திருக்குறள், மு. வரதராசனாரின் தெளிவுரை/குடியியல்
குடியியல்
[தொகு]மானம்
[தொகு]1. இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
- குன்ற வருப விடல்.
௧. இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும், குடிப்பெருமை தாழுமாறு
வரும் செயல்களை, ஒருவன், செய்யாமல் விட வேண்டும்.
2. சீரினும் சீரல்ல செய்யாரே சீரோடு
- பேராண்மை வேண்டு பவர்.
௨. புகழோடு, பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தேடும் வழியிலும்,
குடிப் பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச், செய்ய மாட்டார்.
3. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
- சுருக்கத்து வேண்டும் உயர்வு.
௩. செல்வம் பெருகியுள்ள காலத்தில், ஒருவனுக்குப், பணிவு வேண்டும்; செல்வம்
குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில், பணியாத உயர்வு வேண்டும்.
4. தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
- நிலையின் இழிந்தக் கடை.
௪. மக்கள், தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது,
தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர், ஆவர்.
5. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
- குன்றி அனைய செயின்.
௫. மலைபோல உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்குக் காரணமான செயல்களை,
ஒரு குன்றிமணி அளவு செய்தாலும், தாழ்ந்துபோய்விடுவர்.
6. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
- இகழ்வார்பின் சென்று நிலை.
௬. மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று, பணிந்து நிற்கும் நிலை,
ஒருவனுக்குப் புகழும் தராது; தேவருலகிலும் செலுத்தாது; வேறு பயன் என்ன?
7. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
- கெட்டான் எனப்படுதல் நன்று.
௭. மதியாதவரின் பின் சென்று, ஒருவன் உயிர் வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத
நிலையில், நின்று அழிந்தான், என்று சொல்லப்படுதல், நல்லது.
8. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
- பீடழிய வந்த இடத்து.
௮. ஒருவனுடைய பெருந்தகைமை, தன் சிறப்புக் கெட நேர்ந்தபோது, அவன், (தன்)
உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை, சாவாமைக்கு மருந்தோ?
9. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
- உயிர்நீப்பர் மானம் வரின்.
௯. தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால், உயிர் வாழாத, கவரி மானைப்
போன்றவர், மானம் அழிய நேர்ந்தால், உயிரை விட்டு விடுவர்.
10. இளிவரின் வாழாத மானம் உடையார்
- ஒளிதொழுது ஏத்தும் உலகு.
௧0. தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால், உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை,
உலகத்தார், தொழுது, ஏத்தி நிற்பார்கள்.
பெருமை
[தொகு]1. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
- அஃதிறந்து வாழ்தும் எனல்.
௧. ஒருவனுக்கு ஒளி, ஊக்கமிகுதியே ஆகும்; ஒருவனுக்கு இழிவு, அந்த ஊக்கம்
இல்லாமலே உயிர் வாழலாம், என்று எண்ணுவதாகும்.
2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
- செய்தொழில் வேற்றுமை யான்.
௨. எல்லா உயிர்க்கும், பிறப்பு, ஒரு தன்மையானதே; ஆயினும், செய்கின்ற
தொழில்களில், உயர்வு தாழ்வு வேறுபாடுகளால், சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
3. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
- கீழல்லார் கீழல் லவர்.
௩. மேல் நிலையில் இருந்தாலும், மேன்மைப் பண்பு இல்லாதவர், மேலானவர் அல்லர்;
கீழ் நிலையில் இருந்தாலும், இழிகுணம் இல்லாதவர், கீழ்மக்கள் அல்லர்.
4. ஒருமை மகளிரே போலப் பெருமையும்
- தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
௪. ஒரு தன்மையான, கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும், ஒருவன்,
தன்னைத்தான் காத்துக்கொண்டு நடந்தால், உளதாகும்.
5. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
- அருமை உடைய செயல்.
௫. பெருமைப் பண்பு உடையவர், செய்வதற்கு அருமையான செயலைச், செய்வதற்கு உரிய
நெறியில் செய்து முடிக்க, வல்லவர் ஆவர்.
6. சிறியார் உணர்ச்சியும் இல்லை பெரியாரைப்
- பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.
௬. "பெரியாரை விரும்பிப் போற்றுவோம்", என்னும் உயர்ந்த நோக்கம், அவருடைய
சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில், இல்லை.
7. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புத்தான்
- சீரல் லவர்கட் படின்.
௭. சிறப்பு நிலையும், தனக்குப் பொருந்தாத, சீரற்ற, கீழ்மக்களிடம்
ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.
8. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
- அணியுமாம் தன்னை வியந்து.
௮. பெருமைப் பண்பு, எக்காலத்திலும் பணிந்து நடக்கும்; ஆனால், சிறுமையோ,
தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்ளும்.
9. பெருமை பெருமிதம் இல்லை சிறுமை
- பெருமிதம் ஊர்ந்து விடல்.
௯. பெருமைப் பண்பாவது, செருக்கு இல்லாமல் வாழ்தல்; சிறுமையோ, செருக்கே
மிகுந்து, அதன் எல்லையில் நின்றுவிடுதலாகும்.
10. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
- குற்றமே கூறி விடும்.
௧0. பெருமைப் பண்பு, பிறருடைய குறைபாட்டை மறைக்கும்; சிறுமையோ, பிறருடைய
குற்றத்தையே, எடுத்துச் சொல்லி விடும்.
பண்புடைமை
[தொகு]1. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
- பண்புடைமை என்னும் வழக்கு.
௧. பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளியது, என்று கூறுவர்.
2. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
- பண்புடைமை என்னும் வழக்கு.
௨. அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல், ஆகிய இவ் விரண்டும், பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.
3. உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
- பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
௩. உடம்பால் ஒத்திருத்தல், மக்களோடு ஒப்புமை அன்று; பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருத்தலே, கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.
4. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
- பண்புபா ராட்டும் உலகு.
௪. நீதியையும் நன்மையையும் விரும்பிப், பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்ல பண்பை, உலகத்தார், போற்றிக் கொண்டாடுவர்.
5. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
- பண்புள பாடறியார் மாட்டு.
௫. ஒருவனை இகழ்ந்து பேசுதல், விளையாட்டிலும் துன்பம் தருவதாகும்; பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில், பகைமையிலும், நல்ல பண்புகள் உள்ளன.
6. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
- மண்புக்கு மாய்வது மன்.
௬. பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால், உலகம், உள்ளதாய் இயங்குகின்றது; அது இல்லையானால், மண்ணில் புகுந்து அழிந்து போகும்.
7. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
- மக்கட்பண்பு இல்லா தவர்.
௭. மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், அரம்போல் கூர்மையான அறிவு உடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.
8. நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
- பண்பாற்றா ராதல் கடை.
௮. நட்புக் கொள்ள முடியாதவராய்த், தீயவை செய்கின்றவரிடத்திலும், பண்பு உடையவராய் நடக்க முடியாமை, இழிவானதாகும்.
9. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
- பகலும்பாற் பட்டன்று இருள்.
௯. பிறரோடு கலந்து பழகி, மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம், ஒளியுள்ள பகற்காலத்திலும், இருளில் கிடப்பதாகும்.
10. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
- கலத்தீமை யால்திரிந் தற்று.
௧௦. பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால், நல்ல பால், தன் சுவை முதலியனகெட்டாற் போன்றதாகும்.
நாணுடைமை
[தொகு]1. கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
- நல்லவர் நாணுப் பிற.
௧. தகாத செயல் காரணமாக நாணுவதே, நாணமாகும்; பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள், வேறுவகையானவை.
2. ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
- நாணுடைமை மாந்தர் சிறப்பு.
௨. உணவும் உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை; மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது, நாணுடைமையே ஆகும்.
3. ஊனைக்குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
- நன்மை குறித்தது சால்பு.
௩. எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை; சால்பு என்பது, நாணம் என்று சொல்லப்படும் நல்ல தன்மையை இருப்பிடமாகக் கொண்டது.
4. அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
- பிணிஅன்றோ பீடு நடை.
௪. சான்றோர்க்கு, நாணுடைமை, அணிகலம் அன்றோ?; அந்த அணிகலம் இல்லையானால், பெருமிதமாக நடக்கும் நடை, ஒரு நோய் அன்றோ?
5. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
- உறைபதி என்னும் உலகு.
௫. பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர், நாணத்திற்கு உறைவிடமானவர் என்று உலகம் சொல்லும்.
6. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
- பேணலர் மேலா யவர்.
௬. நாணமாகிய வேலியைத் தமக்குக் காவலாகச் செய்துகொள்ளாமல், மேலோர், பரந்த உலகில் வாழும் வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.
7. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
- நாண்துறவார் நாண்ஆள் பவர்.
௭. நாணத்தைத் தமக்குரிய பண்பாகக் கொள்பவர், நாணத்தால் உயிரை விடுவர்; உயிரைக் காக்கும் பொருட்டாக, நாணத்தை விட மாட்டார்.
8. பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
- அறம்நாணத் தக்கது உடைத்து.
௮. ஒருவன், மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும், தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி, அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.
9. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
- நாணின்மை நின்றக் கடை.
௯. ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு, அவனுடைய குடிப்பிறப்பைக் கெடுக்கும்; நாணில்லாத தன்மை நிலை பெற்றால், நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
10. நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
- நாணால் உயிர்மருட்டி யற்று.
௧௦. மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி, உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.
குடிசெயல் வகை
[தொகு]1. கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
- பெருமையின் பீடுடையது இல்.
௧. "குடிப்பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடையமாட்டேன்" என்று, ஒருவன் முயலும் பெருமையைப்போல மேம்பாடானது, வேறொன்று இல்லை.
2. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
- நீள்வினையால் நீளும் குடி.
௨. முயற்சி, நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய, இடைவிடாத செயலால், ஒருவனுடைய குடி, உயர்ந்து விளங்கும்.
3. குடிசெய்வல் என்னும் ஒறுவற்குத் தெய்வம்
- மடிதற்றுத் தான்முந் துறும்.
௩. "என் குடியை உயரச் செய்வேன்" என்று முயலும் ஒருவனுக்கு, ஊழ், ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு, தானே முன்வந்து துணை செய்யும்.
4. சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
- தாழாது உஞற்று பவர்க்கு.
௪. தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்பவர்க்கு, அவர் ஆராயமலேயே, அச் செயல், தானே நிறைவேறும்.
5. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
- சுற்றமாச் சுற்றும் உலகு.
௫. குற்றம் இல்லாதவனாய்க், குடிஉயர்வதற்கான செயல்செய்து வாழ்கின்றவனை, உலகத்தார், சுற்றமாக விரும்பிச் சூழ்ந்துகொள்வர்.
6. நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
- இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
௬. ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது, தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதாகும்.
7. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
- ஆற்றுவார் மேற்றே பொறை.
௭. போர்க்களத்தில், பலரிடையில் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல், குடியில் பிறந்தவரிடையிலும், தாங்க வல்லவர் மேல் தான், பொறுப்பு உள்ளது.
8. குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
- மானம் கருதக் கெடும்.
௮. குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு, உரிய காலம் என்று ஒன்று இல்லை; சோம்பல் கொண்டு, தம் மானத்தைக் கருதுவாரானால், குடிப் பெருமை கெடும்.
9. இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
- குற்றம் மறைப்பான் உடம்பு.
௯. தன் குடிக்கு வரக்கூடிய குற்றத்தை, வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு, துன்பத்திற்கே இருப்பிடமானதோ?
10. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
- நல்லாள் இலாத குடி.
௧௦. துன்பம் வந்தபோது, உடனிருந்து தாங்கவல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடரி, அடியில் வெட்டி வீழ்க்க விழுந்துவிடும்.
பெருமை
[தொகு]1. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
- அஃதிறந்து வாழ்தும் எனல்.
௧. ஒருவனுக்கு ஒளி, ஊக்கமிகுதியே ஆகும்; ஒருவனுக்கு இழிவு, அந்த ஊக்கம் இல்லாமலே உயிர் வாழலாம், என்று எண்ணுவதாகும்.
2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
- செய்தொழில் வேற்றுமை யான்.
௨. எல்லா உயிர்க்கும், பிறப்பு, ஒரு தன்மையானதே; ஆயினும், செய்கின்ற தொழில்களில், உயர்வு தாழ்வு வேறுபாடுகளால், சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
3. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
- கீழல்லார் கீழல் லவர்.
௩. மேல் நிலையில் இருந்தாலும், மேன்மைப் பண்பு இல்லாதவர், மேலானவர் அல்லர்; கீழ் நிலையில் இருந்தாலும், இழிகுணம் இல்லாதவர், கீழ்மக்கள் அல்லர்.
4. ஒருமை மகளிரே போலப் பெருமையும்
- தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
௪. ஒரு தன்மையான, கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும், ஒருவன், தன்னைத்தான் காத்துக்கொண்டு நடந்தால், உளதாகும்.
5. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
- அருமை உடைய செயல்.
௫. பெருமைப் பண்பு உடையவர், செய்வதற்கு அருமையான செயலைச், செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க, வல்லவர் ஆவர்.
6. சிறியார் உணர்ச்சியும் இல்லை பெரியாரைப்
- பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.
௬. "பெரியாரை விரும்பிப் போற்றுவோம்", என்னும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில், இல்லை.
7. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புத்தான்
- சீரல் லவர்கட் படின்.
௭. சிறப்பு நிலையும், தனக்குப் பொருந்தாத, சீரற்ற, கீழ்மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.
8. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
- அணியுமாம் தன்னை வியந்து.
௮. பெருமைப் பண்பு, எக்காலத்திலும் பணிந்து நடக்கும்; ஆனால், சிறுமையோ, தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்ளும்.
9. பெருமை பெருமிதம் இல்லை சிறுமை
- பெருமிதம் ஊர்ந்து விடல்.
௯. பெருமைப் பண்பாவது, செருக்கு இல்லாமல் வாழ்தல்; சிறுமையோ, செருக்கே மிகுந்து, அதன் எல்லையில் நின்றுவிடுதலாகும்.
10. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
- குற்றமே கூறி விடும்.
௧0. பெருமைப் பண்பு, பிறருடைய குறைபாட்டை மறைக்கும்; சிறுமையோ, பிறருடைய குற்றத்தையே, எடுத்துச் சொல்லி விடும்.
சாண்றாண்மை
[தொகு]1. கடன்என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
- சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
௧. கடமை இவை என்று அறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு, நல்லவை எல்லாம், இயல்பான கடமை என்று கூறுவர்.
2. குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
- எந்நலத்து உள்ளதூவும் அன்று.
௨. சான்றோரின் நலம் என்று கூறப்படுவது, அவருடைய பண்புகளின் நலமே; மற்ற நலம், வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
3. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
- ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
௩. அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
4. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
- சொல்லா நலத்தது சால்பு.
௪. தவம், ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது; சால்பு, பிறருடைய தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.
5. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
- மாற்றாரை மாற்றும் படை.
௫. ஆற்றலுடையவரின் ஆற்றலாவது, பணிவுடன் நடத்தலாகும்; அது, சான்றோர், தம் பகைவரைப், பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.
6. சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
- துலையல்லார் கண்ணும் கொளல்.
௬. சால்புக்கு, உரைகல்போல் மதிப்பிடும் கருவி எது என்றால், தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பண்பாகும்.
7. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
- என்ன பயத்ததோ சால்பு.
௭. துன்பமானவற்றைச் செய்தவர்க்கும், இனிய உதவிகளைச் செய்யாவிட்டால், சான்றோரின் சால்பு, என்ன பயன் உடையதாகும்?
8. இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
- திண்மைஉண் டாகப் பெறின்.
௮. சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால், ஒருவனுக்குப், பொருள் இல்லாத குறையாகிய வறுமை, இழிவானது அன்று.
9. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
- ஆழி எனப் படுவார்.
௯. சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக் காலத்தில், வேறுபாடுகளே நேர்ந்தாலும், தாம் வேறுபடாமல் இருப்பர்.
10. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
- தாங்காது மன்னோ பொறை.
௧௦. சான்றோரின் சால்பு என்னும் நிறைந்த பண்பு, குறைபடுமானால், இந்தப் பெரிய நிலவுலகமும், தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய்விடும்.
உழவு
[தொகு]1. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
- உழந்தும் உழவே தலை.
௧. உலகம், பல தொழில் செய்து சுழன்றாலும், ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது; அதனால், எவ்வளவு துன்புற்றாலும், உழவுத் தொழிலே சிறந்தது.
2. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
- எழுவாரை எல்லாம் பொறுத்து.
௨. உழவு செய்ய முடியாமல், மற்றத் தொழிலைச் செய்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர், உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்.
3. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
- தொழுதுண்டு பின்செல் பவர்.
௩. உழவு செய்து, அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே, உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும், பிறரைத் தொழுது உண்டு, பின்செல்கின்றவரே.
4. பலகுடை நிழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
- அலகுடை நீழ லவர்.
௪. நெல்வளம் உடைய, தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும், தம் குடையின் கீழ்க் காண வல்லவர் ஆவர்.
5. இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
- கைசெய்தூண் மாலை யவர்.
௫. கையால் தொழில் செய்து, உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார்; தம்மிடம் இரந்தவர்க்கு, ஒளிக்காமல், ஒரு பொருள் ஈவார்.
6. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
- விட்டேம் என்பார்க்கும் நிலை.
௬. உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும், வாழ்வு இல்லை.
7. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
- வேண்டாது சாலப் படும்.
௭. ஒரு பலம் புழுதி, கால்பலம் ஆகும்படி உழுது, காய விட்டால், ஒரு பிடி எருவும் இட வேண்டாமல், அந்நிலத்தில், பயிர், செழித்து விளையும்.
8. ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
- நீரினும் நன்றதன் காப்பு.
௮. ஏர் உழுதலைவிட, எரு இடுதல் நல்லது; இந்த இரண்டும் செய்து, களை நீக்கிய பிறகு, நீர் பாய்ச்சுதலை விட, அழியாமல் காவல் காத்தல், நல்லது.
9. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
- இல்லாளின் ஊடி விடும்.
௯. நிலத்திற்கு உரியவன், நிலத்தைச் சென்று பார்க்காமல், வாளா இருந்தால், அந்நிலம், அவனுடைய மனைவியைப்போல, வெறுத்து, அவனோடு பிணங்கிவிடும்.
10. இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
- நிலமென்னும் நல்லாள் நகும்.
௧௦. எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி, வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், அவனுடைய அறியாமையை எண்ணி, நிலமகள், தன்னுள் சிரிப்பாள்.
நல்குரவு
[தொகு]1. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
- இன்மையே இன்னா தது.
௧. வறுமையைப்போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப்போல் துன்பமானது, வறுமை ஒன்றே ஆகும்.
2.இன்மை எனஒரு பாவி மறுமையும்
- இம்மையும் இன்றி வரும்.
௨. வறுமை என்று சொல்லப்படும் ஒரு பாவி, ஒருவனை நெருங்கினால், அவனுக்கு, மறுமை இன்பமும் இம்மை இன்பமும் இல்லாமற் போகும்நிலைமை வரும்.
3. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
- நல்குரவு என்னும் நசை.
௩. வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை, ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழமையான குடிப் பண்பையும் புகழையும் ஒருசேரக் கெடுக்கும்.
4. இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இனிவந்த
- சொற்பிறக்கும் சோர்வு தரும்.
௪. வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும், இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை, உண்டாக்கி விடும்.
5. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
- துன்பங்கள் சென்று படும்.
௫. வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள், பல வகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும், சென்று விளைந்திடும்.
6. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
- சொற்பொருள் சோர்வு படும்.
௬. நல்ல நூற்பொருளை, நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்ன போதிலும், வறியவர் சொன்ன சொற்பொருள், கேட்பார் இல்லாமல், பயன்படாமல் போகும்.
7. அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
- பிறன்போல நோக்கப் படும்.
௭. அறத்தோடு பொருந்தாத வறுமை, ஒருவனைச் சேர்ந்தால், பெற்ற தாயாலும், அவன், புறக்கணித்துப் பார்க்கப் படுவான்.
8. இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
- கொன்றது போலும் நிரப்பு.
௮. நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வருமை, இன்றும் என்னிடம் வருமோ? (என்று, வறியவன், நாள்தோறும், கலங்கி, வருந்துவான்)
9. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
- யாதொன்றும் கண்பாடு அரிது.
௯. ஒருவன், நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும்; ஆனால், வறுமை நிலையில், எவ்வகையாலும் கண்மூடித் தூங்கூதல் அரிது.
10. துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
- உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
௧௦. நுகரும் பொருள் இல்லாத வறியவர், முற்றும் துறக்கக்கூடியவராக இருந்தும், துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.
இரவு
[தொகு]1. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
- அவர்பழி தம்பழி யன்று.
௧. இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால், அவரிடம் இரக்க வேண்டும்; அவர் இல்லையென்று ஒளிப்பாரானால், அது, அவர்க்குப் பழியே அல்லாமல், தமக்குப் பழி அன்று.
2. இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
- துன்பம் உறாஅ வரின்.
௨. இரந்து கேட்ட பொருள்கள், துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும், ஒருவனுக்கு இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.
3. கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
- இரப்புமோ ரேஎர் உடைத்து.
௩. ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும் உள்ளவரின் முன்னே நின்று, இரந்து பொருள் கேட்பதும், ஓர் அழகை உடையதாகும்.
4. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
- கனவிலும் தேற்றாதார் மாட்டு.
௪. உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக், கனவிலும் அறியாதவரிடத்தில், இரந்து கேட்பதும், பிறருக்குக் கொடுப்பதே போன்ற சிறப்பு உடையது.
5. கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
- இரப்பவர் மேற்கொள் வது.
௫. ஒருவர்முன் நின்று இரப்பவர், அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக் கூறாத நன்மக்கள், உலகத்தில் இருப்பதால்தான்.
6. கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
- எல்லாம் ஒருங்கு கெடும்.
௬. உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம், ஒருசேரக் கெடும்.
7. இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
- உள்ளுள் உவப்பது உடைத்து.
௭. இகழ்ந்து, எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம், மகிழ்ந்து, உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.
8. இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
- மரப்பாவை சென்றுவந் தற்று.
௮. இரப்பவர் இல்லையானால், இப்பெரிய உலகின் இயக்கம், மரத்தால் செய்த பாவை, கயிற்றினால் ஆட்டப்பட்டுச், சென்று வந்தாற் போன்றதாகும்.
9. ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
- மேவார் இலாஅக் கடை.
௯. பொருள் இல்லை என்று இரந்து, அதைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவரிடத்தில் என்ன புகழ் உண்டாகும்?
10. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
- தானேயும் சாலும் கரி.
௧௦. இரப்பவன், எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும்; அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே, அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.