திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்/004-011
சபலம்
காற்றைக் கிழித்துக்கொண்டு ‘இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸ்’ திருச்சி நோக்கிப் பறந்துகொண்டிருந்தது. சென்னையில் இரவு 8-மணிக்கு வண்டியில் ஏறியவர்கள் அலுப்போடும், களைப்போடும், போராடிக் கொண்டு முதுகை வளைத்துக்கொண்டே அமர்ந்திருந்தனர். சென்னை ரயில் நிலையத்தில் இடம் வாடகைக்கு விடும் பொடிப்பயல்கள் பலருண்டு. அவர்கள் தங்கள் வாழ்க்கையை இப்படியே இப்படியே நடத்திப் பழகிக்கொள்ளுகிறார்கள்.
வண்டியில் ஏறியோ அல்லது ஏறாமல் ரயில் மேடையைச் சுற்றிக்கொண்டோ இடம் அகப்படுமா என்று தவித்துக் கொண்டிருக்கிறவர்களிடம், கதைகளில் பகவான் ‘பிரத்யட்ச’மாவது போல ஒரு பொடியன் வந்து நிற்பான். “சாமி! இங்கே வாங்க நல்ல இடம்” என்பான். அவன்கூடச் சென்றால் போதும்; வண்டிக்குள் அருமையான இடத்தைக்காட்டி, பலகையில் அவன் விரித்திருந்த ‘பட்டு மெத்தை’யை எடுத்து முண்டாசு கட்டிக்கொள்வான். அந்த இடத்தில் தூங்குவதற்கு, டிக்கட் பணம் போக-அவனுக்கு ஒரு நாலணா வாடகை. இப்படிப் பல பையன்கள் வாடகை வியாபாரம் நடத்துவார்கள். அவர்கள் கண்ணில் அகப்பட்டு, கருணைக்குப் பாத்திரமான பிரயாணிகள் கண்ணயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அந்தப் பாக்கியம் கிடைக்காத பலர் கண்ணுக்குள் நுழைந்து இமைகளைப் பிடித்திழுத்து மூடும் உறக்கத்தை எதிர்க்கத் துணிவற்று ஒருவரோடொருவர் மோதிக் கொண்டிருந்தனர். கழுத்தில் நிற்கச் சக்தியிழந்து தொங்கும் தலையை முழங்காலிலோ, பக்கத்திலிருப்பவர் தோள் பட்டையிலோ, அல்லது ஜன்னல் கட்டையிலோ முட்டுக் கொடுத்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருந்த காட்சி பரிதாபமாக இருந்தது.
இந்தக் ‘கும்பகர்ண லோக’த்தில் கொட்டை கொட்டையாக விழித்துக் கொண்டிருந்தவர்களும் இல்லாமலில்லை. நூற்றுக்கு ஒருவராவது இருக்கத்தான் செய்தனர். வண்டியில் ஆறாவது பெட்டியில் ஜன்னல் வழியாகக்கூட கால்களை வெளியே சிறிது நீட்டிக் கொண்டு கஷ்டப்பட்டுப் பலர் கொறட்டை விட்டுக் கொண்டிருந்தனர். நீண்ட ஒரு பலகையின் மூலையில் உட்கார்ந்திருந்த ஒருவன், அலுப்பைப்பற்றிய அக்கறை எதுவுமில்லாமல் ஏதோ ஒரு உணர்ச்சியில் அங்மிங்கும் பார்ப்பதும், பலகைக்குக் கீழே கவனிப்பதுமாயிருந்தான். அவனுக்கு எதிரில் மற்றொரு பலகையில் மற்றொரு வாலிபன் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் விழிகள் மூடியிருந்தனவே தவிர அவன் தூங்கவில்லையென்பது தெரிவாயிற்று. விழிகளும் முக்கால் பாகந்தர்ன் அடைபட்டிருந்தன. கால்பாகத்தின் வழியாக அவன் பார்வை எதிரில் உட்கார்ந்திருக்கும் வாலிபனையும், பலகைக்குக் கீழே படுத்திருக்கும் ஒரு பெண்ணையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தன.
அவனும் சந்திராவும் அவர்கள் குழந்தையுடன் சென்னையில்தான் ஏறினார்கள். அவர்கள் ஏறி உட்கார்ந்த சிறிது நேரத்துக்கெல்லாம் எதிர்ப் பக்கத்தில் அந்தத் தூங்காத வாலிபன் வந்து உட்கார்ந்தான். வந்தவன் எதிர்பாராதவிதமாக அங்கு வந்து அமரவில்லை. எல்லாப் பெட்டிகளையும் ஒரு முறைக்கு இரண்டு முறையாகக் கவனித்துவிட்டு கடைசியில் இங்கு வந்து ஏறிக்கொண்டான். சந்திராவின் கையிலிருந்த குழந்தை அருகிலிருந்த ஒரு கிழவியின் நரைமயிரைத் தன் தளிர்க்கரங்களால் பிடித்திழுக்கவே, கிழவி பொக்கைவாய்ச் சிரிப்பை உதிர்த்துக்கொண்டே அந்த மழலையிடமிருந்து தலையை விடுவித்துக் கொண்டாள். இதோடு கிழவி சும்மாயிருக்கவில்லை. கிழவிகளின் குணமே நல்லதோ கெட்டதோ பேசிக்கொண்டிருக்க வேண்டுமல்லவா? அதுவும் குழந்தையென்றால் கேட்கவேண்டுமா? “என்னாடி கண்ணு! உன் பேரு என்ன?” என்று கிழவி கொஞ்சினாள். “மூர்த்தி” என்று கணீரென்று உச்சரித்தது குழந்தை. “உங்க அப்பா பேரு?” என்றாள் கிழவி. “எங்கப்பா பேரு குமரேஸ். உன் பேரு என்னா ?” என்று குழந்தை கேட்டவுடன் கிழவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. குமரேசும் சந்திராவும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். அப்போது எதிர்ப்பலகையிலிருந்தும் ஒரு சிரிப்பு வெடித்தது. அதைச் சந்திரா கவனித்தாள். சிரித்தவனும் சிரிப்பினூடே சந்திராவைத்தான் உற்றுப் பார்த்தான்.
அவனைப் பார்த்த சந்திரா திடுக்கிட்டு அப்படியே ஸ்தம்பித்து விட்டாள். ஆனாலும் திடப்படுத்திக் கொண்டு குழந்தையின் விளையாட்டைக் கவனித்தாள். என்னும் அவள் நீலக் குறுவிழிகள் மட்டும் எதிர்ப் பக்கத்திலுள்ள அந்த வாலிபனையே அடிக்கடி விழுங்கிக்கொண்டிருந்தன. அந்த வாலிபன் நல்ல அழகன். விசாலமான கண்கள், அரும்பு மீசை, அழகை அதிகப்படுத்த பளபளப்பான பட்டுச்சட்டை. அவனது பெரிய கண்கள் சந்திராவைப் பார்க்கும்போதெல்லாம் போதையேறிக் காணப்பட்டன. சந்திராவும் தனக்குப் பக்கத்திலேயே கணவன் இருப்பதையும் மறந்தவள்போல, அவனை அடிக்கடி பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தாள். இதைக் குமரேசும் ஜாடையாகப் புரிந்துகொண்டான். வண்டி ஓடிக்கொண்டிருந்தது. சந்திரா தன் கணவனோடு ஏதாவது பேசுவதும், குழந்தைக்கு விளையாட்டுக் காட்டுவதும் அதே நேரத்தில் எதிரே உள்ளவனைக் காணுவதுமாயிருந்தாள். குமரேசுக்கு ஏதாவது சொல்லிவிட வேண்டுமென்று மனங்குமுறியது. தன் மனைவி தனக்கருகில் உட்கார்ந்து கொண்டே இன்னொருவனின் அழகை ரசிப்பதென்றால்... இதை அவனால் நினைக்கவே முடியவில்லை!
அழகுக்காகத்தான் சந்திராவை அவன் மணம்புரிந்தான். அவள் வீட்டுக்கு வந்தபிறகு அறிவும் நிரம்பியவள் என்பது கண்டு மகிழ்ச்சிகொண்டான். குதூகலமாக ஓடிக்கொண்டிருந்த அவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு அந்த ரயில் பிரயாணம் முட்டுக்கட்டையாகத்தான் வாய்த்தது. இவன் நெஞ்சிலே இந்தப் போராட்டம்; ஆனால் சந்திராவோ எதிர்ப்பலகைக்கு வீசும் கண்களை நிறுத்திய பாடில்லை. குமரேஸ் கொந்தளித்தான். முழுதும் கவனித்து ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்ற தீர்மானம் அவனை அமைதிப்படுத்தியது.
குழந்தை நன்றாகத் தூங்கிவிட்டது. வண்டியும் விழுப்புரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தப்பெட்டியில் இருந்தவர்கள் தூக்க மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருந்தார்கள்.
குழந்தைக்கு ரயிலில் கிடைத்த புதுப்பாட்டியின் வாயிலிருந்து ‘புஸ் புஸ்’ என்று மூச்சு வந்துகொண்டிருந்தது. சந்திரா, குழந்தையைக் கீழே போட்டுத் தூங்க வைப்பதற்காக முயன்றாள். குமரேசின் தோளிலிருந்த துண்டை எடுத்துப் பலகைக்குக் கீழே விரித்து, தானும் கீழேயே படுத்துக்கொண்டாள். அவள் படுக்கும்போதே குமரேசைப் பார்த்து வழக்கமான புன்சிரிப்பைக் கொட்டிவிட்டுச் சாய்ந்தாள். ஆனால் குமரேஸ் பதிலுக்குச் சிரிக்கவில்லை. அவன் நெஞ்சு குமுறுவது அவளுக்கு எப்படித் தெரியும்? எதிரேயிருந்தவனுக்கு இப்போது தலையைக் குனியவேண்டிய வேலை ஏற்பட்டது. கண்களை மூடித்தூங்க முயலும் சந்திராவின் முகத்தில் அவன் எந்தத் தனியழகைக் கண்டானோ தெரியவில்லை; ஒரே ரசனைதான். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. காய்ந்து வாடுபவனுக்கு எதிரே வட்டில் நிறையப் பொங்கலை வைத்தால்? அந்த நிலைபெற்றான் அவன்.உணர்வு ஒரு நிலையில் இல்லையென்பது அவன் அசைவுகளிலேயே ‘பளிச் பளிச்சென’ மின்னிக்கொண்டிருந்தது. சந்திராவின் தனிப்பார்வை வேறு அவனைப் பம்பரமாக ஆட்டி வைத்திருந்தது. அவனுக்கு அன்று ஒரு நல்ல வாய்ப்புதான். எத்தனையோ பெட்டிகளைத் துருவிப் பார்த்து இதுபோன்ற ஒரு நல்ல இடம் கிடைக்காமல் கடைசியில், நட்சத்திரத்துக்குக் குறி வைத்தபோது சந்திரனே விழுந்து விட்டதுபோலக் கிடைத்த வயிறு இடமல்லவா இந்த இடம்? தூங்கும் சந்திராவை இவன் ரசித்தான்; ரசித்தான்; அப்படி ரசித்தான். இந்த ரசமான கட்டத்தில்தான், குமரேஸ் முக்கால் கண்ணை மூடிக்கொண்டு நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். சந்திரா எப்படியும் கையுங்களவுமாகப் பிடிபட்டு விடுவாள் என்று துடித்துக் கொண்டிருந்தான். எதிரே இருந்தவன் குமரேசை அடிக்கடி பார்ப்பதும், தன் கால்களால் அவள் கையை மெதுவாகத் தீண்டுவதும் மீண்டும் சுற்று முற்றும் பார்த்துச் சும்மாயிருப்பதுமே வேலையாயிருந்தான்.
வண்டி நெல்லிக்குப்பத்தைத் தாண்டி விட்டது. சந்திரா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் பொற்கரம் குழந்தை மூர்த்தியை அணைத்தபடியிருந்தது. அந்த வாலிபன் ஏதோ ஒரு புது துணிவுடன் பெருமூச்சு விட்டான். குமரேசையும் கூர்ந்து நோக்கிக் கொண்டான். குமரேஸ் தன் துப்பறியும் வேலைக்குத் தயாராக, தூக்கத்தால் துவண்டிருப்பவனைப் போல இருந்தான். வாலிபனின் கைகள் சந்திராவின் கன்னத்தை வருடின. சந்திரா விழித்துக் கொண்டாள். வாலிபன் நடுங்கியபடி கைகளை எடுத்துக் கொண்டான். சந்திரா விழித்த வேகத்தில் குழந்தையும் சிணுங்கியது. சந்திரா மேலே நிமிர்ந்து தன் கணவனைப் பார்த்தாள். அவன் தூங்கி வழிந்து கொண்டிருந்தான். அவளை ஒரு முடிவு கட்டுவதற்காக இமைகளின் இடுக்கில் ஒளிந்து கொண்டிருந்த அந்தப் பயங்கர விழிகளை அவள் பார்க்கவில்லை. கணவனைப் பார்த்த கண்களோடு அந்த வாலிபனையும் பார்த்தாள். அவன் உமிழ்நீர் விழுங்கினான். சிணுங்கிடும் குழந்தைக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அதைத் தட்டிக்கொடுத்தபடி தூங்கி விட்டாள்.
எத்தனையோ முறை அழுதிடுங் குழந்தைக்கு அவள் முத்தமிட்டுப் பிறகு தூங்கவைப்பதை குமரேஸ் பார்த்திருந்தாலுங்கூட, இந்த முத்தம் அவனை நெருப்பில் தள்ளி எண்ணெயை ஊற்றுவதாயிருந்தது.
சிறிது நேரம் கழிந்தது. வாலிபனின் கரங்கள் மீண்டும் சத்திராவின் கன்னத்தைத் தொட்டன. சந்திரா விழித்தாள், விழித்தவள் குழந்தையைத் தட்டியபடி மறுபடியும் கண்களை மூடிக்கொண்டாள். குமரேசால் அங்கு உட்கார முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. எரிமலையாகிவிட்டான். பூகம்பமானது அவன் உள்ளம், பயங்கரமான ஒரு முடிவுடன் எழுந்தான். குழந்தையைக் கையில் தூக்கினான்; குழந்தை அழுதது. சந்திரா விழித்துப் பார்த்து தன் கணவன் கையில் குழந்தையைக் கண்டு தூங்கத் துவங்கினாள், குழந்தையுடன் குமரேஸ் ஐந்தாறு பலகைகளைத் தாண்டி அப்பால் போனான். வாலிபனுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.
ரயில் வண்டி புயல் வேகத்தில் பெருமூச்சு விட்டு ஓடிக் கொண்டிந்தது. குமரேஸ் சுற்றுமுற்றும் பார்த்தான். கையிலிருந்த குழந்தையை அந்த அகோரமான இருளில் ஜன்னல் வழியே வீசியெறிந்தான். அந்தப் பசலை எந்தக்காட்டில் விழுந்ததோ? எந்தப் பாறையில் விழுந்து சுக்குநூறானதோ? குமரேசின் மனம் சிறிது சாந்தி பெற்றது. “ஒரு விபசாரியின் தொடர்பு இன்றோடு ஒழிந்தது. தன் பெயரைச் சொல்லி வருங்காலத்தை வீணாக்காமலிருக்க குழந்தையும் ஒழிந்தது. இனிமேல் நான் தனி ஆள். இந்தத்தாசி அவனோடு போகட்டும்” என்று அவன் மனம் பேசிற்று. வண்டி நிற்கும் ஸ்டேஷனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் அவன் பார்வை முன் உட்கார்ந்திருந்த இடத்தில் பாய்ந்தது. வாலிபனின் கரங்கள் இப்போது நடுக்கமின்றி சந்திராவின் கன்னத்திடம் சென்றன.அடக்கமுடியாத ஆவலுடன் அவளது கன்னக் கதுப்பை விரல்களால் அழுத்தினான். சந்திரா திடுக்கிட்டு விழித்தாள். அவன் இப்போது சிரித்தான். “சீ” என்ற பெரிய சத்தத்துடன் சந்திரா துள்ளிக் கிளம்பினாள் வாலிபனின் கன்னத்தில் அவள் கரங்கள் மாறி மாறி விளையாடின. எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். குமரேசும் அருகே வந்து விட்டான். அவனுக்கு மயக்கம் வருவது போலிருந்தது. ‘அத்தான்!’ என்று அவனைக் கட்டிக் கொண்டாள் சந்திரா.
“ ஆரம்பத்திலிருந்து நீ பார்த்த பார்வை......” என்னமோ ஆத்திரமாகச் சொல்லப்போனான் குமரேஸ்.
“என் சிறு வயதில் இறந்துபோன அண்ணன் மாதிரி இருந்தது. பார்த்தேன் இந்தப்பாவி.....” என்று விம்மி விம்மியழுதாள். பெட்டியிலிருந்தவர்கள் அவனைத் திட்டித் தீர்த்தார்கள். கடலூர் ஸ்டேஷன் வந்தது. அந்த சபலம் பிடித்த மைனர் இறங்கிப் போய்விட்டான். “இதற்காகவே இந்தப் பயல்கள் ரயிலில் ஏறுவது” என்று ஒரு குரல் கிளம்பிற்று. திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் குழந்தையைக்கூட மறந்திருந்த சந்திரா, “குழந்தை எங்கே அத்தான்?” என்று ஆவலோடு கேட்டாள்.
“பக்கத்தில்தான் இருக்கிறது; இங்கேயே இறங்கு” என்றான் குமரேஸ். அவன் முகம் கருத்து விட்டது.
“ஏன்?” என்றாள் அவள்.
“இறங்கேன்;சொல்லுகிறேன்” என்று மூட்டைமுடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டான் குமரேஸ். அவளும் இறங்கினாள். இறங்கியவுடன் கேட்டாள் “எங்கே குழந்தை?” என்று.
கண்ணீர் வழிந்தோட அவன் சொன்ன பதில் “இரண்டு மைல்களுக்கப்பால் இருக்கிறது” என்பது தான்.
“ஏ! அவசரக்கார குமரேசா!”
ஆத்திரக்கார முட்டாளே!”
என்ற ஒலி, நாலா புறமிருந்தும் அவன் காதில் சாட்டை ஒலியாய் ஒலித்தது.
'இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸ்' கடலூரிலிருந்து புறப்பட்டது.