திருக்குறள், இனிய எளிய உரை/பதிப்புரை
பதிப்புரை
திருக்குறள் நெறியைத் தமிழகம் முழுவதும் பரப்புவது மன்றத்தின் தலையாய குறிக்கோள். அக் குறிக்கோள் நிறைவேற மன்றம் பலவழிகளிலும் பாடுபட்டு வருகின்றது. அம் முயற்சிகளுள் ஒன்றாகவே திருக்குறள் இனிய எளிய உரை என்னும் இந்நூல் வெளிவருகின்றது.
தமிழ்நெறிக் காவலர் பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்கள் தம் வாழ்நாள் முழுவதையும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர் — சிறப்பாகத் தமிழிளைஞர் முன்னேற்றத்துக்கு மாகவே செலவிட்டுப் பல துறைகளிலும் உழைத்த உத்தமர். அப்பெரியார் திருக்குறளின் பொருளை அனைவரும் உணர்ந்து கற்றுப் பயன் பெறக்கூடிய வகையில் தெளிவான எளிய நடையில் இந்த உரை நூலை இயற்றி உதவினார்கள்.
மன்றத்திற்கு முழு உரிமையுடைய இந்நூல் இப்போது ஏழாம் பதிப்பாக வெளிவருகிறது. ஆறாம் பதிப்பைப் போலவே இந்நூலும் ஓரளவு சுருங்கிய பதிப்பாகவே வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வரிய இனிய நூலினை இயற்றியருளிய தமிழ்நெறிக் காவலர் மயிலை சிவமுத்து அவர்களை என்றென்றும் நம் நெஞ்சக் கோயிலில் வைத்து அவர் தம் நினைவைப் போற்றுவோம்.
இந்நூலின் அச்சுப்படிகளைப் பிழையறத் திருத்தி யுதவிய மன்ற ஆட்சியாளர்கள் புலவர் தணிகை உலகநாதர், மி. ச. நடேசன், ப. கி. பொன்னுசாமி, மா. இரா. வஞ்சிக்கோவன் ஆகியோருக்கு மன்றத்தின் நன்றி என்றென்றும் உரியதாகும்.
அச்சிட்டு உதவிய மூவேந்தர் அச்சகத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இந்நூலினை ஏற்றுப் போற்றுவதன் வாயிலாக மன்றத்தின் தொண்டு சிறக்க உதவுமாறு தமிழ்ப் பெருமக்களையும்—சிறப்பாக மாணவ மணிகளையும் விரும்பி வேண்டிக் கொள்கிறோம்.
மாணவர் மன்றம், சென்னை-600 001 14-4-1989 |
இங்ஙனம், கோ. வில்வபதி தலைவர். |