திருக்குறள் கட்டுரைகள்/மெய்வேல் பறியா நகும்

விக்கிமூலம் இலிருந்து
மெய்வேல் பறியா நகும்!


கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்

என்பது திருக்குறளில் உள்ள ஒரு குறள். “தன்னைக் கொல்லவந்த யானையின் மீது கைவேலை எறிந்து போக்கி விட்டுப் பகைவன் தன் மார்பின்மீது எறிந்த வேலைப் பறித்து மகிழ்ந்தான்” என்பது குறளின் பொருள்.

இக்குறள் ‘படைச்செருக்கு’ என்ற அதிகாரத்தில் வந்துள்ளது. படைச்செருக்கு என்பது படையின் தன்மை, வீரனின் திறம், வீரனின் சிறப்பு என்றாகும்.

உலக மக்கள் பலரிடமும் காணப்படுகின்ற வீரத்திற்கும் தமிழகத்திற் காணப்பெறும் வீரத்திற்கும் வேறுபாடு உண்டு. தமிழகத்தின் வீரம் ஒரு தனிப் பண்பு வாய்ந்தது. இதனைத் தமிழ் வீரம் என்றும், தமிழர் வீரம் என்றும் கூறுவதுண்டு.

பழங்காலத்துத் தமிழ் மக்களில் ஆண், பெண் ஆகிய இரு பாலரிடத்துங் காணப்பெற்ற சிறந்த வீரச் செயல்களைப் புறநானூற்றுப் பாடல்கள் அறிவிக்கின்றன. எனினும் வள்ளுவரது குறள் அதனை இன்னும் தெளிவாக்கிக் காட்டுகிறது.

தமிழர் முயல் வேட்டைக்குச் செல்லுவதைவிட யானை வேட்டைக்குச் செல்லுவதையே பெரிதும் விரும்புவர்; அவரது எண்ணம் அத்தகையது.

முயலைக் கொன்று வெற்றிபெறுவதைவிட, யானையை எய்து தோல்வியடைவதையே பெருமையாகக் கொள்வர்; அவரது கொள்கை அத்தகையது.

தம்மின் வலிமைகுறைந்த எவரையும் தமிழர் தாக்குவதில்லை. மெலியோர் தம்மைத் தாக்க முன்வந்தபோதும் வலியோர் அவர்களைத் தாக்காது, அவர்களை நோக்கி, “போர் எண்ணங்கொண்டு என்முன் நில்லாதே, நின்றால் மடிந்து மண்ணிற் புதையுண்டு நடுகல்லாக நிற்பாய்” என வழிகூறி அனுப்பிடுவர். அவரது அறம் அத்தகையது.

தம்மோடு ஒத்த, அல்லது உயர்ந்த வலிமையுடையவரோடு மட்டுமே போரிடுவர். அப்போதுங்கூடப் பகை வரது வலிமை குறைந்துவிட்டால், மேலும் தாக்காமல் “இன்று போய் நாளை வா” என்று அவர்களை அனுப்பி வைப்பர். அவரது போராண்மை அத்தகையது.

போர்க்களத்தில் பகைவரை வெகுண்டு நோக்குவர். விழித்துப் பார்க்கும் அக்கண்களை நோக்கி வேல்கள் பறத்துவரும். அப்பொழுதுங்கூட, அவர்கள் விழித்த கண்களை இமைப்பதே இல்லை. அவரது போர் ஆண்மை அத்தகையது.

இவைபோன்ற பழந்தமிழ் வீரர்களின் பண்பாட்டினை திருக்குறள் நிலைத்து நின்று, இன்றும் நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.

இக்கட்டுரையின் தலைப்பில் இருக்கும் குறள் ஒரு போர் வீரனின் சிறந்த வலிமையைக் காட்டும் உயர்ந்த ஓவியமாகும்.

வீரன் போர்க்களம் புகுந்தான், அவனுக்கு வேல் ஒன்றே படைக் கருவியாக இருந்தது. பகைவனது யானை ஒன்று அவனைக் கொல்லவந்தது. அதன்மீது குறிபார்த்து வேலை எறிந்தான். யானையொடு வேலும் போய் விட்டது. வெறுங்கையனானான். அப்போது பகைவனால் எறியப் பெற்ற வேல் ஒன்று அவன் மார்பின் மீது பாய்ந்தது. வீரன் அதனைப் பிடுங்கிக் கொண்டு நகைத்தான் என்பதே இக் குறள் கூறும் வரலாறு.

“கைவேல் களிற்றொடு போக்கி” என்பது வேலின் தாக்குதலால் புண்பட்டு வீறிட்டுப் பின்வாங்கி ஓடும் யானையினது உடலோடு வேலும் போய்விட்டது என்பதா? அன்றி களிற்றினது உடலில் புகுந்து அதன் உயிரைப் போக்கித் தானும் அதன் உடலில் அழுந்தி மறைந்துபோயிற்று என்பதா? புலப்படவில்லை. எனினும் இவை இரண்டுமே வீரனுக்கு வெற்றி தருவனவாகும்.

வெற்றிபெற்ற இவன் தன் கை வெறுமையாயிருப்பதைக் கண்டு மறுபடியும் ஒரு கருவியைப் பெறப் போர்க் களத்திலிருந்து திரும்புகிறான். வீரன் திரும்பி வரும் செய்தியைக் குறளில் உள்ள “வருபவன்” என்ற சொல்லால் அறிய முடிகிறது. அப்போது மாற்றான் குறி வைத்து எறிந்த வேல் ஒன்று இவன் மார்பின் மீது வந்து பாய்கிறது. அதைத் தன் கைகளிற் பற்றிப் பறித்துக் கொண்டே நகைக்கிறான்.

நகும் என்பது நகுதல் என்றாகிறது. இது நகைத்தல், சிரித்தல், களித்தல், மகிழ்தல் என்பவைகளைக் குறிக்கும். வீரன் ஏன் நகைத்தான்? எதன்பொருட்டு நகைக்கிறான்? என்று எண்ணும் பொழுதே, நமக்கு ஒரு வியப்பு உண்டா கிறது.

தேடிச்சென்ற கருவி வழியிலேயே தானே வலிய வந்து அகப்பட்டுவிட்டதே என எண்ணி நகைக்கிறானோ? அவ்விதமாயின் இது மகிழ்ச்சிச் சிரிப்பாகும்.

மார்பில் தைத்த வேல் ஊடுருவிச் சென்று தன்னை வீழ்த்திவிடாமல் கையாற் பறித்து எடுக்கும் அளவில் மட்டும் தைத்ததேயென்று நகைக்கிறானோ? அவ்விதமாயின் இது வெற்றிச் சிரிப்பு ஆகும்.

கைவேலை எறிந்து விடுவது வீரர்களுக்கு அழகல்லவே! களிற்றின் மீது மட்டுமே எறிய வேண்டிய வேலை என் மீது எட்டியிருந்து ஏன் எறிந்தான்? ஒரு கால் இவன் மதயானையை ஒழித்த என்னையும் ஒரு மதயானை எனக் கருகிவிட்டானே என எண்ணி நகைக்கிறானோ? அவ்விதமாயின் அது ஏளனச் சிரிப்பு ஆகும்.

என் கை வேலோ யானையின் உடலையும் ஊடுருவித் துளைத்தது, இவ்வேலோ என் உடலையும் துளைக்கவில்லை இது எதற்குப் பயன்படப் போகிறது என்று எண்ணிச் சிரித்தானோ? அவ்விதமாயின் இது மனக் குறைச் சிரிப்பு ஆகும்.

வேலைப் பறித்துக் கையிற் பற்றிக்கொண்டு, வேல் எறிந்த வீரன் தன் முன் இல்லாமை கண்டு, மறைந்திருந்து தாக்கும் இழிந்த மக்களும் தமிழகத்தில் உள்ளார்களே? என எண்ணிப் புண்பட்ட மனத்தோடு நகைத் திருப்பானோ? அவ்விதமாயின், இது துன்பச் சிரிப்பு ஆகும்.

தன் கை வலிமைக்கு முன் மதயானையும் நிற்க ஆற்றாமல் போயிற்று. எதிரிகள் நமக்கு எம்மாத்திரம் என் எண்ணி நகைத்திருப்பானோ? அவ்விதமாயின் இது பெருமிதச் சிரிப்பு ஆகும்.

தன் மார்பு வேலால் தாக்கப்பெற்ற போதும் அதை எண்ணி வருந்துவதைவிட்டு, தன் கைவேலால் தாக்கப் பெற்ற மதயானை ஒன்று அஞ்சி அலறி ஒடுவதைக் கண்டு அகமகிழ்ந்து நகைத்திருப்பானோ? அவ்விதமாயின் இது வீரச் சிரிப்பாகும்.

யானையோடு போரிட்ட களைப்பையுங் கருதாது. மாற்றாரின் வேலால் உடல் துளைக்கப்பெற்ற துன்பத்தையும் நினையாது, மீண்டும் போரில் விருப்பங்கொண்டு தன் மெய்யில் அழுந்திய வேலையே பறித்துக் கொண்டு பகைவரை அணுகிச் சிரிக்கிறானோ? அவ்விதமாயின் அது பயங்கரச் சிரிப்பு ஆகும்.

இச்சிரிப்பில் அடங்கியிருக்கின்ற பொருள்கள் இவ்வளவுதானோ? இன்னும் என்னனென்னவோ? யாரால் அறிந்து கூற முடியும்? எத்தனையோ சிரிப்புகளைக்கண்டு சிரிப்பாய்ச் சிரிக்கின்ற நமக்கு, இவ் வீரனது சிரிப்பு ஒரு திகைப்பை உண்டாக்கி விடுகிறது.

“மெய் வேல் பறியா நகும்” என்ற நான்கு சொற்களுக்குள்ளாகவே இவ்வாறு கருத்துக்களையும் அடக்கிக் காட்டுகின்ற வள்ளுவரது புலமையும், திறமையும் பாராட்டுதலுக்குரியவையாகும்.

இக்குறளுக்கு உரை கண்ட ஆசிரியர் பரிமேலழகர், ‘தன் கைவேலைக் களிற்றொடு போக்கிய பிறகு. தன்னைக் கொல்ல வரும் மற்றொரு யானையைக் கண்டு தன் மெய்வேலைப் பறித்து நகைத்தான்’ என்று கூறுகிறார். மற்றொரு யானையை அவர் வருவித்துக் காட்டுகின்ற காட்சி குறளைத் தழுவாவிட்டாலும், வீரத்தைத் தழுவி நிற்பதால் வரவேற்கக் கூடியதே யாகும்.

வேல், அம்பு முதலியவைகளைத் தம் உடம்பில் வாங்கித் திருகி எடுத்துத் திருப்பி எறியும் போர்ச் சிறப்பை,

கையில் வாளி தெளித்தபின் காய்ந்துதம்
மெய்யில் வாளிகள் வாங்கி வில் வாங்கினார்.

என்ற வில்லிபாரதத்தினாலும்,

எய்தவன் பகடி யெல்லாம்
பறித்தவன் என்மேல் எய்யும்.

என்ற கம்பராமாயணச் செய்யுளாலும் அறிய முடிகிறது. இதிலிருந்து தமிழ் மக்களின் பேராண்மையும்,போராண்கையும் நன்கு அறியலாம்.

அவை அனைத்தும் பழம்பெருமைகள் என்று வெறுத்து ஒதுக்கிவிடக்கூடியவையல்ல பழம் பெருமைகளை எண்ணி நடப்பது புதிய வாழ்வுக்கு வழி வகுப்பதாகும் என்பதையும் நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

நாட்டின் செழிப்பை, மொழியின் வளர்ச்சியை, மக்களின் வீரத்தை உணரவும், மறைந்திருந்து தாக்கும் இன்றைய வஞ்சக மக்களை ஒழிக்கவும், பகைவர்கள் என்ன செய்தாலும் உறங்கிக் கிடக்கும் இன்றைய தமிழ் மக்களை விழிப்படையச் செய்யவும், இதுபோன்ற பழந் தமிழ் வீரர்களின் வரலாறு பெரிதும் துணை செய்யும் என்பது எனது எண்ணம்.

வளரட்டும் தமிழரின் வீரம்!