தாய்/52

விக்கிமூலம் இலிருந்து

23

திகைப்பும் சோர்வும் கவிந்து சூழ்ந்த மனத்தோடு தாய் மேலும் இரண்டு நாட்கள்வரை பளு நிறைந்த சோகத்துடன் காத்திருந்தாள். மூன்றாவது நாளன்று சாஷா வந்தாள்; நிகலாவிடம் பேசினாள்.

“எல்லாம் தயார். இன்று ஒரு மணிக்கு.......”

“அவ்வளவு சீக்கிரமா?” என்று அதிசயித்துக் கேட்டான் அவன்.

“ஏன் கூடாது? ரீபினுக்காகத் துணிமணிகள் தேட வேண்டியதும், அவன் போயிருக்க ஒர் இடம் தேடுவதும்தான் பாக்கி, மற்றதையெல்லாம் கோபுனே செய்துமுடித்துவிடுவதாகச் சொல்லிவிட்டான். ரீபின் ஒரே ஒரு தெருவை மட்டும்தான் கடந்து வரவேண்டும். உடனே மாறுவேடத்தில் இருக்கும் நிகலாய் வெஸோவ்ஷிகோவ் அவனைச் சந்தித்து, அவன் மீது ஒரு கோட்டைப் போட்டு மூடி, தலையிலே ஒரு தொப்பியையும் வைத்து, அவனை கூட்டிக்கொண்டு போய்விடுவான். நான் சகல துணிமணிகளோடும் காத்திருப்பேன். அவன் வந்ததும் அழைத்துக்கொண்டு போவேன்.”

“பரவாயில்லை. சரி, ஆனால், கோபுன் என்பது யார்?” என்று கேட்டான் நிகலாய.

“உங்களுக்கு அவனைத் தெரியும். அவனுடைய அறையில்தான் நீங்கள் யந்திரத் தொழிலாளிகளுக்கு வகுப்பு நடத்தினீர்கள்.”

“ஆமாம், ஞாபகமிருக்கிறது. அவன் ஒரு தினுசான ஆசாமி.”

“அவன் ஓர் ஓய்வூதியம் பெறும் சிப்பாய், ஒரு தகரத் தொழிலாளி. அவனுக்கு அறிவு வளர்ச்சி காணாதுதான். என்றாலும் எந்த பலாத்காரத்தையும் அவன் முழு மூச்சோடு எதிர்ப்பவன்.... அவன் ஒரு தினுசான தத்துவார்த்தவாதி” என்று கூறிக்கொண்டே ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள் சாஷா. தாய் வாய்பேசாது அவள் கூறியதைக் கவனித்துக்கொண்டிருந்தாள். அவள் மனத்தில் ஒரு மங்கிய எண்ணம் வளர்ந்தோங்கியது.

“கோபுன் தன் மருமகனையும் விடுவிக்க எண்ணுகிறான். எவ்சென்கோவை ஞாபகமிருக்கிறதா? உங்களுக்குக்கூட அவனைப் பிடித்திருந்ததே. எப்போதுமே அவன் ஓர் அதிசுத்தக்காரப் பகட்டான ஆசாமிதான்.”

நிகலாய் தலையை அசைத்தான்.

“அவன் சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டான்” என்று மேலும் தொடங்கினாள் சாஷா. “ஆனால் நமது முயற்சி வெற்றியடையுமா என்பதில் எனக்குச் சந்தேகம் தோன்றி வருகிறது. எல்லாக் கைதிகளும் வெளியே காற்று வாங்கிக்கொண்டிருக்கும் வேளையில்தான் இது நடக்கப்போகிறது. ஆனால், அந்தச் சமயத்தில் அவர்கள் இந்த ஏணியைப் பார்த்துவிட்டால், பலபேர் அதை உபயோகித்துத் தப்பித்து ஓட எண்ணலாம். அதுதான் பயமாயிருக்கிறது.”

அவள் தன் கண்களை மூடி மௌனத்தில் ஆழ்ந்தாள். தாய் அவளருகே சென்றாள்.

“அப்படியானால் அவர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து காரியத்தையே கெடுத்துவிடுவார்கள்......”

மூன்று பேரும் ஜன்னலருகிலேயே நின்றார்கள். நிகலாய்க்கும் சாஷாவுக்கும் பின்னால் தாய் நின்று கொண்டிருந்தாள், அவர்கள் இருவரது விறுவிறுப்பான பேச்சு தாயின் உள்ளத்தில் பற்பல உணர்ச்சிகளை எழுப்பியது.

“நானும் போகிறேன்” என்று திடீரெனச் சொன்னாள் அவள்.

“ஏன்?” என்று கேட்டாள் சாஷா.

“நீங்கள் போக வேண்டாம். அம்மா. ஏதாவது நேர்ந்துவிடக்கூடும். போகாதீர்கள்” என்று போதித்தான் நிகலாய்.

தாய் அவனைப் பார்த்தாள்.

“இல்லை. நான் போகிறேன்” என்று மெதுவாக, ஆனால் உறுதியோடு சொன்னாள் அவள்.

இருவரும் ஒருவரையொருவர் சட்டெனப் பார்த்துக்கொண்டார்கள்.

“எனக்குப் புரிகிறது” என்று சொல்லிக்கொண்டே தோளைக் குலுக்கிக்கொண்டாள் சாஷா. பிறகு அவள் தாயின் பக்கமாகத் திரும்பி, அவளது கையைப் பிடித்தெடுத்து தாயின் உள்ளத்தைத் தொடும் எளிய குரலில் பேசினாள்.

“ஆனால், நீங்கள் சிந்தித்து உணர வேண்டும். அப்படி நடக்குமென்று வீண் நம்பிக்கை கொள்வதில் அர்த்தமே இல்லை.....”

"என் அன்பே!” என்று நடுநடுங்கும் கையால் அவளை இழுத்து அணைத்துக்கொண்டே கத்தினாள் தாய். “என்னையும் கூட்டிச் செல்லுங்கள். நான் ஒன்றும் உங்கள் வழிக்கு இடைஞ்சலாயிருக்க மாட்டேன். நான் போகத்தான் வேண்டும்! தப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை.”

“இவள் எங்களோடு வருகிறாள்!” என்று நிகலாயைப் பார்த்துச் சொன்னாள் அந்தப் பெண்.

“அது உங்கள் பாடு” என்று தலையைத் தொங்கவிட்டவாறே பதில் சொன்னான் நிகலாய்.

“ஆனால், நாம் இருவரும் சேர்ந்து போகக்கூடாது. நீங்கள் அந்த வெட்டவெளி மைதானத்துக்கு அப்பாலுள்ள தோட்டத்திலே போய் இருக்கவேண்டியது. அங்கிருந்தே சிறைச் சாலைச் சுவரைக் காண முடியும். ஆனால் யாராவது உங்களைப் பிடித்து ஏதாவது கேள்விகேட்டால், அங்கு வந்ததற்கு என்ன காரணம் கூறுவீர்கள்?”

“ஏதாவது சொல்லிச் சமாளித்துவிடுவேன்” என்று ஆர்வத்தோடு சொன்னாள் தாய்.

“மறந்துவிடாதீர்கள். சிறைச்சாலைக் காவலாளிகளுக்கு உங்களை நன்றாகத் தெரியும்!” என்று எச்சரித்தாள் சாஷா; “அவர்கள் உங்களை அங்குக் கண்டுவிட்டால்......”

“அவர்கள் என்னைக் காணமாட்டார்கள்!”

தாய் தனது உள்ளத்திலே எழுந்த ஒரு நம்பிக்கையினால் புத்துயிர் பெற்றுப் பார்த்தாள். அந்த நம்பிக்கைச் சுடர் அவளது, இதயத்திலே கொஞ்சம் கொஞ்சமாகக் கனன்று விரிந்து, இப்போது திடீரென்று ஒரு ஜுர வேகத்துடன் பிரகாசமாக விம்மியெழுந்து எரிந்தது.

“ஒரு வேளை அவனும்கூட!”

ஒரு மணி நேரம் கழித்துத் தாய் சிறைச்சாலைக்குப் பின்புறமுள்ள வெட்ட வெளியில் இருந்தாள். ஊசிக்காற்று சுள்ளென்று வீசியது. அந்தக் காற்று அவளது உடைகளைப் பிளந்து புகுந்து வீசியது. உறைந்துபோன தரையில் மோதியறைந்தது. அவள் சென்றுகொண்டிருந்த தோட்டத்தைச் சுற்றியுள்ள முள்வேலியை அசைத்தாட்டியது. அதன் பின்னர் உருண்டோடிச் சென்று சிறைச்சாலைச் சுவர்மீது முழுவேகத்தோடும் முட்டி மோதியது. சிறைச்சாலைக்குள்ளே எழும் மனிதக் குரல்களை அந்தக் காற்று வாரியெடுத்து வான வெளியில், நிலவின் தொலை முகட்டை அவ்வப்போது ஒரு கணம் காட்டி காட்டிப் பறந்தோடும் மேகமண்டலத்தில் சுழற்றிவிட்டெறிந்தது.

தாய்க்குப் பின்னால் அந்தத் தோட்டம், முன்புறத்தில் இடுகாடு. அவள் நின்ற இடத்திலிருந்து வலது புறமாக சுமார் எழுபது அடி தூரத்தில் சிறைச்சாலை. இடுகாட்டுக்கு அருகே ஒரு சிப்பாய் ஒரு குதிரையை நடத்திக் கூட்டிக்கொண்டு போனான். அவனுக்கு அருகே இன்னொரு சிப்பாய் தரையைக் காலால் மிதித்துக்கொண்டும், சத்தமிட்டுக்கொண்டும், சிரித்துக்கொண்டும், சீட்டியடித்துக்கொண்டும் நின்றான். சிறைச் சாலையின் அருகே ஆள் நடமாட்டமே இல்லை.

அவர்களைக் கடந்து, இடுகாட்டை வளைந்து சூழ்ந்த வேலிப்புறமாக, தாய் மெதுவாக நடந்து சென்றாள். போகும்போது முன்னும் பின்னும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டே சென்றாள். திடீரென அவளது கால்கள் பலமிழந்து உழன்றன. தரையோடு தரையாய் உறைந்துபோன மாதிரி கனத்து விறைத்தன. ஒரு மூலையிலிருந்து விளக்கேற்றுபவர்கள் வருவதுபோலவே தன் தோள்மீது ஓர் ஏணியைச் சுமந்துகொண்டே அவசர அவசரமாகக் குனிந்து நடந்து வந்தான் ஒருவன். பயத்தினால் கண்கள் படபடக்க; தாய் அந்தச் சிப்பாய்களைப் பார்த்தாள். அவர்கள் ஓர் இடத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்; குதிரை அவர்களைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது. ஏணியோடு வந்துகொண்டிருந்த அந்த மனிதனை அவள் பார்த்தாள். அவன் அதற்குள் ஏணியைச் சுவர் மீது சாய்த்து அதன்மீது நிதானமாக ஏறிக்கொண்டிருந்தான். அவன் சிறைச்சாலை முகப்பைப் பார்த்துக் கையை ஆட்டிவிட்டு, விறுவிறென்று கீழிறிங்கி, சிறைச்சாலையின் மூலையைக் கடந்து சென்று மறைந்து போனான். தாயின் உள்ளம் படபடத்துத் துடித்தது. ஒவ்வொரு விநாடியும் நிலையாய் நிற்பதுபோல் தோன்றியது. சிறைச்சாலையின் சுவர் கறை படிந்து, ஆங்காங்கே காரை விழுந்து, உள்ளுக்குள் உள்ள செங்கல்லை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. அதன் நிறம் மாறிப்போன கறுத்த பின்னணியில் அந்த ஏணி அவ்வளவாகக் கண்ணுக்குத் தெரியவில்லை. திடீரென்று ஒரு கரிய தலை சிறைச் சுவருக்கு மேலே தெரிந்தது. அப்புறம் அந்த உருவம் சுவரின்மீது தத்தித் தவழ்ந்து, மறுபுறம் இறங்கத் தொடங்கியது. அடுத்தாற்போல் ஒரு கோணல்மாணலான தொப்பி தலையை நீட்டியது. ஒரு கரிய கோணல் பூமியிலே உருண்டு விழுந்தது. மறு கணம் அது எழுந்து நின்று மூலையை நோக்கி ஓடி மறைந்தது. மிகயீல் நிமிர்ந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தான், தலையை ஆட்டிக்கொண்டான்...”

"ஓடு! ஓடு!” என்று காலைத் தரையில் உதைத்துக்கொண்டே மெதுவாகக் கத்தினாள் தாய்.

அவளது காதுகளில் கிண்ணென்று இரைந்தது: பலத்த கூச்சல்களை அவள் கேட்டாள். சுவரின்மீது மூன்றாவது தலையும் தோன்றியது. தாய் தனது நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டு திக்குமுக்காடும் மூச்சோடு கவனித்துப் பார்த்தாள். தாடியில்லாத ஓர் இளைஞனின் வெளிர் முடித் தலை ஒரு குலுக்குக் குலுக்கியவாறே மேலெழுந்தது. ஆனால் மறுகணமே அது மீண்டும் உள்வாங்கிக்கொண்டது. கூச்சல்கள் உரத்தும் உத்வேகத்துடனும் ஓங்கி ஒலித்தன. விசில்களின் கீச்சுச் சப்தங்களைக் காற்று ஆகாயத்தில் பரப்பி ஒலிக்கச் செய்தது. மிகயீல் சுவரை ஒட்டி நடந்தான். அவன் அதனைக் கடந்து சிறைச்சாலைக்கும், ஊரின் வீடுகளுக்கும் இடையேயுள்ள வெட்டவெளி மைதானத்தைக் கடந்து சென்றான். அவன் மிகவும் மெதுவாகவும் தலையை அதிகமாக நிமிர்ந்தும் நடப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனது முகத்தை அந்தச் சமயத்தில் ஒரு முறை பார்க்க நேர்ந்தவர்கள் அதை என்றென்றும் மறக்க மாட்டார்கள், அப்படி இருந்தது அந்த முகத்தோற்றம்.

"சீக்கிரம், சீக்கிரம்!” என்று முணுமுணுத்தாள் தாய். சிறைச்சாலைச் சுவருக்கு அப்பால் ஏதோ மோதியறையும் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து கண்ணாடிச் சில்லுகள் நொறுங்கி விழும் சப்தத்தை அவள் கேட்டாள். அந்தச் சிப்பாய்களில் ஒருவன் தனது காலைப் பூமியில் அழுத்தி ஊன்றியவாறே குதிரைக் கயிற்றைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான். அடுத்தவன் தன் முஷ்டியை வாயருகே கொண்டுபோய் சிறைச்சாலையை நோக்கிச் சத்தமிட்டான். அவன் சத்தமிட்டு முடிந்த பிறகு அதற்குப் பதில் எதிர்பார்த்துக் காதைத் திருப்பிச் சாய்த்துக் கேட்டான்.

தாய் மிகுந்த சிரமத்தோடு நாலா திசைகளிலும் தலையைத் திருப்பிப் பார்த்தவாறே நின்றாள். அவளது கண்கள் எல்லாவற்றையும் பார்த்தன; ஆனால் எதையும் நம்ப மறுத்தன. எந்த ஒரு காரியம் மிகுந்த சிக்கலும் அபாயம் நேரக்கூடிய பயபீதியும் நிறைந்த எண்ணத்தை அவள் மனத்தில் ஏற்படுத்தியிருந்ததோ, அதே காரியம் மிகவும் சுளுவாக எளிதாக சீக்கிரமே நடந்து முடிந்துவிட்டது. அதனது துரித சக்தி தாயை ஆட்கொண்டு அவளது புலன்களை மரத்துப்போகச் செய்தது. ரீபின் ஏற்கெனவே மறைந்து சென்றுவிட்டான். ஒரு நெட்டையான மனிதன் நீண்ட கோட்டை அணிந்துகொண்டு தெரு வழியாக நடந்து சென்றான்; அவனுக்கு முன்னால் ஓர் இளம் யுவதி ஒடிக்கொண்டிருந்தாள். மூன்று சிறைக் காவலாளிகள் சிறைச்சாலை மூலையிலிருந்து தாவி ஓடி வந்தார்கள். மூன்று பேரும் தங்கள் வலது கைகளை நீட்டியவாறு ஒருவர் அருகில் ஒருவராக ஓடிவந்தார்கள். அந்தச் சிப்பாய்களில் ஒருவன் அவர்களைச் சந்திப்பதற்காக ஓடினாள்; அடுத்தவன் குதிரையைச் சுற்றிச் சுற்றி ஓடியவாறே அதன் முதுகில் ஏறுவதற்கு முயன்றுகொண்டிருந்தான். ஆனால் அந்தக் குதிரையோ முரட்டுத்தனமாக மேல்நோக்கித் தாவிக்குதித்தது! அந்தக் குதிரை தாவிக் குதிக்கும்போது எல்லாமே தாவிக்குதிப்பது மாதிரி இருந்தது. விசில் சப்தங்கள் இடைவிடாது அழுத்தமாக ஒலித்தன. அவற்றின் கீச்சுக் குரல்கள் தாயின் உள்ளத்திலே அபாய உணர்ச்சியைக் கிளப்பிவிட்டன. அவள் நடுங்கினாள். இடுகாட்டின் வேலிப்புறமாக, அந்தக் காவலாளிகளின் மீது ஒரு கண் வைத்தவாறே நடந்தாள். ஆனால், அந்தக் காவலாளிகளும் சிப்பாய்களும் சிறைச்சாலையின் வேறொரு மூலையைக் கடந்து மறைந்து சென்றார்கள். கொஞ்ச நேரத்தில் பித்தானிடப்படாத கோட்டோடு ஒரு மனிதன் அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவன்தான் சிறைச்சாலை உபதலைவன் என்று அடையாளம் கண்டுகொண்டான். எங்கிருந்தோ போலீஸ்காரர்களும், பரபரக்கும் ஜனக்கூட்டமும் கூடிவந்தார்கள்.

குதூகலத்தோடு சுற்றியாடுவதுபோல் காற்று சுழன்று வீசியது. காற்றுவாக்கில் தாயின் காதுகளில் உடைந்து கலகலக்கும் கூச்சல்களும், விசில் சப்தங்களும் ஒலித்தன....... இந்தக் குழப்பத்தைக் கண்டு தாய் குதூகலமடைந்தாள். தனது நடையை எட்டிப் போட்டு நடந்தவாறே சிந்தித்தாள்.

“அவனும் கூட இப்படிச் சுலபமாய்த் தப்பி வந்திருக்கக்கூடும்!” திடீரென்று ஒரு மூலையிலிருந்து இரண்டு போலீஸ்காரர்கள் ஓடிவந்தார்கள்.

“நில்” என்று அவளை நோக்கி ஒருவன் மூச்சு வாங்கியவாறே கத்தினான். “தாடிக்கார மனுஷன் ஒருவனை நீ பார்த்தாயா?”

அவள் தோட்டமிருக்கும் திசையைச் சுட்டிக் காட்டினாள்.

“அவன் அந்தப் பக்கமாகத்தான் ஓடினான்” என்று அமைதியாகச் சொன்னாள் அவள், “ஏன்?”

“இகோரவ்! விசிலை ஊது!”

தாய் வீட்டை நோக்கி நடந்தாள். அவள் எதற்காகவோ வருத்தப்பட்டாள். அவளது மனத்தில் கசப்பும் வருத்தமும் கலந்த உணர்ச்சி தென்பட்டது. வெட்ட வெளியைக் கடந்து தெருவுக்குள் வந்தபோது அவளைக் கடந்து ஒரு வண்டி சென்றது. அந்த வண்டிக்குள் அவள் பார்த்தாள். அதற்குள் வெளிர் மீசையும், வெளுத்துச் சோர்ந்த முகமும் கொண்ட ஓர் இளைஞனைக் கண்டாள். அவனும் அவளைப் பார்த்துவிட்டான். அவன் பக்கவாட்டில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான்.

எனவே அவனது இடது தோளைவிட வலது தோள் உயர்ந்து காணப்பட்டது.

நிகலாய் அவளை குதூகலத்தோடு வரவேற்றான்.

“சரி, என்ன நடந்தது?”

“எல்லாம் சரிவர நடந்துவிட்டதாகவே தோன்றுகிறது.”

அவள் தப்பி வந்ததைப்பற்றி சாங்கோபாங்கமாக விரிவாகச் சொல்லத் தொடங்கினாள். எனினும் அவள் வேறு யாரோ சொன்ன விஷயத்தைத் திருப்பிச் சொல்வது மாதிரிப் பேசினாள். நான் கண்ணால் கண்டதையே அவள் நம்ப மறுத்துச் சந்தேகிப்பது போலிருந்தது.

“அதிருஷ்டம் நம் பக்கம் இருக்கிறது” என்று கூறிக்கொண்டே கைகளைத் தேய்த்துக்கொண்டான் நிகலாய். “உங்களுக்கு ஏதாவது நேர்ந்து விடக்கூடுமே என்று நான் பயந்த பயம் சைத்தானுக்குத்தான் தெரியும். நீலவ்னா, நான் சொல்வதைக் கேளுங்கள். விசாரணையை எண்ணிப் பயந்துகொண்டிருக்காதீர்கள். எவ்வளவு சீக்கிரம் விசாரணை முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் பாவெல் சுதந்திரம் அடைவான். நாடு கடத்துவதற்காகக் கொண்டு செல்லும்போதே, அவன் தப்பி வந்துவிடக்கூடும். விசாரணையைப் பொறுத்தவரையில் இப்படித்தான் நடக்கப்போகிறது...”

“அவன் கோர்ட்டு நடவடிக்கைகளை விவரித்துக் கூறினான். அவன் அவளை எவ்வளவுதான் தேற்றினாலும்கூட, தான் எதையோ கண்டு தனக்குள் தானே அஞ்சிக் கொண்டிருப்பதாக அவனது பேச்சிலிருந்து உனர்ந்துகொண்டாள் தாய்.

“கோர்ட்டில் நான் ஏதாவது தப்புத் தண்டாவாகப் பேசிவிடுவேன் என்றோ, அல்லது நீதிபதிகளிடம் எதையாவது கேட்டுவிடுவேன் என்றோ பயப்படுகிறீர்களா?” என்று திடீரெனக் கேட்டாள் அவள்.

அவன் துள்ளியெழுந்து கைகளை எரிச்சலோடு ஆட்டிக்கொண்டான்.

“இல்லவே இல்லை!” என்று புண்பட்ட குரலில் சொன்னான் அவன்.

“நான் பயந்துவிட்டேன். அதுதான் உண்மை. ஆனால் நான் எதைக் கண்டு பயப்படுகிறேன் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.” அவள் பேசுவதை நிறுத்தினாள், அவளது கண்கள் அறையைச் சுற்றி வட்டமிட்டன.

“சமயங்களில், அவர்கள் பாஷாவிடம் முரட்டுத்தனமாகப் பேசத் தொடங்குவார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது. ‘ஏ, முஜீக்! உன்னைத்தான். முஜீக்குக்குப் பிறந்தவனே! உனக்கென்னடா தூர்ப்புத்தி?” என்று கேட்பார்களோ என்று பயம். பாவெல் கர்வம் நிறைந்தவன். அப்படித்தான் பதிலும் சொல்லுவான், அல்லது அந்திரேய் அவர்களைக்கிண்டல் செய்து எதையாவது சொல்வான். எல்லோருமே சூடானவர்கள். எனவே அந்த மாதிரி விசாரித்து இனி நாம் அவர்களைக் காண் முடியாதபடி செய்துவிடுவார்கள்!”

நிகலாய் பதில் பேசாமலே முகத்தைச் சுழித்தான்; தாடியை இழுத்துவிட்டுக் கொண்டான்.

“இந்த மாதிரி எண்ணங்களை என்னால் ஒதுக்கித்தள்ளவே முடியவில்லை” என்று அமைதியாகச் சொன்னாள் தாய். “எனவேதான் இந்த விசாரணை எனக்கு அத்தனை பயங்கரமாய்த் தோன்றுகிறது! அவர்கள் ஒவ்வொன்றாகப் பார்த்து அலசி ஆராய்ந்து பார்க்கத் தொடங்கிவிட்டால் அதுதான் பயங்கரமாயிருக்கிறது! எனக்குத் தண்டனை பயங்கரமாய்த் தோன்றவில்லை. விசாரணைதான் பயங்கரமாகத் தோன்றுகிறது. அதை எப்படிச் சொல்வது என்பதும் தெரியவில்லை.....”

தான் சொல்வதை நிகலாய் புரிந்துகொள்ளவில்லை என்பதை அவள் உணர்ந்தாள்; அந்த உணர்ச்சியால் தனது எண்ணங்களை வெளியிட்டுச் சொல்வதுகூட அவளுக்குச் சிரமமாயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/52&oldid=1293250" இலிருந்து மீள்விக்கப்பட்டது