உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் கட்டுரைகள்/குடியும் குறளும்

விக்கிமூலம் இலிருந்து

குடியும் குறளும்


குடி என்பது இரு பொருள்களைத் தருகின்ற ஒரு சொல் “பெருங்குடிமகன்” என்பதும் அப்படியே ஒரு பொருள் உயர்வும், மறு பொருள் இழியும் ஆகும். உயர்வையும் இழிவையும் ஒரே சொல்லிற் கொண்ட சொற்கள் பலவற்றைத் தமிழிற் காணலாம். அவற்றில் இதுவும் ஒன்று. இங்கு நாம் கூறவந்த குடி, குடிக்கும் வழக்கத்தை ஒழித்துக் குடியின் பெருமையை உயர்த்த வேண்டும் என்பதேயாம்.

“குடியன்” “குடித்தான்” என்று சொல்லுகிற பொழுது “கள்” என்ற சொல்லையும் சோத்துச் சொல்லுவதில்லை. ஏனெனில், அச்சொல்லைச் சொல்லுவதும் சொல்லக் கேட்பதும் எழுதுவதும் படிப்பதும் நினைப்பதும் கூடத் தவறு என்பது தமிழ் மக்களின் கொள்கை. அதனாலேயே அச்சொல்லைத் தமிழ் அறிஞர்கள் உலக வழக்கிலிருந்தே ஒழித்துவிட்டார்கள் என்று தெரிகிறது.

உலகில் தோன்றி அழிந்த, தோன்றி இருக்கின்ற எல்லாச் சமயங்களும் குடியை வெறுத்துள்ளன.

வெறிக்கக் குடிக்காதே

என்பது ஏசு பெருமான் வாக்கு.

குடிப் பழக்கம் ஆண்டவனை
அணுக விடாது

என்பது நபிகள் நாயகம் வாக்கு,

குடிப்பது அறச்செயல் அல்ல;
மறச் செயல்

என்பது புத்தர் பெருமான் வாக்கு.

வயிற்றுள் கள்ளிருந்து அறிவில் வெறி
யிருந்தால், உடல் கோயிலில் இருந்தாலும்
உள்ளம் கடவுளுக்கு வெகு தூரத்தில் இருக்கும்

என்பது குருநானக் வாக்கு.

ஐம்பெரும் பாவங்களில் ஒன்று குடிப்
பழக்கம்

என்பது தமிழ்ச் சான்றோர்களின் கருத்து.

இந்தியா குடியினாற் பாழ்படுகிறது

என்பது காந்தியடிகளின் வாக்கு.

குடி அறிவாளிகளால் வெறுக்கப்படுவது எதன் பொருட்டு? எனின், அது அறிவை இழக்கச் செய்கின்ற ஒரு பொருள் என்பதன் பொருட்டு எனக் கூறலாம். குடி மனிதனை மனிதத் தன்மையிலிருந்து விலக்கி வைத்துவிடுகிறது. குடித்ததும் அவன் பேயாகவோ, பிசாசாகவோ, குரங்காகவோ, வேறு விலங்காகவோ காணப்படுகிறான். குடிகாரனை அறிஞர்கள் வெறுப்பதற்குக் காரணம். அவன் சமூகத்திற்குப் பயன்படாமல் அழிந்து போய் விட்டான் என்பதனால் மட்டுமல்ல; அவன் தீமைகளைச் செய்யப் புதிதாகத் தோன்றியிருக்கிறான் என்பதனாலும் ஆகும்.

பாவச் செயல்களில் சூதாடுதலும் ஒன்று எனினும் தமிழறிஞர்களால் குறிக்கப் பெற்றுள்ள பெரும்பாவம் ஐந்தில் குடியிருக்கக் குடிக்கு உரிமை கிடைத்திருக்கிறது. பாவம், சூது அங்கும் வெற்றி பெறாமல் தோல்வியடைந்து விட்டது.

‘பொய், கொலை, கள், களவு, காமம் என்பவைகளே தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ள ஐம்பெருந் தீமைகளாகும். அதிலும் ‘கள்’ வலதுபுறம் இரண்டையும், இடதுபுறம் இரண்டையும் கொண்டு, பெரும் பாவங்களுக்கு எல்லாம் நடுநாயகமாய் விளங்கிக் கொண்டிருப்பது வியப்புக்குரியது.

‘பொய், கொலை, களவு, காமத்தைவிடக் கள் அருந்துவது அவ்வளவு கொடியதா?’ என்ற ஐயம் சிலருக்கு உண்டாகலாம். அவர்கள் அறிய வேண்டியது இது, மற்ற நான்கு பெரும் பாவச் செயல்களையும் செய்யப் பிறர் எவராவது துணை இருந்து தீரவேண்டும். பிறர் சேராமல் அவை நான்கும் நடவாது. ஆனால் குடி ஒன்றுமட்டும் தனித்து நடக்கக் கூடியது.

மற்றொன்று; பொய் அச்சத்தாலும், கொலை ஆத்திரத்தாலும், களவு வறுமையாலும், காமம் பருவத்தாலும் நேரிட்டு விடலாம். ஆனால் கள் அருந்துவது இதில் எதனாலுமின்றி நிகழக்கூடியது.

இன்னுமொன்று : ஐம்பெரும் பாவச் செயல்களில் எதையும் செய்ய விரும்பாத ஒருவன் அறிவிழந்து குடிக்கப் பழகி விடுவானானால், காலப்போக்கில் பிறபாவச்செயல்களைச் செய்யும் பழக்கமும் அவனுக்கு மிக எளிதாக வந்து விடும். “உலகில் நடைபெற்ற குற்றங்களில் 100க்கு 81 வீதம் குடிகாரர்களாலேயே நடைபெற்றிருக்கின்றன” என்ற உலகப் புள்ளி விவரங்களால் இவ்வுண்மையை நன்கு அறியலாம்.

குடி, ஏன் இவ்வாறு அதிகமாக வெறுக்கப்படுகிறது? என்பது ஒரு கேள்வி. ‘குடிகாரன் குடித்ததும் முதலில் தன் அறிவை இழந்து விடுகிறான்; அடுத்து அறச்செயல்களை இழந்து விடுகிறான்; அதனால் அவன் குடும்பப் பொறுப்புக்களை இழந்து விடுகிறான்; பிறகு குடும்பம் அவனை இழந்து விடுகிறது. கடைசியாக நாடும் இழந்து நல்லவர்களும் அவனை இழந்து விடுகிறார்கள். இவற்றால் வாழப் பிறந்த அவன் தன் வாழ்வையே இழந்துவிடுகிறான்’ என்பவைகளே அதற்கு விடை. கள் மணத்திற்காக விரும்பிப் பருகக் கூடிய ஒரு பொருளும் அல்ல. அதன் வாடை வெறுப்புக்குரியது. அது சுவைக்காக விரும்பி உண்ணப்படும் பொருளும் அல்ல. அது மிகவும் புளிப்புடையது. கள்ளோ, சாராயமோ, பிறவோ, பசும்பாலைப் போல உடல் நலத்திற்கேற்ற ஒரு பொருளும் அல்ல. குடிப்போரின் குடலைப் புண்ணாக்கி, உணவைக் குறைத்து, உடலைக் குறைத்து, வாழ்நாளையுங் குறைத்து, விண்ணுக்கும் மண்ணுக்கும் விரைவில் அனுப்பி வைக்கக் கூடிய தீய பொருளே அது. அவ்விதம் இருந்தும் மக்கள் அதனை விரும்புவது ஏன்?

“குடிப்பது கடினமாக உழைக்கத் துணை செய்கிறது” என்று தொழிலாளர் சிலர் கூறுகின்றனர், இன்னும் சிலர், “உழைப்பின் களைப்பைப் போக்குகின்றது” என்று கூறுகின்றனர். மற்றும் சிலர் குடித்து உழைத்தால் உழைப்பதற்கு அதிக உற்சாகம் உண்டாகிறது” எனக் கூறுகின்றனர். இவை உண்மையா? ஆராய்வோம்.

கள்ளும் சாராயமும் மட்டுமல்ல; கஞ்சாவும் அபினும் இதன் தம்பி தங்கைகள். காபியும் டீயும் அதன் பிள்ளைகள். பீடி, சுருட்டு, சிகரெட், பொடி, புகையிலை முதலியவைகள் அதன் பேரப்பிள்ளைகள் இவை அனைத்துமே சோர்வைப் போக்கி உற்சாகத்தை அளிக்கின்றன என்று கருதப்பட்டு வருகின்றது.

உண்மை என்னவெனில், இவற்றில் எதையும் பயன்படுத்தாதவர்களுடைய நரம்புத் துடிப்பு இயற்கையாகவே இருந்து எப்போதும் ஒரே அளவாகத் துடித்துவரும். இந்த இயற்கைத் துடிப்பு நீண்டநாள் உயிர்வாழத்துணை செய்யும். இதைவிட்டு மேற்கூறியவைகளில் எதையேனும் ஒன்றைப் பயன்படுத்தினால், அது தன்னை விழுங்கியவனுடைய நாடியை, நரம்பை அதிகமாக அளவுக்குமேல் துடிக்கச் செய்கிறது. இந்தக் கெட்ட துடிப்பையே உற்சாகம் என்று பலர் தவறாகக் கருதி வருகின்றனர். இது மக்களின் இயற்கையான வலிமையை அதிகமாகத் துடிக்கச் செய்து வெகு விரைவில் பாழாக்கிவிடுகிறது. போதை குறைந்துவிட்டால் உடனே வலிமை குறைந்துவிடும். மறுபடியும் வேலை செய்ய வேண்டுமானால் அதே பொருளைத் திரும்பவும் பயன்படுத்தியாகவேண்டும். காலப் போக்கில் தான் பழகிய பொருளைப் பயன்படுத்தாமல் தன்னால் எதுவுஞ் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடுகிறது.

இவ் உண்மையைப் பீடிக் குடியரிடத்தும் பொடி அறிஞரிடத்துங் காணலாம். இதனாலேயே நல்லறிஞர் பலர் இவற்றைக் கெட்ட பழக்கங்கள் எனக் கூறியிருக்கின்றனர் பேரப்பிள்ளைகளின் தீங்குகளே இவ்வளவு பெரிதாக இருக்குமானால், இவைகளின் அப்பன் பாட்டன்களின் தீமைகளை யாரிடம் போய்க் கூறுவது? இவ்வுண்மையைத் தொழிலாளர் தோழர்களே நன்குணர்வது, நாட்டிற்கு நலமாக இருக்கும்.

நல்ல பழக்கம், தீய பழக்கம் என பழக்கங்கள் இரு வகைப்படும் பழக முடியாததாகவும், செய்யக் கடினமானதாகவும், நினைத்தால் எளிதில் கைவிடக் கூடியதாகவும் இருக்கும் பழக்கங்கள் பெரும்பாலும் நற்பழக்கங்களாகவே இருக்கும். பழக முடிவதாகவும், நடக்க எளிதாகவும், கைவிட எப்போதும் முடியாததாகவும் இருக்கின்ற பழக்கங்கள் பெரும்பாலும் கெட்ட பழக்கங்களாகவே இருக்கும். இதில் குடிப்பழக்கம் இரண்டாவதைச் சார்ந்தது. குடித்தவன் தன் தவறை நினைத்துத் திருந்திக் குடிக்காது வாழ முயற்சித்தாலும், அது முடியாத ஒன்றாக முடிந்துவிடும். அவர்களின் வாழ்வு அதோடுதான். தேனில் விழுந்து குடித்த ஈயும் எறும்பும் திரும்பிவந்தா உயிர் வாழ்கின்றன? பாவம், ஈயும் எறும்புமாவது கேனின் சுவைக்காக உயிர் விடுகின்றன. இவன் எதற்காக...? ? ?

இவை அனைத்தையும் எண்ணித்தான் நமது முன்னோர்கள், “குடிக்காதே குடிப்பது அறமல்ல; அது பாவச் செயல்களில் ஒன்று” எனக் கூறி இருக்கின்றனர். இன்றுங் கூடப் பேரறிஞர்கள் பலர் கூறி வருகின்றனர். குடிப் பழக்கம் உடைய ஒருவனைச் சமூகத்தில் இருந்தும் கூட்டங்களிலிருந்தும் நீக்கிவைக்கும் பழக்கம் ஒன்று தமிழ் நாட்டில் உள்ள பெரும்பான்மையான சிற்றுார்களில் இருந்து வந்திருக்கிறது. இதிலிருந்து குடியைத் தமிழ்ப் பெருமக்கள் எவ்வளவு தூரம் வெறுத்து வந்திருக்கின்றனர் என்பது நன்கு விளங்கும்.

1998 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிப் தமிழ்ப் பேரறிஞர் ஆகிய திருவள்ளுவர் இது குறித்து என்ன கூறியிருக்கிறார் என்பதைப் பாருங்கள். எல்லோரையும் நோக்கி நீதி கூறிய வள்ளுவர் குடிகாரனை நோக்கி நீதி கூறவில்லை. கூற விரும்பவும் இல்லை. ஏனெனில், “கள்ளுண்டு வெறித்த ஒருவனிடம் போய் அவனது செயல் தவறு எனக் காரணங்களை எடுத்துக்கூறி அவனைத் திருத்தி விடலாம் என எவரேனும் நினைப்பார்களானால் அது தண்ணிரில் மூழ்கிய ஒருவனை விளக்குக்கொண்டு தேடிக்கண்டு பிடிக்கும் வீண் செயலுக்கு ஒப்பாக இருக்கும்” என்பது அவரது கருத்து.

களித்தானைக் காரணங் காட்டுதல் நீருட்
குளித்தானைத் தீத்துரீ யற்று.

என்பது அவர் வாக்கு.

இவ்வாறு முடிவுகட்டியிருக்கின்ற பெரியார்கூட இரக்க மனங்கொண்டு, குடிகாரர்களுக்கு சில நீதிகளைக் கூறியிருக்கிறார். ஆனால், அவர் குடிகாரர்களிடம் போய்க் கூறவில்லை. நம்மிடம் வந்துதான் கூறுகிறார். அதுவுங் கேள்விகளாக, அவர் நம்மை நோக்கிக் கேட்குங் கேள்விகள் மூன்று: முதற் கேள்வி:

கள்ளுண்டவனுடைய தோற்றம், தள்ளாடும் நடை விலகும் உடை, உளறும் பேச்சு, குழறும் நா ஆகியவைகளைக் கண்டு பிறர் கைகொட்டிச் சிரித்து ஏளனம் பண்ணுகின்ற காட்சியைக்கண்ட ஒரு குடியன், ‘நாமும் கள்ளுண்டபோது இப்படித்தானே இருப்போம்’ என்று எண்ண மாட்டானா? எண்ணினால், அவன் திரும்பவுங் குடிப்பானா?

கள்ளுண்ணாப் போதில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொள் உண்டதன் சோர்வு?

என்பது அவரது முதற்கேள்வி.

இரண்டாவது கேள்வி :

எவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்தாலும் பெற்ற தாய் பொறுத்துக் கொள்ளுவாளாம். பெரியவர்கள் எவ்வளவு சிறிய குற்றமாக இருந்தாலும் பொறுக்கமாட்டார்களாம். இது பெற்ற தாய்க்கும் பெரியோர்க்கு வள்ளுவர் கூறும் இலக்கணமாகும்.

‘பெற்ற தாயின் முன்புகூடக் குடிகாரன் வெறுக்கப்படுவானானால், அறிவாளிகளாகிய பெரியோர்கள் முன் குடிகாரன் என்ன ஆவான்?’ என்று நம்மைக் கேட்கிறார்.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுக்
சான்றோர் முகத்துக் களி?

இது இரண்டாவது கேள்வி:

இதற்கு நாம் என்ன விடை கூறுவது? இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவெனில், எந்தக் குற்றஞ் செய்தாலும் பொறுத்துக்கொள்ளும் தாய்கூட, தன் மகன் குடிகாரனாய்ப் போனான் என்று அறிந்தால் வெறுத்து விடுவாள் என்பதே. பெற்ற தாய் தன் மகனை ஏன் வெறுக்கிறாள்? எதற்காக வெறுக்கிறாள்? இவற்றை வள்ளுவர் வாக்கினாலேயே கேளுங்கள்:

“ஐயோ, நான் பெற்ற மகன் குடிகாரன் ஆனானே. அவன் அறிவிழந்து போனானே. அவனை எவரும் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்களே, குடும்பத்தின் புகழும் பெருமையும் அவனால் அழிந்து போகுமே.”

“ஐயோ, கள் குடிக்குந் தீயபழக்கம் விலங்குகளிடத்துங்கூட இல்லையே. இவன் குடிக்கப் பழகிக் கொண்டானே, அறிவாளிகள் இவனை விலங்குகளோடு கூட ஒன்றாக வைத்து எண்ண மாட்டார்களே.”

“ஐயோ, மானம் என்னும் ஒரு உயர்ந்த செல்வம் இவனைவிட்டு நீங்கிவிடுமே. இனி என் மகன் கள்ளருந்தி, மானத்தை இழந்து, உயிர்ப்பிணமாகத்தான் நடந்து திரிவானா?”

“ஐயோ. இத் தீய பொருளையும் விலையைத் கொடுத்தா வாங்கி உண்டு திரியவேண்டும்? இவனுடைய அறியாமையை நான் என்னவென்று கூறுவது?”

“ஐயோ உறங்குகின்றவரும் செத்துப்போனவரும் அறிவை இழந்திருத்தவினாலே ஒன்றுபடுதல்போல, கள்ளுண்டவரும் நஞ்சுண்டவரும் அறிவிழத்தவினாலே ஒன்றுபடுகிறார்களே. “கள்” என்று எண்ணி, என் மகன் நஞ்சை உண்ணுகிறானே.”

“ஐயோ, ஊராரெல்லாராலும் என் மகன் நகைக்கப் படுகிறானே. அவன் குடித்து வந்தும், “குடிக்கவில்லை அம்மா” என என்னிடத்துங்கூட உளறி உளறிப் பொய் கூறுகிறானே. அவனைப் பெற்ற என் வயிறு பற்றி எரிகிறதே, நான் என்ன செய்வேன்?”

எப்படித் தாயின் உள்ளத்துடிப்பு? இப்பொழுது தெரிகிறதா, அவள் தன் குடிகாரப் பிள்ளையை அடியோடு வெறுப்பதன் காரணம்?

மூன்றாவது கேள்வியும் பாருங்கள்!

காதல் வேறு; காமம் வேறு. காதலால் பெறுவது இன்பம்; காமத்தால் பெறுவது துன்பம் காதல் மக்களிடத்தும், காமம் மாக்களிடத்தும் தோன்றுவது. மாக்களிடத்துத் தோன்றும் காமம் மக்களிடத்துத் தோன்றுமாயின் மக்களும் மாக்களாகி விடுவர். ஆகவே, காதல் விரும்பத் தக்கதும், காமம் வெறுக்கத் தகுந்ததுமாகும். “காமம் கொடியது?” என்று கூறவந்த திருவள்ளுவர், “அது எவ்வளவு கொடியது?” என்று விளக்க, ஒரு உவமையும் கூற முன் வந்தார்.

உள்ள பொருளைக் கொண்டுதானே இல்லாத பொருளை விளக்கியாக வேண்டும் இதற்காக அவர் உலகப் பொருள்கள் அனைத்தையும் தேடினார். கிடைக்க வில்லையோ, பொருந்தவில்லையோ, ஒப்பவில்லையோ தெரியவில்லை. கடைசியாக அவர் ஒரு உவமைப் பொருளைக் கண்டுபிடித்து வெற்றி பெற்றார். அந்த ஒரே உவமைப் பொருள் என்ன தெரியுமா? “கள்”.இந்தக் காணும் பொருள் கிடைத்த உடனே அந்தக் காணாப் பொருளை விளக்க எண்ணி, “கள்ளினுங் காமம் கொடியது” எனக் கூறிவிட்டார்.

கள் மிகவுங் கொடியது என்பதை மேலே கூறியவைகளால் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், காமம் அதை விடக் கொடியதுதானா? என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று. “கள்” என நினைத்துக் கொண்டால் போதை வருவதில்லை. கள்ளின் அருகிலிருந்து அதைப் பார்த்துக்கொண்டேயிருந்தாலும் போதைவருவதில்லை. ஆனால், காமம் அப்படியில்லை. நினைத்தாலும் போதை வந்துவிடும். பார்த்தாலும் போதை வந்துவிடும். ஆகவே தான், “கள்ளினுங் கொடிது காமம்” என்பது வள்ளுவர் வாக்கில் வந்தது போலும். எப்படி அகப்பொருளை விளக்கப் புறப்பொருளைக் காட்டிய அவரது பேரறிவு? இதிலிருந்து வள்ளுவர் நம்மைக் கேளாமற் கேட்கும் இந்த மூன்றாவது கேள்வி என்ன தெரியுமா?

கொடுமைகளுக்கெல்லாம் தலைசிறந்த ஒரு கொடுமைக்கு உவமையாகக் கூறவந்த “கள்” எவ்வளவு கொடியது? என்பதுதான். எவர் இதற்கு விடை கூறுவது?

குடிப் பழக்கத்தில் தவறாக வழுக்கி வீழ்ந்துவிட்ட அன்பர்கள்தாம் இவற்றிற்கு விடை கூறியாக வேண்டும்.

இப்போது சட்டத்தின் மூலம், நம் நாட்டில் குடி தடுத்து ஒழிக்கப் பெற்று விட்டது. இதற்கும் பெரும் தொண்டு செய்தவர் பெரியார் காந்தியடிகளே! அவரை நாம் என்றென்றும் மறக்க இயலாது.

குடி சட்டத்தின் மூலம் விலக்கப் பெற்றிருக்கிறது, இது போதாது மக்கள் உள்ளத்திலிருந்தும் அது விலக்கப் பெற்றாகவேண்டும். அப்போதுதான் இந்த நல்ல முயற்சி முழுவதும் வெற்றி பெறும். இதற்கு மக்கள் பலவகை யிலும் துணை புரிந்தாக வேண்டும்.

அமெரிக்கா, முன்பு ஒருமுறை குடியை ஒழித்தது. ஆனால்,அங்கு விரைவில் அது திரும்பவும் வந்துவிட்டது. அம்மாதிரி நம் நாட்டிலும் நடைபெறும் எனச் சிலர் நம்பிக் கொண்டும் எதிர்பார்த்துக்கொண்டும் இருக்கின்றனர். பாவம், அவர்கள் அனைவரும் குடியை விடமுடியாதவர்களும், குடியால் பொருள் திரட்டுபவர்களுமே ஆவார்கள். இப்பெருங் குடியர்களின் எண்ணத்தை நிறை வேறவொட்டாமல் அழித்து ஒழிக்கவேண்டியது, தமிழ் நாட்டுப் பெருங்குடி மக்களின் நீங்காத கடமைகளில் ஒன்றாகும்.

வாழ்க நல்லறம்!