திருக்குறள் செய்திகள்/107

விக்கிமூலம் இலிருந்து

107. இரவு அச்சம்

இரத்தல் தேவையை ஒட்டிதான்; என்றாலும் அதனை நியதியாகக் கொள்வது நன்மைதராது. இயன்றவரை ‘ஈக’ என்று கேளாதிருப்பது உயர்ந்த கொள்கையாகும்.

இரந்துதான் உயிர் வாழவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமானால் இந்த விதிக்குக் காரணமான படைப்பின் முதல்வன் கெடுவானாக; புரட்சி ஓங்குக.

இரந்துதான் வாழவேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டால் அதனைவிடக் கொடுமை வேறு ஒன்றும் இருக்க முடியாது. அந்த நிலைமை வரக்கூடாது.

வயிற்றுக்குச் சோறு என்று பயிற்றிக் கூறுவதும் ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று ஆகும். பசித்தாலும் புலி புல்லைத் தின்னாது.

கூழ் ஆனாலும் உழைத்து உண்பதில் தனி மகிழ்ச்சி உண்டு. அதனைவிட வேறு இன்பம் இருக்க முடியாது.

பகவுக்கு நீர் வேண்டும் என்று கேட்டாலும் அது பிழைதான்; அது கேட்ட நாவுக்கு இழிவு உண்டாக்கும்.

மறுக்கும் உலோபிகளிடம் மட்டும் தயவு செய்து போய்க் கேட்காதீர்கள். இரப்பவருக்கு அது பெருத்த அவமானமாகும்.

கடலில் அலைவுறும் மரக்கலம் போன்றது எளியவரின் தாழ்வு; அவர்கள் வாழ்வு பாறையில் மோதக் கூடாது. ஈயாதவர்கள் பாறை போன்றவர்கள்.

இரப்பாரின் துயரத்தைக் கண்டால் கல்லும் கரைந்து விடும்; மனம் உருகும்; ஈயாதவரின் கரவுள்ளத்தைக் கண்டால் மனம் கருகும்.

இரப்பவன் உயிர் நடுங்கும்; ஈயாதவர் இல்லை என்று கூறும்போது அவன் நடுங்குவதே இல்லை; அஃது எப்படி? வியப்பாகத்தான் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/107&oldid=1107103" இலிருந்து மீள்விக்கப்பட்டது