திருக்குறளில் செயல்திறன்/பக்கம் 23-27
செயத்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். (466)
இப்படிப் பொதுவாக கூறிவிட்டால், நமக்கு என்ன விளங்குகிறது? செய்யத் தக்கது எது? செய்யத் தகாதது எது? என்பது புரிய வேண்டாமா? என எண்ணுகிறோம். திருக்குறள் அந்த அளவிற்கும் சென்று நமக்கு விளக்குகிறது.
செய்யத் தக்கவை
1. நாட்டிற்கும் மொழிக்கும் தனக்கும் பிறருக்கும் நன்மையளிக்கும் செயல்கள் அனைத்தும் இன்பம் பயக்கும் செயல்கள். அச் செயல்கள் அனைத்தையும் செய். மேலும் அவற்றைச் செய்யும்பொழுது பலரால் பலவிதமான துன்பங்கள் பலவேறு வழிகளில் வந்து உன்னைத் துன்புறுத்தும். அப்பொழுதும் அத்துன்பங்கள் அனைத்தையும் கடந்து நின்று நற்செயல்களைச் செய்து முடிக்கவேண்டும்.
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. (669)
2. பழியையும் பாவத்தையும் உண்டாக்குகின்ற தீயசெயல்களில் எதையும் செய்துவிடாமல், இன்பத்தையும் புகழையும் தருகின்ற அறச்செயல்கள் அனைத்தையுமே செய்து மகிழ்.
செயற்பால தோரும் அறனேஒருவற்கு
உயற்பால தோரும் பழி. (40)
3. அந்த அறச்செயல்களையும் இன்றே செய்! இப்போதே செய்! பின்பு செய்யலாம் என ஒத்திப் போடாதே! ஒத்திப்போட்டால் அதை நீ நினைக்கின்ற காலத்தில் செய்ய முடியாமற் போனாலும் போய்விடும். அப்போது நீ அடையவேண்டிய பலனையும் இழந்து விடுவாய்.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. (36)
4. நல்ல வழியில் பொருளைத் தேடு. சிக்கனமாக வாழ்வை நடத்து. எஞ்சிய பொருளைச் சேமித்துவை. அதையும் பாதுகாத்து வை. அப்பொழுதுதான் நட்பும் சுற்றமும் பெருகும். வாழ்வும் ஒளிவீசும். அதுமட்டுமல்ல; பகைவரும் தானே அடங்குவர்.
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகு அதனிற் கூரியது இல். (759)
5. நல்லவைகளைச் செய்வதிலும் அது வெற்றி பெறும் வழிகளை நன்றாக எண்ணிச் செய்யவேண்டும். ஆராயாமல் ஒரு செயலைச் செய்யத் தொடங்கிவிட்டுப் பின்பு அதை எப்படிச் செய்யலாம் என்று எண்ணுவது நல்லதல்ல. அது வெற்றிபெறத் துணைசெய்யாது.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு, (467)
6. இன்சொல் கூறுதல், நட்புக் கொள்ளுதல், பொருள் வழங்குதல் ஆகிய நற்செயல்களைச் செய்வதிலும் தவறு உண்டாகிவிடும். ஆகவே அவைகளை அதற்கு உரியவரல்லாதவர்களுக்குச் செய்துவிடக் கூடாது. செய்தால், அவை நற்செயலாக இருப்பினும் தீமையாக முடிந்துவிடும்.
நன்றாற்ற லுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக் கடை. (469)
7. எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்தாலும் அது வெற்றியாக முடிவதற்கு ஏற்ற வழியையும், முயற்சியையும், அதற்கு வரும் இடையூறுகளையும், அவற்றை விலக்கி முடிக்கும் முறையையும், அதனால் வரும் பயனையும் நன்றாக எண்ணிப் பார்த்தே செய்யவேண்டும்.
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். (576)
இந்த ஏழு குறள்களாலும் இதுபோன்ற பிற பல குறள்களாலும் மக்களாகப் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய நற்செயல்களைச் செய்யும் வழிவகைகளை யெல்லாம் குறள் கூறுகிறது.
செய்ய வேண்டியவைகளைச் செய் என்பது மட்டுமல்ல, செய்யத்தகாதவைகளையும், செய்யக் கூடாதவைகளையும் கூடக் குறிப்பிட்டு, அவற்றைச் செய்யற்க என்றும் குறள் கட்டளையிடுகிறது. அவற்றுள் சில.....
செய்யத் தகாதவை
1. பெற்ற தாயின் வயிறு பசிக்கக் காண்பது பிறந்த மகனுக்கு இழிவு. ஏனெனில், அவன் பத்து மாதம் குடியிருந்த கோயில் அது. ஆகவே அவன் பெரிதும் முயன்று அத் தாயாரின் பசியைப் போக்கவேண்டியது அவனது கடமை. ஆனால் அந்த நிலைமையிலும் சான்றோர்களால் பழிக்கத்தகுந்த தீயவழிகளில் பொருளைத் தேடி அப் பசியைப் போக்கும் செயலைச் செய்யக்கூடாது என்றும் குறள் கூறுகிறது.
ஈன்றாள் பசி காண்பா னாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. (656)
2. உன் உயிரே போவதாய் இருப்பினும் சரி, பிற உயிர்களை கொன்று தின்று உன் உயிரைக் காப்பாற்றும் செயலைச் செய்யாதே. அது மட்டுமல்ல; உன்னை ஒன்று கொல்ல வந்தாலும் அதனைக் கொன்று உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினையாதே. அவ்வாறு கொன்று உயிர் வாழ்ந்தால் அது பழிபாவத்தோடு உயிர் வாழும் செயலாகப் போய்விடும்.
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (327)
3. என்னிடத்தில் ஒன்றுமில்லையே, நான் வறியன் என்று எண்ணி, அது தீருதல் பொருட்டு, பிறர்க்குத் தீவினைசெய்து பொருள்திரட்டி உயிர் வாழக்கூடாது, அவ்வாறு செய்தால் நீ வெகு விரைவில் அதற்குமேலும் வறியவன் ஆகிவிடுவாய்.
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து. (205)
4. ஒரு செயலைச் செய்துவிட்டு, "நான் என்ன காரியம் செய்துவிட்டேன்" என்று பின்னே இரங்கி வருந்தும் செயல்களை ஒருக்காலும் செய்யாதே. தவறிச் செய்துவிட்டால், அதற்காக வருந்து! அழு! மறுபடியும் அத்தகைய செயல்களைச் செய்யாதே. அது நல்லது.
எற்றென்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. (655)
5. துன்பங்களில் அகப்பட்டுக்கொண்டோமே என்று அது தீருதல் பொருட்டு இழிவுதரும் செயல்களை நன் மக்கள் செய்வதில்லை. ஆகவே நீயும், அத்தகைய இழிசெயல்களைச் செய்து, துன்பத்திலிருந்து மீளும் செயல்களைச் செய்து விடாதே.
இடுக்கட் படினும் இழிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். (654)
6. அதிக வட்டியை எதிர்பார்த்து, உள்ள முதலையும் இழந்து விடுகின்ற தீயசெயல்களை அறிவுடைய மக்கள் செய்ய மாட்டார்கள். ஆகவே பின்னேவருகிற பொருளை எதிர்பார்த்து முன்னே உள்ள செல்வத்தையும் இழந்து வருந்துகிற கொடுஞ் செயலை நீயும் செய்யாதே.
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். (463)
7. உனக்கு வரும் வருவாய் திடீரென்று குறைந்து விட்டாலும் வருந்தாதே. உடனே உன் செலவினத்தைக் குறைத்துக்கொள். அதனால் கேடு வராது. ஒரு குளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்த வாய்க்காலின் நீர் தடைப்பட்டால் உடனே வடிகாலை அடைத்துவிடு. அதனால் நன்மை உண்டு.
ஆகாறு அளவிட்டித் தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை. (478)
இந்த ஏழு குறள்களாலும், இதுபோன்ற பிற குறள்களாலும் செய்யத்தகாதவைகளை குறள் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறது.