திருக்குறள் கட்டுரைகள்/இரந்து வாழும் வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து
இரந்து வாழும் வாழ்வு

உலகிற்கு நாகரிகத்தை வழங்கியது தமிழ்நாடு. உலகிற்கு ஒழுக்கத்தைப் போதித்தது தமிழ் மொழி. ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதி வாழ்ந்தவர்கள் தமிழ் மக்கள். இம் மூன்றும் முடிந்த முடிவுகள்.

ஒழுக்கத்தில் தலை சிறந்தவை பொய் கூறாமையும், இரந்துண்ணாமையும் ஆகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்பதைப் “பொய் கூறு வாய் புழு உண்ணும்” என்ற பழமொழி நன்கு விளக்கிக் காட்டுகிறது.

உண்மையைக் கூறுவதும், ‘உழைத்து உண்பதுமே தமிழ் மக்களின் ஒழுக்கத்தில் தலையாயவை. இவ்வொழுக்கத்தில் தவறியவர்கள் உயிரோடு இருப்பினும் இறந்தோருள் வைத்து எண்ணப்படுவதும், தவறாதவர்கள் இறந்து போயிருப்பினும் வாழ்வோருள் வைத்து எண்ணப்படுவதும் தமிழ் வழக்கு.

ஆசிரியர் திருவள்ளுவர் தமது திருக்குறளில் ‘இரவச்சம்’ என ஒரு தனி அதிகாரத்தையே வகுத்துப் பத்துப் பொன்மணிகளைக் கோத்திருக்கிறார். மனிதன் இரந்து வாழ்வதற்கு அஞ்சவேண்டும் என்பது அவரது கருத்து.

கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்.

என்பது ஒரு குறள்.

உள்ளத்தே ஒளிவில்லாமல் மகிழ்வோடு கொடை கொடுக்கும் நண்பர்களிடத்தும் இரந்து பொருள் பெறுவதைவிட, இரவாது வறுமையடைதல் கோடிப்பங்கு நன்மையுடையதாகும் என்பது பொருள். இரந்து பெற்ற செல்வத்திற்குப் பெருமை இல்லையாதலின், வேறு முயற்சி செய்து பொருள் தேடுவதே சிறப்பு என்பது கருத்து.

ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவி னிழிவந்த தில்

என்பது மற்றொரு குறள். தனக்காக என்று இரவாதிருக்கும் ஒருவன் நீர் வேட்கையால் இறக்கப்போகும் பசுவைக் கண்டு இரங்கி, “பசுவிற்கு நீர் கொடுங்கள்” என்று பிறரிடத்தில் இரப்பானாயின், அவனுடைய நாவிற்கு அதைவிட இழிவு தருவது வேறொன்றுமில்லை என்பது பொருள். அறஞ்செய்ய வேண்டின் தன் முயற்சியால் ஈட்டிய பொருளைக் கொண்டு செய்யவேண்டுமேயன்றிப் பிறரிடத்து இரந்து பெற்றுச் செய்யலாகாது என்பது கருத்து. இரப்பது இழிவு என்றதால், இரந்து வாழ எண்ணுவது மனதிற்கு இழிவு; இரக்க நடப்பது காலிற்கு இழிவு: ஏந்திப் பெறுவது கைக்கு இழிவு; பெற்று உண்பது வாய்க்கு இழிவு; பெறக் கேட்பது நாவிற்கு இழிவு-என்பதும் அறியப்பெறும்.

இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான்

என்பது மற்றும் ஒரு குறள். இவ்வுலகத்தைப் படைத் தவன், இரந்துண்டு உயிர் வாழ வேண்டும் என்றெண்ணிச் சிலரைப் படைத்திருப்பானானால், அவன் இரந்து உண்டு உயிர் வாழ்கின்ற மக்களைப் போலவே எங்கும் திரிந்து அலைந்து துன்பப்பட்டுக் கெடுவானாக என்பது பொருள். எவரையும் அவ்வாறு எண்ணிப் படைப்பதில்லை என்பது கருத்து. இதனால் இரந்துவாழும் தொழிலானது மக்கள் முயற்சியின்மையால் தாமே தேடிக்கொள்ளும் இழி தொழில் என நன்கறியலாம்.

ஆசிரியர் திருவள்ளுவர், பிச்சைகேட்கும் மக்களிடம் சென்று அவரே பிச்சை கேட்பதாக அமைந்திருக்கிறது அடியிற் கண்ட குறள்:

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரப்பா ரிரவன்மின் என்று

‘வைத்துக்கொண்டே மறைப்பவர்களிடத்துச் சென்று பிச்சை கேட்க வேண்டாமென்று, பிச்சை எடுத்து வாழ்பவரிடத்து நானொரு பிச்சை கேட்கிறேன்’ என்பது பொருள் இரந்து வாழும் வாழ்வுக்கும் ஒரு சிறப்பு இருக்குமானால், இது அதையும் கெடுத்துவிடும் என்பது குறிப்பு.

‘அவரவர் கடமையைச் செய்ய எல்லா இழிதொழிலாளாராலும் இயலும். இரந்துண்போருக்கு மட்டும் இயலாது’ என்றெண்ணிய கொன்றைவேந்தன் ஆசிரியர்

ஐயம் புகினும் செய்வன செய்

எனக் கூறினார், ‘கல்வியைக் கற்க எல்லோராலும் இயலும் இரந்து வாழ்பவர்க்கு இயலாது’ என்று எண்ணிய அதிவீர ராமபாண்டிய மன்னன்,

பிச்சை புகினும் கற்கை கன்றே

எனக் கூறினார்.

இரந்துண்ணுவது மட்டும் இழிவன்று ஒருவன் மகிழ்வோடு கொடுப்பதைப் பெறுவதும் இழிவு எனறு எண்ணிய ஒளவையார்,

ஏற்ப திகழ்ச்சி எனக் கூறியுள்ளார்.

இதுகாறுங் கூறியவற்றால், இரத்தலும் அதன் துன்பமும், இரந்து வாழும் வாழ்வும் அதன் இழிவும், இது போன்ற பிறவும் இனிது புலனாகும்.

உழைக்க முடியவில்லை, உழைப்பதற் கிடமில்லை, உடலுக்கு நலமில்லை, உணவுக்கு வழியில்லை என்பதாக உண்மையைக்கூறி இரந்துண்பதே இத்தகைய இழிந்த செயலாகக் கருதப்படுமானால், பணமுடிப்பு என்றும், உண்டியல் என்றும், திருப்பதிக்கு என்றும், தேசபக்திக்கு என்றும், சமூகத்திற்கு என்றும், சீர்திருத்தத்திற்கு என்றும் பொய்யாகக் கூறி இரந்துவாழ்வது, எத்தகைய கடுமையும் கொடுமையுமான இழிசெயலாகும் என்பதை எண்ணிப் பார்த்தே உணரவேண்டி இருக்கிறது.

இரப்பது இரப்பவர்க்கு மட்டும் இழிவல்லை; அவர்களைச் சார்ந்து இருக்கும் உறவினர்க்கும் இழிவு; அவர்கள் வாழும் நாட்டிற்கும் இழிவு; நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கும் இழிவு என்பதே நமது கருத்து. இரப்பதற்காக இரப்போர் வெட்கப்படுவதைவிட, கொடுப்பதற்காகக் கொடுப்போர் அதிகமாக வெட்கப்படவேண்டும். ஒருவன் எழுநூறு பேருக்குச் சோறு கொடுத்ததைப் பெருமையாகக் கொள்வதைவிட மானக்கேடாகக் கொள்வது மிகவும் நல்லது. உண்மையான பெருமை அவன் வாழ்கின்ற நாட்டில் இரந்துவாழ எவரும் இல்லாதிருப்பதேயாகும்

இரப்போரை நோக்கி ‘இரப்பது இழிவு’ என்று சொல்லிக் கொண்டிருப்பதைவிட இரப்போரில்லாதிருப்பதற்கு அடிப்படையைக் காண்பதே அறிவுடைமையாகும். இத்தகைய தொண்டினை ஒருவன் ஒருநாள் செய்யினும், இது வாழ்நாள் முழுவதும் பல்லாயிரம் பேருக்கு மன மகிழ்வாய்க் கொடுக்கும் கொடையைவிட மிகப் பெருங்கொடையாகக் கருதப்பெறும் என்பது அறிஞர்களின் முடிவு.

“இரவு” என்று ஓர் அதிகாரமும், “இரவச்சம்” என்று மற்றோர் அதிகாரமும் வகுத்து, இரத்தலின் தன்மையையும் அதன் இழிவையும் கூறிய ஆசிரியர் திருவள்ளுவர், பொய் கூறிப் பொருள்தேடி வாழும் மக்களைப்பற்றியும் ‘கரவிரவு, என, ஒரு தனி அதிகாரம் வகுத்துக் கூறியிருந்தால், இன்று நன்றாக இருந்திருக்கும்.

கரவிரவில் வாழும் மக்கள் அக்காலத்து இல்லாமையே வள்ளுவர் கூறாமைக்குக் காரணம் எனத் தெரிகிறது. கரவிரவில் வாழும் மக்கள் அக்காலத்தும் வாழ்ந்தனர். எனக்கருதினால், அத்தகைய மக்களைக் குறித்து, “மக்களே போல்வர் கயவர்” என, அவரும் கரந்து கூறியிருக்கிறார் என்றே கருதுதல் வேண்டும். இரப்பதன் இழிவைவிடக்கரந்திரந்து வாழும் வாழ்வின் இழிவு கடுமையானதென நன்கு தெரிகிறது.

உண்மையைச் சொல்லியோ, பொய்யைச் சொல்லியோ இரந்து வாழும் மக்கள் பெருகுவதற்கு வறுமையே பெரிதும் அடிப்படையாகும். அதை ஒழிக்க வழி காண்பவனே அறிஞன். அதைக் கொல்லத் திட்டம் போடுபவனே படைத் தலைவன். அதைக் கொள்பவனே வீரன். அதை ஒழித்த மக்களே மக்கள். அஃது ஒழிந்த நாடே நாடு!

கடும் போரிட்டே இரப்போரை ஒழிக்க வேண்டும். இரப்போர் ஒழிந்த நாட்டிற்குள் எப்போரும் தலை காட்டாது.

பொய்யாக இரத்தல், உண்மையாக இரத்தல் என இரப்பில் இருவகை இருப்பது போல, இரந்து வாழும் மக்களிலும் இருவகை உண்டு. வறுமைப் பிணி உள்ளோர் ஒரு வகை; உடற் பிணியுள்ளோர் மற்றொரு வகை. அரசாங்கமும், செல்வருங் கூடினால் இந்த இருவகைப் பிணியையும் ஒழித்துவிடலாம்.

பிச்சை எடுத்து உண்டு வாழும் இருநிலையானது அடிமை நாடுகளில் இருக்கலாம்; தன்னுரிமை பெற்ற ஒரு சுதந்திர நாட்டில் இருப்பதற்கில்லை. இருந்தால், அது சுதந்திரம் என்ற சொல்லுக்கே இழிவைத் தரும். ஆகவே இதனைச் சட்டம் செய்வதன் மூலமும், குடிசைத் தொழில் ஆலைத்தொழில்களைப் பெருக்குவதின் மூலமும், உணர்ச்சியுள்ள தொண்டர்களின் சிறந்த பணிகளின் மூலமும் ஒழித்தாக வேண்டும். இது இன்றைய தமிழ் மக்களின் நீங்காத கடமைகளில் ஒன்று.

வாழட்டும் குறள் நெறி!