திருக்குறள், மு. வரதராசனாரின் தெளிவுரை/குடியியல்

விக்கிமூலம் இலிருந்து

குடியியல்[தொகு]

மானம்[தொகு]

1. இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்

குன்ற வருப விடல்.


௧. இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும், குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை, ஒருவன், செய்யாமல் விட வேண்டும்.


2. சீரினும் சீரல்ல செய்யாரே சீரோடு

பேராண்மை வேண்டு பவர்.


௨. புகழோடு, பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தேடும் வழியிலும், குடிப் பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச், செய்ய மாட்டார்.


3. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு.


௩. செல்வம் பெருகியுள்ள காலத்தில், ஒருவனுக்குப், பணிவு வேண்டும்; செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில், பணியாத உயர்வு வேண்டும்.


4. தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை.


௪. மக்கள், தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர், ஆவர்.


5. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்.


௫. மலைபோல உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்குக் காரணமான செயல்களை, ஒரு குன்றிமணி அளவு செய்தாலும், தாழ்ந்துபோய்விடுவர்.


6. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை.


௬. மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று, பணிந்து நிற்கும் நிலை, ஒருவனுக்குப் புகழும் தராது; தேவருலகிலும் செலுத்தாது; வேறு பயன் என்ன?


7. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று.


௭. மதியாதவரின் பின் சென்று, ஒருவன் உயிர் வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில், நின்று அழிந்தான், என்று சொல்லப்படுதல், நல்லது.


8. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடழிய வந்த இடத்து.


௮. ஒருவனுடைய பெருந்தகைமை, தன் சிறப்புக் கெட நேர்ந்தபோது, அவன், (தன்) உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை, சாவாமைக்கு மருந்தோ?


9. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.


௯. தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால், உயிர் வாழாத, கவரி மானைப் போன்றவர், மானம் அழிய நேர்ந்தால், உயிரை விட்டு விடுவர்.


10. இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழுது ஏத்தும் உலகு.


௧0. தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால், உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை, உலகத்தார், தொழுது, ஏத்தி நிற்பார்கள்.

பெருமை[தொகு]

1. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்.


௧. ஒருவனுக்கு ஒளி, ஊக்கமிகுதியே ஆகும்; ஒருவனுக்கு இழிவு, அந்த ஊக்கம் இல்லாமலே உயிர் வாழலாம், என்று எண்ணுவதாகும்.


2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.


௨. எல்லா உயிர்க்கும், பிறப்பு, ஒரு தன்மையானதே; ஆயினும், செய்கின்ற தொழில்களில், உயர்வு தாழ்வு வேறுபாடுகளால், சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.


3. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்.


௩. மேல் நிலையில் இருந்தாலும், மேன்மைப் பண்பு இல்லாதவர், மேலானவர் அல்லர்; கீழ் நிலையில் இருந்தாலும், இழிகுணம் இல்லாதவர், கீழ்மக்கள் அல்லர்.


4. ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.


௪. ஒரு தன்மையான, கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும், ஒருவன், தன்னைத்தான் காத்துக்கொண்டு நடந்தால், உளதாகும்.


5. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல்.


௫. பெருமைப் பண்பு உடையவர், செய்வதற்கு அருமையான செயலைச், செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க, வல்லவர் ஆவர்.


6. சிறியார் உணர்ச்சியும் இல்லை பெரியாரைப்

பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.


௬. "பெரியாரை விரும்பிப் போற்றுவோம்", என்னும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில், இல்லை.


7. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புத்தான்

சீரல் லவர்கட் படின்.


௭. சிறப்பு நிலையும், தனக்குப் பொருந்தாத, சீரற்ற, கீழ்மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.


8. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து.


௮. பெருமைப் பண்பு, எக்காலத்திலும் பணிந்து நடக்கும்; ஆனால், சிறுமையோ, தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்ளும்.


9. பெருமை பெருமிதம் இல்லை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல்.


௯. பெருமைப் பண்பாவது, செருக்கு இல்லாமல் வாழ்தல்; சிறுமையோ, செருக்கே மிகுந்து, அதன் எல்லையில் நின்றுவிடுதலாகும்.


10. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும்.


௧0. பெருமைப் பண்பு, பிறருடைய குறைபாட்டை மறைக்கும்; சிறுமையோ, பிறருடைய குற்றத்தையே, எடுத்துச் சொல்லி விடும்.

பண்புடைமை[தொகு]

1. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.


௧. பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளியது, என்று கூறுவர்.


2. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.


௨. அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல், ஆகிய இவ் விரண்டும், பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.


3. உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.


௩. உடம்பால் ஒத்திருத்தல், மக்களோடு ஒப்புமை அன்று; பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருத்தலே, கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.


4. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.


௪. நீதியையும் நன்மையையும் விரும்பிப், பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்ல பண்பை, உலகத்தார், போற்றிக் கொண்டாடுவர்.


5. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறியார் மாட்டு.

௫. ஒருவனை இகழ்ந்து பேசுதல், விளையாட்டிலும் துன்பம் தருவதாகும்; பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில், பகைமையிலும், நல்ல பண்புகள் உள்ளன.


6. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.


௬. பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால், உலகம், உள்ளதாய் இயங்குகின்றது; அது இல்லையானால், மண்ணில் புகுந்து அழிந்து போகும்.

7. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்.


௭. மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், அரம்போல் கூர்மையான அறிவு உடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.


8. நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்

பண்பாற்றா ராதல் கடை.


௮. நட்புக் கொள்ள முடியாதவராய்த், தீயவை செய்கின்றவரிடத்திலும், பண்பு உடையவராய் நடக்க முடியாமை, இழிவானதாகும்.


9. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள்.


௯. பிறரோடு கலந்து பழகி, மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம், ஒளியுள்ள பகற்காலத்திலும், இருளில் கிடப்பதாகும்.


10. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலத்தீமை யால்திரிந் தற்று.


௧௦. பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால், நல்ல பால், தன் சுவை முதலியனகெட்டாற் போன்றதாகும்.


நாணுடைமை[தொகு]

1. கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்

நல்லவர் நாணுப் பிற.


௧. தகாத செயல் காரணமாக நாணுவதே, நாணமாகும்; பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள், வேறுவகையானவை.


2. ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு.


௨. உணவும் உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை; மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது, நாணுடைமையே ஆகும்.


3. ஊனைக்குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்

நன்மை குறித்தது சால்பு.


௩. எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை; சால்பு என்பது, நாணம் என்று சொல்லப்படும் நல்ல தன்மையை இருப்பிடமாகக் கொண்டது.

4. அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

பிணிஅன்றோ பீடு நடை.


௪. சான்றோர்க்கு, நாணுடைமை, அணிகலம் அன்றோ?; அந்த அணிகலம் இல்லையானால், பெருமிதமாக நடக்கும் நடை, ஒரு நோய் அன்றோ?


5. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு

உறைபதி என்னும் உலகு.


௫. பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர், நாணத்திற்கு உறைவிடமானவர் என்று உலகம் சொல்லும்.

6. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்

பேணலர் மேலா யவர்.


௬. நாணமாகிய வேலியைத் தமக்குக் காவலாகச் செய்துகொள்ளாமல், மேலோர், பரந்த உலகில் வாழும் வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.


7. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாண்ஆள் பவர்.


௭. நாணத்தைத் தமக்குரிய பண்பாகக் கொள்பவர், நாணத்தால் உயிரை விடுவர்; உயிரைக் காக்கும் பொருட்டாக, நாணத்தை விட மாட்டார்.


8. பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்

அறம்நாணத் தக்கது உடைத்து.


௮. ஒருவன், மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும், தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி, அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.


9. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்

நாணின்மை நின்றக் கடை.


௯. ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு, அவனுடைய குடிப்பிறப்பைக் கெடுக்கும்; நாணில்லாத தன்மை நிலை பெற்றால், நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.


10. நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி யற்று.


௧௦. மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி, உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.

குடிசெயல் வகை[தொகு]

1. கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையின் பீடுடையது இல்.


௧. "குடிப்பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடையமாட்டேன்" என்று, ஒருவன் முயலும் பெருமையைப்போல மேம்பாடானது, வேறொன்று இல்லை.


2. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

நீள்வினையால் நீளும் குடி.


௨. முயற்சி, நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய, இடைவிடாத செயலால், ஒருவனுடைய குடி, உயர்ந்து விளங்கும்.


3. குடிசெய்வல் என்னும் ஒறுவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.


௩. "என் குடியை உயரச் செய்வேன்" என்று முயலும் ஒருவனுக்கு, ஊழ், ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு, தானே முன்வந்து துணை செய்யும்.


4. சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்

தாழாது உஞற்று பவர்க்கு.


௪. தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்பவர்க்கு, அவர் ஆராயமலேயே, அச் செயல், தானே நிறைவேறும்.


5. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு.


௫. குற்றம் இல்லாதவனாய்க், குடிஉயர்வதற்கான செயல்செய்து வாழ்கின்றவனை, உலகத்தார், சுற்றமாக விரும்பிச் சூழ்ந்துகொள்வர்.


6. நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

இல்லாண்மை ஆக்கிக் கொளல்.


௬. ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது, தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதாகும்.


7. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்

ஆற்றுவார் மேற்றே பொறை.


௭. போர்க்களத்தில், பலரிடையில் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல், குடியில் பிறந்தவரிடையிலும், தாங்க வல்லவர் மேல் தான், பொறுப்பு உள்ளது.


8. குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்.


௮. குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு, உரிய காலம் என்று ஒன்று இல்லை; சோம்பல் கொண்டு, தம் மானத்தைக் கருதுவாரானால், குடிப் பெருமை கெடும்.


9. இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்

குற்றம் மறைப்பான் உடம்பு.


௯. தன் குடிக்கு வரக்கூடிய குற்றத்தை, வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு, துன்பத்திற்கே இருப்பிடமானதோ?


10. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்

நல்லாள் இலாத குடி.


௧௦. துன்பம் வந்தபோது, உடனிருந்து தாங்கவல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடரி, அடியில் வெட்டி வீழ்க்க விழுந்துவிடும்.


பெருமை[தொகு]

1. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்.


௧. ஒருவனுக்கு ஒளி, ஊக்கமிகுதியே ஆகும்; ஒருவனுக்கு இழிவு, அந்த ஊக்கம் இல்லாமலே உயிர் வாழலாம், என்று எண்ணுவதாகும்.


2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.


௨. எல்லா உயிர்க்கும், பிறப்பு, ஒரு தன்மையானதே; ஆயினும், செய்கின்ற தொழில்களில், உயர்வு தாழ்வு வேறுபாடுகளால், சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.


3. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்.


௩. மேல் நிலையில் இருந்தாலும், மேன்மைப் பண்பு இல்லாதவர், மேலானவர் அல்லர்; கீழ் நிலையில் இருந்தாலும், இழிகுணம் இல்லாதவர், கீழ்மக்கள் அல்லர்.


4. ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.


௪. ஒரு தன்மையான, கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும், ஒருவன், தன்னைத்தான் காத்துக்கொண்டு நடந்தால், உளதாகும்.


5. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல்.


௫. பெருமைப் பண்பு உடையவர், செய்வதற்கு அருமையான செயலைச், செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க, வல்லவர் ஆவர்.


6. சிறியார் உணர்ச்சியும் இல்லை பெரியாரைப்

பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.


௬. "பெரியாரை விரும்பிப் போற்றுவோம்", என்னும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில், இல்லை.


7. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புத்தான்

சீரல் லவர்கட் படின்.


௭. சிறப்பு நிலையும், தனக்குப் பொருந்தாத, சீரற்ற, கீழ்மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.


8. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து.


௮. பெருமைப் பண்பு, எக்காலத்திலும் பணிந்து நடக்கும்; ஆனால், சிறுமையோ, தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்ளும்.


9. பெருமை பெருமிதம் இல்லை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல்.


௯. பெருமைப் பண்பாவது, செருக்கு இல்லாமல் வாழ்தல்; சிறுமையோ, செருக்கே மிகுந்து, அதன் எல்லையில் நின்றுவிடுதலாகும்.


10. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும்.


௧0. பெருமைப் பண்பு, பிறருடைய குறைபாட்டை மறைக்கும்; சிறுமையோ, பிறருடைய குற்றத்தையே, எடுத்துச் சொல்லி விடும்.


சாண்றாண்மை[தொகு]

1. கடன்என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.


௧. கடமை இவை என்று அறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு, நல்லவை எல்லாம், இயல்பான கடமை என்று கூறுவர்.


2. குணநலம் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத்து உள்ளதூவும் அன்று.


௨. சான்றோரின் நலம் என்று கூறப்படுவது, அவருடைய பண்புகளின் நலமே; மற்ற நலம், வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.


3. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.


௩. அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.


4. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு.


௪. தவம், ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது; சால்பு, பிறருடைய தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.


5. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.


௫. ஆற்றலுடையவரின் ஆற்றலாவது, பணிவுடன் நடத்தலாகும்; அது, சான்றோர், தம் பகைவரைப், பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.


6. சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல்.


௬. சால்புக்கு, உரைகல்போல் மதிப்பிடும் கருவி எது என்றால், தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பண்பாகும்.


7. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு.


௭. துன்பமானவற்றைச் செய்தவர்க்கும், இனிய உதவிகளைச் செய்யாவிட்டால், சான்றோரின் சால்பு, என்ன பயன் உடையதாகும்?


8. இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.


௮. சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால், ஒருவனுக்குப், பொருள் இல்லாத குறையாகிய வறுமை, இழிவானது அன்று.


9. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப் படுவார்.


௯. சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக் காலத்தில், வேறுபாடுகளே நேர்ந்தாலும், தாம் வேறுபடாமல் இருப்பர்.


10. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்

தாங்காது மன்னோ பொறை.


௧௦. சான்றோரின் சால்பு என்னும் நிறைந்த பண்பு, குறைபடுமானால், இந்தப் பெரிய நிலவுலகமும், தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய்விடும்.


உழவு[தொகு]

1. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.


௧. உலகம், பல தொழில் செய்து சுழன்றாலும், ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது; அதனால், எவ்வளவு துன்புற்றாலும், உழவுத் தொழிலே சிறந்தது.


2. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.


௨. உழவு செய்ய முடியாமல், மற்றத் தொழிலைச் செய்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர், உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்.


3. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.


௩. உழவு செய்து, அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே, உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும், பிறரைத் தொழுது உண்டு, பின்செல்கின்றவரே.


4. பலகுடை நிழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்.


௪. நெல்வளம் உடைய, தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும், தம் குடையின் கீழ்க் காண வல்லவர் ஆவர்.


5. இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்.


௫. கையால் தொழில் செய்து, உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார்; தம்மிடம் இரந்தவர்க்கு, ஒளிக்காமல், ஒரு பொருள் ஈவார்.


6. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம் என்பார்க்கும் நிலை.


௬. உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும், வாழ்வு இல்லை.


7. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்.


௭. ஒரு பலம் புழுதி, கால்பலம் ஆகும்படி உழுது, காய விட்டால், ஒரு பிடி எருவும் இட வேண்டாமல், அந்நிலத்தில், பயிர், செழித்து விளையும்.


8. ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு.


௮. ஏர் உழுதலைவிட, எரு இடுதல் நல்லது; இந்த இரண்டும் செய்து, களை நீக்கிய பிறகு, நீர் பாய்ச்சுதலை விட, அழியாமல் காவல் காத்தல், நல்லது.


9. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்.


௯. நிலத்திற்கு உரியவன், நிலத்தைச் சென்று பார்க்காமல், வாளா இருந்தால், அந்நிலம், அவனுடைய மனைவியைப்போல, வெறுத்து, அவனோடு பிணங்கிவிடும்.


10. இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்.

௧௦. எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி, வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், அவனுடைய அறியாமையை எண்ணி, நிலமகள், தன்னுள் சிரிப்பாள்.


நல்குரவு[தொகு]

1. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.


௧. வறுமையைப்போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப்போல் துன்பமானது, வறுமை ஒன்றே ஆகும்.


2.இன்மை எனஒரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்.


௨. வறுமை என்று சொல்லப்படும் ஒரு பாவி, ஒருவனை நெருங்கினால், அவனுக்கு, மறுமை இன்பமும் இம்மை இன்பமும் இல்லாமற் போகும்நிலைமை வரும்.


3. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

நல்குரவு என்னும் நசை.


௩. வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை, ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழமையான குடிப் பண்பையும் புகழையும் ஒருசேரக் கெடுக்கும்.


4. இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இனிவந்த

சொற்பிறக்கும் சோர்வு தரும்.


௪. வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும், இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை, உண்டாக்கி விடும்.


5. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்.


௫. வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள், பல வகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும், சென்று விளைந்திடும்.


6. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்.


௬. நல்ல நூற்பொருளை, நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்ன போதிலும், வறியவர் சொன்ன சொற்பொருள், கேட்பார் இல்லாமல், பயன்படாமல் போகும்.


7. அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்.


௭. அறத்தோடு பொருந்தாத வறுமை, ஒருவனைச் சேர்ந்தால், பெற்ற தாயாலும், அவன், புறக்கணித்துப் பார்க்கப் படுவான்.


8. இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு.


௮. நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வருமை, இன்றும் என்னிடம் வருமோ? (என்று, வறியவன், நாள்தோறும், கலங்கி, வருந்துவான்)


9. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது.


௯. ஒருவன், நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும்; ஆனால், வறுமை நிலையில், எவ்வகையாலும் கண்மூடித் தூங்கூதல் அரிது.


10. துப்புரவு இல்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று.


௧௦. நுகரும் பொருள் இல்லாத வறியவர், முற்றும் துறக்கக்கூடியவராக இருந்தும், துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.


இரவு[தொகு]

1. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்

அவர்பழி தம்பழி யன்று.


௧. இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால், அவரிடம் இரக்க வேண்டும்; அவர் இல்லையென்று ஒளிப்பாரானால், அது, அவர்க்குப் பழியே அல்லாமல், தமக்குப் பழி அன்று.


2. இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை

துன்பம் உறாஅ வரின்.


௨. இரந்து கேட்ட பொருள்கள், துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும், ஒருவனுக்கு இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.


3. கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று

இரப்புமோ ரேஎர் உடைத்து.


௩. ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும் உள்ளவரின் முன்னே நின்று, இரந்து பொருள் கேட்பதும், ஓர் அழகை உடையதாகும்.


4. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.


௪. உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக், கனவிலும் அறியாதவரிடத்தில், இரந்து கேட்பதும், பிறருக்குக் கொடுப்பதே போன்ற சிறப்பு உடையது.


5. கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று

இரப்பவர் மேற்கொள் வது.


௫. ஒருவர்முன் நின்று இரப்பவர், அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக் கூறாத நன்மக்கள், உலகத்தில் இருப்பதால்தான்.


6. கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்.


௬. உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம், ஒருசேரக் கெடும்.


7. இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்பது உடைத்து.


௭. இகழ்ந்து, எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம், மகிழ்ந்து, உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.


8. இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று.


௮. இரப்பவர் இல்லையானால், இப்பெரிய உலகின் இயக்கம், மரத்தால் செய்த பாவை, கயிற்றினால் ஆட்டப்பட்டுச், சென்று வந்தாற் போன்றதாகும்.


9. ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

மேவார் இலாஅக் கடை.


௯. பொருள் இல்லை என்று இரந்து, அதைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவரிடத்தில் என்ன புகழ் உண்டாகும்?


10. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

தானேயும் சாலும் கரி.


௧௦. இரப்பவன், எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும்; அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே, அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.