தாவிப் பாயும் தங்கக் குதிரை/3
Appearance
ஒரு நாள் காலை நேரம். கோயில் வாசலில் இருந்த பலிபீடம் பூமாலைகள் இட்டு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இளவரசனும் இளவரசியும் கழுத்தில் மஞ்சள் துண்டும் கதம்ப மாலையும் கட்டிய கோலத்தில் பலியாடுகள்போல் கொண்டு வரப்பட்டார்கள்.
கோயிலில் தேவதைகளுக்குப் பூசை நடந்தது.
பூசை முடிந்தவுடன் பூசாரி கையில் அரிவாளுடன் வெளியில் வந்தான். இரண்டு மூன்று ஆட்கள் இளவரசனையும் இளவரசியையும் பலிபீடத்தின் மேல் ஏற்றி நிற்க வைத்தார்கள். பூசாரியும் பலிபீடத்தின் மேல் ஏறினான். வானத்தை நோக்கி, “தேவர்களே, நீங்கள் விரும்பிய பலியை ஏற்றுக் கொள்ளுங்கள் நாட்டைச் செழிக்கச் செய்யுங்கள்! அற்ப உயிர்களாகிய எங்கள் மேல் உள்ள வெறுப்பையகற்றி உங்கள் அன்பைப் பொழியுங்கள்!” என்று கூவினான்.