தாய்/54
25
சிஸோவ் பெஞ்சில் உட்கார்ந்தவாறே ஏதோ வாய்க்குள் முனகிக்கொண்டான்.
“என்ன விஷயம்?” என்று கேட்டாள் தாய்.
‘ஒன்றும் பிரமாதமில்லை. ஜனங்கள் முட்டாள்கள்,.....” மணி அடித்தது.
“அமைதி, ஒழுங்கு!”
எல்லோரும் மீண்டும் ஒரு முறை எழுந்து நின்றார்கள். நீதிபதிகள் ஒவ்வொருவராக வந்து தத்தம் ஆசனங்களில் அமர்ந்துகொண்டார்கள். கைதிகளையும் அவர்கள் இடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள்.
“கவனி!” என்று ரகசியமாகக் கூறினான் சிஸோவ், “அரசாங்க வக்கீல் பேசப் போகிறார்.”
தாய் தன் உடம்பு முழுவதையும் முன்னால் தள்ளிக் குனிந்து கொண்டு. ஏதோ ஒரு பயங்கரத்தைப் புதிதாக எதிர்பார்ப்பதுபோல் ஆர்வத்தோடு கவனித்தாள்.
அரசாங்க வக்கீல் நீதிபதிகளுக்கு ஒரு பக்கமாக எழுந்து நின்று மேஜைமீது ஒரு கையை ஊன்றியவாறு அவர்களைப் பார்த்துத் திரும்பினார். ஒரு பெருமூச்சோடும், வலது கையின் வீச்சோடும் அவர் பேசத் தொடங்கினார். அவரது பேச்சின் ஆரம்பத்தைத் தாயால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரது குரல் கனத்து மெதுவாக, ஆனால் ஒழுங்கற்று, சமயங்களில் துரிதமாகவும் சமயங்களில் மந்தமாகவும் ஒலித்தது. சிறிது நேரத்துக்கு அவரது பேச்சு மெதுவாகவும் ஆயாசத்தோடும், சிரமத்தோடும் ஒலித்தது. திடீரென்று அந்தப் பேச்சு கும்மென்று இரைந்தெழுந்து சர்க்கரைக் கட்டியை மொய்க்கும் ஈக்கூட்டத்தைப்போல் ரீங்காரித்து விம்மியது. அந்தப் பேச்சில் எந்தக் கெடுதியும் இருப்பதாகத் தாய்க்குத் தோன்றவில்லை. அந்த வார்த்தைகள் பனியைப்போலக் குளிர்ந்தும், சாம்பலைப்போலக் கறுத்தும், கவிந்து குவிந்து மூடும் தூசியைப்போல் அந்த அறையில் கொஞ்சங் கொஞ்சமாக விழுந்து நிரம்பிக்கொண்டிருந்தன, வார்த்தை அலங்காரமும், உணர்ச்சியின் வறட்சியும் கொண்ட அந்தப் பேச்சு பாவெலையும் அவனது தோழர்களையும் கெஞ்சம்கூடத் தொட்டதாகத் தெரியவில்லை, எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவர்கள் தம் பாட்டுக்கு உட்கார்ந்து அமைதியாகவும், நிதானமாகவும் தமக்குள் பேசிக்கொண்டார்கள்; புன்னகை புரிந்தார்கள்; பொங்கி வரும் சிரிப்பை மறைப்பதற்காக முகத்தைச் சுழித்துக்கொண்டார்கள்.
“அவன் பொய் சொல்கிறான்!” என்றான் சிஸோவ்.
அவள் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவள் அரசாங்க வக்கீலின் பேச்சையே கேட்டுக்கொண்டிருந்தாள்; அவர் எல்லாக் கைதிகளையுமே பாரபட்சமில்லாமல் சகட்டுமேனிக்குக் குற்றம் சாட்டிப் பேசுவதை அவள் உணர்ந்தறிந்தாள். பாவெலைப்ற்றிப் பேசிய பின் பியோதரைப் பற்றியும் பேசினார். பியோதரைப்பற்றிய பேச்சை முடிக்கப் போகும் தருணத்தில், “புகினைப்பற்றிய பேச்சை தொடங்கினார், இப்படியாக அவர்கள் அனைவரையும் ஒரே கோணிச் சாக்குக்குள் பிடித்துத் தள்ளி மூட்டை கட்டுவதுபோல் இருந்தது அவரது பேச்சு. ஆனால் அந்தப் பேச்சின் வெளி அர்த்தத்தைக் கண்டு அவளுக்குத் திருப்தி ஏற்படவில்லை. அந்த மேலோட்டமான அர்த்தபாவம் அவளைத் தொடவும் இல்லை; கலக்கமுறச் செய்யவும் இல்லை. அவள் இன்னும் ஏதோ ஒரு பெரிய பயங்கரத்தை எதிர்பார்த்தாள், அந்தப் பயங்கரத்தை அந்த வார்த்தைகளின் உள்ளர்த்தத்திலும், அரசாங்க வக்கீலின் முகத்திலும், கண்களிலும், குரலிலும், லாவகமாக வீசி விளாசும் அவரது வெள்ளைக் கரத்திலும் துருவித்துருவித் தேடிக்கொண்டிருந்தாள். இருந்தாலும் அதில் ஏதோ பயங்கரமிருப்பதாகத் தோன்றியது. அதை அவள் உணர்ந்தாள். எனினும் அதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை; அதை உருவாக்கிக் காண முடியவில்லை. அவளது இதயம் எப்படித்தான் எச்சரித்த போதிலும் அவளால் அதை இனம் காணமுடியவில்லை.
அவள் நீதிபதிகளைப் பார்த்தாள். அந்தப் பேச்சைக் கேட்டு அவர்கள் அலுத்துப் போய்விட்டார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாகத் தெரிந்தது. அவர்களது உயிரற்ற சாம்பல் நிற, மஞ்சள் மூஞ்சிகளில் எந்தவித உணர்ச்சியுமே பிரதிபலிக்கவில்லை. அரசாங்க வக்கீலின் பேச்சு கண்ணுக்குத் தெரியாத ஒரு பனி மூட்டத்தைப் பரப்பியது. அந்தப் பனிமூட்டம் நீதிபதிகளின் மீது அடர்ந்து கவிந்தது. அலுப்போடும் வேண்டாவெறுப்போடும் காத்திருக்கும்படி, அவர்களை நிர்ப்பந்தித்தது. பிரதம நீதிபதி தமது ஆசனத்திலேயே உறைந்துபோய்விட்டார். இடையிடையே எப்போதாவது மட்டும் அவரது கண்ணாடிக்குள்ளாகத் தெரியும் கரும்புள்ளிக் கண்கள் உணர்ச்சியற்று அகல விரிந்து மூடின.
இந்த மாதிரியான உயிரற்ற வெறுப்புணர்ச்சியையும், உணர்ச்சியற்ற பற்றின்மையையும், கண்டு தனக்குள் தானே கேட்டுக்கொண்டாள்.
“இவர்களா தீர்ப்புக் கூறப் போகிறார்கள்?”
இந்தக் கேள்வி அவளது இதயத்தை குன்றிக் குறுகச் செய்தது: அவளது இதயத்திலிருந்த பயபீதியைப் பிதுக்கி வெளித்தள்ளி, வேதனை தரும் அவமான உணாச்சியைக் குடி புகுத்தியது.
அரசாங்க வக்கீலின் பேச்சு எதிர்பாராதவிதமாகத் திடீரென நின்றுவிட்டது. அவர் விருட்டென இரண்டடி முன்னால் வந்து நீதிபதிகளுக்கு வணக்கம் செலுத்தினார், தமது கைகளைத் தேய்த்துக் கொடுத்துக்கொண்டே உட்கார்ந்தார். பிரபுவம்சத் தலைவர் அவரைப் பார்த்துத் தலையை ஆட்டி, கண்களை உருட்டி விழித்தார். நகர மேயர் அவரோடு கை குலுக்குவதற்காகத் தம் கரத்தை நீட்டினார்: ஜில்லா அதிகாரி தமது தொந்தியையே பார்த்தார், லேசாகப் புன்னகை புரிந்துகொண்டார்.
ஆனால் நீதிபதிகளோ இந்தப் பேச்சினால் எந்தவிதத்திலும் மகிழ்வுற்றதாகத் தெரியவில்லை. அவர்கள் அசையாது உட்கார்ந்திருந்தார்கள்.அந்தக் கிழ நீதிபதி தம் முகத்துக்கு நேராக ஒரு காகிதத்தை உயர்த்திப் பிடித்துப் பார்த்தவாறே பேசினார்: “இப்பொழுது பெதசேயெவ், மார்க்கவ், சகாரல் மூவர் தரப்பு வக்கீலும் பேசலாம்.”
நிகலாயின் வீட்டில் தாய் பார்த்திருந்த அந்த வக்கீல் எழுந்து நின்றார். சுமூகமான தோற்றம் கொண்ட பரந்த முகமும், சிவந்த புருவங்களுக்குக் கீழாகத் துருத்தி நின்று. இரு கத்தி முனைகளைப்போல் பளபளத்து, கத்திரியைப்போல் எதையும் வெட்டித் தள்ளி நோக்கும் சிறு கண்களும் கொண்டிருந்தார் அவர். அவர் உரத்த குரலில் தெளிவாக நிதானமாகப் பேசினார்; எனினும் அவரது பேச்சையும் தாயால் உணர்ந்து புரிந்துகொள்ள முடியவில்லை.
“அவர் சொன்னது புரிகிறதா?” என்று அவள் காதில் ரகசியமாகக் கேட்டான் சிஸோவ். “புரிகிறதா? அந்தக் கைதிகளெல்லாம் மிகவும் மனமுடைந்து போய் நினைவிழந்து போனதாகக் கூறுகிறார். பியோதரைத்தான் சொல்லுகிறாரோ?”
அவளது மனத்தில் நிரம்பியிருந்த அதிருப்தி உணர்ச்சியால் அவளால் பதில் கூடக் கூற முடியவில்லை. அவளது அவமான உணர்ச்சி விரிந்து பெருகி, இதயத்தையே ஒரு பெரும் பாரத்தோடு அழுத்திக்கொண்டிருந்தது. தான் ஏன் நியாயத்தை எதிர்பார்த்தாள் என்பது பெலகேயாவுக்கு அப்போதுதான் தெளிவாயிற்று. தன்னுடைய மகனது சத்தியத்தை, அந்த நீதிபதிகளின் நியாய சத்தியத்துக்கு எதிராக நேர்மையோடு துல்லியமாக எடைபோடுவதைக் காண முடியும் என்று அவள் எதிர்பார்த்தாள். அந்த நீதிபதிகள் அவன் இப்படிச் செய்வதற்குரிய காரண காரியங்களைப்பற்றி, அவனது சிந்தனைகளையும் செயல்களையும் கூர்ந்து கவனித்து அவனைச் சரமாரியாக, இடைவிடாது, கேள்விகள் கேட்பார்கள் என்று அவள் எதிர்பார்த்தாள், அவன் கூறுவதைக் கேட்டு, அதன் உண்மையை அவர்களும் கண்டறிந்து, உற்சாகத்தோடு உரத்த குரலில்: “இயேன் சொல்வதுதான் உண்மை!” என்று நியாய பூர்வமாகச் சொல்லிவிடுவார்கள் என்றும் எதிர்பார்த்தாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. விசாரணைக்காகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கும் அந்தக் கைதிகளுக்கும் அந்த நீதிபதிகளின் கண்ணோட்டத்துக்கும் வெகுதூரம் என்றே தோன்றியது. மேலும் அந்த நீதிபதிகளை அந்தக் கைதிகள் ஒரு பொருட்டாக மதித்ததாகவும் தோன்றவில்லை. ஆயாசத்தினால், தாய்க்கு
அந்த விசாரணையிலேயே அக்கறையற்று அலுத்துப் போய்விட்டது: அங்கு ஒலிக்கும் பேச்சுக்களைக் கேட்காமல் அவள் தனக்குத் தானே கூறிக்கொண்டாள்:“இதையா விசாரணை என்கிறீர்கள்?”
“அவர்களுக்கு வேணும்” என்று அதை ஆமோதித்து ரகசியமாகக் கூறினான் சிஸோவ்.
இப்போது வேறொரு வக்கீல் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஏளனபாவத்தோடு துடிப்பாகத் தோன்றும் வெளுத்த முகம்கொண்ட குட்டை ஆசாமி, அவரது பேச்சில் நீதிபதிகள் அடிக்கடி குறுக்கிட்டுப் பேசினார்கள்.
அரசாங்க வக்கீல் கோபத்தோடு துள்ளி எழுந்து, ஏதோ ஒரு நியாய ஒழுங்கைச் சுட்டிக் காட்டினார். உடனே அந்த ஆட்சேபணையைக் கிழ நீதிபதி ஏற்றுக்கொண்டார், பிரதிவாதித் தரப்பு வக்கீல் அவர் கூறியதைத் தலைவணங்கி மரியாதையோடு கேட்டுக்கொண்டு, தமது பேச்சை மேலும் தொடங்கினார்.
“விடாதே, அடி முடி காணும்வரையிலும் விடாதே!:” என்று சொன்னான் சிஸோவ்.
அந்த அறை முழுவதும் ஒரு புத்துணர்ச்சி பரவிக் கல கலத்தது. குத்தலான வார்த்தைகளால் அந்த வக்கீல் அந்த நீதிபதிகளின் தடித்த உணர்ச்சிகளைக் கிளறிவிட்டபோது, ஜனக் கூட்டத்திடையே ஓர் ஆக்கிரமிப்புச் சக்தி கட்டிழந்து பரவுவதுபோல் தோன்றியது. நீதிபதிகள் ஒருவருக்கொருவர் நெருங்கிக்கொண்டு, அந்த வக்கீலின் வாசகத்தால் தமக்கு ஏற்படும் வேதனை உணர்ச்சியைத் தாங்கிக்கொண்டு உம்மென்று முறைத்துக்கொண்டிருந்தார்கள்.
பாவெல் எழுந்திருந்தான். திடீரென அந்த அறை முழுவதிலும் அமைதி நிலவியது. தாய் தன் உடம்பை முன்னால் தள்ளிக்கொண்டு பார்த்தாள், பாவெல் மிகுந்த அமைதியோடு பேசத் தொடங்கினான்.
“கட்சியின் அங்கத்தினன் என்ற முறையில், நான் என் கட்சியின் தீர்ப்பைத்தான் அங்கீகரிக்கிறேன். எனவே என் குற்றமின்மையைப் பற்றி எதுவுமே பேசத் தயாராயில்லை. ஆனால், என் தோழர்களின் வேண்டுகோளுக்காக. என்னைப்போலவே தங்கள் சார்பிலும் வாதாட மறுத்துவிட்ட தோழர்களின் வேண்டுகோளுக்காக. நீங்கள் புரிந்துகொள்ளாத சில விஷயங்களை நான் விளக்கிச் சொல்ல முயல்கிறேன். சோஷல் — டெமாக்ரஸி என்ற பெயரால் எங்கள் இயக்கம் ஆட்சி அதிகாரத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறது என அரசாங்க வக்கீல் குறிப்பிட்டார். நாங்கள் அனைவருமே ஜார் அரசனைக் கவிழ்க்க முயலும் கூட்டத்தார் என்றே அவர் எங்களைப்பற்றி எப்போதும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆனால் உங்களுக்கு நான் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கிவிட வேண்டும். மன்னராட்சி ஒன்றே ஒன்று மட்டும்தான் நமது நாட்டினைப் பிணைத்துக் கட்டியிருக்கும் விலங்கு என்று நாங்கள் கருதவில்லை. ஆனால், அதுதான் முதல் விலங்கு; அதுதான் நம் கைக்கு விரைவில் எட்டக்கூடிய விலங்கு; அந்த விலங்கைத் தறிந்து மக்களை விடுவிக்க வேண்டியது எங்கள் கடமை!”
அவனது உறுதிவாய்ந்த குரலின் ஓங்காரத்தால் அந்த அறையின் அமைதி மேலும் அழுத்தமாகத் தோன்றியது. அந்த அறையின் சுவர்களே பின்வாங்கி விசாலம் அடைவது போலத் தோன்றியது. உயர்ந்ததொரு இடத்துக்குச் சென்றுவிட்டவனைப்போல் பாவெல் காட்சி அளித்தான்.
நீதிபதிகளின் நிலை கொள்ளாமல் தவித்துத் தத்தளித்துத் தமது ஆசனங்களில் நெளிந்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். பிரபு வம்சத் தலைவர், உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டிருக்கும் நீதிபதியிடம் ஏதோ ரகசியமாகச் சொன்னார். அதைக் கேட்டு, அந்த நீதிபதி தலையை ஆட்டிவிட்டு, பிரதம நீதிபதியிடம் ஏதோ சொன்னார். அவருக்கு அடுத்தாற்போலிருந்த சீக்காளி நீதிபதி அவரது இன்னொரு காதில் ஏதோ ஓதினார். அந்தக் கிழ நீதிபதி வலது இடதுபுறமாக அசைந்துகொண்டே பாவெலின் பக்கமாகத் திரும்பி ஏதோ சொன்னார். ஆனால் அவரது வார்த்தைகளைப் பாவெலின் நிதானமான ஆற்றொழுக்குப் பேச்சு அமிழ்த்தி விழுங்கிவிட்டது.
“நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனி நபர் சொத்துரிமைக்கு சொத்துரிமையின் பேரால் மக்கள் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, மக்களை ஒருவருக்கொருவர் எதிராகத் தூண்டி மோதவிட்டு. தமது நல் உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும் சமுதாய அமைப்புக்கு — நாங்கள் எதிரிகள், இந்தச் சொத்துரிமைச் சமுதாய அமைப்பு இந்த வெறுப்புணர்ச்சியை மூடி மறைப்பதற்காக, அல்லது அதை ஏற்றுக்கொள்வதற்காக, பொய்மைக்கும், புனை சுருட்டுக்கும் ஆளாகி, மக்கள் அனைவரையும் பொய்களுக்கும், மாய்மாலத்துக்கும், தீய கிரியைகளுக்கும் ஆளாக்கிவிடுகிறது. தான் செழிப்பாக வாழ வேண்டும் என்பதற்காக, மனிதப் பிறவியை. ஒரு கருவியாகப் பயன்படுத்த எண்ணும் சமுதாயத்தை நாங்கள் மனிதத் தன்மையற்றதாக, எங்களது நல உரிமைகளின் எதிரியாகக் கருதுகிறோம். அந்தச் சமுதாயத்தின் பொய்யான, இரண்டுபட்ட ஒழுக்க நெறியை நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. தனி மனிதனிடம் அந்தச் சமுதாயம் காட்டும் குரூரத்தையும் வக்கிரபுத்தியையும் நாங்கள் வெறுத்துத் தள்ளுகிறோம். அந்த மாதிரியான சமுதாய அமைப்பு தனி மனிதனின் உடலின்மீதும் உள்ளத்தின்மீதும் சுமத்தியிருக்கும் சகலவிதமான அடிமைத்தனத்தையும், சுயநலத்தின் பேராசையால் மனிதர்களை நசுக்கிப் பிழியும் சகலவிதமான சாதனங்களையும் நாங்கள் எதிர்த்துப் போராட விரும்புகிறோம், எதிர்த்துப் போராடவே செய்வோம். நாங்கள் தொழிலாளர்கள், சிறு குழந்தைகளின் விளையாட்டுக் கருவிகளிலிருந்து பிரம்மாண்டமான யந்திர சாதனங்கள்வரை சகலவற்றையும் எங்கள் உழைப்பின் மூலமே நாங்கள் உலகத்துக்குப் படைத்துக் கொடுக்கிறோம். ஆனால், எங்களது மனித கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் உரிமையைக்கூடப் பறிகொடுத்தவர்களும் நாங்கள்தான். சொந்த நலன்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒவ்வொருவரும் எங்களைத் தங்கள் கைக்கருவிகளாகப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. ஆனால் தற்போது நாங்கள் எங்கள் கைகளிலேயே சகல அதிகாரமும் இருக்க வேண்டும் என்பதற்காக, இறுதியாய் அந்த அதிகாரத்தை அடையும் அளவுக்கு சுதந்திரம் பெற விரும்புகிறோம். எங்களது கோஷங்கள் மிகவும் தெளிவானவை: ‘தனிச் சொத்துரிமை ஒழிக!’ ‘உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் மக்கள் கையில்!’ ‘அதிகாரம் அனைத்தும் மக்களிடம்’ ‘உழைப்பது ஒவ்வொருவருக்கும் கடமை!’ இவைதான் எங்கள் கோஷங்கள். இவற்றிலிருந்து நாங்கள் வெறும் கலகக்காரர்கள் அல்ல என்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம்!”
பாவெல் லேசாகச் சிரித்தான். தனது தலைமயிரை விரல்களால் மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டான். அவனது நீலக்கண்களின் ஒளி முன்னைவிட அதிகமாகப் பிரகாசித்தது.
“விஷயத்தைவிட்டுப் புறம்பாகப் பேசாதே!” என்று அந்தக் கிழட்டு நீதிபதி தெளிவாகவும் உரத்தும் எச்சரித்தார், அவர் பாவெலின் பக்கமாகத் திரும்பி அவனைப் பார்த்தார். அவர் பார்த்த பார்வையில் அவரது மங்கிய இடது கண்ணில் பொறாமையும் புகைச்சலும் நிறைந்த ஒரு ஒளி பளிச்சிட்டு மின்னுவதாகத் தாய்க்குத் தோன்றியது, எல்லா நீதிபதிகளும் அவளது முகனை ஏறிட்டுப் பார்த்தார்கள். எல்லோரது கண்களும் அவனது முகத்தையே பற்றிப்பிடித்து, அவனது சக்தியை உறிஞ்சுவது போலவும், அவனது ரத்தத்துக்காக தாகம் கொண்டு தவிப்பது போலவும், அந்த ரத்த பானத்தால் உளுத்துக் கலகலத்துப்போன தங்கள் உடம்புகளுக்கு ஊட்டமளித்துத் தேற்றிக்கொள்ள நினைப்பது போலவும், தாய்க்குத் தோன்றியது. ஆனால் அவளது மகனோ உறுதியோடும் தைரியத்தோடும் நேராக நிமிர்ந்து நின்று தனது கையை எட்டி நீட்டிப் பேசிக்கொண்டிருந்தான்:
“நாங்கள் அனைவரும் புரட்சிக்காரர்கள். ஒரு சிலர் வேலை வாங்கவும் மற்றவர்கள் அனைவரும் வேலை செய்யவுமாக இருக்கின்ற நாள் வரையிலும், நாங்களும் புரட்சிக்காரர்களாகவே இருப்போம். யாருடைய நலன்களைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் அனைவரும் ஏவலாளிகளாக இருக்கிறீர்களோ, அவர்களது சமுதாயத்தோடு எந்தவிதத்திலும் ஒத்துப்போகாத எதிரிகள் நாங்கள். அந்தச் சமுதாயத்துக்கும், உங்களுக்கும் எதிரிகள் நாங்கள். எங்களது போராட்டத்தில் நாங்கள் வெற்றி காணும்வரை நமக்குள் எந்தவிதமான சமாதானமும் ஏற்படப்போவதில்லை, தொழிலாளர்களாகிய நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்! உங்கள் எஜமானர்களோ, அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோலப் பலசாலிகள் ஒன்றுமில்லை! தனி நபர் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும், பெருக்கிக் காப்பதற்காகவும், பெருக்கிக் குவிப்பதற்காகவும் தங்களது அதிகாரத்தால், லட்சோப லட்ச மக்களை அடிமைப்படுத்தவும் கொன்று குவிப்பதற்காகவும் உதவிக்கொண்டிருக்கும் தனிப்பட்ட சொத்துரிமைதான்,–எங்கள்மீது ஆட்சி செலுத்த அவர்களுக்குப் பலம் தரும் அந்தச் சக்திதான்—அவர்களுக்குள்ளாகவே தகராறுகளைக் கிளப்பிவிடுகிறது. அந்தச் சொத்துரிமை அவர்களை உடல் பூர்வமாகவும், உள்ள பூர்வமாகவும் சீர்குலைத்து வருகிறது. தனிச் சொத்துரிமையைக் காப்பது என்பது சாமான்யமான காரியம் அல்ல. உண்மையைச் சொல்லப்போனால், எங்களது எஜமானர்களாயிருக்கும் நீங்கள் அனைவரும் எங்களையும்விட மோசமான அடிமைகளாயிருக்கிறீர்கள், நாங்கள் உடல் பூர்வமாய்த்தான் அடிமையானோம்; நீங்களோ உள்ள பூர்வமாகவே அடிமையாகிவிட்டீர்கள்! உங்களை உள்ள பூர்வமாகக் கொன்றுவிட்ட நுகக்காலிலிருந்து, வெறுப்பு விருப்புப் பழக்கதோஷமென்னும் நுகத்தடியின் பளுவிலிருந்து, உங்களை விடுவித்துக் கொள்வதற்கு நீங்கள் சக்தியற்றுப் போய்விட்டீர்கள். ஆனால் நாங்கள் சுதந்திரமான உள்ளத்தோடிருப்பதை எந்த சக்தியுமே கட்டுப்படுத்தவில்லை. உங்களது இஷ்டத்துக்கு மாறாக, நீங்கள் எங்களது உணர்விலே பெய்துகொண்டிருக்கும் முறிவு மருந்துகளாலேயே, நீங்கள் எங்களுக்கு ஊட்டிவரும் விஷங்க ளெல்லாம் வலுவற்று முறிந்துபோகின்றன. எங்களது சத்திய தரிசனம் எந்தவிதத் தடையுமின்றி, அசுர வேகத்தோடு வளர்ந்தோங்கிக்கொண்டிருக்கிறது; மேலும் அந்த சத்தியம் நல்ல மனிதர்களை — உங்களது சமூகத்திலேயே மனத்தைப் பறிகொடுக்காது தப்பிப்பிழைத்த நல்லவர்களை — எல்லோரையும் தன்பால் கவர்ந்திழுக்கிறது. உங்களது வர்க்கத்தை நேர்மையான ஒழுங்குமுறையோடு பாதுகாப்பதற்கு உங்களிடம் ஒருவரும் இல்லையென்பதை நீங்களே பாருங்கள்! சரித்திர பூர்வமான நியாயத்தின் அழுத்த சக்தியிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கு நீங்கள் கூறிய சகலவாதப் பிரதிவாதங்களும் வாய் சோர்ந்து வலுவிழந்து வாடி விழுந்ததை இப்போது நீங்கள் கண்டீர்கள். எந்தவிதமான புதிய சிந்தனைகளையும் உங்களால் படைக்க இயலாது. ஆத்மார்த்த விஷயத்தில் நீங்கள் ஆண்மையற்று மலடுதட்டிப் போய்விட்டீர்கள், ஆனால் எங்கள் கருத்துக்களோ என்றென்றும் வளர்ந்தோங்குகின்றன. என்றென்றும் அணையாத தூண்டா மணிவிளக்காய் பிரகாசமுற்றோங்குகின்றன: மக்கள் அனைவருக்கும் உணர்ச்சி ஊட்டி, சுதந்திரப் போராட்டத்துக்காக அவர்களை ஒன்றுபடுத்தி பலம் பெற்று விளங்கச் செய்கின்றன. தொழிலாளர் வர்க்கம் சாதிக்கவேண்டிய மகத்தான சாதனையின் ஞானபோதம், உலகத் தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றுபட உருக்கி வார்த்து அவர்களை ஒரு மகத்தான ஏக சக்தியாக உருவாக்குகிறது. அவர்களைக் கலகலத்து உயிர்ப்பிக்கும் பெரும் சக்தியை எதிர்த்துப் போராடுவதற்கு கொடுமையையும் வெடுவெடுப்பையும் தவிர உங்களிடம் எந்தவித ஆயுதமும் கிடையவே கிடையாது. ஆனால் உங்களது வக்கிர குணமோ வெளிப்படையானது. கொடுமையோ எரிச்சல் தருவது. இன்று எங்களது கழுத்தை நெரிக்கும் கைகளே நாளைக்கு எங்களைத் தோழமையுணர்ச்சியோடு தழுவிக்கொள்வதற்காகத் தாவி வரத்தான் போகின்றன. உங்களது சக்தியே செல்வத்தைப் பெருக்க உதவும் யந்திர சக்தி. அந்த சக்தி உங்களைத் துண்டுபடுத்தி, இரு கூறாக்கி, நீங்களே உங்களில் ஒருவரையொருவர் கொத்திக் குதறிக் குலைபிடுங்கிச் சாவதற்குத்தான் வழி கோலிக்கொடுக்கும், ஆனால் எங்களது சக்தியோ சகல தொழிலாள் மக்களின் ஒன்றுபட்ட ஐக்கிய பலத்தால் என்றென்றும் ஜீவ வேகத்தோடு வளர்ந்தோங்கிக்கொண்டிருக்கும் மனச்சாட்சியினால் இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்வது அனைத்தும் படுமோசமான பாதகச் செயல்கள்; ஏனெனில் உங்கள் செயல்கள் அனைத்தும் மக்களை அடிமைப்படுத்துவதில்தான் முனைந்து நிற்கின்றன. உங்களது பொய்மையும், பேராசையும், குரோத வெறியும் உலகத்தில் எண்ணற்ற பிசாசுகளையும் பூதங்களையும்தான் படைத்திருக்கின்றன; அந்தப் பூதங்களும் பிசாசுகளும் மக்களை கோழையராக்கிவிட்டன; அந்தப் பைசாச ஆதிக்கப் பிடிப்பிலிருந்து மக்களை விடுவித்துக் காப்பாற்றுவதே எங்கள் பணி. நீங்கள் மனிதனை வாழ்க்கையினின்றும் பிய்த்துப் பிடுங்கி, அவனை அழித்துவிட்டீர்கள். நீங்கள் அழித்துச் சுடுகாடாக்கிய இந்த உலகத்தை, சோஷலிசம் ஒரு மகோன்னதமான மாசக்தியாக வளர்ந்து உருவாகி வளம்படுத்தும். நிச்சயம் இது நிறைவேறத்தான் போகிறது!”.
பாவெல் ஒரு கணம் பேச்சை நிறுத்தினான். மீண்டும் அதே உறுதியோடு மெதுவாகக் கூறினான்:
“நிச்சயம் நிறைவேறத்தான் போகிறது!”
நீதிபதிகள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டார்கள்; பாவெலின் மீது வைத்த பார்வையை விலக்காமலேயே முகத்தை எப்படியெல்லாமோ விகாரமாகச் சுழித்துக்கொண்டார்கள். அவனது துடிப்பையும் இளமையையும், பலத்தையும் கண்டு பொறாமை பொங்கி, தங்களது பார்வையாலேயே அவனை அவர்கள் நாசப்படுத்திவிட முயல்வதுபோல் தாய்க்குத் தோன்றியது. கைதிகள் அனைவரும் மகிழ்ச்சியினால் கண்கள் பிரகாசிக்க, முகம் வெளிற, பரிபூரண கவனத்தோடு தங்களது தோழனின் பேச்சைக் கூர்ந்து. கேட்டார்கள். தாயோ தன் மகனின் ஒவ்வொரு வார்த்தையையும் அள்ளிப் பருகினாள்; அந்த வார்த்தைகள் அனைத்தும் அவளது மனத் தகட்டில் வரிசை வரிசையாகப் பதிந்து நிலைத்தன. அந்தக் கிழ நீதிபதி எதையோ தெளிவுபடுத்திக்கொள்வதற்காக, பாவெலின் பேச்சில் எத்தனையோ முறை குறுக்கிட்டார். இடையே ஒருமுறை அவர் வருத்தத்தோடு புன்னகையும் புரிந்துகொண்டார். பாவெல், இடையிடையே பேச்சை நிறுத்தினாலும், மீண்டும் அதே அமைதி தோய்ந்த உறுதியோடு மேலும் பேசத் தொடங்குவான். மீண்டும் ஜனங்கள் அவனது பேச்சை உள்ளமிழந்து கேட்கச் செய்வான். நீதிபதிகளின் விருப்பத்தையும், அவன் தன் விருப்பத்துக்கு ஆளாக்கிவிடுவான். கடைசியாக அந்தக் கிழ நீதிபதி வாய்விட்டுக் கையை நீட்டிக் கத்தினார். பதிலுக்குப் பாவெல் கேலி பாவத்தோடு தனது பேச்சைத் தொடங்கினான்:
“இதோ நான் என் பேச்சை முடித்துவிடப் போகிறேன். உங்களில் எவரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. அதற்கு மாறாக, விசாரணை என்ற பெயரால் நீங்கள் நடத்தும் கேலிக்கூத்தை நான் வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் மீது அனுதாப உணர்ச்சிதான் என் உள்ளத்தில் அநேகமாகப் பொங்கி வழிகிறது. என்ன இருந்தாலும் நீங்களும் மனிதப் பிறவிகள்தான், எங்களது இயக்கத்தின் எதிரிகளைக்கூட, மிருக சக்திக்கு ஊழியம் செய்வதற்காக கேவலமாக வெகு தாழ்ந்து கடை கெட்டுப்போனவர்களைக்கூட, மனித கெளரவத்தின் மான உணர்ச்சியையே முற்றிலும் இழந்துவிட்டவர்களைக்கூட, நாங்கள் மனிதப் பிறவிகளாக மதித்து அவர்களுக்காகத் துக்கப்படுகிறோம்......”
அவன் நீதிபதிகளைப் பார்க்காமலேயே தன் இடத்தில் அமர்ந்தான். தாயோ திக்குமுக்காடும் மூச்சோடு அந்த நீதிபதிகளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
பாவெலின் கையைப் பிடித்து அழுத்திய அந்திரேயின் முகமும் பிரகாசமடைந்தது. சமோய்லவ், மாசின் முதல்வர்களும் அவன் பக்கமாகக் குனிந்து இருந்தார்கள். தன்னுடைய தோழர்களின் உற்சாகத்தைக் கண்டு பாவெல் புன்னகை செய்துகொண்டான். அவன் தன் தாயின் பக்கமாகத் திரும்பி, ‘உனக்குத் திருப்திதானே!’ என்று கேட்கும் பாவனையில் தலையை ஆட்டினான்.
பதிலுக்கு அவள் மகிழ்வோடு பெருமூச்செறிந்தாள். அவளது முகத்திலே அன்புணர்ச்சி அலை பரவிச் சிலிர்த்துச் சிவந்தது.
“இப்போதுதான் உண்மையான விசாரணை ஆரம்பமாயிற்று!” என்று தாயிடம் மெதுவாகக் கூறினான் சிஸோவ், “அவன் அவர்களை வீசி விளாசித் தள்ளிவிட்டான், இல்லையா?”
அவள் பதில் கூறாமல் தலையை மட்டும் ஆட்டினாள். தன் மகன் தைரியத்தோடு பேசியதைக் கேட்டு அவள் மகிழ்வுற்றாள். அவன் பேசி முடித்ததைக் கண்டு அந்த ஆனந்தம் பேரானந்தமாயிற்று. அவளது மனத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்த கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
“அவர்கள் இப்போது என்ன செய்வார்கள்?”