உள்ளடக்கத்துக்குச் செல்

தாவிப் பாயும் தங்கக் குதிரை/1

விக்கிமூலம் இலிருந்து


தங்கக் குதிரைக்கு உயிர் கொடுத்த

இளவரசி மேகமாலை



தாவிப் பாயும்

தங்கக் குதிரை


அரசி முகிலி

முன்னொரு காலத்தில் இன்பவள நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்த இன்பவள நாட்டை அரசு புரிந்த மன்னன் ஒரு பெரிய வீரன். அவன் மனைவியோ சிறந்த அழகி. அந்த அழகரசியின் பெயர் முகிலி. அழகிய கருங் கூந்தலும், செக்கச் சிவந்த உடலும் சேர்ந்தாற்போல் பார்க்கும்போது, மாலையில் கதிரவன் ஒளிபட்டுப் பளபளக்கும் மேகத்தைப் போலிருக்கும். முகிலி என்றால் மேகத்துக்கு உரியவள் என்று பொருள்படும். அரசி முகிலிக்கும் கார்மேகங்களுக்கும் எப்படியோ ஒரு தொடர்பு இருந்தது.

கார் மேகங்கள் அடர்ந்து, மழை பொழியும் கார்காலத்தில் அரசி முகிலியைப் பார்த்தால் தளதளவென்று பூரித்து அழகாயிருப்பாள். பொட்டு மழைகூடப் பெய்யாத முதுவேனிற் காலத்தில், வானில் தென்படுகின்ற ஒன்றிரண்டு மேகங்களும் வெளுத்துப் போய் இருப்பது போல் அவளும் முகம் வெளுத்து உடல் மெலிந்து காணப்படுவாள். அப்போது அரசி முகிலியைப் பார்த்தால் துயரமே வடிவெடுத்து வந்ததுபோல் இருக்கும்.


துயரத்தை இனித் தாங்க முடியாது என்ற நிலைவரும்போது, அவள் தன் நாட்டை விட்டுப் போய் விடுவாள். மேகங்கள் கூடிக் கருத்து மழை கொட்டும் வேறு நாடுகள் நோக்கிப் போய் விடுவாள் என்று மக்கள் பேசிக் கொள்வார்கள். கார் காலத்தில் தான் அவள் திரும்பவும் தன் நாட்டுக்கு வருவாள். அவளுக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் இருந்தார்கள்.

அரசி முகிலியின் மகன் பெயர் வில்லழகன். இளவரசியின் பெயர் பொன்னழகி. அவர்கள் இருவரும் தங்கள் தாய் அருகில் இருக்கும் போது இன்பமாக ஓடியாடி விளையாடுவார்கள். அவள் பிரிந்து சென்ற பிறகு, ஒருவரையொருவர் பார்த்து அழுதுகொண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டும் ஏக்கத்தோடு இருப்பார்கள்.