தாய்/45

விக்கிமூலம் இலிருந்து

16

போலீசாரின் தலைவன் வந்துகொண்டிருந்தான். உருண்டை முகமும், கனத்த சரீரமும், நெடிய உருவமும் கொண்டவனாக இருந்தான் அவன். அவன் அணிந்திருந்த தொப்பி காது பக்கமாக நீண்டு கொண்டிருந்தது, மீசையின் ஒரு புறம் மேல் நோக்கித் திருகி நின்றது. மறுமுனை கீழ் நோக்கி வளைந்திருந்தது. எனவே அவனது தோற்றமே என்னவோ கோணங்கித்தனமாகத் தோன்றியது. மேலும் அவனது உதட்டில் பிறந்த உயிரற்ற புன்னகையால் அவனது முகமே கோரமாகத் தெரிந்தது. அவனது இடது கையில் ஒரு வாள் இருந்தது. வலது கையால் வீசி விளாசிச் சைகை காட்டிக்கொண்டே அவன் வந்தான். அவனது வருகையின் கனத்த காலடியோசையை எல்லோரும் கேட்டனர். கூட்டம் அவனுக்கு வழி விட்டு ஒதுங்கியது. அவர்களது முகங்களிலெல்லாம் ஒரு சோர்வு நிறைந்த அழுத்த உணர்ச்சி குடியேறியது. அவர்களது குரல்கள் எல்லாம் பூமிக்குள்ளே மூழகுவதுபோல் உள்வாங்கிச் செத்து மடிந்தன. தாய்க்கு தன் கண்கள் எரிந்து கனல்வதாகத் தோன்றியது. நெற்றித் தசை நடுங்கிச் சிலிர்த்தது. மீண்டும் அவளுக்கு அந்தக் கூட்டத்தாரோடு கலந்து கொள்ளும் ஆசை உந்தியெழுந்தது. அவள் முன்னே செல்வதற்காக முண்டிப் பார்த்தாள்; பிறகு அசைவற்று ஸ்திரமாக நின்று போனாள்.

“இதென்ன இது?” என்று ரீபினின் முன்னால் வந்து நின்று கொண்டே கேட்டான் அந்தத் தலைவன். ரீபினை ஏற இறங்க நோக்கி அளந்து பார்த்தான். “இவன் கைகளை ஏன் கட்டவில்லை? போலீஸ்! இவன் கையைக் கட்டுங்கள்”

அவனது குரல் உச்ச ஸ்தாயியில் கணீரென்று ஒலித்தது; என்றாலும் அதில் உணர்ச்சியில்லை.

“கட்டித்தான் இருந்தோம். ஜனங்கள் அவிழ்த்துவிட்டு விட்டார்கள்” என்று ஒரு போலீஸ்காரன் பதில் சொன்னான்.

“என்ன ஜனங்களா? எந்த ஜனங்கள்?”

அந்தப் போவீஸ் தலைவன் தன்னைச் சுற்றிப் பிறை வடிவமாகச் சூழ்ந்து நிற்கும் ஜனக்கூட்டத்தைச் சுற்று முற்றும் பார்த்தான்.

“யார் இந்த ஜனங்கள்?” என்று அவனது உணர்ச்சியற்ற வெளிறிய குரலை உயர்த்தாமலும் தாழ்த்தாமலும் கேட்டான். அவன் வாளின் கைப்பிடியால் அந்த நீலக்கண் முஜீக்கைத் தொட்டான்.

“அந்த ஜனங்கள் யார்? நீயா சுமகோவ்? வேறு யார்? நீயா, மீஷன்?”

அவன் அவர்களில் ஒருவனது தாடியை வலது கையால் பற்றிப் பிடித்தான்.

“இங்கிருந்து உடளே கலைந்து போய்விடுங்கள்! அயோக்கியப் பயல்களா! இல்லையென்றால் உங்களுக்கு வேண்டு மட்டும் உதை கொடுத்தனுப்புவேன். நான் யாரென்பதைக் காட்டிவிடுவேன்!”

அவன் முகத்தில் கோபமோ பயமுறுத்தலோ காணப்படவில்லை. அவன் அமைதியாகப் பேசினான்: தனது நெடிய கரங்களால் ஜனங்களை வழக்கம்போல் ஓங்கியறைந்தான். ஜனங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டும் தலையைக் குனிந்துகொண்டும், பின்வாங்கத் தொடங்கினர்.

“சரி, நீங்கள் இங்கு எதற்கு நிற்கிறீர்கள்?” என்று போலீசாரைப் பார்த்துச் சொன்னான். “நான் சொல்கிறேன். கட்டுங்கள் அவனை!”

அவன் ஏதேதோ வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு ரீபினை நோக்கினான்.

“உன் கையைப் பின்னால் கட்டு” என்று உரத்த குரலில் சொன்னான் அவன்.

“இவர்கள் என் கையை கட்ட வேண்டியதில்லை” என்றான் ரீபின்: “நான் ஒன்றும் ஓடிப்போக நினைக்கவில்லை. சண்டை போடவும் விரும்பவில்லை. பின் ஏன் கைகளைக் கட்டுகிறீர்கள்?”

“என்ன சொன்னாய்” என்று கேட்டுக்கொண்டே அவனை நோக்கி அடியெடுத்து வைத்தான். அந்தப் போலீஸ் தலைவன்.

“ஏ, மிருகங்களா! நீங்கள் மக்களைச் சித்திரவதை செய்தது போதும்!” என்று தன் குரலை உயர்த்திக்கொண்டு சொன்னான் ரீபின். “உங்களுக்குச் சாவுமணி அடிக்கும் நாள் நெருங்கிவிட்டது!”

துடிதுடிக்கும் மீசையோடு ரீபினின் முகத்தையே வெறித்துப் பார்த்தான் அந்தத் தலைவன். பிறகு ஒரு அடி பின் வாங்கி வெறிபிடித்த குரலில் கத்தினான்:

“நாய்க்குப் பிறந்த பயலே! என்னடா சொன்னாய்!” திடீரென்று அவன் ரீபினின் முகத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தான்.

“உன்னுடைய முஷ்டியால், நீ உண்மையைக் கொன்றுவிட முடியாது!” என்று அவனை நோக்கி முன்னேறிக்கொண்டே சத்தமிட்டான் ரீபின். “அட்டுப் பிடித்த நாயே! என்னை அடிப்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?”

“எனக்கு உரிமை கிடையாதா? கிடையாதா?” என்று ஊளையிட்டுக் கத்தினான் அந்தத் தலைவன்.

மீண்டும் அவன் ரீபினின் தலையைக் குறிபார்த்துத் தன் கையை ஓங்கினான். ரீபின் குனிந்து கொடுத்ததால் அந்த அடி தவறிப்போய், அந்தப் போலீஸ் தலைவனே நிலை தவறித் தடுமாறிப் போய்விட்டான். கூட்டத்தில் யாரோ கனைத்தார்கள். மீண்டும் ரீபினின் ஆக்ரோஷமான குரல் ஒங்கி ஒலித்தது:

“ஏ, பிசாசே! என்னை அடிக்க மட்டும் துணியாதே, ஆமாம் சொல்லிவிட்டேன்”

அந்தப் போலீஸ் தலைவன் சுற்றுமுற்றும் பார்த்தான். ஜனங்கள் ஒன்றுகூடி இருண்ட வளையமாக நெருக்கமாய் நின்று கொண்டிருந்தார்கள்.

“நிகீதா: ஏ. நிகீதா!” என்று கத்தினான் அந்தத் தலைவன்.

கம்பளிக்கோட்டு அணிந்து குட்டையும் குண்டுமாயிருந்த ஒரு முஜீக் கூட்டத்திவிருந்து வெளிவந்தான். அவனது கலைந்துபோன பெரிய தலை கவிழ்ந்து குனிந்திருந்தது.

“நிகீதா!” என்று தன் மீசையை நிதானமாகத் திருகிக்கொண்டே சொன்னான் அந்தப் போலீஸ் தலைவன். “அவன் செவிட்டில், ஓங்கி ஒரு சரியான குத்து விடு!”

அந்த முஜீக் ரீபினின் முன்னால் வந்து நின்று தலையை நிமிர்த்தினான், உடனே ரீபின் அவன் முன் கடுகடுத்த வார்த்தைகளை வீசியபடி உர்த்த உறுதி வாய்ந்த குரலில் சொன்னான்.

“ஜனங்களே! பார்த்தீர்களா? இந்த மிருகங்கள் நம் கைகளைக் கொண்டே நம் தொண்டையை நெரிப்பதை நன்றாகப் பாருங்கள்! சிந்தித்துப் பாருங்கள்!”

அந்த முஜீக் தன் கையை மெதுவாக உயர்த்தி ரீபினின் தலையில் லேசாக ஒரு குத்துவிட்டான்

“ஏ, நாய்க்குப் பிறந்த பயலே! இப்படித்தான் அடிக்கிறதோ?” என்று அவனை நோக்கி அழுது வடிந்தான் அந்தத் தலைவன்.

“ஏய், நிகீதா!” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. “கடவுளை மறந்து காரியம் செய்யாதே!”

“நான் சொல்கிறேன். அவனை அடி!” என்று முஜீக்கின் பிடரியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே கத்தினான். தலைவன். ஆனால் அந்த முஜீக்கோ தன் தலையைக் குனிந்தவாறே ஒரு புறமாக ஒதுங்கிச் சென்றான்.

“என்னால் முடிந்தவரை அடித்தாயிற்று” என்று முனகினான்.

“என்ன?”

“அந்தப் போலீஸ் தலைவனின் முகத்தில் ஒரு நடுக்கம் பரவிப் பாய்ந்தது. அவன் தரையை எட்டி உதைத்தான். ஏதேதோ திட்டிக்கொண்டு ரீபினை நோக்கிப்பாய்ந்தான். திடீரென ஓங்கியறையும் சத்தம் கேட்டது. ரீபின் கிறுகிறுத்துச் சுழன்றான். தன் கையை உயர்த்தினான். ஆனால் இரண்டாவதாக விழுந்த அறை அவனைக் கீழே தள்ளி வீழ்த்தியது. அந்தப் போலீஸ் அதிகாரி கீழே விழுந்த ரீபினின் நெஞ்சிலும் விலாவிலும் தலையிலும் உதைத்தான். மிதித்தான்

கூட்டத்தினரிடையே கோபக் குமுறல் முரமுரத்து வெளிப்பட்டது. ஜனங்கள் அந்த அதிகாரியை நோக்கிச் சூழ ஆரம்பித்தார்கள். ஆனால் அவனோ இதைக் கண்டுகொண்டான். பின்னால் துள்ளிப் பாய்ந்து. தன் வாளின் கைப்பிடியைப் பற்றிப் பிடித்துச் சுழற்றி வீசினான்:

“என்ன இது? கலவரம் உண்டாக்கவா பார்க்கிறீர்கள்? ஆ-ஹா-ஹா! அப்படியா சேதி?”

அவனது குரல் உடைந்து கரகரத்து நடுங்கியது. திராணியற்ற சிறு கூச்சலைத்தான் அவனால் வெளியிட முடிந்தது. திடீரென்று அவனது குரலோடு அவனது பலமும் பறந்தோடிப் போய்விட்டது. தலையைத் தோள் மீது தொங்கவிட்டபடி அவன் தடுமாறி நிலைகுலைந்து கால்களாலேயே வழியை உணர்ந்து உயரிற்ற கண்களால் வெறித்துப் பார்த்தவாறே பின் வாங்கினான்.

“ரொம்ப நல்லது” என்று அவன் கரகரத்த குரலில் சத்தமிட்டான். “அவனைக் கொண்டு போங்கள் — நான் அவனை விட்டுவிடுகிறேன். வாருங்கள், ஆனால் அயோக்கியப் பதர்களா? இவன் ஓர் அரசியல் குற்றவாளி என்பது உங்களுக்குத் தெரியாதா? இவன் யார் அரசுக்கு எதிராக, மக்களைத் தூண்டிவிடுபவன் என்பது உங்களுக்குத் தெரியாதா இவனையா நீங்கள் காப்பாற்றப் போகிறீர்கள். அப்படியானால் நீங்களும் கலகக்காரர்கள்தானா? அப்படித்தானே!”

தாய் கொஞ்சங்கூட அசையாமல் நின்றாள். அவளது கண்கள்கூட இமைக்கவில்லை. சிந்தித்துப் பார்க்கும் சக்தியையும் பலத்தையும் இழந்து போய் பயமும் அனுதாபமும் பீடித்த மனதோடு அவள் ஒரு கனவு நிலைட்பில் நின்றுகொண்டிருந்தாள். முறைப்பும் கோடமும் புண்பட்ட மக்களின் குரல்கள், கலைக்கப்பட்ட தேனீக்களின் மூர்க்க ரீங்காரத்தைப் போல் கும்மென்று அவள் காதுகளில் இரைந்தன. அந்த அதிகாரியின் குழறிய குரல் அவள் காதில் ஒலித்தது. அத்துடன் யாரோ குசுகுசுவெனப் பேசும் குரலும் சேர்ந்தது.

“அவன் குற்றவாளியென்றால், அவனை நீதி மன்றத்திற்குக் கொண்டு போ.....”

“எஜமான்! அவன் மீது கருணை கொள்ளுங்கள்......”

“இதுதான் உண்மை. இந்த மாதிரி நடத்துவதற்கு எந்தச் சட்டமும் இடங்கொடுக்காது.”

“இது என்ன நியாயமா? இப்படி எல்லோரும் அடிக்கத் தொடங்கி விட்டால்,—அப்புறம் என்ன நடக்கும்?”

ஜனங்கள் இரு பிரிவினராகப் பிரிந்து நின்றார்கள். ஒரு சிலர் அந்த அதிகாரியைச் சுற்றி நின்று அவனோடு சேர்ந்து கத்திக்கொண்டும் இரங்கிக் கேட்டுக்கொண்டுமிருந்தனர். அந்தப் பிரிவினரில் சிறு பான்மையோர் கீழே விழுந்துகிடக்கும் ரீபினின் பக்கமாக நின்று ஏதேதோ வர்மம் கூறினர். அவர்களில் சிலர் ரீபினைத் தரையிலிருந்து தூக்கி நிறுத்தினர். போலீஸ்காரர்கள் அவனது கைகளைக் கட்ட முன் வந்த போது அவர்கள் கூச்சலிட்டார்கள்:

“ஏ, பிசாசுகளே! அவசரப்படாதீர்கள்!”

ரீபின் தனது முகத்திலும் தாடியிலும் படிந்திருந்த ரத்தத்தையும் புழுதியையும் துடைத்தான்; வாய் பேசாது சுற்றுமுற்றும் பார்த்தான். அவனது பார்வை தாயின் மீது விழுந்தது. அவள் நடுங்கியபடி, அவனைநோக்கித் தன்னையுமறியாமல் கையை ஆட்டிக்கொண்டே முன் வரக் குனிந்தாள். ஆனால் அவன் சட்டென்று அவள் பார்வையினின்றும் கண்களைத் திருப்பிக்கொண்டான். சில நிமிஷ நேரம் கழித்து அவனது கண்கள் மீண்டும் அவள் பக்கம் திரும்பின. அவன் நிமிர்ந்து நின்று தலையை உயர்த்திப் பார்ப்பதாகவும் ரத்தக்கறை படிந்த அவனது கன்னங்கள் நடுங்குவதாகவும் அவளுக்குத் தோன்றியது.

“அவன் என்னைக் கண்டுகொண்டான்—-உண்மையிலேயே என்னை அவன் அடையாளம் கண்டுகொண்டானா?”

அவள் அவனை நோக்கி உடம்பெல்லாம் நடுங்க, அடக்க முடியாத வருத்தம் நிறைந்த மகிழ்ச்சியோடு தலையை அசைத்தாள். மறு கணமே அந்த நீலக்கண் முஜீக் அருகே நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டுகொண்டாள். அவனது பார்வை தாயின் உள்ளத்தில் ஆபத்துக்கான எச்சரிக்கையுணர்வைக் கிளப்பிவிட்டது.

“நான் என்ன செய்கிறேன்? இப்படிச் செய்தால் என்னையும் அவர்கள் கொண்டு போய்விடுவார்கள்!”

அந்த முஜீக் ரீபினிடம் ஏதோ சொன்னான்: ரீபின் பதிலுக்கு ஏதோ கூறியவாறே தலையை அசைத்தாள்.

“அது சரிதான்!” என்றான் அவன். நடுக்கம் ஒரு புறமிருந்தாலும், அவனது குரல் தெளிவாகவும் துணிவாகவும் ஒலித்தது. “இந்தப் பூமியில் நான் ஒருவன் மட்டும் அல்ல. உண்மை முழுவதையும் அவர்களால் அடக்கிப் பிடித்துவிட முடியாது. நான் எங்கெங்கு இருந்தேனோ அங்கெல்லாம் என்னைப் பற்றிய நினைவு நிலைத்திருக்கும். அவர்கள் எங்களது இருப்பிடங்களையெல்லாம் குலைத்து, எல்லாத் தோழர்களையும் கொண்டு போய்விட்டாலும் கூட...”

“அவன் இதை எனக்காகத்தான் சொல்லுகிறான் என்று ஊகித்துக் கொண்டாள் தாய்.

“பறவைகள் சிறைவிட்டுப் பறக்கும். மக்கள் தளைவிட்டு நீங்கும் காலம் வரத்தான் போகிறது!”

ஒரு பெண் பிள்ளை ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்து ரீபினின் முகத்தைக் கழுவினாள். கழுவும் போது ‘ஆ—ஓ’ என்று புலம்பினாள். அவளது இரங்கிய கீச்சுக்குரல் மிகயீல் பேசிய பேச்சோடு சிக்கி முரணியது. எனவே அவன் பேச்சைத் தாயால் சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லை. போலீஸ் தலைவன் முன்னால் வர, ஒரு சில முஜீக்குகள் முன்னேறி வந்தார்கள். அவர்களில் யாரோ ஒருவன் கத்தினான்.

“இந்தக் கைதியை ஒரு வண்டியில் போட்டுக் கொண்டு போவோம், சரி, இந்தத் தடவை யாருடைய முறைக்கட்டு?”

பிறகு அந்தப் போலீஸ் அதிகாரி தனக்கே புதிதான குரலில், புண்பட்டவனின் முனகல் குரலில் பேசினான்.

“ஏ, நாயே! நான் உன்னை அடிக்கலாம். ஆனால் நீ என்னை அடிக்க முடியாது!”

“அப்படியா? நீ உன்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்—கடவுள் என்றா?” என்று கத்தினான் ரீபின்.

உள்ளடங்கிப்போய்க் குழம்பிய கசமுசப்பு, அவனது குரலை மூழ்கடித்து விழுங்கிற்று.

“தம்பி. அவரோடு வம்பு பண்ணாதே. அவர் ஓர். அரசாங்க அதிகாரி.”

“நீங்கள் அவன் மீது கோபப்படக்கூடாது. எசமான்! அவன் தன் நிலையிலேயே இல்லை.”

“ஏ. புத்திசாலி! சும்மா கிட.”

“அவர்கள் உன்னை இப்போது நகருக்குக் கொண்டுபோகப் போகிறார்கள்.”

“அங்கு, இங்கிருப்பதைவிட ஒழுங்கு முறை அதிகம்.”

ஜனங்களுடைய குரல்கள் கெஞ்சிக் கேட்பதுபோல் இருந்தன. அந்தக் குரல்கள் ஒரு. சிறு நம்பிக்கையோடு முழங்கிக் கலந்து மங்கி ஒலித்தன. போலீஸ்காரர்கள் ரீபின் கையைப் பற்றி, அந்தக் கிராமச் சாவடியின் முகப்பை நோக்கி இழுத்துக் கொண்டு சென்றார்கள். அங்கு சென்றவுடன் அவர்கள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று மறைந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அங்கு கூடி நின்ற முஜீக்குகள் கலைந்து சென்றார்கள். அந்த நீலக் கண் முஜீக் மட்டும் புருவத்துக்குக் கீழாகத் தன்னை உர்ரென்று பார்த்தவாறே தன்னை நோக்கி வருவதைக் கண்டாள் தாய். அவளது முழங்காலுக்குக் கீழே பலமிழந்து சுழலாடுவது. போல் தோன்றியது. திகைப்பும் பயமும் அவளது இதயத்தை ஆட்கொண்டு, அவளுக்குக் குமட்டல் உணர்ச்சியைத் தந்தன.

“நான் போகக்கூடாது. போகவே கூடாது” என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

அவள் பக்கத்திலிருந்த கம்பியைப் பலமாக பிடித்தவாறே நின்றாள்.

அந்தப் போலீஸ் தலைவன் கட்டிடத்தின் முகப்பிலேயே நின்று கைகளை வீசி. கண்டிக்கும் குரலில் பேசினான். அவனது குரலில் மீண்டும் பழைய வறட்சியும் உணர்ச்சியின்மையும் குடிபுகுந்துவிட்டன.

“நாய்க்குப் பிறந்த பயல்களா! நீங்கள் எல்லாம் முட்டாள்கள். உங்களுக்குத் தெரியாத விஷயங்களிலெல்லாம் நீங்கள் தலை கொடுக்கிறீர்கள். இது ஓர் அரசாங்கக் காரியம், தெரியுமா? நீங்கள் எனக்கு நன்றிதான் செலுத்த வேண்டும். நான் உங்களிடம் இவ்வளவு நல்லபடியாய் நடந்துகொண்டதற்காக, நீங்கள் என் முன் மண்டியிட்டு உங்கள் நன்றி விசுவாசத்தைக் காட்ட வேண்டும். உங்கள் அனைவரையும் கடுங்காவல் தண்டனைக்கு ஆளாக்க வேண்டுமென்று நான் நினைத்தால், அப்படியே செய்து முடிக்க எனக்குத் தைரியம் உண்டு.”

தலைகளிலே தொப்பியே வைக்காத சில முஜீக்குகள் மட்டும் அவன் சொன்னதைக் காதில் வாங்கிக்கொண்டார்கள், மேகக் கூட்டங்கள் தணிந்து இறங்கிக் கவிந்த உடனேயே இருள் பரவ ஆரம்பித்தது. அந்த நீலக்கண் முஜீக், தாய் நின்றுகொண்டிருந்த இடத்தை நோக்கி வந்து சேர்ந்தான்.

“என்ன நடக்கிறது என்று பார்த்தீர்களா?”

“ஆமாம்” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.

“நீங்கள் இங்கு எதற்கு வந்தீர்கள்?” என்று அவளது கண்களையே பார்த்துக்கொண்டு கேட்டான் அவன்.

“நான் விவசாயிப் பெண்களிடமிருந்து லேஸ்களும், துணிகளும் விலைக்கு வாங்க வந்தேன்.”

அந்த முஜீக் தன் தாடியை மெதுவாகத் தடவிக் கொடுத்தான்.

“எங்கள் பெண்கள் அந்தச் சாமான்களையே நெய்வதில்லையே!” என்று மெல்லக் கூறிக்கொண்டே அந்தக் கட்டிடத்தை ஒரு பார்வை பார்த்தான் அவன்.

தாய் தனது கண்ணால் அவனை ஒரு முறை அளந்து பார்த்தாள்; உள்ளே போவதற்கு வசதியான நேரத்தை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தாள். அந்த முஜீக்கின் முகம் அழகாகவும் சிந்தனை நிரம்பியதாகவும் இருந்தது. அவனது கண்களில் சோக பாவம் ததும்பியது. அவன் நெடிய உருவமும் அகன்ற தோள்களும் உடையவனாயிருந்தான், ஒரு சுத்தமான துணிச் சட்டையும் சட்டைக்கு மேல் ஏகப்பட்ட ஓட்டுக்களுடன் கூடிய ஒரு கோட்டும், கபில நிறமான முரட்டுக் கால் சராயும், வெறும் கால்களில் செருப்புக்களும் அணிந்திருந்தான்.

இனத் தெரியாத காரணத்தால் தாய் நிம்மதியோடு ஆழ்ந்து பெருமூச்செறிந்தாள். தட்டுத் தடுமாறும் தனது சிந்தனைகளையும் முந்திக்கொண்டு உந்தி வரும் ஓர் உணர்ச்சியால் அவள் திடீரெனப் பேசினாள்.

“இன்றிரவு நான் இங்கே தங்குவதற்கு இடம் கொடுப்பாயா?”

அந்தக் கேள்வி அவளுக்கே எதிர்பாராத சொல்லாக ஒலித்தது. அந்தக் கேள்வியைக் கேட்டவுடனேயே அவளது உடல் முழுவதும் திடீரென இறுகுவதுபோல் இருந்தது. அவள் நிமிர்ந்து நின்று அந்த மனிதனை உறுதியோடு அசைவற்றுப் பார்த்தாள். என்றாலும் பின்னி முடியும் சிந்தனைகள் அவளது மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தன.

“நான்தான் நிகலாய் இவானவிச்சின் அழிவுக்குக் காரணமாயிருப்பேன். பாவெலையும் நான் ரொம்ப காலத்துக்குப் பார்க்கவே முடியாது. அவர்கள் என்னை அடிக்கத்தான் போகிறார்கள்!”

அந்த முஜீக் அவசரம் ஏதுமில்லாமல், தரையை நோக்கியவாறே தனது கோட்டை இழுத்து விட்டுக்கொண்டு நிதானமாகப் பதில் சொன்னான்:

“இரவு தங்குவதற்கா? ஏன் தரமாட்டான்? என் வீடு ஒரு சின்ன ஏழைக் குடில். அவ்வளவுதான்.”

“நல்ல வீடுகளில் இருந்து எனக்குப் பழக்கமேயில்லை” என்றாள் தாய்.

“அப்படியென்றால் சரி” என்று கூறிக்கொண்டே அந்த முஜீக் தலையை உயர்த்தி மீண்டும் தன் கண்களால் அவளை அளந்து நோக்கினான். ஏற்கெனவே இருண்டுவிட்டது. அவனது தோற்றத்தில் இருளின் சாயை படிந்திருந்தது. அவனது கண்கள் மங்கிப் பிரகாசித்தன்; முகம் அந்தி மயக்க மஞ்சள் வெயிலால் வெளிறித் தோன்றியது.

“சரி, நான் இப்போதே வருகிறேன். தயை செய்து என்னுடைய டிரங்குப் பெட்டியை கொஞ்சம் தூக்கி வருவாயா?” என்று மெதுவாகச் சொன்னாள் தாய். அப்படிச் சொல்லும்போது அவள் மலை மீதிருந்து சரிந்து விழுவதுபோல உணர்ந்தாள்.

“சரி.”

“அவன் தோள்களை உயர்த்தி மீண்டும் தன் கோட்டைச் சரி செய்து கொண்டான்.”

“இதோ வண்டி வந்துவிட்டது” என்றான் அவன்.

ரீபின் அந்த அரசாங்கக் கட்டிடத்தின் முகப்பில் தோன்றினான். அவனது தலையிலும் முகத்திலும் கட்டுகள் போடப்பட்டிருந்தன; அவனது கைகளும் மீண்டும் கட்டப்பட்டிருந்தன.

“போய் வருகிறேன். நல்லவர்களே!” என்ற குரல் அந்த குளிரில் அந்தி மயக்க ஒளியினூடே ஒலித்தது; “உண்மையை நாடுங்கள்: அதைப் பேணிப் பாதுகாருங்கள். உங்களிடம் தூய்மையான பேச்சுப் பேசும் மனிதனை நம்புங்கள். சத்தியத்தைக் காப்பதற்காக போராடத் தயங்காதீர்கள்!”

“உன் வாயை மூடு!” என்று போலீஸ் அதிகாரி கத்தினான். “ஏ, போலீஸ்கார மூடமே! குதிரையைத் தட்டி விடு!”

“நீங்கள் எதை இழக்கப் போகிறீர்கள்?” உங்கள் வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள்.”

வண்டி புறப்பட்டுச் சென்றது. இரு போலீஸ்காரர்களுக்கிடையில் ரீபின் உட்கார்ந்திருந்தான். அங்கிருந்தவாறே அவன் சத்தமிட்டான்.

“நீங்கள் ஏன் பட்டினியால் செத்துக் கொண்டேயிருக்க வேண்டும்? உங்களுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டால், உங்களுக்கு உணவும் கிடைக்கும், நியாயமும் கிட்டும். போய் வருகிறேன். நல்லவர்களே!”

வண்டிச் சக்கரங்களின் பலத்த ஒசையாலும், குதிரைகளின் காலடி யோசையாலும், போலீஸ் தலைவனின் குரலாலும் ரீபினுடைய குரல் ஆழ்ந்து அமிழ்ந்து போய்விட்டது.

“எல்லாம் முடிந்தது” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னான் அந்த முஜீக். பிறகு தாயின் பக்கம் திரும்பித் தணிந்த குரலில் பேசினான். “எனக்காகக் கடையில் கொஞ்ச நேரம் காத்திருங்கள். நான் இதோ வந்துவிடுகிறேன்.”

தாய் அறைக்குள் சென்று, அந்தக் கடையின் அடுப்புக்கு எதிராக இருந்த மேஜையருகில் உட்கார்ந்தாள். அவள் ஒரு துண்டு ரொட்டியை எடுத்துப்பார்த்துவிட்டு அதைத் தட்டிலேயே வைத்துவிட்டாள். மீண்டும் அவளுக்கு அந்தக் கிறக்க உணர்ச்சி ஏற்பட்டது. அவளால் சாப்பிடக் கூட முடியவில்லை. அவளது உடம்பு குதுகுதுத்துக் காய்ந்து உடலை பலவீனப்படுத்தியது, அந்தக் காய்ச்சல் இருதயத்தின் ரத்த ஓட்டத்தை இழுத்து நிறுத்தி, அவளைக் கிறக்கச் செய்தது. அவளுக்கு முன்னால், அந்த நீலக்கண் முஜீக்கின் முகம் தெரிந்தது. ஆனால் அந்த முகம் பரிபூரணமாகத் தோன்றவில்லை. அதைக் கண்டவுடன் அவநம்பிக்கை உணர்ச்சி மேலிட்டது. அவன் தன்னைக் கைவிட்டுவிடுவான் என்று எண்ணிப் பார்க்க அவள் விரும்பவில்லை. இருந்தாலும் அந்த எண்ணம் அவள் மனத்தில் எப்போதோ குடிபுகுந்துவிட்டது. அவளது இதயத்தை ஒரு பளு அழுத்தியது.

“அவன் என்னைக் கவனித்தானே. கவனித்துப் பார்த்து, ஊகித்துக் கொண்டானே” என்று அவள் லேசாகச் சிந்தித்தாள்.

அந்த எண்ணம் வளரவில்லை. கிறக்க உணர்ச்சியிலும் குழப்ப உணர்ச்சியிலும் அந்த எண்ணம் மூங்கிமுழ்கிப் போய்விட்டது. ஜன்னலுக்கு வெளியே முன்னிருந்த இரைச்சலுக்குப்பதில் இப்போது ஆழ்ந்த அமைதி நிலவியது. அந்த அமைதி அந்தக் கிராமம் முழுவதையும் சுற்றி வட்டமிடும் பயவுணர்ச்சியையும் பாரவுணர்ச்சியையும் பிரதிபலித்துக் காட்டியது. தனிமை உணர்ச்சி பெருகியது. சாம்பலைப்போல் நிறம் கறுத்த ஒர் அந்தி மயக்கத்தை இதயம் முற்றிலும் பரப்பியது.

மீண்டும் அந்த யுவதி வாசல் நடையில் தோன்றினாள்.

“நான் உங்களுக்குப் பொரித்த முட்டை கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.

“சிரமப்படாதே. எனக்குச் சாப்பிடவே மனமில்லை. அவர்களுடைய கூச்சலும் கும்மாளமும் என்னைப் பயமுறுத்தி விட்டுவிட்டன.

அந்தப் பெண் மேஜையருகே வந்து ரகசியமாக உத்வேகம் நிறைந்த குரலில் பேசினாள்.

“அந்தப் போலீஸ் தலைவன் அவனை எப்படி அடித்தான் தெரியுமா? நீங்கள் அதைப் பார்த்திருக்க வேண்டும். நான் பக்கத்தில்தான் நின்றேன். கன்னத்தில் கொடுத்த அறையில் அவன் பற்கள் உதிர்ந்துவிட்டன. அவன் குபுக்கென்று ரத்தம் கக்கினான். கரிய சிவந்த கட்டியான ரத்தம்! அவனது கண்கள் வீங்கிப்போய் மூடிவிட்டன. அவன் ஒரு தார் எண்ணெய்த் தொழிலாளி. அந்தப் போலீஸ் ஸார்ஜெண்டோ மாடி மேலே போய்ப் படுத்துக்கொண்டு நன்றாகக் குடித்து மயங்கிக் கிடந்தான். இன்னும் குடிக்கக் கேட்டான். ஒரு பெரிய சதிக் கூட்டமே இருக்கிறதாம். அவர்களுக்கெல்லாம் இந்தத் தாடிக்கார மனுஷன்தான் தலைவனாம். மூன்று பேர்களைப் பிடித்தார்களாம். ஒருவன் தப்பியோடிவிட்டானாம். இவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களென்று ஒரு பள்ளிக்கூட உபாத்தியாயரையும் அவர்கள் பிடித்திருக்கிறார்களாம். இவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாதாம்; தேவாலயங்களைக் கொள்ளையடிக்கும்படி மற்றவர்களைத் தூண்டி விடுகிறார்களாம். இவர்கள் இப்படிப்பட்ட ஆசாமிகள்தானாம். எங்கள் கிராமத்து முஜீக்குகள் சிலர் இவர்களுக்காக வருத்தப்பட்டார்கள். சிலர் இவர்களுக்கு இத்தோடு சமாதி கட்டிவிடவேண்டும் என்று சொல்லுகிறார்கள். இந்த மாதிரியான கேவல புத்தி படைத்த முஜீக்குகள் இங்கே அதிகம் பேர் இருக்கிறார்கள்!”

அந்தப் பெண்ணின் தொடர்பிழந்த படபடக்கும் பேச்சைத் தாய் கவனமாகக் கேட்டாள். அதைக் கேட்டு தனது பயத்தையும் பீதியையும் போக்கி வெற்றி காண முனைந்தாள். தனது பேச்சைக் கேட்பதற்கும் ஓர் ஆள் இருக்கிறது என்ற உற்சாகத்தில் அந்தப் பெண் உத்வேகமும் உவகையும் பொங்கித் ததும்ப, ரகசியமான குரலிலேயே பேசத் தொடங்கினாள்:

“இதெல்லாம் வெள்ளாமை விளைச்சல் சரியாக இல்லாததால்தான் ஏற்படுகிறது என்று எங்கள் அப்பா சொல்கிறார், இரண்டு வருஷ காலமாய் இங்கே நிலத்திலே எந்த விளைச்சலும் கிடையாது. இதனால்தான் இத்தகைய முஜீக்குகள் தோன்றுகிறார்கள். கிராமக் கூட்டங்களில் அவர்கள் சண்டைப்பிடிக்கிறார்கள்; கூச்சல் போடுகிறார்கள். ஒரு நாள் வசுகோவ் என்பவன் பொருள்களை. அவன் வரி கட்டவில்லை என்பதற்காக ஏலம் போட்டார்கள். அவனோ “இதோ உன் வரி” என்று சொல்லிக்கொண்டே நாட்டாண்மைக்காரரின் மூகத்தில் ஓங்கி ஒரு குத்து விடுகிறான்.”

வெளியே பலத்த காலடியோசை கேட்டது. தாய் மேஜையைப் பிடித்தவாறே எழுந்து நின்றாள்.

அந்த நீலக்கண் முஜீக் தனது தொப்பியை எடுக்காமலே உள்ளே வந்தான்:

“உன் பெட்டி: எங்கே?”

அவன் அதை லேசாகத் தூக்கி ஆட்டிப் பார்த்தான்.

“காலிப் பெட்டிதான். சரி, மார்க்கா! இவளை என் குடிசைவரை கூட்டிக்கொண்டு போ.”

அவன் திரும்பிப் பார்க்காமலே சென்றான்.

“இன்றிரவு நீங்கள் இந்த ஊரிலா தங்குகிறீர்கள்?” என்று கேட்டாள் அந்தப் பெண்.

“ஆமாம். பின்னால் லேஸ் வாங்க வந்தேன்.....”

“இங்கே யாரும் பின்னுவதில்லையே, தின்கோவாலிலும். தாரினாவிலும் தான் நெய்கிறார்கள். இங்கே கிடையாது” என்று விளக்கினாள் அந்த யுவதி.

“நான் நாளைக்கு அங்கே போவேன்....”

“தேநீருக்குக் காசு கொடுத்து முடிந்ததும். தாய் அந்தப் பெண்ணுக்கு, மூன்று கோபெக்குகளை இனாமாகக் கொடுத்தாள். இனாம் கொடுத்ததில் அவளுக்கு ஓர் ஆனந்தம். அவர்கள் வெளியே வந்தார்கள். ஈரம் படிந்த அந்த ரோட்டில் அந்தப் பெண் வெறும் கால்களோடு விடுவிடென்று நடந்து சென்றாள்.

“நீங்கள் விரும்பினால், நான் தாரினாவுக்குச் சென்று அங்குள்ள பெண்களை, அவர்கள் பின்னிய லேஸ்களை எடுத்துக்கொண்டு இங்கு வரச் சொல்கிறேன்” என்றாள் அந்தப் பெண்; “அவர்களே இங்கு வந்துவிடுவார்கள். நீங்கள் அங்கே போக வேண்டியதில்லை. இங்கிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தூரம்தான் இருக்கிறது......”

“நீ ஒன்றும் கவலைப்படாதே, கண்ணு” என்று கூறிக்கொண்டே அவளோடு சேர்ந்து நடக்க முயன்றாள் தாய். குளிர்ந்த காற்று அவளுக்கு இதம் அளித்தது. ஏதோ ஒரு மங்கிய தீர்மானம் அவளது மனத்துக்குள்ளே வடிவாகி உருபெறுவதாகத் தோன்றியது. அந்த உருவம் மெதுவாக வளர்ந்து வந்தது. அதன் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற ஆசையால், அவள் தனக்குத் தானே கேட்டுக்கொண்டிருந்தாள்:

“நான் என்ன செய்ய வேண்டும்? நான் என் இதயத்திலுள்ள எல்லாவற்றையும் திறந்து கூறிவிட்டால்.....”

பொழுது ஒரே இருளாகவும் குளிராகவும் ஈரமாகவும் இருந்தது. குடிசைகளின் ஜன்னல்களில் செக்கர் ஒளி மினு மினுத்தது. சிறு சிறு அழுகைக் குரல்களும், கால்நடைகளின் கனைப்பும் அந்த அமைதியினூடே கேட்டன. அந்தக் கிராமம் முழுவதுமே ஏதோ ஓர் இருண்ட பாரவுணர்ச்சியைச் சுமந்து கவலையில் ஆழ்ந்திருட்பதாகத் தோன்றியது.

“இதோ” என்று காட்டினாள் அந்தப் பெண்; “இரவைக் கழிப்பதற்கு மிகவும் மோசமான இடத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். இவன் மிகவும் ஏழையான முஜீக்.”

அவள் கதவைத் தட்டினாள். கதவு திறந்தவுடன் அவள் தன்தலையை உள்ளே நீட்டிச் சத்தமிட்டாள்:

“தத்யானா அத்தை!”

பிறகு அவள் ஓடிப்போய்விட்டாள்.

“போய்வருகிறேன்” என்ற அவளது குரல் இருனூடே ஒலித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/45&oldid=1293152" இலிருந்து மீள்விக்கப்பட்டது