தாய்/47

விக்கிமூலம் இலிருந்து

18

தாய் சுவரின் மீது சாய்ந்து, தலையைப் பின்னால் சாய்த்து. அவர்கள் சொல்லும் ஆழமும் அமைதியும் நிறைந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். தத்யானா எழுந்திருந்து, சுற்றும் முற்றும் பார்த்தாள்: மீண்டும் உட்கார்ந்துகொண்டாள். அந்த முஜீக்குகளை வெறுப்போடும் கசப்புணர்ச்சியோடும் நோக்கிய அவளது பசிய கண்கள் வறட்சியாகப் பிரகாசித்தன. திடீரென்று அவள் தாயின் பக்கம் திரும்பினாள்.

“உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவோ துயரங்களை அனுபவித்திருக்க வேண்டும்” என்று சொன்னாள்.

“ஆமாம்” என்று பதில் சொன்னாள் தாய்.

“உங்கள் பேச்சு, எனக்குக் கேட்கக் கேட்கப் பிடித்திருக்கிறது, உங்கள் வார்த்தைகள் இதயத்தையே இழுத்து நீட்டுகின்றன. நீங்கள் பேசும்போது நான் எனக்குள் ‘கடவுளே, இவள் பேசுகின்ற மனிதர்களை நான் கொஞ்ச நேரமேனும் பார்க்கக் கொடுத்துவைக்க மாட்டாயா? வாழ்க்கையையே நான் காண மாட்டேனா?’ என்று நினைத்துக் கொள்கிறேன். இங்கு நாங்கள் வாழ்க்கையில் என்னத்தைக் காண்கிறோம்? வெறும் ஆட்டு மந்தையாகத்தான் நாங்கள் இருக்கிறோம். உதாரணமாக, என்னையே பாரேன். எனக்கு எழுதப்படிக்கத் தெரியும். புத்தகங்களைப் படிக்கிறேன். எதை எதைப் பற்றியெல்லாமோ சிந்திக்கிறேன். சமயங்களில் சிந்தித்துச் சிந்தித்தே இரவெல்லாம் தூங்காமல் அவதிப்பட்டிருக்கிறேன். ஆனால் அதனால் என்ன லாபம்? நான் சிந்திப்பதை நிறுத்திவிட்டால், ஒன்றுமற்று வாடி வதங்கி நாசமாய்ப் போவேன்; சிந்திப்பதைத் தொடர்ந்து மேற்கொண்டாலும் அதனாலும் எனக்கு எந்தப் பயனும் இல்லை.”

பேசும்போது அவளது கண்களில் கேலி பாவமே பிரதிபலித்தது. சமயங்களில் அவள் தான் பேசும் வார்த்தைகளை ஏதோ ஒரு நூலைக் கடித்துத் துண்டாக்குவது மாதிரி உச்சரித்தாள். அந்த முஜீக்குகள் எதுவும் பேசவில்லை. காற்று ஜன்னல் கதவுகளின் மீது வீசியடித்தது; புகைக் கூண்டு வழியாக லேசாக முணுமுணுத்து வீசியது; வீட்டுக்கூரை மீது சலசலத்தது. எங்கோ ஒரு நாய் ஊளையிட்டது, எப்போதாவது இடையிடையே மழைத் துளிகள் வேண்டா வெறுப்பாக ஜன்னலின் மீது விழுந்து தெறித்தன. விளக்கின் சுடர் படபடத்துக் குறுகி, அணைவதுபோல் இறங்கியது. மீண்டும் சுடர் வீசி எழுந்து அதிக பிரகாசத்துடன் நிலையாக நின்று எரிந்தது.

“நீங்கள் பேசுவதைக் கேட்கும்போது, ‘இதற்காகத்தான் மக்கள் வாழ்கிறார்கள்’ என்று எனக்குள்ளாகச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். அவையெல்லாம் எனக்கே தெரிந்த விஷயங்கள் மாதிரி உணர்ந்தேன். அதுவே எனக்கு ஓர் அதிசயம். ஆனால், இந்த மாதிரி யாரும் அதுவரை பேசி நான் கேட்டதில்லை. நானும் இந்த மாதிரி எண்ணங்களைச் சிந்தித்துப் பார்த்ததில்லை......”

“ஏதாவது சாப்பிட்டுவிட்டு, சீக்கிரம் விளக்கை அணைப்பது நல்லது. நத்யானா” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே மெதுவாகச் சொன்னான் ஸ்திபான், “சமகோவின் வீட்டில் இரவு அகாலம் வரையிலும் விளக்கு எரிவதை ஜனங்கள் கண்டுகொள்ளக்கூடும். அதனால் நமக்கு ஒன்றுமில்லை. ஆனால் நமது விருந்தாளியின் நலத்துக்கு அது உகந்ததல்ல....."

தத்யானா எழுந்து அடுப்பருகே சென்றாள்.

“ஆ - மா - ம்” என்று புன்னகை புரிந்தான் பியோத்தர்; “இப்போதெல்லாம் நாம் உஷாராய்த்தானிருக்க வேண்டும். இந்தப் பத்திரிகைகள் ஜனங்கள் மத்தியிலே மீண்டும் தலைகாட்டியவுடனே...”

‘நான் என்னைப்பற்றி நினைக்கவே இல்லை. அவர்கள் என்னைக் கைது செய்துகொண்டு போனாலும், எனக்கு அதனால் பெரிய நஷ்டம் ஏதும் விளையப் போவதில்லை.”

அவன் மனைவி மீண்டும் மேஜையருகே வந்து சொன்னாள்:

“கொஞ்சம் எழுந்திரு.”

அவன் எழுந்திருந்து ஒரு பக்கமாக ஒதுங்கிக்கொண்டான்; மேஜையின் எல்லாவற்றையும் அவள் ஒழுங்குபடுத்துவதையே கவனித்துக்கொண்டிருந்தான்.

“சகோதரர்களே—உங்களையும் என்னையும் ஒன்றாகச் சேர்த்தால் ஒரு ஐந்து கோபெக்தான் மதிப்பு. ஆமாம். நம்மைப் போன்றோர் நூறுபேர் சேர்ந்தாலும் இப்படித்தான்” என்று கிண்டல் நிறைந்த புன்னகையோடு சொன்னான் அவன்.

தாய் அவனுக்காக வருந்தினாள். அவனைப் பார்க்கப் பார்க்க அவனை மேலும் மேலும் அவளுக்குப் பிடித்துப்போயிற்று. தனது பேச்சுக்குப் பிறகு, அன்றைய கோர சம்பவத்தின் மனப்பாரத்தை இறக்கிவைத்த உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. அவள் தனக்குத் தானே மகிழ்ந்துகொண்டாள்; எல்லோரும் நல்லபடி இருக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்து நிரம்பி வழிந்தது.

“தோழனே, நீங்கள் சொல்வது தவறு” என்றாள் அவள். “ரத்தத்தை உறிஞ்சுபவர்கள் உங்களை மதிப்பிடுவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவே கூடாது. நீங்கள் உங்களையே மதிப்பிட்டுக்கொள்ள வேண்டும். உங்களது இதயத்துக்குள் இருப்பதைக்கொண்டு, உங்கள் நண்பர்களைக்கொண்டுதான் மதிப்பீடு செய்ய வேண்டும். எதிரிகளைக்கொண்டு அல்ல.”

“எங்களுக்கு எந்த நண்பர்கள் இருக்கிறார்கள்?” என்று அந்த முஜீக் மெதுவாகக் கூறினான். “நண்பர்கள—ஒரு வாய் ரொட்டிக்கு நான் முந்தி நீ முந்தி என்று விழுந்தடித்துச் சண்டை போடுகிறவரையிலும்தான், நண்பர்கள் எல்லாம்!”

“இல்லை. சாதாரண மக்களுக்கும் நண்பர்கள் உண்டு என்று நான்தான் சொல்லுகிறேன்.”

“இருக்கலாம்; ஆனால் இங்கு அப்படி ஒருவருமே இல்லை. அதுதான் விஷயம்” என்று எதையோ நினைத்துக்கொண்டு சொன்னான் ஸ்திபான்.

“ஏன் இங்கேயும் கூட நண்பர்களை நாம் தேடிக்கொள்ளக் கூடாதா?”

ஸ்திபான் பதில் சொல்வதற்கு முன் ஒரு கணம் யோசித்தான். பிறகு சொன்னான்:

“ஹூம்! ஆமாம், தேடித்தான் பார்க்க வேண்டும்.”

“சரி, உட்காருங்கள், சாப்பாடு தயார்” என்று அழைத்தாள் தத்யானா.

தாய் தங்களிடம் கூறிய பேச்சினால் இழுக்கப்பட்டு சிந்தை இழந்திருந்த பியோத்தர் சாப்பிடும்போது மீண்டும் உற்சாகம் பெற்றான்.

“அம்மா, நீங்கள் அதிகாலையிலேயே போய்விட வேண்டும். அப்போதுதான் யார் கண்ணிலும் படாமல் போகலாம்” என்றான் அவன்; “பக்கத்து ஊர்வரையிலும், வண்டியிலேயே போக வேண்டும். ஆனால் நகருக்குள் போகக்கூடாது. ஒரு தபால் வண்டியை அமர்த்திக் கொள்ளுங்கள்.”

“அவள் ஏன் அமர்த்த வேண்டும்? நானே அவளுக்கு வண்டியோட்டுகிறேன்” என்றான் ஸ்திபான்.

“இல்லை. நீ ஓட்டக்கூடாது. அவர்கள் யாராவது உன்னைப்பார்த்து. ‘இவள் இரவு உன் வீட்டில் தங்கினாளா?’ என்று கேட்டால். நீ என்ன சொல்வாய்? ‘ஆமாம், தங்கினாள்’ என்பாய். ‘இப்போது எங்கே போகிறாள்?’ என்றால், ‘நான் அவளைப் பக்கத்து ஊர்வரையிலும் கொண்டுவிடப் போகிறேன்’ என்பாய். உடனே, ‘ஓஹோ, நீதான் அவள் தப்பித்துக்கொண்டு போக வழி செய்தாயா?’ என்று சொல்வார்கள்; ‘அப்பறம் நீ சிறைக்குப் போக வேண்டியதுதான்,’ சிறைக்குப் போவதற்கு இப்போது ஒன்றும் அவசரமில்லை, எல்லாம் அதனதன் காலத்தில்தானே நடக்கும். சாகிற காலம் வந்துவிட்டால் ஜார் அரசனும்கூட சாகத்தான் செய்வான் என்பது பழமொழி. ஆனால் நான் சொல்கிறபடி செய்தால், அவளாக எங்கோ. இரவைக் கழித்துவிட்டு, ஒரு வண்டியை அமர்த்திக்கொண்டு போவது மாதிரி இருந்தால் நல்லது. நம்முடைய கிராமம் ராஜபாட்டைக்கு அருகிலிருப்பதால், எத்தனையோ பேர் இரவில் இங்குத் தங்கிப் போவார்கள்.”

“பியோத்தர்! இவ்வளவு தூரம் பயப்படுவதற்கு நீ எங்கே கற்றுக்கொண்டாய்?” என்று குத்தலாகக் கேட்டாள் தத்யானா.

“ஏனம்மா எப்படியெப்படிச் செய்வது என்று தெரிந்துகொள்ளவுமா கூடாது?” என்று தன் முழங்காலில் தட்டிக்கொடுத்தவாறே சொன்னான் பியோத்தர், “எப்போது பயப்பட வேண்டும். எப்போது தைரியமாயிருக்க வேண்டும், என்பதையெல்லாம் தெரிந்துதான் வைத்திருக்க வேண்டும். நினைத்துப்பார். அந்தப் பத்திரிகையை வைத்திருந்ததற்காக வாகானவைப் ஜில்லா அதிகாரி என்ன பாடுபடுத்தினார் என்பது உனக்குத் தெரியாதா? அப்புறம் காசுக்காகட்டும், ஆசைக்காகட்டும—அவன் கையிலே ஒரு புத்தகத்தைக்கொடுக்க முடியுமா? கொடுத்தால் வாங்கத் துணிவானா? அம்மா, நீங்கள் என்னைப் பரிபூரணமாக நம்பலாம். நான் என்னவோ கொஞ்சம் அடாபிடிக்காரன். இருந்தாலும், நான் நீங்கள் தரும் பத்திரிகைகளையும் பத்தகங்களையும் ஆள் பார்த்து, இடம் பார்த்து விநியோகிக்கிறேன். எங்கள் ஜனங்களில் பெரும்பாலோர் மிகவும் பயந்தவர்கள், படிப்பில்லாதவர்கள் என்பது உண்மைதான். இருந்தாலும், பலமாக மூடிய கண்களைக்கூட, பலவந்தமாகப் பிதுக்கித் திறந்து உண்மையைப் பார்க்கும்படி செய்யும் காலம் வரத்தான் போகிறது. இந்தப் பிரசுரங்கள், விஷயத்தை மிகவும் சுளுவாகச் சொல்லிவிடுகின்றன. விஷயம் இதுதான்: ‘சிந்தித்துப் பார், மூளைக்கு வேலை கொடு;—என்பதுதான். சமயங்களில் படித்தவர்கள் புரிந்துகொள்வதைவிடப் படியாதவர்களே அதிகமாகப் புரிந்து கொள்கிறார்கள். அதிலும் படித்தவர்களுக்குத் தொந்தி விழுந்து சோற்றுக் கவலையில்லாது போய்விட்டால் அவர்களுக்குப் புரியவே புரியாது. இந்த வட்டாரத்தில் நான் எவ்வளவோ பிரயாணம் செய்திருக்கிறேன். எவ்வளவோ பேரைக் கண்டிருக்கிறேன். நாங்கள் எப்படியாவது சமாளித்துக்கொள்கிறோம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே அகப்பட்டுக் கொள்ளாதவாறு. மிகுந்த ஜாக்கிரதையுடன் நடந்துகொள்வதற்குக் கொஞ்சம் மூளையைச் செலவழிக்க வேண்டும். அவ்வளவுதான். நிர்வாகிகள் தாங்கள் கத்தி மீது அமர்ந்திருப்பது போலவே உணர்கிறார்கள் எவனாவது ஒரு முஜீக் அதிகாரிகளைக் கண்டு புன்னகை புரிவதையோ, அன்பு காட்டுவதையோ நிறுத்திவிட்டால், அவனது வழக்கத்துக்கு மாறான அந்தத் தன்மையைக் கண்டு, அவன் அதிகாரிகளுக்கு எதிராகச் செல்கிறான் என்று கருதி, அவனை லேசாக மோப்பம் பிடித்துவிடுகிறார்கள், அன்றைக்கு இப்படித்தான் ஸ்மல்ய்கோவோலிலே – அதுவும் பக்கத்துக் கிராமம் — அதிகாரிகள் வரி வசூல் செய்வதற்காக வந்திருந்தார்கள். உடனே அங்குள்ள முஜீக்குகள் கம்பும் தடியும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். போலீஸ் தலைவனுக்கு அதைப்பற்றிக் கொஞ்சம்கூடப் படமில்லை. ‘ஏ, நாய்க்குப் பிறந்த பயலகளா! நீங்கள் ஜார் அரசனுக்கு எதிராகக் கிளம்புகிறீர்கள்!’ என்று ஊளையிட்டான். அங்கே ஸ்பிவாகின் என்று ஒரு முஜீக் அவன் முன்னாலேயே வந்து பதில் சொன்னான்: “உன் ஜாரோடு நீயும் நாசமாய்ப்டோ. அவன் எப்படிப்பட்ட ஜாராம்? உடம்பிலே ஒத்தைத் துணி கூட இல்லாமல் உரித்துப் பிடுங்குகிறவன்தானே!’ என்று கூறினான். எனவே, காரியங்கள் இவ்வளவு தூரத்துக்குப் போயிருக்கிறது, அம்மா, அவர்கள் ஸ்பிவாகினைப் பிடித்துச் சிறையில் போடத்தான் செய்தார்கள். இருந்தாலும் அவன் வார்த்தைகளைச் சிறையில் போடமுடியுமா? சின்னஞ்சிறு பிள்ளைகளுக்குக்கூட அவன் பேச்சு ஞாபகத்தில் இருக்கிறது. அவன் பேச்சு என்றென்றும் ஒலிக்கிறது; என்றென்றும் வாழ்கிறது!”

அவன் எதுவுமே சாப்பிடாமல் விறுவிறுவென்று ரகசியக் குரலில் பேசியவாறே, தன்னைச் சுற்றிக் குறு குறுவென விழிக்கும் இருண்ட கண்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றித் தான் அறிந்தவற்றையெல்லாம் தாயிடம் பொல பொலவென்று உதிர்த்துத் தள்ளினான்.

ஸ்திபான் இடையே இரண்டு முறை குறுக்கிட்டுப் பேசினான்:

“நீ முதலில் ஏதாவது சாப்பிடப்பா.”

அந்த இரண்டு முறையும் பியோத்தர் ஒரு ரொட்டித் துண்டையும் கரண்டியையும் கையில் எடுத்ததுதான் மிச்சம்; அவற்றைக் கையில் வைத்தவாறே உல்லாசமாகப் பாடும் வானம்பாடி மாதிரி தனது கதைகளையே சொல்லிக்கொண்டிருந்தான். சாப்பாடு முடிந்தவுடன் அவன் திடீரெனத் துள்ளியெழுந்து நின்று பேசினான்.

“சரி. நான் போவதற்கு நேரமாகிவிட்டது. வருகிறேன், அம்மா” என்று கூறிவிட்டு அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான். “ஒரு வேளை நாம் இருவரும் மீண்டும் சந்திக்க இயலாமலே போகலாம், இருந்தாலும் உங்களைச் சந்தித்ததும் உங்களோடு பேசியதும் என்றென்றும் மறக்க முடியாத இனிய விஷயங்கள் என்பதை மட்டும் நான்! தெரிவித்துக்கொள்கிறேன். சரி அந்த டிரங்குப் பெட்டியில் பத்திரிகைகளைத் தவிர வேறு ஏதாவது இருக்கிறதா? கம்பளிச் சவுக்கம் ஏதாவது? ரொம்ப நல்லது—கம்பளிச் சவுக்கம் தானே? ஞாபகம் வைத்துக்கொள், ஸ்திபான். இவன் இன்னும் ஒரு நிமிஷத்தில் டிரங்குப் பெட்டியைக் கொண்டு வந்து சேர்ப்பான். புறப்படு. ஸ்திபான். வருகிறேன், அம்மா. உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்!”

அவர்கள் சென்ற பிறகு சுவர்க் கோழிகளின் இரைச்சல்கூடத் தெளிவாகக் கேட்டது. காற்று கூரையின் மீது சல சலத்தது; புகைக் கூண்டு வழியாகப் படபடத்தது. மெல்லிய மழைத் தூவானம் ஜன்னலின் மீது பெய்து வழிந்தது. தத்யானா அடுப்புக்கு மேலாக இருந்த பரணிலிருந்து சில போர்வைகளை எடுத்து, ஒரு பெஞ்சின் மீது விரித்து. தாய்க்குப் படுக்கை தயார்பண்ணிக் கொடுத்தாள்.

“அவன் ஓர் உற்சாகமான பேர்வழி” என்று கூறினாள் தாய்.

“பெரிய வாயளப்புக்காரன். சத்தம் போடுவதுதான் மிச்சம்.”

“உன் கணவன் எப்படி?” என்று கேட்டாள் தாய்.

“அவன் ஒழுங்கானவன்தான். ஓரளவு நல்லவன்தான். குடிப்பதில்லை. நாங்கள் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம். அவனிடம் பலவீனமான குணம்......”

அவள் நிமிர்ந்து நின்றாள்.

“அதற்கு இப்போது நாங்கள் என்ன செய்வது?” என்று ஒரு கணம் கழித்துச் சொன்னாள் அவள். “நாங்களெல்லாம் போராடி எழ வேண்டாமா? போராடத்தான் வேண்டும். அதைப்பற்றித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஒவ்வொருவனும் தனக்குத் தானே நினைத்துக்கொள்கிறான். ஆனால், அதை வெளிப்படையாக நினைத்துப் பார்க்கவேண்டும். யாராவது முதலில் துணிந்து காலடி எடுத்து வைக்க வேண்டும்........”

அவள் பெஞ்சின்மீது உட்கார்ந்து தாயைப் பார்த்துக் கேட்டாள்:

“சீமான் வீட்டு வயசுப் பெண்கள்கூட, தொழிலாளிகளோடு கலந்து பழகுவதாகவும், அவர்களுக்குப் பாடம் சொல்வதாகவும் நீங்கள் சொல்கிறீர்கள். அவ்வளவுக்கு, அப்படிச் செய்வதற்கு அவர்களால் முடியுமா?. அவர்களுக்குப் பயமாயிருக்காது?”

அவள் தாயின் பதிலைக் கேட்டு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டாள். பிறகு தன் கண்களையும் தலையையும் தாழ்த்திக்கொண்டு மேலும் பேசத் தொடங்கினாள்:

“ஏதோ ஒரு புத்தகத்தில் ‘அர்த்தமற்ற வாழ்க்கை’. என்ற அடியைப் படித்தேன். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு அதன் அர்த்தம் உடனே புரிந்துவிட்டது. அந்த மாதிரி வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது எனக்குத் தெரியும். அதில் கருத்துக்கள் எல்லாம் இருக்கத்தான் செய்தன. எனினும் சம்பந்தா சம்பந்தமற்று, தொடர்பு இல்லாமல் இருக்கின்றன. மேய்ப்பவன் இல்லாத ஆட்டுமந்தை மாதிரி. கட்டி மேய்க்க ஆளில்லாமல் தான் தோன்றியாய்த் திரிகின்றன. அதுதான் அர்த்தமற்ற வாழ்க்கை. என்னால் முடியுமானால், இந்த மாதிரி வாழ்க்கையிலிருந்து திரும்பியே பார்க்காமல் ஓடிவிடுவேன். அதிலும், உண்மை இதுதான் என்று உணர்ந்த பிறகும் அந்த வாழ்க்கையில் என்னால் கால்தரித்து நிற்க முடியாது.”

அவளது பசிய பண்கள் வறண்ட பிரகாசத்திலும், மெலிந்த முகத்திலும், அவளது குரலின் தொனியிலும் தோன்றிய வேதனையைத் தாயால் உணர முடிந்தது: அவளைத் தழுவி ஆசுவாசப்படுத்தி ஆறுதலளிக்க விரும்பினாள் தாய்.

“அடி, பெண்ணே! என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு நன்றாகத் தெரிகிறதே.....”

“ஆனால் எப்படிச் செய்வது என்று தெரிய வேண்டும்” என்று குறுக்கிட்டாள் தத்யானா. “சரி, படுக்கை தயாராகிவிட்டது.”

அவள் மீண்டும் அடுப்பருகே சென்று, அங்கே சிந்தனை வயப்பட்டு மெய்மறந்து ஆடாமல் அசையாமல் அமைதியாக நிமிர்ந்து நின்றாள். தாய் தன் உடையைக்கூடக் கழற்றாமல் அப்படியே படுத்துக்கொண்டாள். அவளது எலும்புகள் அசதியினால் வலித்தன; அவள் லேசாக முனகினாள். தத்யானா விளக்கை இறக்கி அணைத்தாள். அறை முழுவதும் இருள் பரந்து கவிந்த பின்னர் அவள் நிதானமாகத் தணிந்த குரலில் பேசிக்கொண்டிருந்தாள். அந்த இருட் படலத்திலிருந்து எதையோ துடைத்தெடுப்பதுபோல அவள் பேச்சு ஒலித்தது.

“நீங்கள் பிரார்த்திப்பதாகத் தோன்றவில்லையே. நானும் கடவுள் ஒருவர் இருப்பதாக நம்பவில்லை. அற்புத லீலைகளிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது.”

தாய் நிலைகொள்ளாமல் பெஞ்சின் மீது புரண்டு படுத்தாள். ஆழங்காண முடியாத அந்த இருட்டிலும் ஜன்னலின் வழியாக அவளை நோக்கி வாய்திறந்து கொட்டாவி விட்டது. மங்கிய சப்தங்கள் இருளின் ஊடாகத் தவழ்ந்து வந்தன, அவள் பயத்தோடு ரகசியம் போலப் பேசினாள்.

“கடவுளைப் பொறுத்தவர—எனக்கு நிச்சயமாய்த் தெரியாது. ஆனால் நான் கிறிஸ்துவை நம்புகிறேன். அவரது வாசகத்த— ‘அயலானையும் உன்னைப்போல் நேசி’ என்ற வாசகத்தை—நான் நம்புகிறேன்.”

தத்யானா மெளனமாக இருந்தாள். அடுப்பின் இருண்ட புகைட் புலத்திலே அவளது மங்கிய உருவத்தைத் தாயால் காண முடிந்தது. அவள் அசைவற்று நின்றுகொண்டிருந்தாள். தாய் துயரத்தோடு கண்களை மூடிக்கொண்டாள். திடீரென்று அந்தப் பெண்ணின் கசப்பான குரல் ஒலித்தது:

“என்னுடைய குழந்தைகள் செத்துப்போனதற்காக நான் கடவுளாகட்டும். மனிதனாகட்டும் இருவரையும் மன்னிக்க மாட்டேன், ஒருக்காலும் மன்னிக்க மாட்டேன்!”

பெலகேயா ஆர்வத்தோடு எழுந்தாள், அப்பெண்ணின் வார்த்தைகளால் சுருக்கென்று தைக்கும் வேதனையுணர்ச்சியைத் தனது இதயத்தில் உணர்ந்தாள்.

“நீங்கள் இன்னும் சின்னவர்தானே, உங்களுக்கு இனி மேலும் குழந்தைகள் பிறக்கும்” என்று அமைதியாகச் சொன்னாள்.

அந்தப் பெண் இதற்கு உடனே பதில் சொல்லவில்லை. பிறகு மெல்லிய குரலில் பதில் சொன்னாள்:

“ஒருக்காலும் நடக்காது. என்னிடம் ஏதோ கோளாறு இருக்கிறதாம். எனக்கு இனிமேல் குழந்தைகளே பிறக்காது என்று வைத்தியர் சொன்னார்.”

ஒரு சுண்டெலி தரையில் குறுக்கே விழுந்தோடியது. அந்த அமைதியை மின்னல் மாதிரி கிழித்துக்கொண்டு எங்கிருந்தோ படாரென்று ஒரு ஓசைசெயழுந்தது. மீண்டும் கூரையின் வைக்கோலில் எதையோ பயந்து நடுநடுங்கும் மெல்லிய விரல்களால் துழாவித்துழாவித் தேடுவதுபோல மழை பெய்தது: தண்ணீர் சொட்டுச் சொட்டாகத் தரையில் வழிந்து. அந்த இலையுதிர்கால இரவுக்குப் பாதை வகுத்துக் கொடுத்தது....

தூக்கக் கிறக்கத்திலும் தாயின் காதில் அந்த மெல்லிய காலடியோசை வாசற்புறத்தில் நெருங்கி வருவது கேட்டது. கதவை ஜாக்கிரதையுடன் திறந்துகொண்டு யாரோ உள்ளே நுழைந்தார்கள்.

“தத்யானா, நீ படுத்துவிட்டாயா?”

“இல்லை.”

“அவள் தூங்கிவிட்டாளா?”

“அப்படித்தான் தெரிகிறது.”

விளக்கின் சுடர் ஓங்கியது. ஒரு நிமிஷம் அந்த இருளில் திக்கித் திணறிப் படபடத்தது. அந்த முஜீக் தாயின் படுக்கையின் அருகே வந்து, தனது கோட்டை எடுத்து அவளது பாதங்களைப் பதனமாகப் போர்த்தி மூடினான். அவனது பணிவிடையின் எளிமை தாயின் உள்ளத்தைத் தொட்டுவிட்டது; அவள் புன்னகையோடு தன் கண்களை மீண்டும் மூடிக்கொண்டாள். ஸ்திபான் ஒன்றுமே பேசாமல் உடுப்புகளைக் கழற்றிவிட்டுப் பரணின் மீது ஏறிப்படுத்தான். மீண்டும் எங்கும் அமைதி நிலவியது.

தாய் அசையாமல் படுத்தவாறே இருளின் கனவுக் குரலை கேட்டுக்கொண்டுகிடந்தாள். அப்போது அவளது கண் முன்னால் ரத்தம் தோய்ந்த ரீபினின் முகம் நிழலாடித் தெரிந்தது.

மேலே பரணில் உசும்பும் சத்தம் கேட்டது.

“இந்த மாதிரி வேலையில் எப்படிப்பட்டவர்கள் ஈடுபடுகிறார்கள், பார்த்தாயா? வாழ்க்கை முழுவதும் சோகத்தையே அனுபவித்து அனுபவித்து உழைத்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த வயசிலே இவர்கள் ஓய்வெடுக்க வேண்டியதுதான் நியாயம். அனால் அதற்குப் பதிலாக இந்த மாதிரிக் காரியங்களில் ஈடுபட்டு வேலை செய்கிறார்கள், நீயும் இளமையாகவும் துடிப்பாகவும்தான் இருக்கிறாய்..... இருந்தும் என்ன, ஸ்திபான்.....”

அந்த முஜீக்கின் பதில் ஆழ்ந்த செழுமையான குரலில் ஒலித்தது:

“இறங்குவதற்கு முன்னால் முதலில் யோசிக்க வேண்டாமா?”

“இந்த மாதிரி நீ முன்னாலேயே சொல்லியிருக்கிறாய்.”

இருவர் குரலும் ஒரு நிமிஷ நேரம் நின்று போயின. பிறகு ஸ்திபானின் குரல் ஒலித்தது.

“இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும். முதலில் முஜீக்குகளிடம் தனித்தனியாகப் பேச வேண்டும். உதாரணமாக, அலெக்சி மாகவிடம் பேசத்தொடங்குவோம். அவன் படித்தவன்; உணர்ச்சி நிறைந்தவன்; அதிகாரிகளால் துன்பத்துக்கு ஆளானவன். செர்கேய்ஷோரின் அவனும் ஒரு புத்திசாலியான முஜீக்தான், கினியாசெவ் நேர்மையானவன்; பயப்படமாட்டான். ஆரம்பத்திலே இவர்கள் போதும். அவள் நமக்குச் சொன்னாளே, அந்த மாதிரி மக்களை நாமும் பார்க்கத்தான் வேண்டும். நான் ஒரு கோடரியைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு, விறகு பிளந்து கொடுத்துக் கொஞ்சம் மேல் வரும்படி சம்பாதிக்கப் போகிறவன் மாதிரி நகருக்குப் போய் வருகிறேன். நாம் மிகுந்த ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். ஒரு மனிதனின் மதிப்பு அவன் செய்யும் வேலையில் இருக்கிறது என்று அவள் சொன்னாளே, அது ரொம்ப சரி. இன்று அந்த முஜீக் நடந்துகொண்டானே, அந்த மாதிரி. கடவுளின் முன்னால்கூட அவனைக் கொண்டுவந்து நிறுத்திப் பாரேன். அவன் தன் பிடியிலிருந்து கொஞ்சம்கூடத் தவறமாட்டான். சரி. நீ அந்த நிகீதாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்? மனச்சாட்சிக்கு ஆட்பட்டவன். இல்லையா? சரி.”

“உங்கள் கண் முன்னாலேயே அவர்கள் ஒரு மனிதனை அடித்து நொறுக்குகிறார்கள், நீங்களானால் வாயைப் பிளந்து கொண்டு வெறுமனே வேடிக்கை பார்க்கிறீர்கள்.”

“அவசரப்படாதே. அந்த மனிதனை நாங்களும் சேர்ந்து கொண்டு அடிக்காமல் விட்டோமே. அதை நினைத்து நீ சந்தோஷப்பட வேண்டும்.”

அவன் வெகு நேரம் வரையிலும் ரகசியம் பேசிக்கொண்டிருந்தான். சமயங்களில் சத்தத்தை மிகவும் குறைத்துப் பேசினான். எனவே தாய்க்கு அநேகமாக ஒன்றும் கேட்கவில்லை, சமயங்களில் உச்ச ஸ்தாயியிலும் பேசினான். அப்படி பேசும்போது அவனது மனைவி அவனைத் தடுத்து நிறுத்துவாள்.

“உஷ்! அவளை எழுப்பி விட்டுவிடப் போகிறாய்”

தன்னைக் கவிந்து மேகம்போல் சூழ்ந்து வந்த தூக்கத்துக்குத் தாய் ஆளாகித் தூங்கலானாள்.

மாங்கலான அருணோதயப் பொழுது அந்தக் குடிசையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் வேளையில், ராத்திரிக் காவல் ஓய்ந்ததை அறிவிக்கும் தேவாலய மணியோசை மிகுந்து ஒலித்த நேரத்தில், தத்யானா தாயை உசுப்பி எழச் செய்தாள்.

“நான் தேநீர் தயாரித்துவிட்டேன். முதலில் ஒரு கோப்பை தேநீரைக் குடியுங்கள் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் நேராகச் சென்றால் குளிர் உறைக்கும்.”

ஸ்திபான் தனது சிக்கலான தாடியைக் கோதிவிட்டவாறே தாயிடம் அவளது விலாசத்தைக் கேட்டான். ராத்திரியில் தோன்றியதைவிட, இப்போது அந்த முஜீக்கின் முகம் தெளிவாகவும் பரிபூரணமாகவும் தோன்றுவதுபோலத் தாய்க்குப்பட்டது.

“நடந்ததையெல்லாம் எண்ணிப் பார்க்க எவ்வளவு வியப்பாக இருக்கிறது!” என்று அவர்கள் தேநீர் பருகும் சமயத்தில் சிரித்துக்கொண்டே சொன்னான், அவன்.

“என்னது?” என்று கேட்டாள் தத்யானா.

“நாம் ஒருவருக்கொருவர் பழகிப்போனதுதான் எவ்வளவு எளிதாக.....”

“நமது வேலையோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலுமே ஓர் அதிசயமான எளிமை இருக்கத்தான் செய்கிறது” என்று ஏதோ சிந்தித்தவாறே சொன்னாள் தாய்.

தாயிடம் விடைபெற்றுக் கொள்ளும்போது அவர்கள் எந்தவிதமான பரபரப்பையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் அவளிடம் பேசாமலே, தாங்கள் செய்யும் சின்னஞ்சிறிதான பற்பல செயல்களின் மூலம் அவளுக்குச் சௌகரியம் செய்து கொடுப்பதில் தாங்கள் எவ்வளவு. அக்கறைகொண்டவர்கள் என்பதைக் காட்டிக்கொண்டார்கள்.

தடால் வண்டியில் ஏறி உட்கார்ந்ததுமே, தாய் நினைத்தாள். ஸ்திபான் ஒரு வயலெலியைப்போல மிகுந்த ஜாக்கிரதையோடும் சத்தமின்றியும், களைப்படையாமலும் வேலை செய்யத் தொடங்குவாள், அவனது மனைவியின் குறைபாடுகள் அவன் காதுகளில் என்றென்றும் ஒலிக்கும். அவளது பசிய கண்களின் கூரிய ஒளி மறையவே மறையாது. தனது இறந்துபோன குழந்தைகளை எண்ணி, தாய்மையுணர்ச்சியோடு உறுமிக்கொண்டிருக்கும் அவளது பழிவாங்கும் எண்ணம் அவள் உயிர் வாழ்கின்றவரையிலும் தீரவே தீராது.”

அவள் பினைப் பற்றியும் நினைத்துப் பார்த்தாள். அவனது ரத்தத்தை, அவனது முகத்தை, அவனது கனன்றெரியும் கண்களை, அவனது பேச்சையெல்லாம் நினைத்துப் பார்த்தாள். அந்த அகோரமான மிருகத்தனத்தை எண்ணி அவளது மனத்தில் நிர்க்கதியான நிலைமையின் கசப்புணர்ச்சி புகுந்து. அவளது இதயத்தைக் கசக்கி இறுக்கியது. நகருக்கு வந்துசேருகிறவரையிலும் வழியெல்லாம் அந்தக் காலைப்பொழுதின் மங்கிய பகைப்புவத்திலே மிகயீலின் உருவம்தான் அவள் சண்முன்னே உருவாகிக்கொண்டிருந்தது. அவனது கட்டு மஸ்தான. கரிய தாட்கொண்ட உருவத்தை. கந்தல் கந்தலாகக் கிழிந்த சட்டையோடும், பின்புறமாகக் கட்டிய கைகளோடும், பறட்டைத் தலையோடும் அவள் கண்டாள். எந்த உண்மைக்காக அவன் போராடுகிறானோ அதன்மீது கொண்ட நம்பிக்கையும், அது தாக்கப்படுவதால் எழுந்த கோபமும் நிறைந்து பொங்கும் மனிதனாக அவனைக் கண்டாள், பூமியோடு ஒட்டிக்கொண்டிருக்கும் எண்ணிறந்த கிராமங்களையும், அந்தக் கிராமங்களிலே நியாயத்தின் திக்விஜயத்தை வரவேற்க ரகசியமாகக் காத்திருக்கும் ஜனங்களையும், எந்தவித எதிர்ப்புமின்றி, எதிர்கால சுபிட்சத்தில் எவ்வித நம்பிக்கையுமின்றி அர்த்தமற்ற உழைப்பிலேயே தமது வாழ்நாளையெல்லாம் போக்கிவிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தையும் அவள் எண்ணிப் பார்த்தாள்.

குன்றுகள் பெருத்துக் கரடு முரடாக, உழவற்றுக் கிடக்கும் நிலத்தைப் போல், உழுபவனை எதிர்நோக்கி ஆர்வத்தோடும் மௌனத்தோடும் அங்காந்து காத்திருக்கும் தரிசி நிலம் போன்ற வாழ்க்கையை அவள் கற்பனை பண்ணிப் பார்த்தாள்.

அந்தத் தரிசு நிலம் சுதந்திரமான, நேர்மை நிறைந்த மனிதர்களை நோக்கி, “என்மீது சத்தியத்தையும் அறிவையும் விதைத்துப் பயிராக்குங்கள்; நான் உங்களுக்கு உங்கள் உழைப்புக்கு நூறு மடங்காகப் பலன் அளிக்கிறேன்” என்று சொல்வது போலிருந்தது.

தன்னுடைய சொந்த முயற்சிகளால்தான் பெற்ற வெற்றியை அவள் மீண்டும் நினைவுகூர்ந்தபோது, அவளது உள்ளம் ஆனந்த வெறியால் அமைதியாகப் படபடத்தது; அந்த ஆனந்தத்தை அவள் நாணிக் கோணி உள்ளடக்கிக்கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/47&oldid=1293155" இலிருந்து மீள்விக்கப்பட்டது