திருக்குறள், மு. வரதராசனாரின் தெளிவுரை
அறத்துப்பால்
[தொகு]பாயிரம்
[தொகு]கடவுள் வாழ்த்து
[தொகு]பொருட்பால்
[தொகு]நட்பியல்
[தொகு]நட்பாராய்தல்
[தொகு]1. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
- வீடில்லை நட்பாள் பவர்க்கு.
௧. நட்புச் செய்தபிறகு, நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை; ஆகையால், ஆராயாமல் நட்புச் செய்வதைப்போல் கெடுதியானது வேறு இல்லை.
2. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
- தான்சாம் துயரம் தரும்.
௨. ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில், தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.
3. குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
- இனனும் அறிந்தியாக்க நட்பு.
௩.ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து, அவனோடு நட்புக்கொள்ள வேண்டும்.
4. குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
- கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
௪. உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப், பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ள வேண்டும்.
5. அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
- வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.
௫. நன்மையல்லாத செயலைக் கண்டபோது, வருந்தும்படியாக இடித்துச் சொல்லி, உலக நடையை அறிய வல்லவரின் நட்பை, ஆராய்ந்து கொள்ளவேண்டும்.
6. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
- நீட்டி அளப்பதோர் கோல்.
௬. கேடு வந்தபோதும் ஒரு நன்மை உண்டு; அக்கேடு, ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.
7. ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
- கேண்மை ஒரீஇ விடல்.
௭. ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்துகொண்ட நட்பிலிருந்து நீங்கி, அவரைக் கைவிடுதலாகும்.
8. உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
- அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
௮. ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும்; அதுபோல், துன்பம் வந்தபோது கைவிடுகின்றவரின் நட்பைக், கொள்ளாதிருக்க வேண்டும்.
9. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
- உள்ளினும் உள்ளம் சுடும்.
௯. கேடு வரும் காலத்தில், கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும், நினைத்த உள்ளத்தை வருத்தும்.
10. மருவுக மாசற்றார் கேண்மைஒன் றித்தும்
- ஒருவுக ஒப்பிலார் நட்பு.
௧0. குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ளவேண்டும்; ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை, ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.
தீ நட்பு
[தொகு]1. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
- பெருகலிற் குன்றல் இனிது.
௧. அன்புமிகுதியால், பருகுவார்போல் தோன்றினாலும், நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதைவிடத், தேய்ந்து குறைவது நன்று.
2. உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
- பெறினும் இழப்பினும் என்.
௨. தமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்து, பயன் இல்லாதபோது நீங்கிவிடும் தகுதி இல்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன; இழந்தாலும் என்ன?
3. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
- கொள்வாரும் கள்வரும் நேர்.
௩. கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல், பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலைமகளிரும், கள்வரும், ஒரு நிகரானவர்.
4. அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
- தமரின் தனிமை தலை.
௪. போர் வந்தபோது, களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவைவிட, ஒரு நட்பும் இல்லாமல், தனித்திருத்தலே சிறந்தது.
5. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
- எய்தலின் எய்தாமை நன்று.
௫. காவல் செய்து வைத்தாலும், காவல் ஆகாத கீழ் மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதைவிட, ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.
6. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
- ஏதின்மை கோடி உறும்.
௬. அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பைவிட, அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை, கோடி மடங்கு நன்மை தருவதாகும்.
7. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
- பத்தடுத்த கோடி உறும்.
௭. அகத்தில் அன்பு இல்லாமல், புறத்தில் நகைக்கும் தன்மை உடையவரின் நட்பைவிட, பகைவரால் வருவன, பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்.
8. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
- சொல்லாடார் சோர விடல்.
௮. முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் சொல்லாமலே, தளரச்செய்து, கைவிட வேண்டும்.
9. கனவிலும் இன்னாத மன்னோ வினைவேறு
- சொல்வேறு பட்டார் தொடர்பு.
௯. செய்யும் செயல் வேறாகவும், சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகம்.
10. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
- மன்றில் பழிப்பார் தொடர்பு.
௧0. தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் நட்பை, எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விடவேண்டும்.
கூடாநட்பு
[தொகு]1. சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
- தேரா நிரந்தவர் நட்பு.
௧. அகத்தே பொருந்தாமல், புறத்தில் பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது, எறிவதற்கு உரிய பட்டடையாகும்.
2. இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
- மனம்போல வேறு படும்.
௨. இனம் போலவே இருந்து, உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல், உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.
3. பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
- ஆகுதல் மாணார்க்கு அரிது.
௩. பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்தபோதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், உள்ளன்பினால் மாட்சியடையாதவர்க்கு இல்லை.
4. முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
- வஞ்சரை அஞ்சப் படும்.
௪. முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி, அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புக் கொள்வதற்கு அஞ்சவேண்டும்.
5. மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
- சொல்லினால் தேறற்பாற்று அன்று.
௫. மனத்தால் தம்மோடு பொருந்தாமல் பழகுகின்றவரை, அவர் கூறுகின்ற சொல்லைக்கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.
6. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
- ஒல்லை உணரப் படும்.
௬. நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும், பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை, விரைவில் உணரப்படும்.
7. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
- தீங்கு குறித்தமை யான்.
௭. வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும், தீங்கு செய்தலைக் குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.
8. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
- அழுதகண் ணீரும் அனைத்து.
௮. பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும், கொலைக்கருவி மறைந்திருக்கும்; பகைவர் அழுது சொரிந்த கண்ணீரும், அத் தன்மையானதே.
9. மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து
- நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
௯. புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து, அகத்தில் இகழ்கின்றவரை, தாமும் அந் நட்பில் நகைத்து, மகிழுமாறு செய்து, அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.
10. பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
- அகநட்பு ஒரீஇ விடல்.
௧0. பகைவர் நண்பராகும் காலம் வரும்போது, முகத்தளவில் நட்புக்கொண்டு, அகத்தில் நட்பு நீங்கி, வாய்ப்புக் கிடைத்தபோது, அதையும் விட வேண்டும்.
பேதைமை
[தொகு]1. பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
- ஊதியம் போக விடல்.
௧. பேதைமை என்று சொல்லப்படுவது ஒரு குற்றம்; அது யாது என்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு, ஊதியமானதைக் கைவிடுதலாகும்.
2. பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
- கையல்ல தன்கட் செயல்.
௨. ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தைச் செலுத்துவதாகும்.
3. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
- பேணாமை பேதை தொழில்.
௩. தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை, ஆகியவை, பேதையின் தொழில்கள்.
4. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
- பேதையின் பேதையார் இல்.
௪. நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும், தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதைபோல், வேறு பேதையர் இல்லை.
5. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
- தான்புக் கழுந்தும் அளறு.
௫. எழுபிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப், பேதை, தன் ஒரு பிறப்பில் செய்துகொள்ள வல்லவனாவான்.
6. பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
- பேதை வினைமேற் கொளின்.
௬. ஒழுக்க நெறி அறியாத பேதை, ஒரு செயலை மேற்கொண்டால், அந்தச் செயல், முடிவு பெறாமல், பொய்படும்; அல்லது, அவன், குற்றவாளியாகித், தளை பூணுவான்.
7. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
- பெருஞ்செல்வம் உற்றக் கடை.
௭. பேதை பெருஞ்செல்வம் அடைந்தபோது, அவனோடு தொடர்பில்லாத அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.
8. மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
- கையொன்று உடைமை பெறின்.
௮. பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால், அவன் நிலைமை, பித்துப் பிடித்த ஒருவன், கள் குடித்து மயங்கினாற் போலாகும்.
9. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
- பீழை தருவதொன்று இல்.
௯. பேதையரிடமிருந்து பிரிவு நேர்ந்தபோது, அப் பிரிவு, துன்பம் ஒன்றும் தருவதில்லை; ஆகையால், பேதையருடன் கொள்ளும் நட்பு, மிக இனியதாகும்.
10. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
- குழாஅத்துப் பேதை புகல்.
௧0. சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன், தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப், படுக்கையில் வைத்தாற் போன்றது.
புல்லறிவாண்மை
[தொகு]1. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
- இன்மையா வையாது உலகு.
௧. அறிவில்லாமையே, இல்லாமை பலவற்றுள்ளும், கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை, உலகம், அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
2. அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும்
- இல்லை பெறுவான் தவம்.
௨. அறிவில்லாதவன், மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை; அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.
3. அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பிழை
- செறுவார்க்கும் செய்தல் அரிது.
௩. அறிவில்லாதவர், தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம், அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்.
4. வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
- உடையம்யாம் என்னும் செருக்கு.
௪. புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், 'யாம் அறிவுடையேம்' என்று ஒருவன், தன்னைத் தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்.
5. கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
- வல்லதூஉம் ஐயம் தரும்.
௫. அறிவில்லாதவர், தாம் கல்லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்று வல்ல பொருளைப் பற்றியும், மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்.
6. அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
- குற்றம் மறையா வழி.
௬. தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து, நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல், புல்லறிவாகும்.
7. அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
- பெருமிறை தானே தனக்கு.
௭. அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல், சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன், தனக்குத்தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.
8. ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
- போஒம் அளவுமோர் நோய்.
௮. தனக்கு நன்மையானவற்றைப், பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும், ஒரு நோயாகும்.
9. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
- கண்டானாம் தான்கண்ட வாறு.
௯. அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன், தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ, தான் அறிந்த வகையால், அறிவுள்ளவனாய்த் தோன்றுவான்.
10. உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
- அலகையா வைக்கப் படும்.
௧0. உலகத்தார், 'உண்டு' என்று சொல்வதை, 'இல்லை' என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி, விலக்கப்படுவான்.
இகல்
[தொகு]1. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
- பண்பின்மை பாரிக்கும் நோய்.
௧. எல்லா உயிர்களுக்கும், மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீய பண்பை வளர்க்கும் நோய், இகல் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.
2. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
- இன்னாசெய் யாமை தலை.
௨. ஒருவன், தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி, அன்பில்லாதவற்றைச் செய்தாலும், தான் இகல் கொண்டு, அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் நல்லது.
3. இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
- தரவில் விளக்கம் தரும்.
௩. ஒருவன், இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கிவிட்டால், அஃது, அவனுக்கு, அழிவில்லாத, நிலையான, புகழைக் கொடுக்கும்.
4. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
- துன்பத்துள் துன்பம் கெடின்.
௪. இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது, ஒருவனுக்கு, இன்பங்களில் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்.
5. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
- மிகலூக்கும் தன்மை யவர்.
௫. இகலை எதிர்த்து நிற்காமல், அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை, வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர், யார்?
6. இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
- தவலும் கெடலும் நணித்து.
௬. "இகல் கொள்வதால், வெல்லுதல் இனியது," என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை, தவறிப் போதலும், அழிதலும், விரைவில் உள்ளனவாம்.
7. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
- இன்னா அறிவி னவர்.
௭. இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர், வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை, அறிய மாட்டார்.
8. இகலுக்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
- மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.
௮. இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல், ஒருவனுக்கு ஆக்கமாகும்; அதனை எதிர்த்து வெல்லக் கருதினால், கேடு அவனிடம் வரக் கருதும்.
9. இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
- மிகல்காணும் கேடு தரற்கு.
௯. ஒருவன், தனக்கு ஆக்கம் வரும்போது, இகலைக் கருதமாட்டான்; தனக்குக் கேடு தருவித்துக் கொள்ளும்போது, அதனை எதிர்த்து, வெல்லக் கருதுவான்.
10. இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
- நன்னயம் என்னும் செருக்கு.
௧0. ஒருவனுக்கு, இகலால், துன்பமானவை எல்லாம் உண்டாகும்; அதற்கு மாறான நட்பால், நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.
பகைமாட்சி
[தொகு]1. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
- மெலியார்மேல் மேக பகை.
௧. தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு, எதிர்த்தலை விட வேண்டும்; தம்மைவிட மெலியவர்மேல், பகை கொள்வதை, விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
2. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
- என்பரியும் ஏதிலான் துப்பு.
௨. ஒருவன், அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதவனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன், பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்?
3. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
- தஞ்சம் எளியன் பகைக்கு.
௩. ஒருவன், அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால், அவன், பகைவர்க்கு மிக எளியவன்.
4. நீங்கான் வெகுளி நிறைவிலன் எஞ்ஞான்றும்
- யாங்கணும் யார்க்கும் எளிது.
௪. ஒருவன், சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால், அவன், எக்காலத்திலும், எவ்விடத்திலும், எவர்க்கும், எளியவன்.
5. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
- பண்பிலன் பற்றார்க்கு இனிது.
௫. ஒருவன், நல்வழியை நோக்காமல், பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால், அவன், பகைவர்க்கு எளியவனாவான்.
6. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
- பேணாமை பேணப் படும்.
௬. ஒருவன், உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால், அவனுடைய பகை, விரும்பி மேற்கொள்ளப் படும்.
7. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
- மாணாத செய்வான் பகை.
௭. தன்னை அடுத்துத், தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப், பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
8. குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
- இனனிலனாம் ஏமாப்பு உடைத்து.
௮. ஒருவன், குணம் இல்லாதவனாய்க், குற்றம் பல உடையவனானால், அவன், துணை இல்லாதவன் ஆவான்; அந் நிலைமையே, அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.
9. செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
- அஞ்சும் பகைவர்ப் பெறின்.
௯. அறிவு இல்லாத, அஞ்சும் இயல்பு உடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்துப் பகை கொள்பவர்க்கு, இன்பங்கள், தொலைவில் நீங்காமல் நிற்கும்.
10. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
- ஒல்லானை ஒல்லாது ஒளி.
௧0. கல்வி கற்காதவனைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம், எக்காலத்திலும், புகழ் வந்து பொருந்தாது.
பகைத்திறந்தெரிதல்
[தொகு]1. பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
- நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
௧. பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை, ஒருவன், சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.
2. வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
- சொல்லே ருழவர் பகை.
௨. வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகைகொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.
3. ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
- பல்லார் பகைகொள் பவன்.
௩. தான் தனியாக இருந்து, பலருடைய பகையைத் தேடிக்கொள்பவன், பித்துப் பிடித்தவரைவிட, அறிவில்லாதவனாகக் கருதப் படுவான்.
4. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
- தகைமைக்கண் தங்கிற்று உலகு.
௪. பகையையும் நட்பாகச் செய்துகொண்டு நடக்கும் பண்புடையவனது பெருந்தன்மையில், உலகம் தங்கியிருப்பதாகும்.
5. தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்
- இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
௫. தனக்கு உதவியான துணையோ இல்லை; தனக்குப் பகையோ இரண்டு; தானோ ஒருவன்; இந்நிலையில், அப் பகைகளுள் ஒன்றை, இனிய துணையாகக் கொள்ள வேண்டும்.
6. தேறினும் தேறா விடினும் அழிவின் கண்
- தேறான் பகாஅன் விடல்.
௬. இதற்குமுன் ஒருவனைப்பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும், அழிவு வந்த காலத்தில், அவனைத் தெளியாமலும், நீங்காமலும், வாளா விட வேண்டும்.
7. நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
- மென்மை பகைவ ரகத்து.
௭. துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத், துன்பத்தைச் சொல்லக் கூடாது; பகைவரிடத்தில், மென்மை மேற்கொள்ளக் கூடாது.
8. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
- பகைவர்கண் பட்ட செருக்கு.
௮. செய்யும் வகையை அறிந்து, தன்னை வலிமைப் படுத்திக் கொண்டு, தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத், தானாகவே அழியும்.
9. இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
- கைகொல்லும் காழ்த்த விடத்து.
௯. முள் மரத்தை, இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது, வெட்டுகின்றவரின் கையையே, அது வருத்தும்.
10. உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
- செம்மல் சிதைக்க லாதார்.
௧0. பகைத்தவருடைய தலைமையைக் கெடுக்க முடியாதவர், திண்ணமாக, மூச்சுவிடும் அளவிற்கும், உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
உட்பகை
[தொகு]1. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
- இன்னாவாம் இன்னா செயின்.
௧. இன்பம் தரும் நிழலும் நீரும், நோய் செய்வனவாக இருந்தால், தீயனவே ஆகும்; அது போலவே, சுற்றத்தாரின் தன்மைகளும் துன்பம் தருமானால், தீயனவே ஆகும்.
2. வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
- கேள்போல் பகைவர் தொடர்பு.
௨. வாளைப்போல், வெளிப்படையான பகைவர்க்கு, அஞ்ச வேண்டிய தில்லை; ஆனால், உரவினரைப் போல இருந்து, உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு, அஞ்ச வேண்டும்.
3. உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
- மட்பகையின் மாணத் தெறும்.
௩. உட்பகைக்கு அஞ்சி, ஒருவன், தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்; தளர்ச்சி வந்த போது, மட்கலத்தை அறுக்கும் கருவிபோல, அந்த உட்பகை, தவறாமல் அழிவு செய்யும்.
4. மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
- ஏதம் பலவும் தரும்.
௪. மனம் திருந்தாத உட்பகை, ஒருவனுக்கு உண்டாகுமானால், அது, அவனுக்குச், சுற்றம் சீர்ப்படாமைக்குக் காரணமான குற்றம் பலவற்றையும் தரும்.
5. உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
- ஏதம் பலவும் தரும்.
௫. உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது, ஒருவனுக்கு, இறக்கும் வகையான குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
6. ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
- பொன்றாமை ஒன்றல் அரிது.
௬. ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால், அவன் அழியாமலிருத்தல், எப்போதும் அரிது.
7. செப்பீன் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
- உட்பகை உற்ற குடி.
௭. செப்பின் இணைப்பைப்போல், புறத்தே பொருந்தியிருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர், அகத்தே பொருந்தியிருக்க மாட்டார்.
8. அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
- உட்பகை உற்ற குடி.
௮. உட்பகை உண்டான குடி, அரத்தினால் தேய்க்கப்பட்ட இரும்பு போல, வலிமை குறைக்கப்பட்டுத், தேய்ந்து போகும்.
9. எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
- உட்பகை உள்ளதாம் கேடு.
௯. எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு, உட்பகையில் உள்ளதாகும்.
10. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
- பாம்போடு உடனுறைந் தற்று.
௧0. அகத்தில் உடம்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையில், பாம்போடு, உடன் வாழ்ந்தாற் போன்றது.
பெரியாரைப் பிழையாமை
[தொகு]1. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
- போற்றலு லெல்லாம் தலை.
௧. மேற்கொண்ட செயலைச் செய்துமுடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்துகொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.
2. பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
- பேரா இடும்பை தரும்.
௨. ஆற்றல் மிகுந்த பெரியாரை, விரும்பி, மதிக்காமல் நடந்தால், அது, அப்பெரியாரால், நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.
3. கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
- ஆற்று பவர்கண் இழுக்கு.
௩. அழிக்க வேண்டுமானால், அவ்வாறே செய்துமுடிக்கவல்லவரிடத்தில், தவறு செய்தலை, ஒருவன், கெட வேண்டுமானால், கேளாமலே செய்யலாம்.
4. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
- ஆற்றாதார் இன்னா செயல்.
௪. ஆற்றல் உடையவர்க்கு, ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்கவல்ல எமனைக், கைகாட்டி அழைத்தாற் போன்றது.
5. யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
- வேந்து செறப்பட் டவர்.
௫. மிக்க வலிமை உடைய அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்காக, எங்கே சென்றாலும், எங்கும் வாழ முடியாது.
6. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
- பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
௬. தீயால் சுடப்பட்டாலும், ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும்; ஆற்றல் மிகுந்த பெரியாரிடத்தில் தவறு செய்து நடப்பவர், தப்பிப் பிழைக்க முடியாது.
7. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
- தகைமாண்ட தக்கார் செறின்.
௭. தகுதியால் சிறப்புற்ற பெரியார், ஒருவனை வெகுண்டால், அவனுக்குப், பலவகையால், மாண்புற்ற வாழ்க்கையும், பெரும் பொருளும் இருந்தும், என்ன பயன்?
8. குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
- நின்றன்னார் மாய்வர் நிலத்து.
௮. மலை போன்ற பெரியார் கெட நினைத்தால், உலகில் அழியாமல் நிலைபெற்றாற்போல் உள்ளவரும், தம் குடியோடு அழிவர்.
9. ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
- வேந்தனும் வேந்து கெடும்.
௯. உயர்ந்த கொள்கையுடைய பெரியார் சீறினால், நாட்டை ஆளும் அரசனும், இடை நடுவே முரிந்து, அரசு இழந்து, கெடுவான்.
10. இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்
- சிறந்தமைந்த சீரார் செறின்.
௧0. மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால், அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும், தப்பிப் பிழைக்க முடியாது.
பெண்வழிச் சேறல்
[தொகு]1. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
- வேண்டாப் பொருளும் அது.
௧. மனைவியை விரும்பி, அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார்; கடமையைச் செய்தலை விரும்புகின்றவர், வேண்டாத பொருளும், அதுவே!
2. பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
- நாணாக நாணுத் தரும்.
௨. கடமையை விரும்பாமல், மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்க செயலாக, நாணத்தைக் கொடுக்கும்.
3. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
- நல்லாருள் நாணத் தரும்.
௩. மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை, ஒருவனுக்கு, எப்போதும், நல்லவரிடையே இருக்கும்போது, நாணத்தைத் தரும்.
4. மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
- வினையாண்மை வீறெய்தல் இன்று.
௪. மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற, மறுமைப்பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந் தன்மை, பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
5. இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
- நல்லார்க்கு நல்ல செயல்.
௫. மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன், எப்போதும், நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு, அஞ்சி நடப்பான்.
6. இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
- அமையார்தோள் அஞ்சு பவர்.
௬. மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர், தேவரைப்போல, இவ்வுலகத்தில், சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும், பெருமை இல்லாதவரே ஆவர்.
7. பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
- பெண்ணே பெருமை உடைத்து.
௭. மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையை விட, நாணத்தைத் தன் இயல்பாக உடையவளின் பெண்மையே, பெருமை உடையது.
8. நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
- பெட்டாங்கு ஒழுகு பவர்.
௮. மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தம்முடைய நண்பர்க்கு உற்ற குறையையும், செய்து முடிக்க மாட்டார்; அறத்தையும் செய்ய மாட்டார்.
9. அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
- பெண்ஏவல் செய்வார்கண் இல்.
௯. அறச் செயலும், அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும், மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
10. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
- பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
௧0. நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு, தக்க நிலையும் உடையார்க்கு, எக்காலத்திலும், மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
வரைவின்மகளிர்
[தொகு]1. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
- இன்சொல் இழுக்குத் தரும்.
௧. அன்பினால் விரும்பாமல், பொருள்காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.
2. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பில் மகளிர்
- நயன்தூக்கி நள்ளா விடல்.
௨. கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற, பண்பற்ற பொதுமகளிரின் இன்பத்தை, ஆராய்ந்து, பொருந்தாமல் விட வேண்டும்.
3. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
- ஏதில் பிணத்தழீஇ யற்று.
௩. பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல், இருட்டறையில், தொடர்பு இல்லாத, ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.
4. பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்
- ஆயும் அறிவி னவர்.
௪. பொருள் ஒன்றையே பொருளாகக்கொண்ட, பொதுமகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர், பொருந்தமாட்டார்.
5. பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
- மாண்ட அறிவி னவர்.
௫. இயற்கை அறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின், புன்மையான நலத்தைப் பொருந்தார்.
6. தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
- புன்னலம் பாரிப்பார் தோள்.
௬. ஆடல் பாடல் தகுதிகளால் செருக்குக் கொண்டு, தம் புன்மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர், பொருந்தார்.
7. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
- பேணிப் புணர்பவர் தோள்.
௭. நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறு பொருள்களை விரும்பிக் கூடும் பொது மகளிரின் தோளைப், பொருந்துவர்.
8. ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
- மாய மகளிர் முயக்கு.
௮. வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்து அறியும் அறிவு இல்லாதவர்க்கு, 'அணங்கு தாக்கு' (மோகினி மயக்கு), என்று கூறுவர்.
9. வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
- பூரியர்கள் ஆழும் அளறு.
௯. ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகம் ஆகும்.
10. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
- திருநீக்கப் பட்டார் தொடர்பு.
௧0. இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும், கள்ளும், சூதுமாகிய இம் மூவகையும், திருமகளால் நீக்கப் பட்டவரின் உறவாகும்.
கள்ளுண்ணாமை
[தொகு]1. உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
- கட்காதல் கொண்டொழுகு வார்.
௧. கள்ளின்மேல் விருப்பம் கொண்டுநடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தமக்கு உள்ள புகழையும் இழந்துவிடுவர்.
2. உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
- எண்ணப்பட வேண்டா தார்.
௨. கள்ளை உண்ணக் கூடாது; சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர், கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.
3. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
- சான்றோர் முகத்துக் களி.
௩. பெற்ற தாயின் முகத்திலும், கள்ளுண்டு மயங்குதல், துன்பம் தருவதாகும்; அப்படியானால், குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது என்னவாகும்?
4. நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
- பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
௪. நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே, நிற்காமல் செல்வாள்.
5. கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
- மெய்யறி யாமை கொளல்.
௫. விலைப்பொருள் கொடுத்துக், கள்ளுண்டு, தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமையுடையதாகும்.
6. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
- நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
௬. உறங்கினவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்; அவ்வாறே, கள்ளுண்பவரும், அறிவு மயங்குதலால், நஞ்சு உண்பவரே ஆவர்.
7. உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
- கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
௭. கள்ளை, மறைந்திருந்து குடித்து, அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு, எந்நாளும் சிரிக்கப் படுவர்.
8. களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
- ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
௮. கள்ளுண்பவன், 'யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன்', என்று சொல்வதை விட வேண்டும்; நெஞ்சில் ஒளித்திருந்த குற்றமும், கள்ளுண்டபோதே வெளிப்படும்.
9. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
- குளித்தானைத் தீத்துரீஇ யற்று.
௯. கள்ளுண்டு மயங்கியவனைக் காரணம் காட்டித் தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனை, மற்றொருவன், தீவிளக்குக் கொண்டு தேடினாற் போன்றது.
10. கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
- உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
௧0. ஒருவன், தான் கள் உண்ணாதபோது, கள்ளுண்டு மயங்கினவனைக் காணுமிடத்தில், உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்க மாட்டானோ?
சூது
[தொகு]1. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூவும்
- தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.
௧. வெற்றியே பெருவதானாலும், சூதாட்டத்தை விரும்பக்கூடாது; வென்ற
வெற்றியும், தூண்டில் இரும்பை, இரை என்று மயங்கி, மீன் விழுங்கினாற்
போன்றது.
2. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
- நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
௨. ஒரு பொருள் பெற்று, நூறு மடங்கு பொருளை இழந்துவிடும் சூதாடிகளுக்கும்,
நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ?
3.உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
- போஒய்ப் புறமே படும்.
௩. ஒருவன், உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச்
சூதாடினால், பொருள் வருவாய், அவனைவிட்டு நீங்கிப், பகைவரிடத்தில் சேரும்.
4. சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
- வறுமை தருவதொன்று இல்.
௪. ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி, அவனுடைய புகழைக்
கெடுக்கின்ற சூதைப்போல், வறுமை தருவது, வேறொன்று இல்லை.
5. கவறும் கழகமும் கையும் தருக்கி
- இவறியார் இல்லாகி யார்.
௫. சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத் திறமையும், மதித்துக் கை
விடாதவர், எல்லாப் பொருளும் உடையவராக இருந்தும், இல்லாதவர் ஆய்விடுவர்.
6. அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
- முகடியால் மூடப்பட் டார்.
௬. சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப் பட்டவர், வயிறு நிறைய
உணவும் உண்ணாதவராகிப், பல துன்பப்பட்டு வருந்துவர்.
7. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
- கழகத்துக் காலை புகின்.
௭. சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது, அவனுடைய பழைமையாய்
வந்த செல்வத்தையும், இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
8. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
- அல்லல் உழப்பிக்கும் சூது.
௮. சூது, உள்ள பொருளை அழித்துப், பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும்
கெடுத்துப், பல வகையிலும் துன்பமுற்று, வருந்தச் செய்யும்.
9. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
- அடையாவாம் ஆயம் கொளின்.
௯. சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை,
ஆகிய ஐந்தும், அவனைச் சேராமல், ஒதுங்கும்.
10. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
- உழத்தொறூஉம் காதற்று உயிர்.
௧0. பொருள் வைத்து இழக்க இழக்க, மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும்
சூதாட்டம் போல, உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த, உயிர், மேன்மேலும் காதல்
உடையதாகும்.
மருந்து
[தொகு]1. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
- வளிமுதலா எண்ணிய மூன்று.
௧. மருத்துவ நூலோர், வாதம், பித்தம், சிலேத்துமம் என எண்ணிய மூன்றும்,
அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும், நோய் உண்டாக்கும்.
2. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
- அற்றது போற்றி உணின்.
௨. முன் உண்ட உணவு, செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப், பிறகு, தக்க அளவு
உண்டால், உடம்பிற்கு, மருந்து என ஒன்று, வேண்டியதில்லை.
3. அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
- பெற்றான் நெடிதுய்க்கு மாறு.
௩. முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின், வேண்டிய அளவு அறிந்து, உண்ண
வேண்டும்; அதுவே, உடம்பு பெற்றவன், அதை, நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
4. அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
- துய்க்க துவரப் பசித்து.
௪. முன் உண்ட உணவு, செரித்த தன்மையை அறிந்து, மாறுபாடில்லாத உணவுகளைக்
கடைப்பிடித்து, அவற்றையும், நன்றாகப் பசித்த பிறகு, உண்ணவேண்டும்.
5. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
- ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
௫. மாறுபாடில்லாத உணவை, அளவு மீறாமல், மறுத்து, அளவோடு உண்டால், உயிர்,
உடம்பில் வாழ்வதற்கு இடையூரான, நோய், இல்லை.
6. இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
- கழிபே ரிரையான்கண் நோய்.
௬. குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில், இன்பம் நிலைநிற்பது
போல, மிகப் பெரிதும் உண்பவனிடத்தில், நோய் நிற்கும்.
7. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
- நோயள வின்றிப் படும்.
௭. பசித் தீயின் அளவின்படி அல்லாமல், அதை ஆராயாமல், மிகுதியாக உண்டால்,
அதனால், நோய்கள், அளவில்லாமல் ஏற்பட்டு விடும்.
8.நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
- வாய்நாடி வாய்ப்பச் செயல்.
௮. நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும்
வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும் படியாகச், செய்ய வேண்டும்.
9. உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
- கற்றான் கருதிச் செயல்.
௯. மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின்
அளவையும், காலத்தையும், ஆராய்ந்து, செய்ய வேண்டும்.
10. உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று
- அப்பால்நாற் கூற்றே மருந்து.
௧0. நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை
அருகிருந்து கொடுப்பவன் என்று, மருத்துவ முறை, அந்த தான்கு வகைப்பாகுபாடு, உடையது.
குடிமை
[தொகு]1. இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
- செப்பமும் நாணும் ஒருங்கு.
௧. நடுவு நிலைமையும், நாணமும், உயர் குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல்,
மற்றவரிடத்தில், இயல்பாக, ஒருசேர, அமைவதில்லை.
2. ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
- இழுக்கார் குடிப்பிறந் தார்.
௨. உயர்குடியில் பிறந்தவர், ஒழுக்கமும், வாய்மையும், நாணமும், ஆகியஇம்
மூன்றிலிருந்தும், வழுவாமல், இயல்பாகவே, நன்னெறியில் வாழ்வர்.
3. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
- வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.
௩. உண்மையான உயர் குடியில் பிறந்தவர்க்கு, முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல்,
பிறரை இகழ்ந்து கூறாமை, ஆகிய நான்கும், நல்ல பண்புகள் என்பர்.
4. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
- குன்றுவ செய்தல் இலர்.
௪. பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும், உயர் குடியில் பிறந்தவர்,
தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச், செய்வதில்லை.
5. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
- பண்பில் தலைப்பிரிதல் இன்று.
௫. தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வண்மை, வறுமையால் சுருங்கிய போதிலும்,
பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர், தம் பண்பிலிருந்து, நீங்குவதில்லை.
6. சலம்பற்றிச் சார்பில செய்யார்மா சற்ற
- குலம்பற்றி வாழ்தும்என் பார்.
௬. 'மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம்' என்று கருதி வாழ்வோர், வஞ்சனை
கொண்டு, தகுதியில்லாத வற்றைச், செய்ய மாட்டார்.
7. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
- மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
௭. உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில்,
திங்களிடம் காணப்படும் களங்கம் போல், பலரறிய, உயர்ந்து தோன்றும்.
8. நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
- குலத்தின்கண் ஐயப் படும்.
௮. ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில், அன்பற்ற தன்மை காணப் பட்டால், அவனை,
அவனுடைய குடிப் பிறப்புப் பற்றி, ஐயப்பட நேரும்.
9.நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
- குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
௯. 'இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது' என்பதை, முளை காட்டும்; அது போல்,
குடியில் பிறந்தவரின் வாய்ச் சொல், அவருடைய குடிப் பிறப்பைக் காட்டும்.
10. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
- வேண்டுக யார்க்கும் பணிவு.
௧0. ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால், நாணம் உடையவனாக வேண்டும்; குடியின்
உயர்வு வேண்டுமானால், எல்லோரிடத்திலும், பணிவு வேண்டும்.