திருக்குறள், இனிய எளிய உரை/1. அரசியல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பொருட்பால்

அரசியல்

39. இறை மாட்சி


1.படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

சேனை, குடிமக்கள், பொருள், அமைச்சர், நண்பர், கோட்டை கொத்தளங்கள் என்று சொல்லப்படும் ஆறு பகுதிகளையும் ஒழுங்கு பெற அமைத்து வைத்துக் கொண்டுள்ளவனே அரசர்களுள் சிறந்தவன் ஆவான்.

கூழ்-உணவு, இங்கே பொருளைக் குறிக்கும்; அரண்-பாதுகாவல்; அரசருள் ஏறு -அரசர்களுள் ஆண் சிங்கம் போன்று சிறந்தவன்.

இறை மாட்சி அரசனுக்குரிய பெருமை. இங்கே சிறப்புப் பற்றி அரசனுக்குக் கூறுகின்றார். எனினும், ஒரு குடும்பத்தின் தலைவர், ஒர் இயக்கத்தின் தலைவர் முதலிய எல்லாத் தலைவர்களுக்கும் இவை பொருந்தும். இவ்விதமே கல்வி, கேள்வி முதலியவைகளையும் கொள்க. 381

2.அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.

அச்சமில்லாமை, கொடுக்கும் தன்மை, அறிவுடைமை, ஊக்கம் உடைமை ஆகிய இந்த நான்கு குணங்களும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பு ஆகும். 382

3.தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.

நாட்டினை ஆளும் அரசனுக்கு எதையும் காலம் தாழ்த்தாமல் புரியும் தன்மை, கல்வியுடைமை, துணிவு உடைமை ஆகிய இந்த மூன்று குணங்களும் நீங்காமல் இருத்தல் வேண்டும். 383

4.அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு.

நீதிநெறியில் தவறாமல் நின்று, குற்றங்களைப் போக்கி, வீரத்தில் குறையாத மதிப்பினை உடையவன் அரசன் என்று சொல்லுதற்குத் தகுதியுடையவனாவான். 384

5.இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.

பொருள் வரும் வழிகளை மேன்மேலும் உண்டாக்கிக் கொள்ளுதலும், அவ்வழியால் வந்த பொருள்களைச் சேர்த்து வைத்தலும், சேர்த்தவைகளைப் பாதுகாத்தலும், அவ்விதம் பாதுகாத்த பொருள்களை ஒழுங்காகச் செலவு செய்யப் பகுத்து வைத்தலும் ஆகிய இவைகளைச் செய்ய வல்லவனே அரசன் என்று சொல்லத் தக்கவனாவான்.

இயற்றல்-உண்டாக்குதல்; ஈட்டல்-சேர்த்தல்; வகுத்தல்-நாட்டின் நன்மைக்கான பல துறைகளில் செலவழிக்க வேண்டிய பொருள் இவ்வளவு என்று பகுத்து ஒதுக்கி வைத்தல். 385

6.காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

பலரும் எளிதாக வந்து காணக் கூடியவனாகவும் கடுமையாகப் பேசாதவனாகவும் இருந்தால், அந்த அரசனை உலகிலுள்ளோர் அனைவரும் புகழ்ந்து கூறுவர். 386

7.இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

இனிய சொற்களைச் சொல்லி, வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்துக் காப்பாற்ற வல்ல அரசனுக்கு இவ்வுலகம் அவனுடைய சொல்லின் ஆற்றலாலேயே, அவன் நினைத்த படி ஆளக் கூடியதாக இருக்கும். 387

8.முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

நீதிமுறை தவறாது நடந்து குடிகளைக் காப்பாற்றும் அரசன் மக்களால் கடவுளுக்குச் சமமாக மதிக்கப்படுவான். 388

9.செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

பிறர் சொல்லும் குறைபாடுகள் கேட்பதற்குத் தன் காதுகட்கு இனிமையாக இல்லாமல் வெறுக்கத் தக்கனவாக இருந்தாலும், அத்தகைய கடுஞ்சொற்களையும் பொறுமையோடு கேட்கும் குணமுடைய அரசனது ஆட்சியின் கீழே இவ்வுலகத்தார் அனைவரும் அடங்கி வாழ்வர்.

செவிகைப்ப-காதுகளால் கேட்கச் சகியாத; கவிகை-குடை, இங்கே ஆட்சியைக் குறிக்கும். 389

10.கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

கொடுக்கும் தன்மையும், கருணையும், நீதி முறையும், குடிமக்களைக் காப்பாற்றும் தன்மையும் ஆகிய இந்தநான்கு குணங்களையும் உடைய அரசன் பிற அரசர்களுக்கெல்லாம் விளக்கொளி போன்று இருந்து பிரகாசிக்கத் தக்கவன்.

அளி-கருணை; செங்கோல்-நீதி நெறியோடு ஆட்சி புரியும் தன்மை; குடியோம்பல்-குடிகளுக்குத் துன்பம் வாராமல் காக்கும் தன்மை; ஒளி-விளக்குப் போன்றவன்; சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் சொல்லலாம். 390

40. கல்வி


1.கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

கற்பதற்குத் தகுதி வாய்ந்த நூல்களைக் குற்றம் அஜக் கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பிறகு கற்ற நூல்களில் சொல்லியவாறு நடக்க முயலுதல் வேண்டும்.

கசடு-ஐயமும் மயக்கமும் ஆகிய குற்றங்கள்: அற-நீங்க; கற்பவை -கற்கத் தகுந்த நூல்கள். 391

2.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

எண் என்று சொல்லப்படும் கணக்கு நூல்களும், எழுத்து என்று சொல்லப்படும் இலக்கண, இலக்கிய நூல்களும் ஆகிய இவ்விரண்டும். இவ்வுலகத்தில் வாழ விரும்பும் மக்களுக்குக் கண்களுக்குச் சமமானவை என்று பெரியோர் கூறுவர்.

எண்-கணக்கு நூல்கள்; எழுத்து-இலக்கண, இலக்கிய நூல்கள். 392 .

3.கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

படித்தவர்களே கண்ணுடையவர்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார்கள். படியாதவர் முகத்தில் இரண்டு. கண்களைப் பெற்று இருந்தாலும், அவை கண்கள் அல்ல. அவர்கள், தம் முகத்தில் இரண்டு புண்களை உடையவரே.

கல்லாதவர் தம் கண்களின் வயப்பட்டுப் பல பொருள் களைக் கண்டு ஆசை கொண்டு அவற்றையடைய முயன்று துன்புறுவர். ஆதலன், அவர் கண்களைத் துன்பம் தரும் புண்கள் என்று கூறினார். 393

4.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

பலரும் மகிழும்படியாக மக்களிடம் கூடிப் பழகி, 'இனி இவரை மறுபடியும் எப்போது காண்போம்' என்று நினைந்து வருந்தும் படியாக அவர்களை விட்டுப் பிரிதல் கல்வியிற் சிறந்த புலவர்களின் செயலாகும்.

உவப்ப - மகிழும்படி; தலைக்கூடுதல் - வந்து சேர்ந்து பழகுதல்; உள்ளல் - நினைந்து வருந்துதல்; பிரிதல் - நீங்குதல்; அனைத்து-அத்தன்மையது. 394

5.உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.

செல்வமில்லாத வறியவர்கள், செல்வம் உடையவர்களிடம் உள்ள பொருளைப் பெற ஏங்கி நின்று பணிவுடன் கேட்டுப் பெறுவர். அது போலக் கல்வியுடையவர்களிடம், கல்வியில்லாதவர்கள் அக்கல்வியறிவைப் பெறும் பொருட்டு. ஏங்கி நின்று, பணிவுடன் கேட்டறிந்து கொள்ளுதல் வேண்டும். அங்ஙனம் கற்றவரே உயர்ந்தோராவர். அங்ஙனம் கல்லாதவர், இழிந்தவராகவே கருதப்படுவர்.

உடையார்.செல்வம் உடையவர்: ஏக் கற்று-ஏங்கி யிருந்து; கற்றார் உயர்ந்தார் என்று ஒரு சொல் வருவிக்க: கல்லாதவர் கடையர் என்று கூட்டுக. 395

6.தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.

- மணற்பாங்கான இடத்தில் உள்ள கிணறு, தோண்டுமளவுக்கு ஏற்ப நீர் சுரக்கும். அது போல மக்களுக்கு அறிவானது அவர்கள் எவ்வளவு படிக்கின்றார்களோ, அந்த அளவுக்கு ஏற்ப விளக்கமடையும். 396

7.யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கால்லாத வாறு.

கல்வியில் சிறந்த ஒருவனுக்கு எந்த நாடும் அவனுடைய சொந்த நாடு போன்று இன்பம் பயப்பதாகவே இருக்கும். அவ்விதமே எந்த ஊரும் அவனுடைய சொந்த ஊர் போன்று அவனுக்கு இன்பத்தைத் தரும். (இதைப் பலரும் நேரில் கண்டு அறிந்திருந்தும்) ஒருவன் தான் சாகின்ற வரையிலும், கல்வி கற்காமலேயே காலங்கழிப்பது என்ன காரணமோ தெரியவில்லை. 397

8.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒரு பிறப்பில் ஒருவன் கல்வி கற்று அதனால் பெற்ற அறிவானது அப்பிறவியோடு இல்லாமல் அடுத்து வரக்கூடிய பிறவியிலும் அவனுக்குப் பாதுகாப்பினை அளிக்கும் தன்மையுடையதாம்.

எழுமை-ஏழு வகைப் பிறப்பு; மக்கள், தேவர், நரகர், மிருகம், பறவை, நீர் வாழ்வன, தாவரம் ஆகியவை. எனினும் இங்கே எழு பிறப்பு என்பதற்குப் பல பிறப்புக்களிலும் என்பதே பொருள். ஒருமை-ஒரு பிறப்பு; ஏமாப்பு-பாதுகாவல். 398

9.தாமின் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

தாம் இன்புறுவதாகிய கல்வியினால், உலகத்தாரும் இன்பமடைகின்றனர். அவ்வாறு தமக்கும் பிறக்கும் இன்பம் அளிக்கக் கூடிய பெருமை கல்விக்கிருப்பதால் அத்தகைய கல்வியைக் கற்றறிந்த பெரியோர்கள் மேலும் மேலும் விரும்பிக் கற்பர்.

காமுறுதல்-விரும்புதல்,ஆசைப்படுதல். 399

10.கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்விச் செல்வமேயாகும். அதைத் தவிரப் பிற செல்வங்களெல்லாம்: சிறந்த செல்வங்கள் அல்ல.

கேடு-அழிவு; விழுச் செல்வம்-சிறந்த செல்வம்; மாடு- செல்வம்; மற்றையவை-பொன், மணி முதலிய. செல்வங்கள். 400

41 . கல்லாமை


1.அரங்கின்றி வட்டாடி அற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

அறிவு அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ள நல்ல நூல்களைக் கற்காமல் ஒருவன் கற்றறிந்தோர் கூடிய சபையில் புகுந்து ஒன்றைப் பேசுதல், கோடு கிழித்து இடம் வகுத்துக் கொள்ளாமல் சதுரங்கம் ஆட முயல்வதற்குச் சமம் ஆகும்.

அரங்கு-சதுரங்கம் ஆடுதற்குக் கோடு கீறி, வகுத்துக் கொள்ளும் இடம், அறை: வட்டு-சூதாடு கருவி: கோட்டி-கற்றறிந்தோர் கூடியுள்ள சபை. 401

2.கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றிற்று.

கல்வியறிவு சிறிதும் இல்லாத ஒருவன் ஒரு சபையில் எழுந்து பேச, அவன் பேச்சைக் கேட்க விரும்புதல்; இரண்டு தனங்களும் இல்லாதவளை ஒருவன் மணக்க விரும்புதற்குச் சமம் ஆகும்.

கல்வியறிவு இல்லாத ஒருவன் ஒரு சபையில் எழுந்து பேச விரும்புதல் இரண்டு தனங்களும் இல்லாத ஒருத்தி பெண் தன்மையை விரும்புதற்குச் சமம் என்றும் பொருள் கொள்ளலாம். 402

3.கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

கற்றறிந்தவர்கள் கூடியுள்ள சபையில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருப்பார்களானால், கல்வியறிவு சிறிதும் இல்லாதவர்களும் மிகவும் நல்லவர்களேயாவார்கள். (அவ்விதம் இருக்கமாட்டார்கள் என்பது பொருள்.)

நனி நல்லர்-மிகவும் நல்லவர்கள்; அமைதியாக இருத்தல் - அவர்களால் இயலாது என்பதை விளக்க 'இருக்கப் பெறின்’ என்றார். 403

4.கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

கல்லாதவனின் அறிவுடைமை சில சமயங்களில் மிகவும் சிறந்ததாக இருந்தாலும், கற்றறிந்த பெரியோர்கள் அவனை அறிவிற் சிறந்தவனாகக் கொள்ள மாட்டார்கள்.

நத்தை ஊர்ந்து செல்லும்போது தற்செயலாக உண்டாகும் எழுத்துப் போல அவ்வறிவு தற்செயலாக ஏற்பட்டது ஆதலின் 'கொள்ளார்’ என்றார்.

ஒட்பம்-அறிவுடைமை; கழிய-மிகுதியும். 404

5.கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

கல்லாத ஒருவன் தன்னைத் தானே மதித்துக் கொள்ளும் மதிப்பு, அவன் நூல்களைக் கற்றாரிடம் சென்று பேசும் போது கெட்டொழியும்.

தகைமை-மதிப்பு; தலைப்பெய்தல்-கூடுதல், காணுதல்; சொல்லாடல் -பேசுதல்; சோர்வுபடல்-கெட்டொழிதல் 405

6.உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

கல்லாதவர் மனிதத் தோற்றத்தோடு இவ்வுலகில் இருக்கின்றனர் என்னும் அளவிலேதான் காணப்படுகின்றனர். இதையன்றி, வேறு ஒன்றும் சொல்லுதற்குரியரல்லர். அவர் பார்ப்பதற்கு நிலம் போலத் தோன்றி, விளைவுக்குப் பயன்படாத களர் நிலத்துக்குச் சமமாவர்.

நிலம் போல் தோன்றியும் எத்தகைய பயனையும் தாராத களர் நிலம் போல், மக்களாகத் தோன்றினும் கல்லாதவர் பிறர்க்கு எவ்வகையிலும் பயன்படார்.

மாத்திரையர்-அளவினை உடையவ;; களர்-விளைவுக்குப் பயன்படாத உவர் நிலம். 406

7.நுண்மாண் நுழைபுலம் இல்லார் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

நுட்பமான சிறந்த நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் அறிவு இல்லாதவனுடைய நல்ல தோற்றத்தோடு கூடிய அழகு மண்ணினால் சிறப்பாகச் செய்யப்பட்ட பதுமையின் அழகுக்குச் சமமானது.

கல்வி உடலுக்கு உயிர் போன்றது. கல்வியில்லாத அழகால் பயன் இல்லை என்பது கருத்து.

நுண்மை-நுட்பம்; மாண்பு-சிறப்பு; நுழைபுலம்-ஆய்ந்து பார்க்கும் அறிவு; எழில்-தோற்றப் பொலிவு; புனைதல்-செய்தல்; பாவை- பதுமை, பொம்மை; அற்று- அத்தன்மையது. 407

8.நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

கற்றறிந்த நல்லவர்க்கு எற்பட்ட வறுமையைப் பார்க்கிலும், கல்வியறிவு இல்லாதவர்களிடம் தங்கியுள்ள செல்வம் துன்பத்தை விளைவிக்கும்.

கற்றவர் வறுமை, அவருக்கு மட்டும் துன்பத்தைதத் தரும். கல்லாதார் செல்வம் அவருக்கும், பிறர்க்கும் துன்பம் தருமாதலி்ன் நல்லவர் வறுமையினும் அது தீயது என்றார்.

நல்லார்-இங்கே கற்றாரைக் குறிக்கும்; கற்றார் கற்ற வண்ணம் ஒழுகுவார் என்னும் கருத்தால், 'நல்லார்’ என்றார். இன்னாது - கொடியது; திரு - செல்வம். 408

9.மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

கல்லாதவர் உயர்ந்த குடியிலே பிறந்தவராக இருந்தாலும், தாழ்ந்த குடியில் தோன்றியும் கல்வி கற்றாருக்குச் சமமான பெருமையுடையவராக உலகத்தவரால் மதிக்கப்பட மாட்டார்.

குடி உயர்வினும் கல்வி உயர்வே சிறந்தது என்பது கருத்து.

மேற் பிறந்தார்-செல்வம், பதவி, ஒழுக்கம் முதலியவைகளால் உயர்ந்த் குடியிலே பிறந்தவர்; பாடு-பெருமை. 409

10.விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

சிறந்த நூல்களைக் கற்றவர்களுக்கும், கல்வியறிவில்லாத மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு பகுத்தறிவோடு கூடிய மக்களுக்கும், அஃதில்லாத மிருகங்களுக்கும் உள்ள வேறுபாட்டுக்குச் சமமாம்.

கல்லாதவர் வடிவத்தில் மக்களாக இருந்தும் அறிவு, குணம், செயல்களில் மிருகத்துக்குச் சமம் ஆவர் என்பது கருத்து.

அனையர்-அத்தகைய வேறுபாடுடையவர்;. இலங்கு நூல் - அறிவு விளக்கத்துக்குக் காரணமான நூல்கள்; ஏனையவர்-மற்றையவர், இங்கே கல்லாதவரைக் குறிக்கும். 410

42. கேள்வி


1.செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

செல்வங்கள் பலவற்றுள்ளும் செவியால் கேட்டு அறியும் செல்வமே சிறந்த செல்வம் ஆகும். ஏனென்றால், அச்செல்வமே பிற எல்லாச் செல்வங்களிலும் முதன்மையானதாக இருக்கின்றது. 411

2.செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

செவிக்கு உணவாகிய கேட்டறிதல் என்பது இல்லாத போது வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கலாம்.

நமக்குக் கேட்டறிதல் முதன்மையானது: வயிற்றிற்கு உணவு அதற்கு அடுத்தது என்பதே இப்பாட்டின் பொருள். வயிற்றுக்கும் என்பதும் ஈயப்படும் என்பதும் இழிவு தோன்ற நின்றன. மிகுதியாக உண்ணுதல் அறிவு விளக்கத்திற்குக் கேடாதலால் 'சிறிது’ என்றார். 412

3.செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.

செவியுணவாகிய கேள்வி அறிவினையுடையவர் இவ்வுலகத்தில் வாழ்கின்றவராயினும், அவியுணவைக் கொண்டு வாழும் தேவர்களுக்குச் சமம் ஆவர்.

அவியுணவு-வேள்வியின் போது தேவர்களுக்காக வேள்வித் தீயில் இடும் உணவு; ஆன்றோர் - பெரியோர். இங்கே தேவர்களைக் குறிக்கும். 413

4.கற்றிலன் ஆயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.

ஒருவன் சிறந்த நூல்களைக் கற்காமல் இருந்தாலும், ஆக்ககைய நூல்களைக் கற்றவரிடம் சென்று, அவர்கள் சொல்லக் கேட்டாவது அறிதல் வேண்டும். அவ்விதம் கேட்பதால் அந்தக் கேள்வி ஞானம் அவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் செல்லும் ஒருவனுக்கு உதவும் ஊன்றுகோல் போலத் துணையாக இருக்கும்.

அஃது-அது, கேள்வியால் உண்டாகும் அறிவு; ஒற்கத்தின்-தளர்ச்சி வந்த காலத்தில்; ஊற்று - ஊன்றுகோல்; ஊன்று என்பது ஊற்று என்று திரிந்தது. 414

5.இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.

ஒழுக்கத்திற் சிறந்த பெரியோர்களது வாயிலிருந்து பிறக்கின்ற சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்திலே செல்வோனுக்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒருவனுக்கு உதவும்.

இழுக்கல்-வழுக்குதல்; உடையுழி-உடைய போது; அற்று-அந்தத் தன்மையுடையது. 415

6.எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

ஒருவர் நல்ல பொருளைக் கேட்டறிய வேண்டும். அஃது எவ்வளவு சிறியதாக இருப்பினும், கவலையில்லை. அவ்வாறு கேட்டறிதல் அவர் கேட்ட அளவுக்கு நிறைந்த பெருமையைத் தரும்.

எனைத்தானும்-எவ்வளவு சிறியதாக இருந்தாலும்; அனைத்தானும் -அவ்வளவாயினும், ஆன்ற-நிறைந்த. 416

7.பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்.

நுட்பமாக ஆராய்ந்து அறிந்து நிறைந்த கேள்வியறிவை யுடையவர்கள், ஏதோ ஒரு காரணத்தால், ஒன்றைத் தவறாக உணர்ந்தாலும், அறியாமையைக் காட்டும் சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.

பேதைமை சொல்லல்-அறியாமையைக் காட்டும் சொல்லைச் சொல்லுதல்; இழைத்து உணர்தல் - நுட்பமாக ஆராய்ந்து அறிதல்; ஈண்டிய - நிறைந்த. 417

8.கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

நல்ல கேள்வி ஞானம் இல்லாத செவிகள், கேட்கும் திறமுடையயனவாயினும், கேளாத செவிகட்கு சமமே ஆகும்.

தோட்கப்படாத செவி - அரிய செய்திகளைப் பல முறை கேட்டுப் பண்படாத செவிகள். 418

9.நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.

நுட்பமான பொருள்களைக் கேட்டு அறியாதவர், வணக்கமான சொற்களைப் பேசும் வாயினையுடையவராக இருத்தல் முடியாது.

நுணங்கிய-நுட்பமான; வணங்கிய வாயினர்-வணக்கமான சொற்களைப் பேசுகின்றவர். 419

10.செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

கேள்விச் சுவையினைத் தம் காதுகளால் உணர்ந்து அனுபவிக்க முடியாமல், நாவினாலே நல்ல உணவின் சுவைகளை மட்டும் அறிந்து அனுபவிக்கும் மனிதர்கள் இறந்தால்தான் என்ன? வாழ்ந்தால்தான் என்ன?

செவியிற் சுவையுணர்தல் - சிறந்த கருத்துக்களைக் காதுகளால் கேட்டு இன்புறுதல். 420

43. அறிவுடைமை


1.அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.

அறிவானது, துன்பம் நேரிடுங் காலத்து அத்துன்பத்திலிருந்து காத்துக் கொள்ள உதவும் கருவியாகும். அன்றியும் உட்புகுந்து பகைவரால் அழிக்க முடியாத உள் அரணும் ஆகும். 421

அற்றம் - துன்பம்; அழிவு.

2.சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரிஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

மனம் சென்ற வழியெல்லாம் ஒருவனைச் செல்ல விடாமல், தீமையிலிருந்து நீக்கி, அவனை நல்ல வழியில் செலுத்துவது அறிவாகும்.

ஒரீஇ - நீக்கி; நன்றின்பால் - நல்ல வழியில். 422

3.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எத்தகைய செய்தியாக இருந்தாலும், அதனை யார் சொல்லக் கேட்டாலும் (அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அல்லது இகழ்ந்து தள்ளாமல்) அதன் உண்மையை ஆராய்வதே அறிவாகும்.

எப்பொருள்-உயர்ந்த அல்லது தாழ்ந்த செய்தி; யார் யார்-உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர்.

சொல்லுவோரை நோக்காமல் சொல்லின் பயனையே நோக்குதல் வேண்டும். 423

4.எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.

தான் சொல்லுவதை எளிதாக விளங்கும் சொற்களால் பிறர் மனத்தில் பதியும்படி சொல்லிப் பிறர் சொல்லும் சொற்களிலிருந்து நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பதே அறிவுடைமையாகும்.

எண் பொருள்-எளிதாக விளங்கும் சொற்கள்; செலச் சொல்லி- மனத்தில் பதியச் சொல்லி. 424

5.உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.

உலகத்தவரை நட்பாக்குவது ஒருவனுக்குள்ள நுண்ணறிவேயாகும். அந்த நட்பு முதலில் மிகுதியாகத் தோன்றுதலும், பிறகு நாளடைவில் குறைதலும் இல்லாமல் என்றும் ஒரே தன்மையாக இருக்கச் செய்வதே அறிவாகும்;

உலகம்-உயர்ந்தார்; தழீஇயது-தழுவிக் கொள்வது, நண்பராக்கிக் கொள்வது; ஒட்பம்-நுண்ணறிவு, தெளிந்த அறிவு; மலர்தல்-விரிதல்; கூம்பல்-குறைதல். 425

6.எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.

உலகத்திலுள்ள பெரும்பாலோர் எவ்விதம் நடக்கின்றார்களோ, அந்த வகையினை அறிந்து அவர்கட்கு ஏற்ற வகையில் நடந்து கொள்வதே அறிவு.

எவ்வது-எந்த வகையால்; உறைவது-நடத்தல், ஒழுகுதல்; அவ்வது -அந்த வகையில்; உலகம் என்பதற்கு உலகத்திலுள்ள பெரியோர் என்றும் பொருள் கொள்ளலாம். 426

7.அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.

பிறகு நிகழ இருப்பதை முன்னதாகவே எண்ணி அறிந்து கொள்ளும் திறம் உடையவரே அறிவுடையவர்; அதனை அறிந்து கொள்ளாதவர் அறிவில்லாதவரே ஆவர். 427

8.அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாமல் இருத்தல் அறிவில்லாமையேயாகும். அஞ்ச வேண்டிய ஒன்றைக் கண்டு அஞ்சுதலே அறிவுடையோர் செயல் ஆகும்.

அஞ்ச வேண்டுவன: பாவம், கெடுதி முதலியன. 428

9.எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.

வரப்போகும் தீமையினை முன்னதாக அறிந்து அஃது அணுகாதபடி காத்துக் கொள்ளத் தக்க அறிவினையுடையவர்களுக்கு அவர்கள் அஞ்சி நடுங்கும் படியாக வரக் கூடிய துன்பம் எதுவும் இல்லை.

எதிரதாக் காத்தல்-பிறகு வரக் கூடியதை முன்னதாக அறிந்து காத்துக் கொள்ளுதல். 429

10.அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

அறிவுடையவர் அந்த அறிவைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் இருந்தாலும், எல்லாப் பொருள்களும் உடையவராகவே இன்புற்று இருப்பர். அறிவில்லாதவர் எல்லா நலன்களும் உடையவராக இருப்பினும், ஒன்றும் இல்லாத ஒருவரைப் போல என்றும் துன்புற்று இருப்பர்.

எல்லாம்-நிலம், நீர், வாகனம், ஏவலாளர், பொன், பதவி முதலிய செல்வங்கள். 430

44. குற்றங்கடிதல்


1.செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

கர்வம், கோபம், இழிகுணம் ஆகிய இந்த மூன்றும் இல்லாதவரது செல்வம் மேம்பாடுடையதாகும்.

செருக்கு-கர்வம், அகந்தை, அஃதாவது தமக்கு வாய்த்துள்ள பட்டம் பதவிகளை நினைத்து அறிவு மயங்கி இருக்கும் நிலை; சினம்-அளவு கடந்த கோபம்,வெகுளி; சிறுமை-இழிவான குணம், காமமுமாம். 431

2.இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

உலோபத் தன்மையும், நன்மையின் நீங்கிய மானமும், தகுதிக்கு விஞ்சிய மகிழ்ச்சியும் ஆகிய இவை அரசனுக்குக் குற்றம் ஆகும்.

இவறல்-உலோபம், செலவு செய்ய வேண்டியவிடத்துச் செய்யாமல் இருக்கும் குணம்; மாண்பு இறந்த மானம் படாடோபம், வீண் ஆடம்பரம், தன் தகுதிக்கு மேம்பட்ட பெருமை; மாணா உவகை-தகுதிக்கு விஞ்சிய மகிழ்ச்சி. 432

3.தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

பழிக்கு அஞ்சுகின்ற மேன் மக்கள் தினை அளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும், அதைப் பனையின் அளவான பெரிய குற்றமாகக் கருதுவர்.

தினை, பனை என்பன சிறுமை பெருமைகட்கு அளவு கோல். தினை-ஒரு தானியம். பனை-பனம் பழம். 433

4.குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.

ஒருவன் செய்கின்ற குற்றமே அவனுக்கு அழிவை உண்டாக்கும் பகை ஆகும். ஆகையால், அக்குற்றம் நேராமல் இருத்தலை வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.

பொருள் - குறிக்கோள் அல்லது நோக்கம். 434

5.வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

குற்றம் நிகழ்வதற்கு முன்பே அக்குற்றத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை (ஒரு சிறிய) நெருப்புப் பொறியின் முன் கிடந்த (பெரிய) வைக்கோல் போர் போல அழிந்து விடும்.

வை-வைக்கோல்; தூறு-குவியல், போர்; கெடும்-அழியும், குற்றம் மிகச் சிறியதாக இருந்தாலும், நீண்ட வாழ் நாளை முற்றிலும் கெடுத்து விடும் என்பது பொருள். 435

6.தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு?

அரசன் முதலில் தன் குற்றத்தை உணர்ந்து நீக்கிக் கொண்டு, பிறகு தன்னைச் சூழ்ந்துள்ளோரின் குற்றங்களைஅறிந்து நீக்க முயல்வானானால், அவனுக்கு நேரக் கூடிய தீமை என்ன இருக்கும்? எத்தகைய தீமையும் இல்லை.

தலைவனாக இருப்பவன், முதலில் தன் குற்றத்தை ஆய்ந்து உணர்ந்து நீக்கிக் கொண்டு, பிறகு பிறர் குற்றங்களை நீக்கி முறை செய்ய முயலுதல் வேண்டும் என்பது பொருள். 436

7.செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும்.

செய்து கொள்ளத் தக்க வசதிகளைச் செய்யாது, சேர்த்து வைப்பவனுடைய செல்வம் நிலைத்திராமல்-அழிந்து விடும்.

செயற்பால-செய்து கொள்ளத் தக்க வசதிகள்; இவறி யான்-உலோபி; உயற்பாலது அன்றி-நிலை பெற்றிராமல். 437

8.பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன்று அன்று.

பொருளின் மீதே பற்றுக் கொள்ளுதல் ஆகிய உலோபத் தன்மை எத்தகைய குற்றங்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய ஒரு சாதாரணக் குற்றம் அன்று; அது பெரிய குற்றமாகும்.

இவறன்மை-உலோபத் தன்மை; எற்றுள்ளும்-எத்தகைய குற்றத்தோடும். 438

9.வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

ஒருவன் எவ்வளவு உயர்வினை அடைந்திருந்தாலும், எந்தக் காலத்திலும் தன்னை மிகவும் உயர்ந்தவனாக எண்ணிக் கர்வங் கொள்ளுதல் கூடாது; அவ்விதமே தனக்கும் பிறர்க்கும் நன்மையைத் தாராத செயலை எந்தக் காலத்திலும் புரிய விரும்புதலும் கூடாது.

வியத்தல்-ஆச்சரியப்படுதல், இங்கே கர்வப்படுதல்; நயத்தல்-விரும்புதல். 439

10.காதல காதல் அறியாமை உயக்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

ஒருவன் தான் விரும்பும் பொருள்கள் மீது தனக்குள்ள விருப்பத்தைப் பிறர் அறிந்து கொள்ளாதபடி அவைகளை அனுபவிக்க வல்லவனாக இருந்தால், அவனை அவன் பகைவர் வஞ்சிக்க எண்ணும் எண்ணங்கள் யாவும் பயன் தாராமற் போகும்.

காதல்-விருப்பம், ஆசை; காதல-ஆசைப்படும் பொருள்கள்; உய்க்கிற்பின்-அனுபவிக்க வல்லவன் ஆயின்; ஏதிலார்-பகைவர்; ஏதில-பயனற்றன; நூல்-எண்ணம். 440

45. பெரியாரைத் துணைக்கோடல்


1.அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

நீதி நெறிகளை அறிந்து முதிர்ச்சியடைந்த பெரியோரின் நட்பைத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு கொள்ளும் போது, அந்தப் பெரியோரின் தகுதிக்கு ஏற்றபடி அவரிடம் நடந்து கொள்ள வேண்டியதை ஆராய்ந்து அறிந்து, அவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.

அறன் அறிந்து-நீதி நெறிகளை நூல்களைக் கொண்டும், அனுபவ வாயிலாகவும் அறிந்து; மூத்த-அறிவு; ஒழுக்கம், வயது ஆகிய இம்மூன்றிலும் முதிர்ந்த,

துணைக்கோடல் - துணையாகக் கொள்ளுதல். 441

2.உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

ஒருவனுக்கு நேர்ந்துள்ள துன்பங்களைப் போக்கக் கூடியவராயும், மேலும் துன்பம் வாராதபடி முன்னதாக அறிந்து, அதனைக் காக்க வல்ல தன்மையுடையவராகவும் உள்ள பெரியோரை, அவர் மகிழும் வண்ணம் உபசரித்து, ஒருவன் தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.

உற்ற-நேர்ந்த; உறாஅமை-நேராதபடி; பேணி-போற்றி, அவர் மகிழும் வண்ணம் உபசரித்து. 442

3.அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

கல்வி, ஒழுக்கம், அனுபவம் முதலியவைகளால் சிறந்த பெரியாரை அவர் மகிழும் வண்ணம் உபசரித்துத் தம் சுற்றத்தவருள் ஒருவராகக் கொள்ளுதல் அரிய செல்வங்கள் பலவற்றுள்ளும் அருமையானதாகும்.

தமர்-தம்மவர், தமக்கு நெருக்கமான உறவினர்; அரசருக்குத் தமர் -அமைச்சர், சேனைத் தலைவர், புலவர் முதலியவர்கள். 443

4.தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாந் தலை.

அறிவு, ஒழுக்கம், அநுபவம், வயது முதலியவைகளால் தம்மைக் காட்டிலும் மிக்காராக இருக்கும் பெரியார் தனக்குச் சுற்றத்தவராக இருக்கும்படி நடந்துகொள்ளுதல் மிகவும் வல்லமையுடைய செயல்கள் பலவற்றுள்ளும் தலைசிறந்ததாகும்

வன்மை-வல்லமை, தலை-சிறந்தது. 444

5.சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

தன்னைச் சுற்றியுள்ள அமைச்சர், சேனைத் தலைவர், புலவர் முதலியவர், அரசாட்சியாகிய உடலுக்குக் கண் போல் இருந்து உதவுபவர் ஆவர். ஆதலால், அரசன் தன்னைச் சூழ்ந்துள்ள அமைச்சர் முதலியோரை நன்றாக ஆராய்ந்து பார்த்துத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

குடும்பத்துக்குத் தலைவனாக இருப்பவன் தன் சுற்றத்தார், நண்பர், வேலையாட்கள் முதலியவர்களை நன்றாக ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதும் பொருள்.

சூழ்வார்-சூழ்ந்து இருப்பவர்; அமைச்சர் முதலியோர்: சூழ்ந்து-ஆராய்ந்து. 445

6.தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.

தகுதி வாய்ந்த பெரியோர் தன்னைச் சூழ்ந்திருக்க, அவர் தம் சொற்படி நடக்க வல்ல ஒருவனுக்கு அவனுடைய பகைவர் செய்யக் கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.

இனத்தன்-இனத்தை உடையவனாய் இருப்பவன்; செற்றார்-பகைவர். 446

7.இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்.

குற்றம் கண்டால், அக்குற்றத்தைப் போக்குவதற்காக வற்புறுத்தி அறநெறி கூறும் பெரியாரைத் துணையாகக் கொண்டு, ஆட்சி புரியும் அரசரைக் கெடுக்கும் வல்லமையுடைய பகைவர் எவர் இருக்கின்றனர்? எவரும் இலர்.

இடித்தல்-கேட்போர் மனத்தில் படும்படி வற்புறுத்திக் கூறுதல் என்பது இங்கே பொருள்; துணை யாரை ஆள்வாரை-துணைவராகக் கொண்டு ஆட்சி புரிபவரை. 447

8.இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.

குற்றம் கண்டவிடத்து, வற்புறுத்தி அறநெறி சொல்லக் கூடிய பெரியோர்களைத் தனக்குத் துணையாகக் கொள்ளாத பாதுகாவல் அற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லா விட்டாலும் தானே கெட்டுப் போவான்.

ஏமரா-ஏமம் மருவாத (ஏமம்-காவல்; மருவாத-பொருந்தாத) காவல் இல்லாத,

பாகன் இல்லாத யானை போன்று தனக்குத் தானே தீங்கினைத் தேடிக் கொள்வான் என்பது பொருள். 448

9.முதலிலார்க ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை.

முதற் பொருள் இல்லாத வணிகருக்கு, அதனால் வரும் இலாபம் இல்லை. அது போல் துன்பம் வந்த போது தாங்கக் கூடிய துணையாகிய பெரியோரை இல்லாதவர்க்குக் கெடாமல் நிலைத்திருக்கும் தன்மை இல்லை.

வணிகருக்குப் பொருள், அறிவு, உழைப்பு இம்மூன்றும் முதற் பொருள் ஆகும். ஊதியம் - இலாபம்; மதலை - பாரம் தாங்கக் கூடியது; தூண், சார்பு-துணை; நிலை-விழாமல் நிலைத்து இருக்கும் தன்மை. 449

10.பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

தனக்கு நன்மையைப் புரிவோராய பெரியோர் ஒருவரின் நட்பினை இழத்தல், (வல்லமை வாய்ந்த) பலருடைய பகைமையைத் தேடிக் கொள்ளுவதைவிடப் பத்து மடங்கு அதிகமான தீமையை விளைவிப்ப்து ஆகும்.

பல்லார்-பலர், கணக்கற்றவர்; கைவிடல்-முற்றிலும் ஒழித்து விடுதல். 450

46. சிற்றினம் சேராமை


1.சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

பெருந்தன்மை வாய்ந்த பெரியோர் இழிந்த குணம் வாய்ந்த சிறியோர் கூட்டத்தை நெருங்குதற்கு அஞ்சுவர்; சிறியோர் தம்மைப் போன்ற சிறுமைக் குணம் வாய்ந்தோரைக் கண்ட போதே அவரைத் தம் நெருங்கிய சுற்றத்தவராக எண்ணித் தழுவிக் கொள்வர்.

சிற்றினம்-குணத்தாலும், அறிவாலும், செயலாலும் இழிந்த தன்மை வாய்ந்தவர் கூடியுள்ள கூட்டம்; பெருமை-பெருந்தன்மை வாய்ந்த பெரியோர். 451

2.நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

நீரானது எந்த நிலத்துடன் சேர்கின்றதோ, அந்த நிலத்தின் தன்மையைப் பெற்றுத் தன் இயல்பிலிருந்து முற்றிலும் மாறி விடும். அது போல, மக்களுக்கும் அவர்கள் எந்த இனத்தாருடன் சேர்கின்றனரோ, அந்த இனத்தாரின் தன்மைக்கு ஏற்ற அறிவே ஏற்படும்.

இயல்பு-தன்மை; திரிந்து-மாறி; அற்று-அத்தன்மையது (நிலத்தின் தன்மையது); மாந்தர்-மக்கள். 452

3.மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படும் சொல்.

மக்களுக்கு அறிவு அவர்தம் மனம் காரணமாக உண்டாகிறது. ஆனால், 'இவர் இத்தகைய குணம் உடையவர்'

என்று உலகத்தாரால் சொல்லப்படும் சொல் அவர் சேரும் இனம் காரணமாகவே ஏற்படுகிறது.

உணர்ச்சி-அறிவு: இன்னான்-இத்தன்மையன், இந்தக் குணத்தினை யுடையவன். 453

4.மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துளது ஆகும் அறிவு.

ஒருவருக்கு, அறிவு அவர் தம் மனத்திலிருந்து தோன்றுவது போலக் காட்டி, அவர் சேர்ந்த இனத்தின் காரணமாகவே தோற்றம் அளிக்கின்றது.

மனத்திலிருந்தே அறிவு உண்டாகிறது என்பது ஒரு வகையில் உண்மையாக இருந்தாலும், அந்த அறிவு மனத்திலிருந்து தோன்றுவதற்குக் காரணம் இனத்தின் சேர்க்கையே ஆகும் என்பதாம். அறிவு, குணம் இரண்டற்கும் இனமே காரணம். 454

5.மனத்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனத்தூய்மை தூவா வரும்.

ஒருவருக்கு உள்ளம் தூய்மையாக இருத்தல், அவர் செய்யும் செயல் துாய்மையாக இருத்தல் ஆகிய இரண்டு தன்மைகளும் அவர் சேர்ந்துள்ள இனத்தின் துாய்மை காரணமாகவே ஏற்படும்.

தூவா-காரணமாக: (து + ஆக) தூ-பற்றுக்கோடு, காரணம். 455

6.மனந்தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

மனம் தூய்மையாக இருப்பவருக்கு அம்மனத்தின் காரணமாக எஞ்சி நிற்கும் செயலும் நன்றாக இருக்கும். (இனத்தூய்மையால் மனமும் தூய்மையாக இருக்கும் ஆதலால்) குற்றமற்ற இனத்தாரோடு உள்ளவர்க்கு நன்றாகாச் செயல்களே இல்லை; எல்லாச் செயல்களும் நல்ல செயல்களாகவே இருக்கும்.

தூய்மையான இனத்தால் தூய்மையான மனமும், தூய்மையான மனத்தால், தூய்மையான செயலும் உண்டாகும் என்பது பொருள்.

மனத் தூய்மையின் மிகுதியால் தோன்றுவது நற்செயல். ஆதலால் மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும் என்றார்; எச்சம் என்பதற்குப் புகழ் என்று சிலரும், மக்கள் என்று சிலரும் பொருள் கொள்ளுவர். 456

7.மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

மனத்தின் நன்மை மக்களுக்கு மேலுலகச் செல்வத்தைத் தரும். இனத்தின் நன்மை இவ்வுலகத்தில் எல்லாப் புகழையும் தரும்.

மன்னுயிர்-இங்கு மக்களைக் குறிக்கும்; ஆக்கம்-ஆக்கப்படுவது, செல்வம்; இங்கே மேலுலகச் செல்வம். 457

8.மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.

பெரியோர்கள் இயல்பிலேயே மனத் தூய்மையைப் பெரிதும் உடையவர்களாக இருந்தாலும், இனத்தின் நன்மை அந்த மனத் துய்மைக்கு மேலும் உறுதியினை அளிக்கும்.

ஏமாப்பு-உறுதி, வலிமை அல்லது பாதுகாவல்.

பொதுமக்களுக்கே அன்றிப் பல நற்குணங்களையும் இயல்பாகவே பெற்ற பெரியோர்கட்கும் இன நலம் வலிமையைத் தரும் என்பது கருத்து. 458

9.மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.

மன நலத்தினால் மறுமை இன்பம் உண்டாகும்; அஃதும் இன நலத்தின் சிறப்பாலேயே வலிமை பெறுகிறது.

இன நலத்தினாலே மனநலமும், மன நலத்தினாலே மறுமை இன்பமும் உண்டாவதால், இன நலம் மறுமை இன்பத்துக்குத் துணையாக இருக்கிறது.

மறுமை-மறுபிறப்பு; இங்கே மறுபிறப்பில் அடையத் தக்க இன்பம். 459

10.நல்லினத்தின் ஊங்கும் துணைஇல்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

ஒருவனுக்கு நல்ல இனத்தை விடச் சிறந்ததாகிய துணையும் (இவ்வுலகத்தில்) இல்லை. தீய இனத்தை விட மிகுந்த துன்பத்தைத் தரும் பகையும் இல்லை.

ஊங்கு-சிறந்தது, மிகுந்தது; அல்லல்-துன்பம்; படுப்பதூஉம்-துன்பத்தை உண்டாக்குவதும், துணை என்பதற்கேற்பப் பகை என்பது வருவித்துக் கொள்ளப்பட்டது. 460

47. தெரிந்து செயல் வகை


1.அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

ஒரு செயலைச் செய்யத் தொடங்கு முன் ஆதனால் அழியக் கூடியதையும், பிறகு அதன் வழியாக உண்டாகக் கூடிய ஊதியத்தையும் ஆராய்ந்து பார்த்துச் செய்தல் வேண்டும்.

தெரிந்து செயல் வகை-ஆராய்ந்து செய்யும் வகை; வழி பயத்தல்- அதன் வழியாக உண்டாதல்; ஊதியம்-நன்மை, இலாபம்; சூழ்ந்து-ஆராய்ந்து பார்த்து.

வரவு, செலவு, இலாபம் ஆகிய இம்மூன்றையும் எண்ணிப் பார்த்து ஒரு செயலைச் செய்தல் வேண்டும். 461

2.தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

தகுந்தவர்கள் என்று தெரிந்து கொள்ளப்பட்ட நண்பர்களோடு, கலந்து ஆராய்ந்து, தம் அறிவைக் கொண்டும் எண்ணிப் பார்த்து, ஒரு காரியத்தைச் செய்ய வல்லவர்களுக்கு அருமையான செயல் எதுவும் இல்லை.

தெரிந்த இனம்-தக்கவர்கள் என்று ஆராய்ந்து தெரிந்து கொள்ளப் பட்ட நண்பர்கள்; தேர்ந்து எண்ணி-பிறரோடு ஆராய்ந்து பார்த்துத் தாமும் தமக்குள் எண்ணிப் பார்த்து. 462

3.ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

பிறகு வரக் கூடிய வருவாயைக் கருதித் தம் முதற்பொருளையே இழக்கக் கூடிய செயலை, அறிவுடையார் மேற்கொள்ள மாட்டார்.

ஆக்கம்-செல்வம்; இங்கே பின் வரக்கூடிய இலாபம்; ஊக்கார்-மேற்கொள்ளார். 463

4.தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்.

இழிவு என்னும் குற்றத்துக்கு அஞ்சும் அருங்குணம் வாய்ந்தவர்கள் இந்தச் செயலைச் செய்தால், வெற்றி கிடைக்கும் அல்லது கிடைக்காது என்று நிச்சயமாகத் தெரிய வாராத சந்தேகத்துக்கு இடமான ஒரு செயலை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். 464

5.வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு.

செய்ய மேற்கொண்ட செயலின் வகைகளையெல்லாம் முற்றிலும் ஆராய்ச்சி செய்யாது, ஒரு செயலைச் செய்யத் தொடங்குதல், பகைவராகிய பயிர் நன்றாக வளர்வதற்காக, அவற்றை நல்ல நிலத்திலே நடுதற்குச் சமம் ஆகும்.

அாசன் நன்கு ஆராயாமல் ஒரு செயலைச் செய்வது பகைவருக்கு வேண்டிய அனுகூலங்களையெல்லாம் தானே செய்து வைப்பதற்குச் சமம் ஆகும் என்பதாம். ஒரு குடும்பத் தலைவன், இயக்கத் தலைவன் முதலியவர்களுக்கும் இது பொருந்தும்.

சூழாது-எண்ணிப் பார்க்காமல்; எழுதல்-ஒன்றைச் செய்யத் தொடங்குதல்; பாத்தி-நன்றாக வளரத் தக்க நிலம்; படுப்பது-நிலை பெறச் செய்வது; ஆறு-வழி. 465

6.செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

செய்யத் தகாத செயல்களைச் செய்வதனாலும் கேடு உண்டாகும். செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுதி உண்டாகும்.

செய்யத் தகாத செயல்: 1. செய்ய முடியாத பெரிய செயல், 2. செய்தால் பயன் தராதவை, 3. குறைந்த பயன் விளையும் செயல், 4. சந்தேகத்துக்கு இடமான செயல்.

செய்யத் தகுந்த செயல்: 1. சிறிது முயற்சியால் முடியக் கூடிய செயல். 2. பயன் தரும் செயல், 3. பெரிய பயன் விளையும் செயல், 4. சந்தேகத்துக்கு இடம் இல்லாத செயல். 466

7.எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

செய்யத் தொடங்கும் ஒரு செயலை முன்னதாகவே நன்றாக ஆராய்ந்து, பிறகு அதைச் செய்யத் தொடங்க வேண்டும். செய்யத் தொடங்கிய பிறகு, அதன் முடிவை எண்ணிப் பார்க்கலாம் என்பது தவறு.

துணிக-செய்யத் தொடங்குக; இழுக்கு-தவறு; குற்றம். 467

8.ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

தகுந்த வழியில் முயலாத முயற்சி (தவறு நேர்ந்த பிறகு) பலர் துணையாக இருந்து பாதுகாத்த போதிலும் குறைபாடு டையதாகவே இருக்கும்.

ஆறு-வழி, இங்கே நல்ல வழி;: வருந்தா-முயலாத, செய்யப்படாத; வருத்தம் இங்கே முயற்சி என்னும் பொருளில் வந்துள்ளது: பொத்துப் படல்-தவறு படல். 468

9.நன்றாற்ற லுள்ளும் தவறுண் டவர்அவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

அவரவர் குணநலன்களை அறிந்து அவரவருக்குத் தக்க வகையில் நலன்களைச் செய்யா விட்டால் நன்மை புரியும் போதும் கு்ற்றங்கள் உண்டாதல் கூடும்.

நன்றாற்றல்-நல்ல செயல்களைச் செய்தல், நன்மை புரிதல்; ஆற்றாக்கடை-செய்யாத போது. 469

10.எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

உலகத்தவர் தம் கருத்துக்கு ஒத்து வராத செயல்களை ஏற்றுக் கொள்ளார். ஆதலால், ஒருவர் தமக்கு நல்லதாகத் தோன்றினாலும் பெரும்பாலோராய் உலகத்தவர் கண்டு இகழாத வகையில், செயல்களை ஆய்ந்து பார்த்துச் செய்தல் வேண்டும்.

எள்ளாத-இகழாத; கொள்ளாத-தம் கருத்துக்கு ஒத்து வாராத. 470

48. வலியறிதல்


1.வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

தான் செய்ய எண்ணும் ஒரு செயலை, அச்செயலின் வலிமையையும், தன் வலிமையையும், எதிரியின் வலிமையையும் ஆராய்ந்து பார்த்துச் செய்தல் வேண்டும்.

வினை-தொழில், செயல்; மாற்றான்-பகைவன், எதிரி; தூக்கி- ஆராய்ந்து பார்த்து. 471

2.ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

தம்மால் இயல்வதை அறிந்தும், மேலும் அறிய வேண்டியதைப் பிறர் மூலம் கேட்டு அறிந்தும், தாம் மேற்கொண்ட செயலிலேயே மனத்தைப் பொருந்த வைத்து, முயற்சி செய்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

ஒல்வது-இயல்வது; ஒல்வது அறிதல்-தமக்குள்ள வலிமையைத் தெரிந்து கொள்ளுதல்; அறிவது அறிதல்-மேலும் அறிய வேண்டியதை ஒற்றர் மூலம் கேட்டறிதல்; அதன் கண் தங்குதல்- அந்தச் செயலின் மேல் கண்ணும் கருத்துமாக இருத்தல்; செல்வார்-முயற்சி செய்யத் தொடங்குபவர்; செல்லாதது- முடியாதது. 472

3.உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

தம்முடைய வலிமையின் அளவை அறிந்து கொள்ளாமல், தமக்குள்ள ஊக்கத்தின் மிகுதியால் ஒரு செயலைச் செய்ய முன் வந்து தொடங்கி, அந்தச் செயல் முடிவதற்கு முன் இடையிலேயே அழிந்து ஒழிந்தவர் பலர் ஆவர்.

உடைத்தம் வலி-தம்முடைய வலிமை; ஊக்கி-செய்யத் தொடங்கி; இடைக் கண்-இடையிலே;; முரிதல் -கெட்டு ஒழிதல். 473

4.அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

தனக்கு இயல்பாக அமைந்துள்ள வலிமைக்கு ஏற்றபடி நடவாமலும், தன் வலிமையின் அளவையும் உள்ளபடி உணர்ந்து கொள்ளாமலும், தன் வலிமையைக் குறித்துத் தானே பெருமைப் பட்டுக் கொண்டிருப்பவன் விரைவில் கெட்டு அழிவான்.

அமைந்தாங்கு-தனக்கு இயல்பிலே அமைந்துள்ளபடி; ஒழுகான்- நடவாதவன்; வியந்தான்-தன்னைத் தானே பெரிதும் மதித்துக் கொள்பவன். 474

5.பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

மெல்லிய மயில் இறகு ஏற்றிய வண்டியாக இருந்தாலும், அந்த மயில் இறகுச் சுமையினை வலிமை வாய்ந்த அந்த வண்டியின் மீது அளவு கடந்து மேன் மேலும் ஏற்றினால், முடிவில் அந்த வண்டியின் அச்சு முரியும்.

வலிமையில்லாதவர் மிகப் பலராக இருப்பின், மிகவும் வலிமை பெற்ற ஒருவனையும் ஒழித்து விடக் கூடும் என்பது பொருள்.

பீலி-மயில் இறகு; சாகாடு-சகடம், வண்டி; அச்சு-வண்டியின் சக்கரம் கோக்கப்படும் மரம்; சால மிகுத்து-மிகவும் அதிகமாக; பெயின்-ஏற்றினால். 475

6.நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்.

ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறி நிற்பவர், அதையும் கடந்து அதற்கு அப்பாலும் ஏறி நிற்க முனைந்தால், அம்முயற்சி அவர்தம் உயிருக்கே முடிவினைக் கொண்டு வந்து விடும்.

தம் அளவுக்கு மீறிய முயற்சியில் ஈடுபடும் ஒருவர், முடிவில் தாமே அழிந்து படுவார்; எதற்கும் ஒர் எல்லை உண்டு. அவ்வெல்லையைக் கடவாமல் முயற்சி செய்பவர் வெற்றி பெறுவர் என்பது கருத்து.

கொம்பர் - கொம்பு, மரக்கிளை; ஊக்குதல்-முயலுதல், மன எழுச்சி கொள்ளுதல்; இறுதி - முடிவு, 476

7.ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.

வருவாயின் அளவுக்குத் தக்கபடி பிறருக்குக் கொடுத்தல் வேண்டும். அவ்விதம் அளவறிந்து தருதலே, பொருளைப் பாதுகாத்து ஒழுகும் வழியாகும்.

ஆற்றின் அளவு அறிந்து ஈதலாவது, வருவாயுள் கால் பாகத்துக்கு மேற்படாமல் பிறருக்கு உதவி செய்தல்; ஆறு-வழி, இங்கே பொருள் வரும் வழி, வருவாய்; போற்றி-பாதுகாத்து; வழங்கும் நெறி-ஒழுகும் வழி, வாழும் வழி. 477

8.ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

சிறிதாக இருந்தாலும், செலவு வருவாய்க்கு மேற்படாமல் இருந்தால், அதனால் கெடுதியில்லை.

ஆகு.ஆறு - பொருள் வரும் வழி, வருவாய்; இட்டிதாயினும்- சிறிதாக இருந்தாலும்; இட்டிது-சிறிது; போகு ஆறு-பொருள் போகின்ற வழி, செலவு; அகலாக் கடை-(வரவுக்கு மேல்) விரிவு படாமல் இருந்தால். 478

9.அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

தனக்குள்ள பொருளின் அளவினை அறிந்து, அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கை, முதலில் வளம் பலவும் அமைந்தள்ளன போல தோன்றிப் பின்னர் இல்லாதனவாய், இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய் விடும்.

உள-(வளம் பலவும் அமைந்து) உள்ளவை;: தோன்றாக் கெடும் - மறுபடியும் ஒரு காலத்தே தோன்றுதற்கு இல்லாதபடி, அடியோடு கெட்டொழியும். 479

10.உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

தனக்குப் பொருள் உள்ள அளவினை ஆராய்ந்து பார்க்காமல், மேற்கொள்ளும் பரோபகாரத்தினால், ஒருவனது செல்வத்தின் அளவு விரைவில் குறைந்து விடும்.

உளவரை-உள்ள அளவு; தூக்காத-ஆராய்ந்து பார்க்காத; ஒப்புரவு- உலக நடை அறிந்து உதவி செய்தல்; வல்லை-சீக்கிரம், விரைவு. 480

49 காலம் அறிதல்


1.பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

தன்னை விட வலிதாகிய கூகையைக் காக்கை பகற் போதிலே வென்று விடும். அது போலப் பகைவரை வெல்லக் கருதும் அரசருக்கு அதற்கு ஏற்ற காலம் இன்றியமையாதது.

கூகை-கோட்டான்; இகல்-பகை. 481

2.பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.

காலத்தோடு பொருந்தத் தொழிலில் ஈடுபட்டு நடத்தல், நில்லா இயல்புடைய செல்வத்தை நீங்காமல் கட்டி வைக்கும் கயிறு ஆகும்.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல்-காலத்துக்கு ஏற்ற வண்ணம் செய்தல்; தீராமை-விட்டு நீங்காமல் இருக்கும்படி; ஆர்க்கும்-கட்டி வைக்கும். 482

3.அருவினை என்ப உளவோ கருவியால்
காலம் அறிந்து செயின்.

செய்து முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஏற்ற காலத்தையும் உணர்ந்து செய்தால், மக்களால் செய்ய முடியாத அரிய செயல்களும் உளவோ? இல்லை.

அரு வினை-அரிய செயல்; கருவிகளாவன-மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களும் ஆகும். மூவகை ஆற்றல்; அறிவு, ஆண்மை; பெருமை. நால்வகை உபாயம் : சாம, பேத. தான, தண்டம். இவை அரசியல் தலைவர்களுக்கு இன்றியமையாதவை. இக்காலத்துக்கு ஏற்ற விஞ்ஞானக் கருவிகளும் அவைகளை இயக்கும் விஞ்ஞான அறிவும் இவைகளுள் அடங்கும்.

எத்தகைய சிறந்த கருவிகள் இருப்பினும், காலமும் இன்றியமையாதது என்பது கருத்து. 483

4.ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.

ஒருவன் இவ்வுலகம் முழுவதையும் தானே ஆள வேண்டும் என்று எண்ணினாலும், அஃது அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால், அவன் அதற்கு ஏற்ற செயலைச் செய்ய வேண்டிய காலம் அறிந்து, அதற்கு ஏற்ற இடத்தையும் மனத்திற் கொண்டு செய்தல் வேண்டும்.

ஞாலம்-உலகம்; கைகூடும் என்பதற்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்றும், எளிதில் கூடும் என்றும் பொருள் கொள்ளுவர்.

செயல் கைகூடுதற்குத் தக்க முயற்சியோடு, ஏற்ற காலமும், இடமும் இன்றியமையாதன. 484

5.காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.

உலகத்தையெல்லாம் நாம் கட்டி ஆளவேண்டும் என்னும் எண்ணத்தை மனத்திற் கொண்டு இருப்பவர், அதற்கு ஏற்ற கருவிகளையெல்லாம் தாம் கைக்கொண்டு இருந்தாலும்,. தகுந்த காலத்தையும் அமைதியோடு எதிர்பார்த்திருத்தல் வேண்டும்.

கலங்காது-மன அமைதியோடு; 'கலங்காது' என்பதற்குத் தப்பாமல் எனவும் பொருள் கொள்வர். 485

6.ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

ஊக்கம் உடையவன் காலத்தை எதிர்பார்த்து அடங்கியிருத்தல், போர் செய்யும் ஆட்டுக்கிடாய், எதிர் ஆட்டின் மீது பாய்ந்து அதைத் தாக்குதற்காகப் பின்புறம் கால் வாங்குதல் போன்றது.

ஊக்கம்-மனவலிமையின் மிகுதி; ஒடுக்கம்-அடங்கியிருத்தல்; தகர்-ஆட்டின் பொதுப் பெயர்; ஆட்டுக்கிடாய்; தாக்கற்கு- எதிர்ப்பதற்கு; பேர்தல்-பின் வாங்குதல்; தகைத்து-தன்மையுடையது. 486

7.பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்(து)
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

பகைவர் தமக்குக் கெடுதலைச் செய்த அப்போதே அறிவுடையோர் அவர் மீதுள்ள கோபத்தை வெளிக்குக் காட்டிக் கொள்ளமாட்டார்; அந்தப் பகைவரை வெல்லுங் கோபத்தை மறைத்து வைத்திருப்பர்.

பொள் என-உடனே விரைவாக; புறம் வேரார்-வெளியே கோபத்தைக் காட்டிக் கொள்ள மாட்டார்; வேர்தல்-கோபம் கொள்ளுதல்; ஒள்ளியர்-அறிவுடையவர். 487

8.செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

காலம் நன்கு அமையாத போது, பகைவரைக் கண்டால் அவருடைய குற்றங்களைத் தாங்கிக் கொண்டு, அமைதியாக இருத்தல் வேண்டும். அந்தப் பகைவருக்கு முடிவு காலம் வந்த போது அவருடைய நிலை தலை கீழாக மாறி விடும்.

செறுநர்-பகைவர்; சுமத்தல்-தாங்கிக் கொண்டு இருத்தல், பணிவோடு இருத்தல்; இறுவரை-முடிவுகாலம்; கிழக்காம் தலை-தலைcகீழாக மாறும்;cகிழக்கு-கீழ். 488

9.எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

கிடைத்தற்கு அருமையான காலம் வந்து வாய்த்த பொழுது, செய்வதற்கு அரிய செயலை அப்போதே செய்து முடித்தல் வேண்டும்.

எய்தற்கு அரியது-கிடைத்தற்கு அரியது; இயைதல்-அடைதல்; அந்நிலையே-அப்போதே. 489

10.கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

ஒரு கொழிலைச் செய்வதற்கு தகுந்த காலம் அமையாத போது, கொக்கு போல் அமைதியாக இருத்தல் வேண்டும். தகுந்த காலம் வாய்த்த போது, அதன் குத்துப் போல அந்தச் செயவை தவறாது உடனே செய்து முடித்தல் வேண்டும்.

ஒக்க-ஒத்து இருக்க; கூம்பும் பருவம்-ஒடுங்கியிருக்கும் காலம்; கூம்புதல்-ஒடுங்குதல்; சீர்த்த இடம்-செயல் புரிவதற்கு வாய்த்த இடம்; சீர்த்தல்-சமயம் வாய்த்தல். 490

50. இடன் அறிதல்


1.தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

பகைவரை முற்றுகை செய்தற்கு ஏற்ற இடத்தைக் கண்டு கொள்வதற்கு முன், அந்தப் பகைவரை வெல்ல நினைக்கும் எந்தச் செயலையும் தொடங்குதல் கூடாது. அச்செயல்களை இகழ்தலும் கூடாது.

எள்ளுதல் - இகழ்தல். இது பகைவரை இகழ்தல். பகைவரை அழிக்கும் காரணமாகச் செய்யத்தக்க செயல்களை இகழ்தல் ஆகிய இரண்டு செயல்கட்கும் பொருந்தும்; முற்றுதல்-பகைவர் கோட்டை கொத்தளம் முதலியவைகளை வளைத்துக் கொள்ளுதல். 491

2.முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவும் தரும்.

பிற துணைகள் சிறிதும் இன்றித் தம் உடல் வலிமை ஒன்றைக் கொண்டே, பகைவரை வெல்லத் தக்க வலிமையுடையவர்க்கும் கோட்டை கொத்தளங்களோடு கூடிய வசதி பலவித நன்மைகளையும் கொடுக்கும்.

முரண்-மாறுபாடு, பகைமை; மொய்ம்பு-வலிமை; அஃதாவது மிக்க வலிமை; அரண்-கோட்டை கொத்தளங்கள்; ஆக்கம்-வசதி; பல-இங்கே பலவித நன்மை 492

3.ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

வெல்லத் தக்க இடம் அறிந்து முதலில் தம்மைப் பாதுகாத்துக் கொண்டு பிறகு, பகைவரிடம் தம்முடைய வல்லமையைக் காட்டினால், வலிமை சிறிதும் இல்லாதவரும் வலிமை யுடையவராகி வெற்றி பெறுவர். 493

4.எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

தாம் எண்ணிய செயலைச் செய்தற்குத் தகுந்த இடத்தை முதலில் அறிந்து கொண்டு அங்கே தங்கியிருந்து பிறகு, தம் செயலை நெருங்கிச் செய்வாராயின் அவரை வெல்லுவதற்கு எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்து விடுவர். 494

5.நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

ஆழமுள்ள நீரினையுடைய இடத்தில் முதலை பிற உயிர்களை வெல்லும்; அந்த நீரை விட்டு முதலை வெளியே வருமானால், அதனை மற்ற உயிர்கள் வென்று விடும்.

அவரவர் இடத்தில் இருக்கும் போது வலிமை சிறிதும் இல்லாதவரும் வெற்றி பெறுவர்; தம் இடத்தை விட்டு நீங்கினால், மிக்க வலிமை பெற்றவரும் தோல்வியுறுவர் என்பது கருத்து. 495

6.கடலோடா கால்வல் நெடுங்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

தரையில் ஓடக்கூடிய வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள் கடலில் ஓட மாட்டா; கடலில் ஓடக் கூடிய பெரிய கப்பல்களும் நிலத்தில் ஓட மாட்டா.

கால்-சக்கரம்; தேர்-உருளை; வல்-வலிமை பொருந்திய; நாவாய்- பெரிய கப்பல்கள்.

ஒருவருக்கு உகந்த இடம் பிறிதொருவருக்கு உகந்ததாக இராது என்பது கருத்து. 496

7.அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

செய்ய வேண்டிய செயல் வகைகளையெல்லாம் சிறிதும் சூறையில்லாமல் சிந்தித்து ஏற்ற இடத்தையும் அறிந்து, ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால், அந்த முயற்சி கைகூடுதற்கு அஞ்சாமை தவிர வேறு துணையே வேண்டியதில்லை.

தக்க இடத்தோடு, அஞ்சாமையும் வேண்டும் என்பது கருத்து. 497

8.சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

சிறிய சேனையை உடையவனாக இருந்தாலும், அவன் தனக்குப் பொருந்திய இடத்தை அடைந்திருப்பானானால், பெரிய சேனையை உடையவனும், அவனை எதிர்க்க முடியாமல் முயற்சி குன்றி அழிவான். 498

9.சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

காவற் கோட்டையும், அதற்கேற்ற பிற சிறப்புக்களும் இல்லாதவராய் இருந்தாலும், பகைவர் நிலையாகத் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று, அவர்களைத் தாக்குதல் அரிது. 499

10.காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

வேல் ஏந்திய வீரரைத் தன் கொம்பினால் குத்திக் கோத்து எடுக்கும் அஞ்சாத தன்மையுடைய பெரிய யானையையும், அது கால் ஆழும்படியான சேற்று நிலத்தில் அகப்பட்டுக் கொண்ட போது, ஒரு சிறு நரி அதைக் கொன்று விடும்.

களர்-உவர் நிலம்; அடும் . கொன்று விடும்; கண் அஞ்சா-பயப்படாத, வேல் ஆள்-வேல் ஏந்திய வீரர்; முகத்த-முகத்தினையுடைய, இங்கே முகத்தில் உள்ள கொம்பினைக் குறிக்கும்; களிறு . ஆண் யானை. 500

51. தெரிந்து தெளிதல்


1.அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

நீதி நெறி, பொருள், இன்பம், உயிருக்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராய்ந்த பிறகே ஒருவன் ஒரு தொழிலுக்கு உரியவனாகத் தேர்ந்தெடுக்கப் படல் வேண்டும்.

நான்கின் நிறம் தெரிந்து தேறலாவது, இவன் நீதி தவறி நடக்கின்றவனா, பிறர் பொருளைக் கைக்கொள்ள எண்ணுபவனா, சிற்றின்பப் பிரியனா, தன் உயிருக்காக அஞ்சும் கோழையா என நான்கு வகையாலும் சோதித்துப் பிறகு தெளிதல்.

தெரிந்து தெளிதல்-இவன் தகுதியுடையவன், தகுதி யில்லாதவன் என ஆராய்ந்து நிச்சயித்தல். 501

2.குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.

நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றங்கள் சிறிதும் இல்லாமல், பழி பாவங்கட்கு அஞ்சி நாணும் தன்மையுடைய ஒருவனையே ஆராய்ந்து தெரிந்தெடுத்தல் வேண்டும்.

குடி-குடும்பம்; வடுப்பரிதல்-குற்றம் வருமோ என அஞ்சியிருக்கும் தன்மை; கட்டே-கண்ணதே. 502

3.அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

அருமையான நூல்கள் பலவற்றையும் கற்றுத் தெரிந்து குற்றம் சிறிதும் இல்லாதவர் எனப்படுவோரிடத்தும் ஆராய்ந்து பார்ச்கும் போது, அறியாமை இல்லாமல் இருத்தல் அருமையாகும். 503

4.குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

ஒருவனுக்குள்ள குணங்களையும் ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்ந்து பார்த்து, அவைகளுள் மிகுதியாக உள்ளவற்றைக் கொண்டு அவன் நல்ல குணம் உடையவன் அல்லது தீய குணமுடையவன் என்பதைக் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

குற்றமேயில்லாதவர் இலர். ஆதலால், குணம் குற்றங்களை ஆய்ந்து குற்றம் மிகுதியாயிருந்தால் வினைக்குரியவனாகக் கொள்ளற்க. 504

5.பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

மக்களின் பெருமையை அறிவதற்கும், அவர்தம் சிறுமையை அறிதற்கும் அவரவர் செய்யும் செயல்களே உரை கல்லாக இருக்கின்றன.

கட்டளைக் கல்-உரை கல்; பொன்னை உரைத்துப் பார்த்து அதன் தரத்தை மதிப்பிடும் கல். 505

6.அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

எத்தகைய ஆதரவும் அற்றுத் திரிவாரை நம்பித் தெளிதல் கூடாது. அவர் உலகத்தவரோடு தொடர்பு சிறிதும் இல்லாதவர். ஆதலால், அவர் பழி பாவங்கட்கும் அஞ்ச மாட்டார்.

அற்றார்-ஆதரவு அற்றவர்; சுற்றத்தவரின் தொடர்பு சிறிதும் இல்லாதவர் என்றும் கூறலாம். தேறுதல்-தெளிதல்;: ஒம்புக-விட்டொழிக. 506

7.காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து கொள்ளாதிருப்பாரை அவர் மீது வைத்த அன்புடைமை காரணமாக நம்பித் தெளிதல் எல்லா வகையான அறியாமையையும் உண்டாக்கும்.

காதன்மை-ஆசை, அன்பு; கந்து-பற்றுக்கோடு. 507

8.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

அயலான் ஒருவனைச் சிறிதும் ஆராய்ந்து பாராது, அவன் மீது நம்பிக்கை வைக்கும் ஒருவனால், அவன் துன்பப்படுவதல்லாமல் அவன் கால்வழியினரும் நீங்காத துன்பத்தை அனுபவிக்கும்படி நேரும். 508

9.தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

நன்றாக ஆராய்ந்து பார்க்காது யாரையும் தெளிதல் கூடாது. அவ்வாறு ஆராய்ந்து பார்த்த பின், அவரிடம் எந்தச் செயலைக் குறித்து ஆராய்ந்து தெளிந்து கொள்ளலாமோ, அந்தச் செயலைக் குறித்து ஆராய்ந்து தெளிக. 509

10.தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

ஆராய்ந்து பார்க்காது ஒருவனிடம் நம்பிக்கை வைத்தலும், ஆராய்ந்து பார்த்துத் தெளிவடைந்த ஒருவனிடம் சந்தேகம் கொள்ளுதலும் என்றும் நீங்காத துன்பத்தைத் தரும். 510

52. தெரிந்து வினையாடல்


1.நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.

ஒரு செயலில் உள்ள நன்மை, தீமை ஆகிய இரண்டையும் ஆராய்ந்து பார்த்து, நன்மையையே விரும்பும் குணம் உடைய ஒருவனே அச்செயலுக்கு உரியவனாகத் தேர்ந்தெடுக்கப்படுவான்.

தெரிந்து வினையாடல் - ஒருவன் செய்யக் கூடிய செயலைத் தெரிந்து, அச்செயலுக்கு அவனை ஏவுதல்; நலம் புரிந்த நன்மையான்-நன்மையை விரும்பும் குணமுடையவன். 511

2.வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

பொருள் வரும் வழிகளை அதிகரிக்கச் செய்து, அப்பொருளால் வளத்தை உண்டாக்கி, அப்போது நேர்ந்த இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்க வல்லவனே குறித்த ஒரு செயலைச் செய்தல் வேண்டும்.

வாரி-வழி; வளம்-வெல்வம்; உற்றவை நேர்ந்த இடையூறுகள். 512

3.அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

அன்பும், அறிவும், உள்ளத் தெளிவும், ஆசையில்லாமையும் ஆகிய நான்கு குணங்களையும் சிறப்பாக உடையவனையே ஒரு செயலைச் செய்யத் தெரிந்தெடுத்தல் வேண்டும்.

மேற்சொன்ன நான்கு குணங்களும் நிரம்பப் பெற்றவனிடத்தில் ஒரு வேலையைத் தர நிச்சயிக்க வேண்டும் என்பது கருத்து. 513

4.எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.

எல்லா வகையாலும் ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒரு வேலையை மேற்கொண்டு செய்யும் போது, அவ்வேலை வேறுபாடு காரணமாகக் குணம் மாறுதல் அடையும் மக்கள் உலகத்திலே பலர் உண்டு.

எல்லா வகையாலும் ஆராய்ந்து நிச்சயித்து விட்டோம் என்று எண்ணி ஏமாறலாகாது; பதவி உயர்வால் மக்கள் மாறுதல் கூடும் என்பது கருத்து. 514

5.அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

வேலை செய்யும் வழிகளை அறிந்து அவ்வேலையால் வரும் இடையூறுகளைத் தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை, அல்லாமல் மற்றவனைச் சிறந்தவன் என்று எண்ணி ஒரு வேலையைச் செய்யும்படி கட்டளையிடுதல் கூடாது.

வினைதான் சிறந்தான் என்பதற்கு வேலையில் சிறந்தவன் என்றும் பொருள் கூறலாம். வேலையில் சிறந்தவன் என்பதை மட்டுமே கருதி, மற்றவற்றை ஆராயாமல் ஒருவனை ஏவலாகாது. 515

6.செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.

தொழில் செய்பவனுடைய திறமையினை ஆராய்ந்து, செயலின் தன்மையினையும் ஆராய்ந்து, இந்தக் காலத்துக்கு இது தகுந்ததுதானா என்பதையும் அறிந்து, அந்த வேலையை அவனிடம் தந்து செய்யச் சொல்லுதல் வேண்டும். 516

7.இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

இந்த வேலையை இந்த விதத்தினால் இவன் முடித்தல் கூடும் என்பதை ஆராய்ந்து அறிந்து, பிறகு அந்த வேலையை அவனிடம் ஒப்புவித்தல் வேண்டும்.

அந்த அந்த வேலையில் வல்லவனையே அந்த அந்த வேலையில் அமர்த்த வேண்டும். ஒரு வேலையில் வல்லவன் எல்லா வேலையிலும் வல்லவனாக இரான் என்பது கருத்து. 517

8.வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.

இந்த வேலைக்கு இவன் தகுந்தவன் என்று ஆராய்ந்து அறிந்து பின்பு, அவனை அந்த வேலையைச் செய்வதற்கு உரியவன் ஆகுமாறு செய்தல் வேண்டும் (அந்த வேலையில் அவனை அமர்த்தல் வேண்டும்.) 518

9.வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.

>!--- “கேண்மை வேறாக” என்று தவறாக சீர் பிரிக்கப் பட்டுள்ளது. மூலத்துடன் ஒப்பிட்டு சரி செய்யப் பட்டுள்ளது.---> தான் செய்ய மேற்கொண்ட வேலையின் மீது கண்ணும் கருத்துமாக இருந்து முயல்பவனது நட்பினைத் தவறாக நினைக்கும் தலைவனிடமிருந்து செல்வம் நீங்கி விடும்.

வினைக்கண் வினையுடையான்-தன் வேலையின் கண் இடை விடாத முயற்சி உடையவன்; கேண்மை-நட்பு;: வேறாக நினைத்தல்-பகைவர் சொற்கேட்டுத் தவறாக எண்ணுதல்; திரு . செல்வம். 519

10.நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு.

தொழில் செய்கின்றவன் சரியாகத் தன் வேலையைச் செய்து வருவானானால், அந்த வேலையில் சம்பந்தப்பட்ட பிற மக்களும் ஒழுங்கு பெற வாழ்ந்து வருவர். ஆதலால், அத்தகைய பொறுப்பு வாய்ந்த வினையைச் செய்வானிடம், அரசன் நாள் தோறும் கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும். 520

53. சுற்றம் தழால்


1.பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள.

செல்வம் நீங்கி வறியவன் ஆன போதும் அவனோடு தமக்கு முன்பே இருந்த பழைய தொடர்பினை நினைந்து புகழ்ந்து பேசும் குணங்கள் சுற்றத்தாரிடத்தில் தான் உள்ளன.

சுற்றம் தழால்-தன்னைச் சூழ்ந்துள்ளவர்களை எக்காலத்தும் விடாமல் தழுவிக் கொண்டிருத்தல்; சுற்றம்-உறவின் முறை; அரசர்க்கு அமைச்சர், சேனைத் தலைவன் முதலியோர் சுற்றத்தினர் ஆவர். 521

2.விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்.

அன்பு நீங்காத சுற்றத்தினர் ஒருவனுக்குக் கிடைத்தால், அஃது அவனுக்கு மேன் மேலும் வளர்ச்சியில் குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்

அருப்பு அறா ஆக்கம்-கிளைத்தல் அறாத செல்வம். வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வம்; அருப்பு-அரும்பு. 522

3.அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

சுற்றத்தாரோடு மனங்கலந்து உறவாடாதவன் வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாது நீர் நிறைந்தாற் போலும்.

குளவளா-குளப்பரப்பு; கோடு-கரை.

கரையில்லாத குளம் நீர் நிரம்புதல் அரிது. அது போல் சுற்றத்தாரோடு மனங்கலந்து உறவாடாத வாழ்க்கை, வாழ்க்கை அன்று என்பது பொருள். 523

4.சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

சுற்றத்தார் தன்னைச் சூழ்ந்திருக்கும்படி அவர்களோடு அளவளாவி வாழ்தலே ஒருவன் செல்வத்தைப் பெற்ற பயன் ஆகும். 524

5.கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.

சுற்றத்தார் விரும்புவன கொடுத்தலும், இன்சொல் கூறுதலும் ஆகிய இரண்டனையும் ஒருவன் செய்ய வல்லவன் ஆனால், அவன் தொடர்ந்து வரத்தக்க பலப்பல சுற்றத்தாராலும் சூழப்படுவான்.

தொடர்ந்து வரலாவது-ஒருவர் பின் ஒருவர் தொடர்பு கூறிக் கொண்டு வருதல். 525

6.பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.

ஒருவன் மிக்க கொடையாளி ஆகவும், கோபத்தை விரும்பாதவனாகவும் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் இந்த உலகத்திலே எவரும் இலர்.

மருங்கு-பக்கம், இங்கே பக்கத்திலுள்ள சுற்றத்தார். 526

7.காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

காக்கைகள் தமக்குக் கிடைத்த உணவை மறைத்து வைக்காமல், தம் இனத்தை அழைத்து அவைகளோடு கலந்து உண்ணும். அப்படிப்பட்ட தன்மை உடையவர்களுக்கே, சுற்றத்தினரால் அடையக் கூடிய பலவகைச் செல்வங்களும் உள ஆகும்.

கரவா-மறைத்து வைக்காமல்; கரைந்து-அழைத்து. 527

8.பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.

அரசன் தன்னைச் சூழ்ந்துள்ள அனைவரையும் ஒரே தன்மையிற் பார்க்காமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப அவரவர்களைக் கவனித்தல் வேண்டும். அவ்விதம் அவன் செய்வானானால், அந்தச் சிறப்பினை நோக்கி, அவனிடம் சுற்றமாக இருந்து வாழ்பவர் பலர் ஆவார்.

பொது நோக்கம்-எல்லாரையும் ஒரு தன்மையாகக் கவனித்தல் 528

9.தமராகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.

முன்பு தன் சுற்றத்தினராக இருந்து பின் ஏதோ ஒரு காரணத்தால், தன்னை விட்டுப் பிரிந்து போனவர், அவ்விதம் பிரிய நேர்ந்ததற்கு உரிய காரணம் நீங்கியதும், தாமே வந்து சேர்வர்.

அமராமைக் காரணம்-அவ்விதம் பொருந்தியிராததன் காரணம்; இன்றி-நீங்கிய பின்.

தன் நடத்தையில் தவறு கண்டு பிரிந்து போனவர்களும், தன் தவற்றை உணர்ந்து ஒருவன் திருத்திக் கொள்வானானால், வலிய வந்து சேர்வார்கள். 529

10.உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.

தன்னிடமிருந்து ஒருவன் பிரிந்து சென்று, பிறகு ஒரு காரணம் குறித்துத் திரும்பி வருவானானால், அரசன் அவன் எண்ணிய உதவியைச் செய்து, அமைதியாக இருந்து, அவன் குணத்தையும் ஆராய்ந்து பார்த்து, அவனை உறவாகக் கொள்ளுதல் வேண்டும்.

உழை-இடம்; இழைத்து-அவனுக்கு வேண்டியதைச் செய்து; எண்ணி-ஆராய்ந்து பார்த்து.

நம்மை விட்டுப் பிரிந்து போனவர்களையும், அவர்களுக்கு வேண்டுவன புரிந்து, சுற்றத்தினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்விதம் சேர்த்துக் கொள்ளும் போது சிந்தித்துப் பார்த்தே சேர்த்துக் கொள்ள வேண்டும். 530

54. பொச்சாவாமை


1.இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

அளவு கடந்த கோபம் ஒருவனுக்கு மிகவும் தீமையினை விளைவிக்கும். அதனினும் தீமையைத் தரத் தக்கது ஒன்று உண்டு. அஃதாவது, மிகுந்த மகிழ்ச்சிக் களிப்பினால் உண்டாகும் மறதியேயாம்.

பொச்சாவாமை-மறவாமல்இருத்தல்; பொச்சாப்பு-மறதி; இறந்த வெகுளி-அளவு கடந்த கோபம்; உவகை மகிழ்ச்சி-மிக்க மகிழ்ச்சியால் வரும் களிப்பு, பேரானந்தம்; சோர்வு-மறந்திருக்கும் தன்மை, மறதி. 531

2.பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

நாள் தோறும் துன்பத்தைத் தரும் தரித்திரம் ஒருவன் அறிவினை முற்றிலும் கெடுக்கும். அது போல மறதி ஒருவன் புகழினை அடியோடு அழித்து விடும்.

கொல்லும்-முற்றிலும் கெடுத்து விடும்; நிச்ச நிரப்பு-நித்திய தரித்திரம்; நிரப்பு-தரித்திரம். 532

3.பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

உள்ளச் சோர்வால் மறதி உடையவர்கட்கும் புகழுடன் வாழும் வாய்ப்பு இல்லை. இது நீதி நூலாரின் கொள்கை மட்டும் அன்று; பல வகைப்பட்ட கொள்கையினையுடைய நூலாசிரியரும் இதே கொள்கையுடையராவர்.

புகழ்மை-புகழுடன் வாழும் தன்மை; எப்பால் நூலோர்- எப்படிப் பட்ட கொள்கையுடைய நூலாசிரியர்களும்; துணிவு-ஒப்ப முடிந்த கொள்கை, முடிவான கொள்கை. 533

4.அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

காடு, மலை முதலிய அரண்களுக்கு நடுவே இருந்தாலும், மனத்தில் அச்சத்தையுடையவர்களுக்கு அந்த அரண்களால் எந்த விதமான பயனும் இல்லை. அது போலப் பலப்பல தன்மைகளை உடையவராக இருந்தாலும், மனத்தில் மறதியை உடையவர்க்கு அவைகளால் பயன் இல்லை.

நன்கு-நன்மை; செல்வம் என்றும் பொருள் கூறலாம். 534

5.முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.

வரத்தக்க இடையூறுகளை முன்னதாகவே அறிந்து காத்துக் கொள்ளாமல் கவலையற்று மறந்து இருப்பவன், அந்த இடையூறு நேர்ந்த பிறகு, தன் பிழையை நினைத்து வருந்துவான்.

இழுக்கியான்-மறந்திருப்பவன்; ஊறு-உற்ற காலத்தில், தேர்ந்த போது; இரங்கி விடும்-வருந்துவான்; பின்னூறு இரங்கி விடும் - என்பதற்குப் பின்னால் வரக் கடவதாகிய நூற்றுக் கணக்கான துன்பங்களால் வருந்த வேண்டி வரும் என்றும் பொருள கூறலாம். 535

6.இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில்.

எவரிடத்திலும், எந்தக் காலத்திலும், தவறாமல் காட்டும்படி மறவாமை ஆகிய குணம் ஒருவரிடம் பொருந்தியிருத்தல் வேண்டும். அவ்விதம் இருப்பின் அதற்கு ஒப்பான நற்குணம் வேறு ஒன்றும் இல்லை.

இழுக்காமை-மறவாமை; வழுக்காமை-தவறாமை; வாயின் - வாய்த்தால், பொருந்தியிருந்தால்; ஒப்பது-சமமானது. 536

7.அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.

மறவாமை என்னும் கருவி கொண்டு, எதனையும் எண்ணிச் செய்தால், செய்வதற்கு அருமையானவை என்று எண்ணிச் செய்யாமல் விட்டு விட வேண்டிய செயல்களே இல்லை.

அரிய-அருமையானவை; பொச்சாவாக் கருவி-மற வாமை என்னும் ஆயுதம்; போற்றி-எண்ணி. 537

8.புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

அறிஞர்களால் சிறந்தவை என்று பாராட்டிச் சொல்லப்படும் செயல்களைப் போற்றிச் செய்தல் வேண்டும்; அவ்விதம் செய்யாமல், அவற்றை மறந்தவர்க்கு ஏழு பிறப்புக்களிலும் நன்மை இல்லை. 538

9.இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

ஒருவர் தம்முடைய மகிழ்ச்சியின் மிகுதியாலே தாம் இறுமாந்திருக்கும் போது, அவ்வாறு இருந்து அதன் காரணமாக வந்த மனச் சோர்வினால் அழிந்து போனவர்களை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

இகழ்ச்சி-மனச் சோர்வு; உள்ளுக-எண்ணிப் பார்ப்பாராக; மைந்துறுதல்-இறுமாந்திருத்தல், மறந்திருத்தல். 539

10.உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.

ஒருவர் தாம் அடைய எண்ணியதை உள்ளச் சோர்வில்லாமல் நினைந்து வரக் கூடுமானால், அவர் தாம் எண்ணியதை அடைதல் எளிதாகும்.

உள்ளியது-எண்ணியது; எய்தல்.அடைதல்; மன்-அசைநிலை; உள்ள-நினைக்க, இடை விடாது நினைக்க.

உள்ளச் சோர்வினை ஒழிப்பதற்கு இடைவிடாது நினைத்தல் வேண்டும். 540


55. செங்கோன்மை


1.ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து, அவன் வேண்டியவன் என்று அவன் மீது தாட்சண்யம் காட்டாமல், நடுநிலைமையோடு இருந்து, அறிஞர்களோடு கலந்து ஆராய்ந்து செய்யத் தக்கதைச் செய்வதே நீதி முறை ஆகும்.

ஓர்ந்து-ஆராய்ந்து; கண்ணோடல்-தாட்சண்யம் காட்டல், கருணையோடு பார்த்தல்; இறை-அரசன்; இங்கே நடுநிலைமை என்னும் பொருளில் வந்தது; முறை-நீதி நெறி.

செங்கோன்மை-செம்மை வாய்ந்த கோல் போல் எந்தப் பக்கமும் சாயாது நடுநிலைமையோடு இருத்தல். 541

2.வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.

உலகத்தில் உள்ள உயிர்கள் யாவும் மழையை நோக்கி உயிர் வாழ்கின்ற்ன. நாட்டில் உள்ள குடிகள் எல்லாரும் அரசனுடைய செங்கோலை (நீதி நெறியினை) எதிர்பார்த்தே வாழ்கின்றனர்.

வான்-மழை; உலகு-உலகில் உள்ள உயிர்கள்; கோல்-நீதி நெறி. 542

3.அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்ற்து மன்னவன் கோல்.

மேலுலக இன்பத்துக்காக ஞானிகள் எழுதிய தத்துவ நூலுக்கும், இல்லற் இன்பத்துக்காக அறிஞர்கள் இயற்றியுள்ள நீதி நூலுக்கும் முதற் காரணமாக இருப்பது அரசனுடைய செங்கோலே யாகும்.

அந்தணர்-செந்தண்மை உடையவர், ஞானிகள்; அந்தணர் நூல்- ஞான நூல்; அறம்-நீதி நூல். 543

4.குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

குடிமக்களை அன்போடு தழுவிக் கொண்டு, செங்கோல் செலுத்துகின்ற பேரரசனுடைய பாதங்களைத் தமக்கு அடைக்கலமாகப் பற்றிக் கொண்டு உலகில் உள்ள உயிர்கள் யாவும் நிலைத்து வாழும்.

அடிதழீஇ-பாதங்களைத் தமக்கு அடைக்கலமாகக் கொண்டு. (கடவுளுக்குச் சமமாக எண்ணி என்பது பொருள்.) 544

5.இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

நீதி நெறிப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டிலே பருவ மழையும், குறையாத விளைச்சலும் ஒன்று சேர்ந்து உள ஆகும்.

இயல்புளி-இயல்பால்; நாட்ட-நாட்டிலே உள; பெயல்-காலந் தவறாது பொழியும் பருவ மழை; விளையுள்-விளைச்சல்; தொக்கு-ஒன்று சேர்ந்து. 545

6.வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்.

மன்னனுக்குப் போரின் கண் வெற்றியைத் தருவது அவன் எறியும் வேல் அன்று: ஆட்சிக் கோலே ஆகும். ஆனால், அக்கோலும் கொடுங்கோலாக இராமல், நேர்மையான் செங்கோலாக இருத்தல் வேண்டும்.

கோடாது எனின்-கோணாமல் இருக்குமானால். 546

7.இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

உலகத்தையெல்லாம் அரசன் காப்பாற்றுவான்; அவன் நீதிமுறை தவறாது ஆட்சி புரிவானானால், அவனை அவன் ஆட்சி முறையே காப்பாற்றும்.

இறை-அரசன்; வையகம்-உலகம்; முறை-அரசாட்சி; மூட்டுதல்-தடைப்படுதல்; முட்டாச் செயின்-நீதிமுறைக்குத் தடை நேரும் போது, அத்தடை நேரா வண்ணம் ஆட்சி புரிதல். 547

8.எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

தம் குறைகளைத் தெரிவிக்க விரும்புகின்றவர்கள் எளிதில் பார்த்துப் பேசத் தக்க நிலையில் இருப்பவனாகி, அவர்கள் குறையினை ஆராய்ந்து பாராமல், நீதி முறை தவறி நடக்கின்ற அரசன். தாழ்ந்த நிலையை அடைந்தவனாகித் தானே அழிந்து போவான்.

எண்பதத்தான்-எவரும் எளிதில் வந்து தம் குறைகளை சொல்லக் கூடிய வகையில் எளிமையாக இருப்பவன்; ஓரா-ஆராய்ந்து பாராத; முறை செய்யா-நீதிமுறை செய்யாத; தண்பதம்-தாழ்ந்த பதவி; தானே கெடும்-பகைவரில்லாமலேயே தானே அழிந்து போவான். 548

9.குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

குடி மக்களைப் பிறர் துன்புறுத்தாதபடி காத்து, தானும் அவர்களை வருத்தாமல் காப்பாற்றிக் குற்றம் நேர்ந்தால், அக்குற்றத்துக்குத் தக்க வண்ணம் தண்டனை விதித்து அக்குற்றத்தைப் போக்குதல் அரசனுக்கும் பழி ஆகாது. அஃது அவன் கடமையே ஆகும்.

புறங்காத்தல்-காப்பாற்றுதல்; ஒம்புதல்-காப்பாற்றுதல், ஆதரவு தருதல்; குற்றம் கடிதல்-குற்றத்துக்குத் தக்க தண்டனை விதித்து அக்குற்றத்தை ஒழித்தல்; வடு-பழி, குற்றம். 549

10.கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்.

எந்த வகையினாலும் திருத்த முடியாமல் மிகவும் கொடியவர்களாய் இருப்போரை, அரசன் கொலைத் தண்டனை மூலம் தண்டித்தல், உழவன் நெற்பயிரைக் காப்பாற்றுவதற்காகக் களையைப் பிடுங்கி எறிவதற்குச் சமம் ஆகும்.

ஒறுத்தல்-தண்டித்தல்; பைங்கூழ்-நெற்பயிர்; களை கட்டல்-இடையூறாக இருப்பவர்களைப் போக்குதல்; நேர்-சமம். 550

56. கொடுங்கோன்மை


1.கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்(கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, நீதி அல்லாத செயல்களைச் செய்து ஒழுகும் அரசன், கொலைத் தொழிலைச் செய்வோரினும் கொடியவன் ஆவான்.

அலை-வருத்துதல்; அல்லவை-நீதி அல்லாதவை.

கொலை செய்வோரால் நேரும் துன்பம் ஒரு பொழுதே ஆகும். கொடுங்கோலரசனால் என்றும் துன்பம் ஆதலின் கொலை மேற்கொண்டாரினும் கொடுங்கோல் வேந்தன் கொடியவனாவான். 551

2.வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

ஆட்சிக் கோலைக் கையில் ஏந்திய அரசன் கொடுங்கோலனாய்க் குடிகளைப் 'பொருள் தா' என்று வேண்டிக் கேட்டல், வேல் ஏந்தி நிற்கும் ஆறலைக் கள்வன் வழிச் செல்வோரைப் 'பொருள் கொடு’ என்று அச்சுறுத்திக் கேட்கும் செயலைப் போன்றதாகும்.

இடு-தா, கொடு; இரவு-வேண்டிக் கேட்டல். 552

3.நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

ஒவ்வொரு நாளும் தன் ஆட்சியில் ஏற்படும் குற்றங்குறைகளை ஆராய்ந்து, ஆட்சி செலுத்தாத அரசன் நாள் தோறும் தன் நாட்டினை இழந்து கொண்டே வருவான். 553

4.கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.

அமைச்சர், அறிஞர் முதலானவர்களோடு கலந்து ஆலோசிக்காமல், நீதி நெறி தவறி எதையும் செய்யும் அரசன், பொருளையும், குடிகளையும் ஒரே சமயத்தில் இழந்து விடுவான்.

கூழ்-பொருள்; ஒருங்கு-ஒரே சமயத்தில்; கோல் கோடி-நீதி நெறி தவறி; சூழாது-கலந்து ஆலோசிக்காமல்; (தானே எண்ணிப் பாராமல் என்றும் கூறலாம்) 554

5.அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

அரசனது கொடுங்கோல் ஆட்சியால் துன்பப்பட்டு, அத்துன்பத்தைத் தாங்க முடியாமல் அழுது சிந்தும் குடி மக்களின் கண்ணீர்த் துளிகளே, அந்த அரசனது செல்வத்தைத் தேய்த்து அழிக்கும் ஆயுதம் ஆகும்.

அல்லல்-துன்பம்; ஆற்றாது-தாங்க முடியாமல்; படை-ஆயுதம். 555

6.மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

அரசருக்கு நிலை பேறுடைய புகழைத் தருவது அவர் தம் நீதி வழுவாத செங்கோல் முறையே ஆகும். அந்தச் செங்கோல் முறைமை இல்லையானால், அவர்க்குப் புகழ் நிலை பெறாமற் போய் விடும்.

மன்னுதல்-நிலை பெற்றிருத்தல்; மன்னா-நிலை பெறமாட்டார்; ஒளி-புகழ். 556

7.துளியின்மை ஞாலத்திற்கு ஏற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு,

மழை இல்லாமை இவ்வுலகில் வாழும் உயிர்கட்கு எத்தகைய துன்பத்தை தரும்? அவ்வாறே ஓர் அரசன் கீழ் வாழும் குடிகட்கு அவன் அருள் இல்லாதிருப்பது துன்பத்தைத் தரும்.

துளி-மழைத் துளிகள்; ஞாலம்-உலகம், இங்கே உலகில் உள்ள உயிர்களைக் குறிக்கும்;அளி-கருணை. 557

8.இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.

நீதி முறைப்படி ஆட்சி புரியாத கொடுங்கோல் அரசன் கீழ் வாழ நேர்ந்தால், பொருள் அற்ற வறுமை நிலையை விடச் செல்வத்தைப் பெற்றிருக்கும் நிலை மிகவும் துன்பமானது.

இன்மை-பொருள் இன்மை, வறுமை; இன்னாது-துன்பம் தருவது; உடைமை-பொருள் உடைமை. 558

9,முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

அரசன் ஒழுங்கு தவறி ஆட்சி செய்தால், பருவ மழையானது தவறி மேகம் மழை பொழிதலைச் செய்யாது.

முறை-ஒழுங்கு, ஆளும் நெறி; உறை-மழை; கோடி-தவறி; வானம்-மேகம்; பெயல் ஒல்லாது-பெய்தலைச் செய்யாது;. கொடுங்கோல் ஆட்சியினால் இயற்கை நியதிகளும் மாறி விடும் என்பது கருத்து. 559

10.ஆபயன் குன்றும்; அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

அரசன் குடிமக்களை முறைப்படி காவா விட்டால், பசுக்கள் பால் தருவது சுருங்கி விடும் : அந்தணர்களும் அற நூல்களை மறந்து விடுவர்.

ஆ பயன்-பசுவினிடமிருந்து பெறப்படும் பால் ஆகிய பயன்; குன்றும்-குறையும்; அறுதொழிலோர்-அந்தணர்; நூல்-அறநூல் அல்லாத வேதம்.

ஆபயன் என்பதற்கு முயற்சியால் ஆகும் பயன் என்றும் பொருள் கூறுவர். 'அறிதொழிலோர்’ என்றும் பாட பேதம் உண்டு. அறிதொழிலோர் என்பதற்கு ஓதி அறியும் தொழிலையுடைய புலவர் என்றும் பொருள் சொல்லுவர். 560


57. வெருவந்த செய்யாமை


1.தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

ஒருவன் குற்றம் செய்யின் அந்தக் குற்றத்துக்குத் தகுந்தபடி ஆராய்ந்து பார்த்து, மீண்டும் அவன் குற்றம் செய்யாதபடி அந்தக் குற்றத்துக்கு ஏற்ப அவனைத் தண்டிப்பவனே அரசன் ஆவான்.

தக்காங்கு-தகுந்தபடி; நாடி-ஆராய்ந்து பார்த்து; தலைச் செல்லா வண்ணம்-மீண்டும் அக்குற்றத்தை அவன் செய்யாதபடி; ஒத்தாங்கு-பொருந்திய வகையில், ஏற்றபடி; ஒறுத்தல்- தண்டித்தல்.

வெருவந்த செய்யாமை-அஞ்சத்தக்க செயல்களைச் செய்யாதிருத்தல். 561

2.கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.

செல்வம் தம்மிடம் நெடுங்காலம் நீங்காமல் இருக்க விரும்புகின்றவர், குற்றம் செய்தோரைத் தண்டிக்கத் தொடங்கும் போது, அளவு கடந்த தண்டனையை அளிக்கப் போவது போல் தொடங்கிக் குறைவாகத் தண்டித்தல் வேண்டும்.

கடிது ஓச்சல்-கோபத்தால் வேகமாகக் கோலினை உயர்த்திப் பிடித்தல்' மெல்ல எறிதல்-அளவில் மீறாதபடி தண்டித்தல்; ஆக்கம்-செல்வம். 562

3.வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

குடிகள் அஞ்சத்தக்க கொடிய செயல்களைச் செய்து ஆட்சி புரியும் கொடுங்கோல் அரசனாக ஒருவன் இருப்பானேயானால், அந்த அரசன் நிச்சயமாக விரைவிலேயே அழிந்து போவான்.

வெருவந்த-அச்சம் தரும் செயல்கள்; வெங்கோலன்-கொடுங்கோல் மன்னன்; ஒருவந்தம்-நிச்சயமாக. 563

4.இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உரைகடுகி ஒல்லைக் கெடும்.

'இந்த அரசன் கொடியவன்' என்று பலராலும் (வயிறெறிந்து) கூறப்படும் பழிச் சொல்லுக்குக் காரணமான அரசன், தன் வாழ்நாள் குறைந்து, விரைவிலேயே இறந்து படுவான்.

இன்னாச்சொல்-பழிச்சொல்;,துன்பம் தரும் சொல்;உறை-வாழ்நாள், ஆயுட்காலம்; கடுகுதல்-விரைதல். 564

5.அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண்டு அன்னது உடைத்து.

எளிதில் காண முடியாத நிலைமையினையும், காண நேரினும் சிடுசிடுப்பான முகத்தினையும் உடைய ஒருவனது பெரிய செல்வம், பேயினால் காக்கப்பட்ட செல்வத்தைப் போன்று எவர்க்கும் பயன்படாத தன்மையுடையதாய் இருக்கும்.

அருஞ் செவ்வி-காண்பதற்கு அருமையான காலம், கண்டு பேச முடியாத தன்மை; இன்னா முகம்-இனிமையற்ற முகம், சிடுசிடுப்பான முகம்; பேய் கண்டன்னது-பேயால் காக்கப்படும் செல்வம் போன்றது. 565

6.கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.

ஒருவன் கடுமையான சொற்களைச் சொல்லுபவனாகவும், தாட்சண்யம் சிறிதும் இல்லாதவனாகவும் இருந்தால், அவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இன்றி அப்போதே அழிந்து விடும்.

கண்ணிலன்-கண்ணோட்டம் இல்லாதவன்; கண்ணோட்டம்-தாட்சண்யம். 566

7.கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.

கடுமையான சொல்லும், அளவுக்கு மீறிய தண்டனையும் அரசனுடைய பகைவரை வெல்லும் வன்மையைத் தேய்க்கும் அரம் ஆகும்.

கையிகந்த-அளவுக்கு மேற்படுதல்; தண்டம்-தண்டனை; அடுமுரண்-(பகைவரை) வெல்லும் வலிமை. 567

8.இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறின் சிறுகும் திரு.

ஒர் அரசன் தனக்கு இன்பமாக உள்ள அமைச்சர், சேனைத் தலைவர், பிற அறிஞர்கள் ஆகிய இவர்களோடு கலந்து ஆராயாமல், தனக்குள்ள சினத்தையே துணையாகக் கொண்டு பிறர் மேல் சீறி விழுவானானால், அவன் செல்வம் நாளடைவில் சுருங்கி விடும்.

இனம்-மந்திரி, புரோகிதர், சேனாதிபதி, தூதர், சாரணர் ஆகிய ஐவகை அரசியல் தலைவர்கள்; ஆற்றி எண்ணுதல்-கலந்து ஆராய்தல்; சிறுகும்-சுருங்கும். 568

9.செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.

போர் செய்ய நேர்ந்த போது, தன் பகைவனை வளைக்கச் சென்ற அரசன் முதலில் தனக்கு அரண் அமைத்துக் கொள்ளாமல் இருப்பானேயானால், போதிய பாதுகாவல் இன்மையால், பகைவனைக் கண்டு அஞ்சி விரைவில்அழிவான்.

அரசன் தன் நாட்டில் முன்னதாகவே மதில், அரண், நீர் அரண் முதலிய பலவகை அரண்களையும் வகுத்துக் கொள்ளாவிடின் திடுமெனப் போர் நேர்ந்த போது, போதிய பாதுகாவல் இல்லாமையால் அச்சமுற்று விரைவில் அழிவான் என்றும் பொருள் கொள்ளலாம்.

செரு-போர்; சிறை செய்யா-அரண் அமைத்துக் கொள்ளாத; வெருவந்து-(பகைவனைக் கண்டு) அஞ்சி; வெய்து விரைவில். 569

10.கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.

கொடுங்கோல் அரசன் கல்வி அறிவு சிறிதும் இல்லாதவர்களைத் தன் கொடிய ஆட்சிக்குத் துணையாக சேர்த்துக் கொள்வான். அந்தக் கூட்டத்தினரை அல்லாமல் பூமிக்குப் பாரம் வேறு வேண்டியதில்லை.

கொடுங்கோல் அரசனும் கல்வியறிவு இல்லாத அவன் சுற்றமும் ஆகிய அக்கூட்டம் பூமிக்குப் பாரமே அன்றி, வேறு எதற்கும் பயன் இல்லை என்பது பொருள்.

பிணித்தல்-துணையாகச் சேர்த்துக் கொள்ளல்; நிலக்குப்பொறை -பூமிக்குப் பாரம். 570

58. கண்ணோட்டம்


1.கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால், இந்த உலகம் நிலை பெற்றிருக்கின்றது.

கண்ணோட்டம்-தாட்சண்யம்; கழி- மிகுதி; கழிபெரும்-மிகச் சிறந்த; காரிகை-அழகு.

இந்த உலகம் தாட்சண்யத்துக்குக் கட்டுபட்டது. என்பது கருத்து. 571

2.கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

கண்ணோட்டத்தினால்தான் இந்த உலக ஒழுக்கம் நடைபெற்று வருகின்றது. கண்ணோட்டம் சிறிதும் இல்லாதவர் இவ்வுலகத்தில் இருத்தல், இந்தப் பூமிக்கே ஒரு பெரிய பாரம்.

உலகியல்-உலக ஒழுக்கம், உலக ஒழுங்கு; உண்மை-இருத்தல், உயிர் வாழ்ந்திருத்தல். 572

3.பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.

பாட்டோடு பொருந்துதல் இல்லா விட்டால், இசையினால் என்ன பயன்? அதுபோலக் கண்ணோட்டம் இல்லாதபோது கண்ணாலும் பயன் இல்லை.

பண்-இசை; இயைபு-பொருந்துதல்; இல்லாத கண்-இல்லாத போது. 573

4.உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.

வேண்டிய அளவு தாட்சண்யம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போலத் தோற்றம் அளித்தல் அல்லாமல், வேறு என்ன நன்மையைச் செய்யும்? அவற்றால் எவ்வித தன்மையும் இல்லை.

கண்ணோட்டம் இல்லாத கண்கள் இருந்தும் பயன் இல்லை. 574

5.கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.

ஒருவருடைய கண்ணுக்கு ஆபரணம் போன்று அழகினைத் தருவது கண்ணோட்டம் என்னும் குணமே ஆகும். அஃது இல்லையானால், அது கண் அன்று புண் என்றே கருதப்படும்.

அணிகலம்-ஆபரணம். 575

6.மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர்.

கண்ணைப் பெற்றிருந்தும், அதற்குரிய தாட்சண்யம் என்னும் கண்ணோட்டம் இல்லாதவர், மண்ணோடு பொருந்தியிருக்கின்ற மரத்துக்குச் சமம் ஆவர்.

மண்ணின் மீது பொருந்தியிருக்கின்ற மரத்துக்கும் கணுக்கள் என்ற கண்கள் இருக்கின்றன. அந்தக் கணுக்கள் மரத்தின் கண்கள் போன்று காட்சி அளிப்பினும், கண்ணுக்குரிய கண்ணோட்டம் இல்லாதவை. ஆதலின், இந்த உவமை மிகவும் பொருத்தம் ஆகும்.

'மண்ணோடு இயைந்த மரத்தனையர்' என்பதற்குச் சுவரில் எழுதிய கற்பக மரம் போன்றவர் என்றும், கண்ணம், மரம் முதலியவைகளால் செய்யப் பெற்ற கண்களையுடைய மரப்பாவை போன்றவர் என்றும் பொருள் கூறுவார் 576

7.கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.

கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணில்லாதவரே ஆவர்; ஏன் என்றால், கண்ணுடையவர் கண்ணோட்டம் இல்லாமல் இரார்.

கண்களுக்கும் கண்ணோட்டத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு இதனால் விளக்கப்படுகிறது. 577

8.கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.

தம் செயலில் வழுவாமல், கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவருக்கு இவ்வுலகம் உரியதாகின்றது.

நடுநிலைமையோடு கண்ணோட்டம் செய்தல் வேண்டும். தாட்சண்யம் காட்டுதலில் நண்பன், அயலான் முதலிய வேறுபாடு கூடாது. கண்ணோட்டம் கருதித் தாம் மேற்கொண்ட செயலிலும் தவறுதல் கூடாது. இத்தகையோர் நெடுங்காலம் உரிமையோடு வாழத் தகுதியுடையவர் ஆவர். 578

9.ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

தம்மைத் துன்புறுத்தும் குணமுடைய மிகவும் கொடியவரிடத்தும் அவர் புரியும் குற்றத்தைப் பொறுத்துக் கண்ணோட்டம் உடையவராய் இருத்தலே தலைசிறந்த குணம் ஆகும்.

ஒறுத்தாற்றுதல்-துன்புறுத்தல்; பொறுத்து ஆற்றும் பொறுமையோடு இருந்து கண்ணோட்டம் புரியும். 579

10.பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

எல்லாராலும் விரும்பத் தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர். தம் கண்களுக்கு எதிரிலே மதிக்கத் தக்க ஒருவர் விடத்தினைக் குவளையில் பெய்து உண்ணும்படி தம்மை வேண்டிக் கொண்ட போதும், அந்த வேண்டுதலை எப்படி மறுப்பது என்று எண்ணி, அவர் தந்த விடத்தை உட்கொண்டு அவரிடம் மன அமைதியோடு இருப்பர்.

நஞ்சு-விடம்; அமைவர்-மன அமைதியோடு இருப்பர்; நயத்தக்க-பலராலும் விரும்பத்தக்க; நாகரிகம்-மரியாதை, கண்ணோட்டம், தாட்சண்யம். 580

59. ஒற்றாடல்


1.ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

ஒற்றரும் புகழமைந்த நீதி நூலும் ஆகிய இவை இரண்டனையும் அரசன் தன் இரண்டு கண்களாகத் தெளிதல் வேண்டும்.

ஒற்றன்-பகைவர், அயலார், நண்பர் என்னும் மூன்று வகையினரிடத்தும் நிகழும் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு அரசனால் அனுப்பப்படும் வேவுகாரன்; ஒற்று- உளவு; இங்கே உளவறிந்து சொல்லும் ஒற்றனைக் குறிக்கும்; உரைசான்ற-புகழ் அமைந்த; தெற்றென்க-தெளிக.

ஒற்று ஊனக்கண்ணும், உரைசான்ற நீதிநூல் ஞானக் கண்ணும் ஆகும் என்க. 581

2.எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

எல்லோரிடத்திலும் நிகழ்கின்ற எல்லாவற்றையும் ஒற்றர் மூலமாக எப்போதும் விரைந்து அறிந்து கொள்ளுதல் அரசனுக்கு உரிய தொழிலாகும்.

எஞ்ஞான்றும்-எப்போதும்; ஞான்று-பொழுது; வல்லறிதல்-விரைவில் அறிந்து கொள்ளுதல்; எல்லாரிடத்திலும் என்பது சுற்றத்தார், பகைவர், அயலார், நண்பர் என்னும் நான்கு வகையினரையும் குறிக்கும். 582

3.ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது இல்.

ஒற்றன் வாயிலாக நாட்டில் நிகழும் செய்திகளை எல்லாம் மறைவாக இருந்து அறிந்து, அவற்றின் பயனை ஆராய்ந்து உணராத அரசன் வெற்றி பெறத் தக்க வழி யாதும் இல்லை.

ஒற்றினான்-ஒற்றன் வாயிலாக; ஒற்றி-மறைவாகக் கேட்டறிந்து; கொற்றம்-வெற்றி. 583

4.வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.

அரச காரியஞ் செய்பவர், அரசனுக்கு நெருங்கிய சுற்றத்தினராய் ஆராய்வோனே ஒற்றன் ஆவான். 584

5.கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

பிறர் சந்தேகதேகப்படாத வேடத்தோடு, பிறர் சந்தேகம் கொண்டு பார்க்க நேரினும், அதற்குச் சிறிதும் அஞ்சாது, எத்தகைய சமயத்திலும், தன் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவான்.

கடா அ உருவொடு-இவர் யார் என ஐயுற்று வினவாத வடிவத்தோடு, வேடத்தோடு; கண்ணஞ்சாது-சந்தேகம் கொண்டு பார்க்கும் கண்களுக்குச் சிறிதும் அஞ்சாமல்; உகாஅமை-உமிழாமை, இங்கே சொற்களை வெளியிடாமை என்பது பொருள். 585

6.துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.

துறவிகளின் கோலம் தாங்கி, உட்செல்லுவதற்கு அரிய இடங்களில் எல்லாம் சென்று ஆராய்ந்து, பகைவர் தன் மீது சந்தேகம் கொண்டு எவ்வளவு துன்புறுத்தினாலும் சோர்வடைந்து தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றன் ஆவான்.

துறந்தார்-துறவிகள்; படிவம்-வேடம், கோலம்; இறந்து ஆராய்தல்-உட்செல்லுதற்கு அரிய இடங்களில் எல்லாம் சென்று ஆராய்தல். 586

7.மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.

மறைவாகப் பிறர் புரிந்த செயல்களையும் பிறர்பால் கேட்டு அறிய வல்லவனாய், அவ்விதம் அறிந்த செய்திகளைச் சந்தேகம் இல்லாமல் ஆராய்ந்து தெளிந்து துணிய வல்லவனே ஒற்றன ஆவான்.

மறைந்தவை-மறைவாகச் செய்யும் செயல்கள்; கேட்க வற்றாகி- கேட்டறிய வல்லவனாகி. 587

8.ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

ஒர் ஒற்றன் மறைவாக இருந்து கேட்டு அறிந்து வந்த செய்தியை, மற்றுமோர் ஒற்றனாலும் அறிந்து ஒப்புமை கண்ட பின்பு உண்மை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒற்று ஒற்றித் தந்த பொருள்-ஒற்றன் மறைவாக இருந்து கேட்டு அறிந்து வந்த செய்தி; ஒற்றிக் கொளல்-கேட்டறிந்து ஒத்துப் பார்த்து உண்மை அறிக. 588

9.ஒற்றொற்று உணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்.

ஒர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி அனுப்பி ஆளுதல் வேண்டும். அங்ஙனம் ஒன்றைப் பற்றி ஆயத் தனித்தனியே மூன்று ஒற்றர்களை அனுப்பி, அம்மூவரும் அறிந்து வந்த செய்திகள் ஒத்திருந்தால், அச்செய்தி உண்மையானது என்று தெளிதல் வேண்டும். 589

10.சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தா னாகும் மறை.

ஒற்றர்கட்குச் செய்யும் சிறப்புக்களைப் பலரும் அறியும் வண்ணம் வெளிப்படையாகச் செய்தல் கூடாது. அப்படிச் செய்தால் அந்த அரசன் தன் இரகசியச் செய்திகளைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

சிறப்பு-பரிசு, பட்டம் முதலியன அளித்தல்; புறப்படுத்தான்- பலரும் அறியச் செய்தவன்; மறை-இரகசியச் செய்திகள். 590

60. ஊக்கம் உடைமை


1.உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

ஒருவர் 'உடையவர்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதற்கு உரியதாய் இருப்பது ஊக்கம் என்பதே ஆகும். அந்த ஊக்கம் என்பதை ஒருவர் பெற்றில்லாமல், வேறு எதைப் பெற்றிருந்தாலும் பெற்றிருப்பவர் ஆக மாட்டார்.

உடையவர்-பெற்றிருப்பவர்; ஊக்கம்-மனச் சோர்வு இல்லாமல் உள்ளக் கிளர்ச்சியோடு ஒரு வேலையைச் செய்வதற்கு ஏற்றதாய் இருக்கும் தன்மை. 591

2.உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

ஒருவருக்கு ஊக்கம் என்னும் உள்ளக் கிளர்ச்சியே உடைமையாகும். பொருள் உடைமை நிலை பெற்று இராது, நீங்கிப் போய்விடும்.

உள்ளம்-மனம்; இங்கே உள்ளத்திலிருந்து உண்டாகும் மயக்கம் என்னும் குணத்தைக் குறிக்கும். 592

3.ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.

நிலை பெற்ற ஊக்கத்தைத் தம் கைப்பொருளாக உடையவர் செல்வம் இழந்த போது அதனை இழந்து விட்டதாக வருத்தப்பட மாட்டார்.

ஆக்கம்-செல்வம்; அல்லாவார்-வருந்தார்; ஒரு வந்தம்-நிலை பேறு; கைத்து-கைப்பொருள். 593

4.ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையான் உழை.

தளர்ச்சியில்லாத ஊக்கம் உடையவனிடம் செல்வமானது தானே அவன் உள்ள இடத்துக்கு வழி கேட்டுக் கொண்டு செல்லும்.

அதர்-வழி; வினாய்-வினவி; அசைவு இலா-உள்ளத் தளர்ச்சி இல்லாத; உடையான் உழை-உடையானிடம். 594

5.வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

நீர்ப் பூக்களின் தாளின் நீளம் அவை நிற்கும் நீரின் அளவினதாக இருக்கும்; அது போல் மக்களின் உயர்வு, அவர் தம் ஊக்கத்தின் அளவினதாகும்.

மலர் நீட்டம்-பூக்களின் தாள் நீட்சி; மாந்தர்-மக்கள். 595

6.உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

நினைப்பதெல்லாம் உயர்வுடையதாகவே இருத்தல் வேண்டும். ஊழ்வலியினால் அது முடியாமற் போனாலும், அந்த எண்ணம் இகழப்படாத தன்மையுடையது.

அது தள்ளினும்-அந்த எண்ணம் முடியாமற் போனாலும்; 'ஊழ்வினை' தடுத்தாலும், என்றும் கொள்ளலாம், 596

7.சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றும் களிறு.

யானையானது தன் உடம்பிலே புதையுண்ட அம்புத் தொகுதிகளால் புண்பட்டு இருந்தாலும் சிறிதும் தளர்ச்சியடையாமல், தன் பெருமையை நிலை நாட்டும்; அது போல ஊக்கம் உடையவர் தாம் எண்ணிய உயர்வுக்கு அழிவு வந்த போதும், உள்ளத் தளர்ச்சியடையாமல், தம் பெருமையை நிலை நாட்டுவர்.

உரவோர்-உள்ள வலிமையுடையோர், ஊக்கம் உடையோர்; பாடூன்றும்-பெருமையை நிலை நிறுத்தும்; களிறு-ஆண் யானை. 597

8.உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.

இவ்வுலகத்தாருள் யாம் வண்மையுடையோம் என்று எண்ணி மகிழும் பெருமிதத்தினை ஊக்கம் இல்லாதவர் அடைய மாட்டார்.

வள்ளியம்-வண்மையுடையோம்; வண்மை-ஈகைக் குணம்; ;செருக்கு-பெருமிதம். 598

9.பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

யானையானது பருத்த உடம்பினையுடையது; அன்றியும், கூர்மையான கொம்புகளையும் உடையது. அவ்விதம் இருந்தும் (ஊக்க மிகுதியினையுடைய) புலி தாக்கினால், அதற்கு யானை அஞ்சும்.

மிக்க உடல் வலியும், ஆயுதங்களின் சிறப்பும் உடையராயினும் ஊக்கம் இலராயின், அஞ்சுவர் என்பது பொருள்.

பரியது-பருத்த உடம்பினையுடையது; கோட்டது-கொம்பினை யுடையது; வெரூஉம்-அஞ்சும். 599

10.உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரமக்கள் ஆதலே வேறு.

ஒருவனுக்கு வலிமையாவது ஊக்கமிகுதியே ஆகும்; அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களுக்குச் சமமே ஆவர்; அவருக்கும் மரங்கட்கும் உள்ள வேறுபாடு உருவ வேறுபாடே ஆகும்; வேறு வேறுபாடு இல்லை .

உரம்-வலிமை; உள்ள வெறுக்கை-ஊக்க மிகுதி; வெறுக்கை-மிகுதி; மக்கள் ஆதலே வேறு-மரங்களுக்கும் இந்த மனித மரங்களுக்கும் உள்ள வேறுபாடு உருவ வேறுபாடே அன்றிப் பிறிது இல்லை.

நல்ல அறிவும், தொழில் முயற்சியும் இல்லாமையால் இவர் மரங்கட்குச் சமம் ஆவர் என்பது பொருள். 600

61. மடி இன்மை


1.குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்

ஒருவன் பிறந்த குடும்பமாகிய மங்காத விளக்கு அவனுடைய சோம்பலாகிய மாசு மேல் படிய ஒளி மங்கி முடிவில் அணைந்து போகும்.

குடி-குடும்பம்; குன்றா விளக்கம்-மங்காத ஒளி விளக்கு, குறைவில்லாத ஒளி; மடி-சோம்பல்; மாசு-குற்றம், புகை, சிட்டம் முதலியன; ஊர-மேன்மேல் படிய; மாய்தல்-அழிதல். 601

2.மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்

தாம் பிறந்த குடும்பத்தை மேன்மேலும் சிறப்புடைய குடும்பமாகச் செய்ய விரும்புகின்றவர், சோம்பலைச் சோம்பாமல் ஒழிக்க முயலுதல் வேண்டும்.

மடி-சோம்பல்; மடியா-சோம்புதல் இல்லாமல்; 'மடியா’ என்பதற்கு மடித்து அல்லது கெடுத்து என்றும் பொருள் கூறலாம்: ஒழுகல்-நடத்துவாராக; குடியாக-சிறந்த குடும்பமாக. 602

3.மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து

சோம்பலைத் தன்னிடம் கொண்டு ஒழுகும் அறிவில்லாதவன் பிறந்த குடும்பம் அவன் அழிவதற்கு முன்னதாகவே அழிந்து விடும்.

மடிமடிக் கொண்டு-சோம்பலைத் தன் மடியில் கொண்டு; பேதை-அறிவில்லாதவன். 603

4.குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு

சோம்பலில் ஆழ்ந்து சிறந்த முயற்சி இல்லாதவராய் இருந்து வருபவர்க்குத் தம் குடும்பத்தின் பெருமை அழிந்து, குற்றமும் அதிகப்படும்.

மடிதல்-அழிதல், ஆழ்தல்;மாண்பு-சிறந்த; உஞற்று இலவர்க்கு-முயற்சி இல்லாதவர்க்கு. 604

5.நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

விரைந்து செய்ய வேண்டியதை நீடித்துச் செய்தலும், மறதியும், சோம்பலும், அளவுக்கு மீறிய துாக்கமும் ஆகிய இந்த நான்கு குணங்களும் கெட்டு அழியும் தன்மை வாய்ந்தவர்கள் விரும்பி ஏறும் மரக்கலமாகும்.

நெடுநீர்-காலம் நீடித்துச் செய்யும் குணம்; கெடுநீரார்-கெட்டு அழியத் தக்க தன்மை வாய்ந்தவர்: காமம்-விருப்பம்; கலம்-மரக்கலம், கப்பல்.

'காமக்கலன்’ என்பதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம்’ என்றும் பொருள் கூறுவர். 605

6.படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

இந்தப் பெரிய உலகத்தையே தமக்கு உரிமையானதாக உடைய ஒரு பேரரசரின் உறவு வலிய வந்து சேர்ந்த காலத்திலும், சோம்பலையுடையவர் அந்தச் சேர்க்கையினால் சிறந்த பயனை அடைதல் அரிது.

படி-பூமி; பற்று-உறவு (செல்வம் என்றும் பொருள்); மாண்பயன்-பெரும் பயன்; எய்தல்-அடைதல்.

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் என்பதற்கு இந்த உலகம் முழுவதும் ஒரு குடையின் கீழ் வைத்து ஆண்ட அரசரது செல்வம் தாமே வந்து சேர்ந்தாலும் என்றும் பொருள் கூறலாம். 606

7.இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

சோம்பியிருத்தலை விரும்பிச் சிறந்த முயற்சியைப் புரியாதவர் பிறர் இடித்துக் கூறி இகழ்ந்துரைக்கும் சொல்லையும் கேட்பதற்கு உரியவராய் இருப்பர்.

இடிபுரிதல்-இடித்துக் கூறுதல், கண்டித்துக் கூறுதல்: எள்ளுஞ் சொல்-இழி சொல். 607

8.மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.

ஒரு நல்ல குடும்பத்திலே பிறந்தவனிடம் சோம்பலானது வந்து சேருமானால், அஃது அவனுடைய பகைக்கு அவனை அடிமையாக்கி விடும். 608

9.குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.

தன்னை அடிமையாக்கிக் கொண்டிருக்கும் சோம்பலை ஒருவன் ஒழித்து விடுவானானால், அஃது அவன் குடும்பத்திலும், அக்குடும்பத்தை ஆளும் தன்மையிலும் உள்ள குற்றங்களை எல்லாம் தீர்த்து விடும்.

மடியாண்மை-சோம்பலானது தன்னை அடிமையாக்கிக் கொண்டிருக்கும் தன்மை. 609

10.மடியிலா மன்னவன் எய்தும் அடியளங்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

தன் பாதத்தினாலே உலகத்தை அளந்த இறைவன் தாவிய நிலப் பரப்பு முழுவதையும் சோம்பல் இல்லாத ஒர் அரசன் ஒருங்கே அடைதல் கூடும்.

எய்துதல்-அடைதல்; அடி அளந்தான்-திருமால்; தா அயது-தாவி அளந்து; ஒருங்கு-ஒரே சமயத்தில். 610

62. ஆள்வினை உடைமை


1.அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

நாம் இவ்வினையைச் செய்து முடித்தல் மிகவும் அருமையானது என்று எண்ணி, மனத்தளர்ச்சி அடைதல் கூடாது. முயற்சியானது அச்செயலைச் செய்து முடித்தற்கு ஏற்ற பெருமையைத் தரும்.

ஆள்வினை உடைமை-விடா முயற்சி உடைமை; அசாவுதல்- தளர்ச்சி அடைதல்.

எவ்வளவு பெரிய செயலாக இருப்பினும் முயற்சியினால் செய்து முடிக்கலாம் என்பது கருத்து. 611

2.வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

ஒரு வேலையை முற்றும் செய்து முடிக்காமல் அரைகுறையாக விட்டவரை உலகமும் கை விட்டு விடும். ஆதலால், செய்யும் தொழிலில் (அரைகுறையாகச் செய்து) அதைக் கெடுத்து விடுதலைத் தவிர்க.

வினைக்கண்-வேலையில்; வினைகெடல்-தொழிலைக் கெடுத்து விடுதல்; ஒம்பல்-தவிர்க, ஒழிக; வினைக்குறை-அரைகுறையாக வேலை செய்தல்; தீர்த்தார்-கை விட்டவர்; தீர்த்தன்று-விட்டது 612

3.தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு.

பிறருக்கு உதவி செய்தல் என்னும் பெருமிதம் முயற்சி என்னும் உயர்ந்த குணத்திலே நிலைத்திருக்கிறது. 613

4.தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

முயற்சி சிறிதும் இல்லாதவன் பிறருக்கு உதவி செய்பவனாக இருத்தல், படையைக் கண்டாலே அஞ்சும் பேடி தன் கையில் வாளை எடுத்து ஆளும் தன்மை போல் நிறைவேறாத செயலாகவே முடியும்.

பேடி-பெண் தன்மை மிகுந்து பெண் என்றும் ஆண் என்றும் சொல்ல இயலாத தன்மை உடையவர். 614

5.இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

இன்பம் அனுபவித்தலை விரும்பாதவனாகித் தான் மேற்கொண்ட செயலை முடித்தலையே விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தினை நீக்கி, அவர்தம் வாழ்வாகிய மாளிகையைத் தாங்கும் தூண் போன்றவன் ஆவான். 615

6.முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தை வளர்க்கும். முயற்சி செய்யாமல் இருத்தல் ஒருவனை வறுமையில் சேர்த்து விடும்.

திரு-செல்வம்; ஆக்கும்-வளர்க்கும்; முயற்றின்மை-முயற்சி இல்லாமை; இன்மை-வறுமை; புகுத்தி விடும்-அடைவித்து விடும். 616

7.மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

சோம்பலையுடையவன் இடத்திலே கரிய நிறமுடைய மூதேவி தங்கியிருப்பாள் என்று கூறுவர். சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் தங்கியிருப்பாள்.

மடி-சோம்பல், சோம்பலுடையவன்; மா-கரிய நிறம்; முகடி-மூதேவி; தாள் உளாள்-முயற்சியில் தங்கியிருப்பாள்; தாமரையினாள்-தாமரைப் பூவில் வாழும் இலக்குமி,திருமகள். 617

8.பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

முயற்சிக்குத் தகுந்த பலனைத் தருகின்ற விதி இல்லாமல் இருத்தல் யார்க்கும் குற்றம் ஆகாது. அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே குற்றம் ஆகும்.

பொறி-விதி. ஊழ், கண், காது முதலிய உறுப்புக்களுமாம்; பழி-குற்றம்; அறிவறிந்து-அறிய வேண்டுவனவற்றை அறிந்து; ஆள்வினை-முயற்சி. 618

9.தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

செய்து முடிக்க முயன்ற ஒரு செயல் ஊழ்வலியின் காரணமாக முற்றிலும் முடியாமற் போனாலும் உடம்பு வருந்த உழைத்த முயற்சியின் அளவுக்குப் பயன் கிடைத்தே திரும்.

தெய்வம்-ஊழ்வலி; மெய்-உடல். 619

10.ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

 உள்ளத்திலும் சோர்வு இல்லாமல், முயற்சியிலும். குறைவு இல்லாமல் ஒரு செயலைச் செய்ய முய்ல்கின்றவர், அச்செயலுக்கு இடையூறாகத் தோன்றும் விதியையும். புறமுதுகு காட்டும்படி செய்வர்.

உப்பக்கம் காணுதல்-புறமுதுகிட்டு ஒடும்படி செய்தல். 620

63. இடுக்கண் அழியாமை


1.இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்.

இடையூறு நேரும் போது, அதன் பொருட்டுத் தளர்ச்சியடையாது உள்ளத்தே மகிழ்ச்சி அடைதல் வேண்டும். ஏனெனில், அந்த இடையூற்றினை நெருங்கி எதிர்ப்பதற்கு, அந்த மகிழ்ச்சியைப் போன்று வேறு ஒன்றும் இல்லை.

இடுக்கண்-துன்பம்; நகுதல்-சிரித்தல், மகிழ்தல்; அடுத்து ஊர்தல் -நெருங்கி எதிர்த்தல்.

மகிழ்வதனால் மனத்தளர்ச்சி குறைகின்றது; அதனால் நடையுற்ற தொழிலைச் செய்து வெற்றி பெறுவதற்கும் வழி ஏற்படுகின்றது. 621

2.வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

வெள்ளம்போல் அளவின்றி வரும் துன்பங்களையெல்லாம் அறிவுடைய ஒருவன் தன் உள்ளத்தில் அவை வந்த தன்மையினைச் சிறிது நினைத்துப் பார்க்க, உடனே அத்துன்பங்கள் நீங்கி விடும்.

இடும்பை-துன்பம்; உள்ள-நினைத்துப் பார்க்க. 622

3.இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

துன்பம் நேர்ந்த போது அதற்காக வருந்தி உள்ளம் கலங்காதவர், அந்தத் துன்பத்துக்கே துன்பத்தை உண்டாக்குவர்.

படுத்தல்-உண்டாக்குதல்; படுதல்-அனுபவித்தல். 623


4.மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

வண்டியை இழுத்துச் செல்லும் எருது வழியில் தடை நேர்ந்த போதும், அந்தத் தடையினைக் கண்டு உள்ளம் ஒடியாமல் மேலும் முயன்று தடை நேர்ந்த இடங்களில் எல்லாம் வெற்றியைக் காண்பது போல், துன்பம் நேர்ந்த போதெல்லாம் அதைப் பொருட்படுத்தாது, தன் தொழிலை மேற்கொள்ளும் ஒருவனிடம் அந்தத் துன்பமே துன்பப்படும் நிலையை அடையும்.

மடுத்த வாய் எல்லாம்-இடையூறு நேர்ந்த இடத்தில் எல்லாம்; பகடு-எருது; இடர்ப்பாடு-துன்பம். 624

5.அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

துன்பங்கள் பலவாக அடுக்கி ஒன்றன் மேல் ஒன்றாக வந்த போதும், உள்ளத் தளர்ச்சி இல்லாதவனிடம் வந்த துன்பங்களே துன்பங்களை அடையும்.

அடுக்கி வருதல்-ஒன்றன் மேல் ஒன்றாகத் தொடர்ந்து வருதல்; அழிவு இலான்-தளராதவன். 625

6.அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.

செல்வம் வந்த போது, 'இது பெற்றோமே!’ என்று மகிழ்ந்து (அதை எவர்க்கும் உதவாமல் பூதம் போல்) பாதுகாத்திருத்தலை அறியாதவர், அது தம்மை விட்டுப் போகும் போதும், 'நாம் இழந்து விட்டோமே' என்று துன்பப்படுவாரா? (சிறிதும் துன்பப்பட மாட்டார்? எள்ளி நகையாடுவார்.) 626

7.இலக்கம் உடம்பிடும்பைக்கு என்று கலக்கத்தை
கையாறாக் கொள்ளாதாம் மேல்.

உடம்பு துன்பத்துக்கு இடமாக இருப்பது என்று தெளிந்து, மேலோர் தமக்குத் துன்பம் வந்த போது, மனக் கலக்கத்தை ஒழுக்க நெறியாகக் கொள்ள மாட்டார்.

இலக்கம்-குறிப்பொருள், இலட்சியம்; ஒன்றைச் செய்தற்கு இடமாகக் குறித்துக் கொள்வது; கையாறு-ஒழுக்க நெறி, நடக்க வேண்டிய வழி. 627

8.இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

இன்பம் அனுபவிக்கும் போது அதற்காக மகிழாமல், துன்பம் நேர்ந்த போதும் உடம்பைப் பெற்றவர் துன்பம் அடைதல் இயற்கை என்று தெளிந்திருப்பவன் துன்பம் அடைய மாட்டான். 628

9.இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

இன்பத்தில் உள்ள இனிமையினை நினைத்து இன்புற விரும்பாதவன், துன்பத்துள் உள்ள துயரினையும் நினைத்து வருந்த மாட்டான். உடம்பைப் பெற்ற இவ்வுயிருக்கு இவை இரண்டும் இயல்பே என்று எண்ணி, அமைதியாக இருப்பான். 629

10.இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

துன்பத்தையே ஒருவன் இன்பமாகக் கருதிக் கொள்வானானால், அவனுடைய பகைவரும் விரும்பிப் போற்றும் மதிப்பு அவனுக்கு உண்டாகும்.

இன்னாமை-துன்பம்; ஒன்னார்-பகைவர். 630

</div