உள்ளடக்கத்துக்குச் செல்

திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





திராவிட இயக்க எழுத்தாளர்

சிறுகதைகள்

கலைஞர் மு. கருணாநிதி

பூர்ணிமா பதிப்பகம்

375/8, ஆற்காடு சாலை,

சென்னை - 600024.




முதற் பதிப்பு : டிசம்பர் 1997

விலை : ரூபாய் இருபத்தைந்து

Dravidian Movement Writers'

SHORT STORIES

(Tamil short Stories)

Author

 :  Kalaignar M. Karunanidhi

First Edition

 :  December 1997

Pages

 :  8 + 104

Price

 :  Rs.25/- (Rupees Twenty Five Only)

Types

 :  10 pt

Pape

 :  10.5 White Printing

Printer

 :  RAJ ACHAGAM

  CHENNAI - 600 094

Publishers

 :  POORNIMA PATHIPPAGAM

  375/8 Arcot Road, Kodambakkam,

  CHENNAI-600 024




முன்னுரை

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் திராவிட இயக்கத்தின் பங்கு மகத்தானது.

ஒரு காலகட்டத்தில் தமிழின் தொன்மையை, சிறப்பை தனித்தன்மையைச் சிதைக்க முயன்ற செருக்கை உடைத்தெரிந்த வலிமை திராவிட இயக்கத்துக்கே உரியது.

வடமொழியும், ஆங்கிலமும் விரவிக் கிடந்த தமிழை, நல்லதமிழ் ஆக்கிய பெருமை திராவிட இயக்கத்தின் தனிஉரிமை.

அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்கள் பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதி அவர்களும், அவர்களைப் பின்பற்றி எழுதிய எழுத்தாளர்களும்தாம்.

தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுகிற எந்த ஒரு உண்மையான ஆசிரியராலும் மறுக்க அல்லது மறைக்கப்படமுடியாத திருப்பெயர்கள் அவர்களுடையவை..

தமிழில் கவிதை, வரலாறு, கட்டுரை, நாடகம், உருவகம், புதினம், நெடுங்கதை, சிறுகதை ஆகிய எல்லாத் துறைகளிலும் முன்பு எவரும் தொடாத சிகரங்களைத் தொட்டவர்கள் அவர்கள்.

சிறுகதை பிறந்ததாகக் கருதப்படும் மேலை நாடுகளில்கூட அதற்கு முறையான, முடிவான, முழுமையான இலக்கணம் கூறப்படவில்லை. ஏனென்றால், இலக்கியத்தின் கடைசிக் குழந்தையான சிறுகதை நாளுக்கு நாள் வளா்ந்து கொண்டிருக்கிறது; புதுப்புது வடிவெடுத்துக் கொண்டிருக்கிறது.

சிறுகதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்லுவதுடன், அவ்வவ்வாறு எழுதிக் கொண்டும் உள்ளனர். எனினும் சிறுகதையின் தொடக்கம் அமைப்பு, வடிவம், முடிவு என்பவை ‘எழுதப்படாத சட்ட’மாகவே உள்ளதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

தமிழில் முதலில் சிறுகதை எழுதியவர்கள் பொழுது போக்குக்காகவே எழுதினர். பிறகு அதிலே கலைநயமும், மெருகும், தனித்துவமும் சிலரால் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து உத்தி, உள்ளடக்கம், நடை இவை முக்கிய இடத்தைப் பெற்றன.

சிறுகதையின் உருவம் மட்டும் சிதையாமல் இருந்தால் போதும், உள்ளடக்கம் பொருட்படுத்தப்படவேண்டிய ஒன்று அல்ல என்ற கருத்து இருந்த காலத்தில் - பொழுது போக்குக் கதைகளின், பால் உணர்வுக் கதைகளின் இருப்பிடமாகத் தமிழ்ச் சிறுகதைகள் உருவெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் - முற்போக்குக் கருத்துக்களை, பொதுவுடமைச் சிந்தனைகளைத் தம் கதைகளில் அழுத்தமாக வெளிப்படுத்தியவர்கள் திராவிட இயக்கத்தினரே.

குறிப்பாக, 1947க்கும் 1957க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழர்களிடம் அறிவுத் தாகத்தைத் தூண்டி, பத்திரிகை, புத்தகம் இவற்றைப் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்த பெருமையும் அவர்களுக்கே உண்டு.

அண்ணாவும், கலைஞரும், அவர்களைத் தொடர்ந்து பலரும் சிறுகதைகளின் வகைகள் என்று எவை எவை கூறப்பட்டனவோ அவை எல்லாவற்றுக்கும் எடுத்துக்காட்டான கதைகள் பலவற்றை எழுதினர்.

அந்தக்கதைகள் ஏழ்மையை எடுத்துக்காட்டுவதாக, முதலாளித்துவத்தின் சுயநலத்தைத் தோலுரித்துக் காட்டுவதாக, பண்ணைச் சீமான்களின் இரக்கமற்ற கொடுமைகளை விளக்கிக் காட்டுவதாக, சமுதாயத்தின் மேற்தட்டில் இருப்போரின் முகவிலாசத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாக, சமூக சீர்கேடுகளை எடுத்துக்காட்டி அவற்றைக் கடுமையாகக் கண்டனம் செய்வதாக, விதவையின் அவலம், சாதிவெறி காரணமாக ஏற்படும் சஞ்சலங்கள் இவற்றைத் திறம்பட வெளிப்படுத்துவதாக அமைந்தன.

திராவிட இயக்க எழுத்தாளர்களின் நுழைவுக்குப் பின்னரே தமிழ்ச் சிறுகதைத்துறையில் ஒரு மறுமலர்ச்சியும் திருப்பமும் ஏற்பட்டன.*[1]

ஆனால் திராவிடஇயக்க எழுத்தாளர்களின் சிறுகதைப் பணி இன்றுள்ள ‘இலக்கிய அறிஞர்’களால் முறையாகப் பாராட்டப்படவில்லை. தமிழ் எழுத்துலகின் சகலமும் தாங்களே என எண்ணிக் கொண்டிருக்கும் அல்லது கூறிக்கொண்டிருக்கும் சில ‘அறிவு ஜீவிகள்’ அவர்களை எழுத்தாளர்கள் என்றுகூட ஒப்புக் கொள்வதில்லை, படிக்காமலேயே எழுதும் ‘படித்த மேதைகள்’ அவர்கள்.

அவர்களுக்கு மறுப்பாக இல்லாவிட்டாலும், ‘இவர்களின் சிறுகதைகளில் சிலவற்றையாவது படித்துப் பாருங்கள்’ என்ற கோரிக்கையோடு இந்தத் தொகுப்புகள் இப்போது வெளியிடப்படுகின்றன.

அத்திபூத்தாற்போல சில வேளைகளில் சில நடுநிலையாளர்கள் அண்ணாவின், கலைஞரின், திராவிட இயக்கத்தாரின் எழுத்துப் பணியைப் பாராட்டாமலும் இல்லை.

பேராசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் (செட்டியார்) போன்ற பெருமக்கள் அதனைச் செவ்வனே செய்துள்ளனர். (‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’) - (1977).

‘உத்தி, உள்ளடக்கம், நடை ஆகிய அம்சங்கள் முழுமையாக அமைந்த பல சிறுகதைகளைப் படைத்தவர் அண்ணா’ (பக்கம் : 235) என்றும், ‘மு.கருணாநிதியின் கதைகளில் பல சிறுகதை வடிவ அமைதி கொண்டுள்ளன என்பது தனிச் சிறப்பு. இவர் எழுதிய ‘குப்பைத் தொட்டி’ என்ற கதை எந்தச் சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெறும் தகுதியைப் பெற்றது.’ (பக் : 236) என்றும், ‘தமிழில் சிறுகதை; வரலாறும் வளர்ச்சியும்’ என்னும் திறனாய்வு நூலில் குறிப்பிடுகிறார்கள் அதன் ஆசிரியர்கள் பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாத சுந்தரம் ஆகியோர்.

இந்தத் தொகுப்புகளில் இணைக்கப்பட்டுள்ள கதைகள் பெரும்பாலும் ஐம்பதுகளில் எழுதப்பட்டவை. அவற்றில் வருகிற நடப்புகள் சில, அந்தக் காலத்துக்கு மட்டுமே பொருத்தமானவையாக இருக்கக் கூடும். அவற்றில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே வெளியிட்டுள்ளோம்.

இவர்கள் எழுதிய சில நல்ல கதைகள் கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்க ஒன்று.

இவை புதிதாக இப்போது எழுதப்பட்ட கதைகள் அல்ல. இன்றைய தமிழ்ச்சிறுகதைகளின் ‘பாணி’ யில் கூட இவற்றில் சில மாறுபட்டிருக்கலாம். ஆனால் சிறுகதைக்குரிய இலக்கணத்திலிருந்து இவை மாறுபட்டவை அல்ல என்பது மட்டும் நிச்சயம்.

தமிழ்ச்சிறுகதைத் துறையில் திராவிட இயக்கத்தினரின் பங்களிப்பு என்ன என்பதை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் முயற்சியே இந்தத் தொகுதிகளின் நோக்கம் என்று சொல்ல வேண்டும்.

இவை இப்போது வெளியிடப்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலங்களில் அவற்றில் பல புத்தகமாக வெளியிடப்பட்டிருந்தும் கூட, ‘அரசியல்’ காரணமாக அவை அரசுசார்ந்த நூலகங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இவற்றில் இடம் பெறவில்லை; இடம் பெறும் முயற்சியையே சிலர் திட்டமிட்டு முறியடித்துள்ளனர்.

பின்னாளில் தமிழ்ச் சிறுகதைகளில் திராவிட இயக்கத்தின் பங்குபற்றி ஆய்வு செய்ய விரும்புவோருக்கு இவை கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும் இவை இப்போது புதிதாக வெளியிடப்படுகின்றன.

இவர்கள் எழுதிய கதைகள் அனைத்தும் தொகுதிகளாக நூலாக்கப்படுவதே முறை. ஆயினும், இன்றைய நிலையில் காகிதம்,அச்சுக் கூலி போன்றவற்றின் விலை உயர்வை மனத்தில் கொண்டு, சாதாரண வாசகரும் வாங்கமுடிகிற விலையில் தரவேண்டும் என்பதற்காக எழுத்தாளர்களின் குறிப்பிட்ட சிலகதைகள் மட்டுமே இங்கே தரப்படுகின்றன.திராவிட இயக்கம் அரசியல் இயக்கமாக உருமாறியதில் தமிழரின் புறவாழ்வுக்குப் பல நன்மைகள் கிடைத்திருப்பினும், தமிழ்இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் அது நட்டக் கணக்கே ஆகும்.

அவர்களின் சிறுகதைப் பணி அரசியல்பணி காரணமாக தொடரமுடியாத சூழலை ஏற்படுத்திவிட்டது என்பதை நாம் சொல்லியே ஆக வேண்டும். அவர்களில் பலர் இப்போது சிறுகதைகளை எழுதுவதே இல்லை.

ஆனால், கலைஞர் அவர்கள் மட்டும் தனது இடைவிடாத அரசியல் மற்றும் அரசுப் பணிகளுக்கும் மத்தியில் இன்னும் சிறுகதை எழுதுவதைத் தவிர்ப்பதில்லை என்பது உண்மையில் வியப்புக்கும், மகிழ்ச்சிக்கும் உரியதாகும். சென்ற ஆண்டுகூட வார இதழ் ஒன்றில் அவருடைய புதிய சிறுகதை வெளியாயிற்று.

இனி, இந்தக் கதைகளைத் தேடும் பணியில் எனக்குப் பெரிதும் உதவிய என் மனைவி பேராசிரியர் ச. சுந்தரவல்லி, பிழைதிருத்தம், அச்சக, காகித ஏற்பாடுகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்த என் நண்பர் ‘இளம்பிறை’ ரஹ்மான், அனுமதி அளித்த பெருமக்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, தமது நெருக்கடியான அலுவல்களுக்கு மத்தியிலும் அணிந்துரையாக நல்லதொரு ஆய்வுரையே அளித்திட்ட மாண்புமிகு கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் ஆகியோருக்கு என் நன்றி என்றும் உரியது.

சென்னை அன்புடன்

டிசம்பர் 97 ப. புகழேந்தி


க. அன்பழகன் எம்.ஏ., தலைமைச் செயலகம்

கல்வி அமைச்சர் சென்னை - 600 009.


அணிந்துரை


மனிதனின் எண்ணத்தின் தெளிந்த முதல் வடிவம் பேச்சு, சொல், மொழி. எண்ணங்களின் தொடர்ச்சியால் உருவாகும் கருத்தின் வடிவமே இலக்கியம். இலக்கியம் கதையாக, பாட்டாக, கவிதையாக, நாடகமாக வடிவம் பெறும்.


அவற்றுள் தொன்னாள் முதல் மக்களின் வாய்மொழியாகவே வடிவம்கொண்டு வளர்ந்து பரவியது கதையே. பாட்டனோ பாட்டியோ பேரக்குழந்தைகட்குச் சொல்லும் முறையில் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வழங்கி வருவது கதை. அவற்றுள் பல காட்டு விலங்குகள், பறவைகள், மரங்கள், ஆறுகள் முதலானவை ஒன்றுடன் ஒன்று பேசுவதாகக் கற்பித்து, ஒன்றை ஒன்று ஏமாற்றியது, வென்றது, விரட்டியது போன்று முடிவு கூறிக் குழந்தை மனம் களிக்கச் செய்யும் இயல்பின. இவ்வகையான கதைகளே பஞ்சதந்திரக் கதைகளாக வழங்குகின்றன.


பேய், பூதம், பிசாசு, இராக்கதன் போன்ற கற்பனைகளை வைத்து வழங்கிய கதைகளும் பல மகாபாரதத்தில் இடம் பெற்ற இப்படிப்பட்ட கதைகள் பல. இவையேயன்றி, தெய்வங்களின் பெயரால் செவிவழிக் கதைகளாகப் பேசப்பட்டவையே பின்னர் புராணங்களாக வளர்ந்தன. அவை மக்களின் பக்தியுணர்வை வளர்த்து, மதவழி நம்பிக்கைகளை நாட்டவே துணையாயின,


பல கதைகள் குழந்தைகளை அச்சுறுத்தவும், வயது வந்தவர்களின் மூடநம்பிக்கையை நிலைப்படுத்தவுமே பயன்பட்டன. வேறுபல கதைகள் சமுதாயத்தில் நிலவிய பிறவி ஏற்றத் தாழ்வையும், சாதிமுறையையும், செல்வர் - வறியர் என்னும் வேற்றுமையையும், அவரவரும் தம் முற்பிறவியில் செய்த பாவ - புண்ணியங்களின் விளைவு, தலைவிதி என்று ஏற்று நம்பிக்கிடக்கவும் ஏதுவாயின. கதை கேட்கும் விருப்பம் மக்கள் இயல்பாதலின் புராணங்களையும், இதிகாசங்களையும் திருக்கோயில்களில் கதைப்பாட்டாகச் (காலட்சேபம்) சொல்லும் முறை ஆயிரத்து ஐநூறு ஆண்டுகட்கு முன்னர் பல்லவர் ஆட்சிக்காலத்தில் வளரலாயிற்று. இது போன்ற கதைகள் கிரேக்கப் புராணங்களிலும், மேல்நாட்டாரின் தொன்மைக் கதைகளிலும் உண்டென்றாலும், மேல்நாடு எய்திய அறிவியல் சிந்தனை - மதக்கொள்கை மறுப்புணர்வு ஆகியவற்றால் அவை பக்தியோடு, கண்மூடித்தனமாக நம்பப்படுவதில்லை.

நம்முடைய நாட்டிலும் இருநூறு ஆண்டுகட்கு முன்னர் மேல்நாட்டு முறைக்கல்வி பரவத் தொடங்கியதன் விளைவாக வரலாற்றுச் செய்திகள் கதை வடிவம் பெற்றன. தறுகண்மையுடன் போரிட்ட வீரர்கள், ஏழைகளின் பசித்துயர் போக்கப் பொருள் தேடக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், நல்ல தங்காள் போன்று கொடுந் துயரத்திற்கு ஆளான மகளிர் பற்றியெல்லாம் கற்பனையுடன் கலந்து கதை கூறும் பழக்கமும் உருவாயிற்று. பெண்களிடையே விடுகதை போடுவதும், விடுவிப்பதும் ஒருவகையில் கற்பிக்கப்பட்ட புனைந்துரையில் உண்மையைக் கண்டறியத் தூண்டுதல்களாக நிலவின.

மேல்நாட்டில் அச்சுக்கலை வளர்ந்த நிலையில், ஒரு எழுத்தாளன் தான் கண்டுணர்ந்த ஒரு சமுதாய நிகழ்ச்சியையோ - கற்பிக்கக்கூடிய ஒரு சூழலையோ கதையாக வரையும் வழக்கம் வளரலாயிற்று. அதன் பயனாகவே சமுதாய வாழ்வில் உள்ள கேடுகளையும் அநீதிகளையும் மக்களிடம் சுட்டிக் காட்டி ஒழிக்க விரும்பியவர்கள் அதற்கேற்ற களனும் கருவும் அமைத்துக் கதைகளை வடிக்கலாயினர்.

புத்தகங்கள் வெளியிடும் வாய்ப்பு வளர்ந்ததும், கிழமை ஏடுகளும் நாளிதழ்களும் பெருகியதும் கதைகள், குறிப்பாகச் சிறுகதைகள் ஆயிரக்கணக்கில் தோன்றத் துணையாயின. அந்த வகையிலேயே நம்முடைய நாட்டிலும் பலமொழிகளிலும் கதைகள் உருக் கொண்டன.

புதினம் - நாடகம் - கவிதை- காவியம் - சிறுகதை முதலான இலக்கியம் ஏதுவாயினும் மக்களின் மனப்போக்கைத் தழுவியோ, அன்றி அதன் ஆசிரியனின் சமுதாயப் பார்வையைத் தழுவியோதான் அமையலாகும். அந்த வகையில் பல கதைகள் சமுதாய வாழ்வில் நிலவிய பழமைப் பிடிப்பை விவரிப்பதாகவே அமைந்திருந்தன மக்களிடம் நிலவிய மூடநம்பிக்கை, சாதி வேற்றுமை, பெண்ணடிமை நிலை, முதலாளித்துவச் சுரண்டல் ஆகியவற்றை உலக இயல்பென ஏற்றுக் கொண்டதாகவே இருந்தன.

தமிழ் மொழியில் பாரதியார் கவிதைகளால் ஏற்பட்ட மறுமலர்ச்சிச் சிந்தனையினால் ஒவ்வோரளவிலும் வகையிலும் மூடநம்பிக்கைகளையும் குருட்டுப் பழக்க வழக்கங்களையும் சாடும் எழுத்தாளர்கள் சிலர் தோன்றினர். அவர்களுள் குறிப்பிடத்தக்க முன்னோடிகள், ‘அக்கிரகாரத்து அதிசயப் பிறவி’ என்று அறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட வ, ரா. (வ. ராமசாமி) அவர்களும், ‘சிறுகதைக் கலையைப் போர்க்கருவியாகக் கொண்டு சமுதாயக் கொடும் பேய்களை எதிர்த்தவர்’ என்று டாக்டர் மு. வ. அவர்களால் குறிப்பிடப்பட்ட புதுமைப்பித்தன் அவர்களும் ஆவர். அதுகாறும் நிலவிய எழுத்தாளர் கைக்கொண்ட முறையை மாற்றிச் சுதந்திரமான சிந்தனையைக் கதைகளில் பரவவிட்ட புரட்சி எழுத்தாளர் புதுமைப்பித்தன். அவரது கதைகள் இடம் பெற்றதால் புகழ்பெற்ற ‘மணிக்கொடி’ ஏட்டின் எழுத்தாளர்கள் பலர், புதுமைப்பித்தனை வழிகாட்டியாகக் கொண்டு கதைகள் புனைந்தனர். ஆனால் அவை படிப்பவர்தம் சிந்தனைக்கு விருந்தாயினவேயன்றி மக்களை மனமாற்றம் அடையச் செய்யும் ஓர் இயக்கமாக வல்லமை பெற்றதாகவில்லை.

ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகப் பிறந்த நீதிக்கட்சியின் சமூக நீதி இலட்சியத்திலும், இழிபிறவி என வீழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையை அவர்களுக்கு உணர்த்த முற்பட்ட பகுத்தறிவு இயக்கக் குறிக்கோளிலும் உறுதி கொண்டு, அந்தக் கொள்கைகட்கு மாறான மத மூட நம்பிக்கைகளை வளர்க்கும் வைதிக வல்லாண்மையை ஒழிப்பது மூலமே, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று தெளிந்த திராவிட இயக்கத்தாரே, தமது எழுத்துப்பணி கலைப்பணியாவும், இந்தக் கொள்கை பரப்பவே பயன்பட வேண்டும் என்னும் வேட்கையுடன் எழுதத் தலைப்பட்டனர்.

அவர்கள் எழுதிய கலைப்படைப்புக்கள் எவ்வகையினதாயினும், அவை இந்தக் கொள்கையும் குறிக்கோளும் கொண்டவையாய் அமைந்தன. அப்படிப்பட்ட குறிக்கோளுடன் சமுதாய மாற்றத்தை உருவாக்க விரும்பித் தீட்டப்பட்ட கதைகள் பலப்பல.

அப்படிப்பட்ட சமுதாய மாற்றத்தை நாடியே, திராவிட - ஆரிய இனவழியில் பிறந்த முற்றிலும் முரண்பட்ட நெறிகளை விளக்கிடுவாராயினர். சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகிய மானிட உரிமைகள் தழைத்திட ஏதுவான கொள்கைக் கோட்பாடுடையது திராவிடச் சமுதாயப் பண்பாட்டு நெறி என்பதை உணர்த்தவே ஆரியத்தைப் பிரித்துக் காட்ட வேண்டிய தேவை தொடர்ந்தது. அந்தக் குறிக்கோளுடன் தமது இலக்கியப் படைப்புகள் அனைத்தையும் வடிவாக்கிய பேரறிஞர் அண்ணாவும், புரட்சிக் கவிஞரும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும் பெருமைக்குரிய வழிகாட்டிகள் எனலாம்.

புரட்சிக் கவிஞரின் ‘புரட்சிக்கவி’ முதலான சிறுகதைகள் பல கவிதை வடிவம் பெற்றதால் ‘சிறுகதை’யாகக் கொள்ளப்படவில்லை. அறிஞர் அண்ணா இயற்றிய சிறுகதைகள் பல. ஒவ்வொன்றும் ஒருவகைச் சூழலைச் சித்தரிப்பது. அண்ணாவின் நடை நலத்தால் கதைக்காட்சி கண்முன்னே தோன்றி, உள்ளத்தைக் கிளறும் வலிமை உடையதாகும். ஏழையின் குடும்ப வாழ்வின் மனமகிழ்ச்சி அவனது ஆண்டையால் எப்படியெல்லாம் பறிக்கப்படுகிறது என்பதை அவரது ‘செவ்வாழை’ கதையினில் காணலாம். அந்த ஏழையின் தவிப்பை உணர்த்திட அவர் நடையே புலம்பும்.

கலைஞர் கருணாநிதி எழுதியுள்ள கதைகள் பலவும் நிகழ்ச்சிச் சித்திரங்களாக அமைந்து, அவற்றைப் படிப்பவர்தம் உள்ளத்தைக் கரைத்து, நீதியை உணரச் செய்திடும் திறத்தன.

அந்த வரிசையில் இடம்பெறும் புகழ்பெற்ற திராவிடர் இயக்க எழுத்தாளர்களே - இந்தத் தொகுப்புக் கதைகளை வரைந்த ஆசிரியர்களான

திரு. இராம. அரங்கண்ணல்.

மறைந்த ஏ. வி. பி. ஆசைத்தம்பி

திரு. இளமைப்பித்தன்

திரு. இரா. இளஞ்சேரன்

திரு.கே. ஜி. இராதாமணாளன்

திரு.தில்லை. மறைமுதல்வன்

மறைந்த சிறுகதை மன்னர். எஸ். எஸ். தென்னரசு

மறைந்த தத்துவமேதை டி. கே. சீனிவாசன்

திரு.முரசொலி மாறன் (நாடாளுமன்ற உறுப்பினர்),

திரு. ப. புகழேந்தி

முதலானோர், அவர்தம் எழுத்தாற்றல், கதைபுனையும் திறன், கதைக்கருவைத் தேடும் முறை, கதை மாந்தரும், களனும் அமைத்திடும் முறை, கதை மாந்தர்தம் உரையாடல் மூலம் தமது கொள்கையை இடம் பெறச் செய்யும் மதிநுட்பம் ஆகியவை அவரவர் உளப்பாங்கை ஒட்டியதாய் அமைந்ததால் வேறுபடும் தோற்றங்கள் தரினும், தமிழ்ச் சமுதாய மறுமலர்ச்சிக்கு ஏதுவாகும் திறத்தால் குறிக்கோளில் ஒன்றியனவே.

அத்தகு சிறப்புடைய ஆசிரியர்கள் இயற்றிய சிறுகதைகளைத் தேர்ந்து எடுத்து இந்தக் கதைத் தொகுப்புக்களை வெளியிடும் ஆசிரியர் ப. புகழேந்தி அவர்களே புகழ்பெற்ற எழுத்தாளர். திராவிட இயக்க உணர்வுகளில் ஊறித் திளைத்தவர். உறுதி பூண்டவர். அவரால் தொகுக்கப்பட்ட இந்தத் தொகுப்புக்கள் தமிழ்மக்களின் வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

திராவிட இளைஞர்கள் இந்தக் கதைகளைப் படித்துச் சமுதாயச் சீர்த்திருத்தத்தின் தேவையை உணர வேண்டும் என்பது என் விழைவு.

தொகுக்கப்பட்டுள்ள கதை எவையும் படிப்பவர் பொழுதுபோக்கத் துணையாகும் வெறுங்கதையல்ல; திராவிடத்தின் மறுமலர்ச்சிக்கு வழிகோலும் சிந்தனையை வளர்க்கும் சித்திரங்கள்! திராவிடத்தின் விடியலுக்கு முன்னர் எழும் சேவலின் அகவல்!

உள்ளடக்கம்


  1. * ‘அண்ணாதுரையின் இலக்கியப் பிரவேசத்துடன் மறுமலர்ச்சித் தமிழில் ஒரு புதிய வேகம் தோன்றியதோடு, நடையில் யாப்புக்குப் பொருத்தமான எதுகையும், மோனையும் சேர்ந்து மொழிக்கு ஒலியலங்காரம் கொடுத்ததும் ஒரு முக்கியமான திருப்பம் என்று சொல்ல வேண்டும்.’

    - சிட்டி, சிவபாத சுந்தரம், - ‘தமிழில் சிறுகதைகள்; வரலாறும் வளர்ச்சியும்’ (1989) - (பக் : 234)