திருக்குறளில் செயல்திறன்/பக்கம் 15-22

விக்கிமூலம் இலிருந்து

என்றாலும் மனிதனைவிட அதிக வலிமை உள்ளதும், மனிதனைவிடப் பெரிய உருவமும், மனிதனைப்போல நூறாண்டு வாழ்வது மாகிய யானைகளைத்தான் செயல் திறனுக்கு உவமையாகக் கூறவேண்டுமென்று எண்ணி, வள்ளுவர் திருக்குறளில் ஒரு யானைக் கூடத்தையே அமைத்து, அதில் எட்டு யானைகளைக் கட்டி வளர்த்திருக்கிறார் என்று தெரிகிறது.

1. பெரியதைச் செய்

செயல்திறனுக்கு நல்லதை எண்ணு, பெரியதை எண்ணு. அழுத்தமாக எண்ணு. ஆழமாக எண்ணு. அப்படியே ஆவாய். முனைந்து செய். வெற்றியா தோல்வியா என்று பாராதே. வாழ்த்தா, வசையா என்று கருதாதே. துணிந்து செய். முயன்று செய், வேட்டைக்குச் செல்வதானால் முயல் வேட்டைக்குச் செல்வதைவிட யானை வேட்டைக்குப் போவது நல்லது என்று கூறுகிறார். முயலை வென்று வெற்றிபெறுவதைவிட யானை வேட்டைக்குப்போய்த் தோல்வி அடைந்தாலும் சிறப்பே என்று வள்ளுவர் கருதுகிறார். ஒருவன் யானை வேட்டைக்குப்போய், யானையையும் கண்டு, குறிபார்த்து வேலையும் வீசி எறிந்து, குறி தவறி, யானையும் பிழைத்தோடிப்போய், வேலையும் இழந்துவிட்டு வெறுங்கையோடு திரும்பி வருகிறவனைப் பார்த்து. 'வீரன்' என்று வள்ளுவர் கூறுகிறார்.

        கான முயலெய்த அம்பினில் யானை
        பிழைத்தவேல் ஏந்தல் இனிது (772)

இக் குறள் சிறுசெயல்களிலே முயன்று வெற்றி பெறுவதைவிட, பெரிய செயல்களிலே முயன்று தோல்வி அடைவது சிறந்தது என்ற புதுக்கருத்தை விளக்குகிறது. இது முதல் யானை.

2. இடனறிந்து செய்

போர்க்களம் - ஒருயானை களத்தினுள்ளே நுழைந்து கூர்மையான வேலைத் தாங்கிப் போரிடவந்த வீரர்களை எல்லாம் தன் துதிக்கையால் வாரித் தரையில் அடித்துக் கொன்று குவித்தது. அன்று மாலை, அந்த யானை நீர் அருந்த ஏரிக்குச் சென்றபொழுது சேற்றில் காலை விட்டுக்கொண்டது. காலை எடுக்க முடியவில்லை. நகர முடியவில்லை, துன்பப்படுகிறது. பின்னால் ஒரு நரி வந்து யானையின் உடலைக் கடித்துத் தின்னுகிறது. யானையால் திரும்பி நரியை விரட்டவும் முடியவில்லை. இறுதியில் பலநாள் சேற்றிலே நின்று வேதனைப்பட்டுச் சாகிறது. குறள் இது-

        காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
        வேலாள் முகத்த களிறு (500)

காலையில் ஆறடி நீளமுள்ள வேல்களை வைத்திருந்த வீரர்களை யானை கொன்றது. இதற்குத் துணைசெய்தது போர்க்களத்தில் உள்ள கெட்டிநிலம். மாலையில் அரை அங்குல நீளமுள்ள நகம்படைத்த நரியை விரட்டத் துணை செய்யாதது சேற்றுநிலம். இதிலிருந்து செயல்திறனுக்கு பெரிதும் தேவை இடனறிந்து செய்தல் என்று தெரிகிறது. இது இரண்டாவது யானை.

3. மகிழ்ச்சியோடு செய்

மிகக் கடினமானதாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு செய்யவேண்டும். வீரன் ஒருவன் போர்ச்செயலில் ஈடுபட்டிருந்தான், அவனை வாரி யடிக்கவந்த யானையைக் கையிலிருந்த வேலால் தாக்கினான். உடலிற் பதிந்த வேலோடு வீரிட்டு ஓடியது யானை. யானையோடு வேலும் போயிற்றே என்று வீரன் வருந்தினான்.

அப்பொழுது மாற்றான் ஒருவன் எறிந்த வேல் ஒன்று அவன் மார்பில் பாய்ந்தது. வீரன் அதைப்பற்றித் திருகிக் கையில் எடுத்துக்கொண்டு, மேலும் போர்செய்யத் தனக்கு ஒரு கருவி கிடைத்துவிட்டதே என்று மகிழ்ந்து நகைக்கிறான். போரிட இன்னுமொரு யானை வந்தாலும் வரட்டுமென்று மகிழ்ச்சியோடும், வெறியோடும் வேலேந்தி நோக்குகிறான். அவன் நெஞ்சில் பகைவனுடைய வேல்தாக்கிய புண்ணையும், அதலிருந்து கொட்டும் குருதியையும் அவன் நினைத்துப் பார்க்கவில்லை. அவன் நெஞ்சில் மகிழ்ச்சியே கூத்தாடுகிறது என்று வள்ளுவர் பொர்த்திறத்திலும், ஒரு செயல் திறத்தைக் காட்டி நம்மை மகிழ்விக்கிறார்.

        கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
        மெய்வேல் பறியா நகும். (774)

இது மூன்றாவது யானை.

4. ஊக்கத்தோடு செய்

எக் காரியத்தைச் செய்தாலும் ஊக்கத்தோடு செய்தல் வேண்டும். அப்போது அச் செயல் விரைவில் வெற்றிபெறும் என்று வள்ளுவர் கூறுகிறார். அங்கும் ஒரு யானை, மிகவும் பெரியது. நீண்ட தந்தங்களையுடையது!

அப்போது ஒரு புலி யானையை நோக்கிப் பாய்ந்தது. மிகச் சிறிய உருவம், மிகச்சிறிய நகம் என்றாலும், அப் புலி ஊக்கத்தோடு இடதுபுறத்திலிருந்து வலதுபுறத்துக்கும் வலது புறத்திலிருந்து இடதுபுறத்துக்குமாக யானைமீது பாய்ந்து தாக்குகிறது.

யானை ஒரு பக்கம் திரும்புவதற்குள்ளாகப் புலி பல பக்கங்களிலும் தாக்குகிறது. அத்தாக்குதலைத் தாங்க முடியாமல் யானை அஞ்சி ஓடுகிறது. கூர்மையான நீண்ட தந்தத்தை உடைய மிகப்பெரிய யானை மிகச் சிறிய நகத்தையும் மிகச்சிறிய உருவத்தையும் உடைய புலியின் தாக்குதலுக்கு அஞ்சுகிறது.

காரணம், புலிக்கு உள்ள ஊக்கமும் சுறுசுறுப்பும் யானைக்கு இல்லாமையேயாகும். இக்காட்சியை வள்ளுவர் ஒரு குறளால் காட்டிச் செயல்திறனுக்கே ஓர் ஊக்கத்தை ஊட்டுகிறார்.

         பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
         வெரூஉம் புலிதாக் குறின் (599)

இது நான்காவது யானை.

5. துணைகொண்டு செய்

எல்லா மனிதராலும் எல்லாக் காரியங்களையும் செய்ய முடியாது என்ற உண்வையையும் வள்ளுவர் உணர்ந்திருக்கிறார். ஒருவனால் செய்ய முடியாத காரியத்தைச் செய்யும் படி அவனைக் கட்டாயப்படுத்துவது தவறு என்றும் கருதுகிறார். ஒவ்வொருவர்க்கும் செயல்திறன் என்பது ஓரளவிலேயே இருக்கும் என்றும் எண்ணுகிறார்.

சிலரால் சில காரியங்களைச் செய்ய முடியாது. மனிதனால் ஒரு மதங்கொண்ட யானையைப் போய்ப் பிடிக்கமுடியுமா? முடியாது. ஆனால் அவன் அதைப் பிடித்தாக வேண்டும் என்றும் கூறுகிறார். எப்படி? மற்றொரு பழகிய யானையைக் கொண்டு அந்த யானையைப் பிடிக்கலாம். அதுபோலத் தன்னால் செய்யமுடியாத ஒரு செயல் மிகப் பெரியதாக இருந்தாலும், அதற்கு உற்றவர் துணையுடன் அக்காரியத்தைச் செய்தாகவேண்டும் என்று. செயல்திறனுக்கு இங்கும் யானையையே காட்டி ஒரு புதுவழி வகுத்துக் கூறியுள்ளார்.

        வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
        யானையால் யானையாத் தற்று. (678)

இது ஐந்தாவது யானை.

6. பொருளை வைத்துச் செய்

ஒரு வணிகத்தை நடத்தினாலும் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினாலும் நிறையப் பொருளை வைத்துத் தொடங்கவேண்டும் என்று வள்ளுவர் கருதுகிறார்.

ஒரு வணிகன் 100 பாக்கு மூட்டைகளைக் கொள் முதல் செய்து வைத்திருந்தான். திடீரெனச் சந்தையில் விலை குறைந்தது: அந்த வியிைலிலும் 100 மூட்டைகளைக் கொள் முதல் செய்தான். பின்னும் விலை குறைந்தது: அதிலும் 100 மூட்டைகளைக் கொள்முதல் செய்தான். கடைசியாக அவனது சராசரி விலையும் சந்தை விலையும் ஒன்றாக வந்தது. அதற்குமேல் விற்று இலாபம் அடைந்தான். அவனிடம் நிறையப் பொருள் இல்லாதிருந் திருக்குமானால் அவன் தொழிலில் இழப்பு ஏற்பட்டிருக்கும். இதைக் காட்டவும் வள்ளுவர் நம்மை யானைக் காட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

கோழிச்சண்டை, ஆட்டுச்சண்டை முதலியவைகளைப் பார்க்க அதிக ஆசை உண்டாகும். அதுபோல தரையிலிருந்து யானைச் சண்டையைப் பார்க்க முடியாது. பார்க்கும்போது பார்ப்பவர்க்கு துன்பமும் வரக்கூடும். அதற்காக அவர்களைக் குன்றின்மீது நின்று யானைச் சண்டையைப் பார்த்து மகிழச் சொல்கிறார் திருவள்ளுவர். நிறையப் பொருளை வைத்துக் கொண்டு வணிகத்தையோ தொழிற்சாலையையோ நடத்துகின்ற செயல்திறன். குன்றின்மீது இருந்து யானைச் சண்டையைக் கண்டு மகிழ்வது போன்றது என்று வள்ளுவர் விளக்குகிறார்.

        குன்றேறி யானைப்போர் கண்டற்றால்
                                        தன்கைத்தொன்று
        உண்டாகச் செய்வான் வினை. (758)

இது ஆறாவது யானை.

7. மயங்காமல் செய்

இங்கும் ஒரு யானை நிற்கிறது. பக்கத்தில் ஒரு அழகிய பெண்னும் நிற்கிறாள். ஏதோ ஒரு வேலையாகப் போகிற ஒருவன் இங்கு நின்று யானையின் முகத்தையும், அதன் தலையில் உள்ள இரு குமிழ்களையும் அதன்மேல் போர்த்தியிருக்கும் "முகபடாம்" என்ற சேலையையும், பக்கத்தில் நிற்கின்ற அழகிய பெண்ணையும், அவளது எடுப்பான நெஞ்சையும், அதன்மேல் அணிந்துள்ள சேலையையும் மாறிமாறிப் பார்க்கிறான். அவனுக்கு இந்த இரண்டும் ஒன்றுபோலவே தோன்றுகிறது.

இறுதியில் அவன் கூறியது என்ன தெரியுமா? "கொல்லும் குணமுடைய இந்த யானை என்னைக் கொல்லாது விட்டது; கொல்லாக் குணமுடைய இப்பெண், என்னைக் கொன்றுகொண்டே இருக்கிறாள்" என்று.

இந்த மயக்கம் அவன் மேற்கொண்ட செயலைச் செய்ய முடியாமல் இழக்கும்படி செய்துவிட்டது.

ஆகவே, எதைச் செய்தாலும் இடையில் மயக்கத்திற்கு இடங்கொடுக்கக் கூடாது என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.

        கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
        படாஅ முலைமேல் துகில். (1087)

இது ஏழாவது யானை,

8. கலங்காமல் செய்

எந்த நல்ல காரியத்தையும் எவர் தொடங்கினாலும் அதற்குப் பல இடையூறுகள் வரும். சிலர் புண்படுத்துவர். சிலர் பின்னுக்கு இழுப்பர். சிலர் துன்பப்படுத்துவர். சிலர் குறை கூறுவர். சிலர் பழியுங் கூறுவர். இன்னுஞ் சிலர் தடுக்கவும் செய்வர்.

இவைகளை யெல்லாம் கண்டு கலக்கமடைகிறவர்களால் எச்செயலையும் செய்ய முடியாது. அவர்கள் செயல்திறனையே இழந்துவிடுவர். ஒரு நல்ல செயலை மேற்கொண்டவர்கள் எத்தனை இடையூறு வந்தாலும் சிறிதும் கலங்காமல் கருமமே கண்ணாகக்கொண்டு அவற்றைச் செய்து முடிக்கவேண்டும் என்று வள்ளுவர் செயல்திறனுக்கு ஒரு இலக்கணம் கூறுகிறார். இதைக் கேட்ட நாம்,"இத்தனை இடையூறுகளுக்கு மத்தியில் இதை நம்மால் எப்படிச் செய்ய முடியும்?" என்று வள்ளுவரையே கேட்கின்றோம். அவர் நம்மை அழைத்துக் கொண்டு யானைக் காட்டுக்கு சென்று ஒரு யானையைக் காட்டுகிறார். அதன் உடம்பை 20, 30 அம்புகள் துளைத்து இருக்கின்றன. சில அம்புகள் அதன் உடம்பிலேயே புதைந்தபடி காட்சியளிக்கின்றன. அம்புபட்ட இடங்களிலிருந்துகுருதி கொட்டிக் கொண்டிருக்கிறது. "அப்போதும் அந்த யானை அழாமல் வருந்தாமல் சுருண்டு விழாமல் பீடு நடை நடந்து, தன் பெருமிதத்தை நிலைநிறுத்துகிறது பார்" என்று வள்ளுவர் நம்மைத் தூண்டுகிறார். அப்போதுதான் நமக்கு, எத்தனை இடையூறு வந்தாலும் சிறிதும் கலங்காமல் நாம் மேற்கொண்ட காரியத்தைச் செய்யும் துணிவும் ஏற்படுகிறது. எப்படி இந்த அறிவுரை!

        சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
        பட்டுப் பாடூன்றும் களிறு (597)

இது எட்டாவது யானை.

திருக்குறளில் உள்ளதே எட்டு யானைகள்தாம். அந்த எட்டு யானைகளையும் வள்ளுவர் செயல்திறனுக்கே பயன்படுத்தி நம்மை ஊக்குவிக்கிறார். எப்படி குறள் காட்டும் செயல்திறன்?

இவற்றைப் படித்ததும், எதையாவது செய்து தீர வேண்டும் என்ற எண்ணமும் ஊக்கமும் நமக்கும் உண்டாகின்றன. செயலில் இறங்குகிறோம். உடனே வள்ளுவர்,

"தம்பி! செயல்திறனைக் காட்டுவதற்காக எதையாவது செய்துவிடாதே. செய்யத் தக்கதை மட்டுமே செய்ய வேண்டும். அதைச் செய்யாவிட்டாலும், செய்யத்தகாத எதையும் செய்துவிட்டாலும் நாடும் கெடும்; சமூகமும் கெடும்; குடும்பமும் கெடும்; நீயும் கெடுவாய்" என்று கூறுகிறார்.