்தில் போனால் அவள் தன்னைத்தானே சீக்கிரம் முடித்துக்கொண்டுவிடுவாள். இதுதான் வீரம்! இந்த மாதிரி ஜனங்களோடு வாழ்வதும், அவர்களோடு உழைப்பதும் அவர்களது தோழர்களாயிருப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம், சாஷா!”
“ஆமாம்” என்று அந்தப் பெண் மெதுவாகச் சொன்னாள்.
அன்று மாலை அவர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது சோபியா தாயை நோக்கிப் பேசினாள்:
“நீங்கள் இன்னும் ஒரு முறை கிராமப் புறத்துக்குச் சென்று வரவேண்டும். நீலவ்னா.”
“ரொம்ப சரி, எப்பொழுது?”
“மூன்று நாட்களுக்குள் உங்களுக்குப் புறப்பட்டுப் போகச் சௌகரியப்படுமா?”
“நிச்சயமாக”
“இந்தத்தடவை தபால் வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு வேறு மார்க்கமாக, நிகோல்ஸ்கி பிரதேசம் வழியாகப் போகவேண்டும்” என்று போதித்தான் நிகலாய். அவன் முகத்தைச் சுழித்து உம்மென்று இருந்தான், அந்த பாவம் அவனது வழக்கமாக அன்பு நிறைந்த அமைதி பாவத்தைக் கெடுத்துக்கொண்டிருந்தது.
'நிகோல்வஸ்கி வழியாகப் போவதென்றால் ரொம்ப தூரமாச்சே” என்றாள். தாய்; “அதிலும் எவ்வளவு தூரத்துக்குக் குதிரைகளை ஒட்டிச் செல்வதென்றால்.....”
“உண்மையைச் சொல்வதென்றால், நான் இந்தப் பயணத்தை ஆதரிக்கவேயில்லை” என்று பேசத் தொடங்கினான் நிகலாய். “அங்கு இப்போது நிலைமை சரியில்லை. பல பேரைக் கைது செய்திருக்கிறார்கள். யாரோ ஒர் உபாத்தியாயரைக்கூடக் கொண்டுபோய்விட்டதாகத் தெரிகிறது. எனவே நாம் மிகுந்த ஜாக்கிரதையோடிருக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்தால்கூட நல்லதுதான்....”
“ஆனால் நாம் அவர்களுக்கு எந்தவிதத் தங்கு தடையுமின்றிப் பிரசுரங்களை அனுப்பியாக வேண்டுமே” என்று மேஜை மீது விரலால் கொட்டிக்கொண்டே சொன்னாள் சோபியா. “நீங்கள் போகப் பயப்படுகிறீர்களா, நீலவ்னா?” என்று அவள் திடீரெனக் கேட்டாள்.
அந்தச் செயல் தாயின் உள்ளத்தைச் சுட்டுவிட்டது.
“நான் என்றாவது பயந்திருக்கிறேனா? முதல் தடவை போகும் போதே நான் பயப்படவில்லையே.... இப்போது மட்டும்.... நீங்கள் இப்படித் திடீரென்று.....” அவள் அந்த வாக்கியத்தை முடிக்காமலேயே தலையைக் குனிந்துகொண்டாள். நீ பயப்படுகிறாயா, உனக்குச் சௌகரியமிருக்குமா. உன்னால் இந்தக் காரியத்தைச் செய்ய இயலுமா என்றெல்லாம் யாராவது, அவளைக் கேட்கும்போது அவர்கள் அவளிடம் ஏதோ தயவு நாடிக் கேட்பதைப்போல அவள் உணர்ந்தாள். மேலும் அந்தக் கேள்விகளாக அவர்கள் தம்முன் ஒருவரையொருவர் நடத்துகிற மாதிரி தன்னையும் நடத்தாமல் தன்னை ஒதுக்கி வைத்த மாதிரி வித்தியாசமாக நடத்துவதுபோலத் தாய்க்குத் தோன்றியது.
“நான் பயப்படுகிறேனா என்று ஏன் கேட்கிறீர்கள்?” என்று அடைத்துப்போன குரலில் கேட்டாள் அவள். “நீங்கள் மட்டும் ஒருவருக்கொருவர் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கக் காணோமே!”
நிகலாய் பதறிப்போய்த் தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றினாள். மீண்டும் போட்டுக்கொண்டு, தனது சகோதரியை ஆழ்ந்து நோக்கினான். அங்கு நிலவிய அமைதியைக் கண்டு தாய் குழம்பிப் போனாள். அவள் மேஜையைவிட்டு எழுந்து நின்று குற்றம் செய்துவிட்டவளைப்போல் ஏதோ சொல்ல விரும்பினாள். ஆனால் அதற்குள் சோபியா அவளது கரத்தைப் பற்றிப் பிடித்து மெதுவாகக் கூறினாள்;
“என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் நான் இப்படி நடந்துகொள்ளமாட்டேன்”
இந்த வார்த்தையைக் கேட்டதும் தாயின் முகத்தில் புன்னகை அரும்பியது. சில நிமிஷ நேரங்களில் மீண்டும் அவர்கள் மூவரும் அந்தப் பயணத்தைப்பற்றி உற்சாகத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.