திருக்குறள் செய்திகள்/106

விக்கிமூலம் இலிருந்து

106. இரவு
(இரக்கம் தோன்றக் கேட்பது)

தேவைப்பட்டால் இரப்பதில் தவறு இல்லை, கேட்டும் மறுத்தால் தவறு மறுப்பவர்களைச் சாரும்.

இரப்பது ஒரு சுமை அன்று; அஃது ஈவானைப் பொறுத்தது; அதனால் வரும் நன்மை தவிர்க்கத்தக்கது அன்று.

இரப்பதற்காக வெட்கப்படத் தேவை இல்லை; புரப்பார் இருந்தால் இரப்பதும் ஓர் அழகே.

“இரத்தல் இழிவு; ஈதல் உயர்வு” என்று கருதத்தக்கது அன்று; இது கொடுக்கல் வாங்கல் போன்றது.

தருபவர் இருப்பதால்தான் பெறுபவரும் துணிந்து கேட்கின்றனர்; கொடைப் பண்பு இன்னும் மறையவில்லை. அதனால்தான் உலக நடைமுறை இயங்குகிறது.

ஈயும் இயல்பினரைக் கண்டால் இரப்பவரது வறுமை ஓய்வு கொள்ளும் அதனால் வரும் துன்பங்கள் மாயும்.

இகழ்ந்து எள்ளாமல் தருபவரைக் கண்டால் இரப்பவனின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும்; உள்ளுக்குள் மகிழ்வான்.

இரப்பவரே இல்லை என்றால் இந்த உலகம் மரப் பாவையைக் கொண்டதாக விளங்கும்; அவர்கள் இயக்கம் அதில் உயிர்மை இருக்காது; கயிற்றில் இழுக்கப்படுவது போல் அமைந்துவிடும்.

ஈவார் புகழ் பெறக் காரணமாக இருப்பதே ஈகையால் தான். இரப்பு இல்லை என்றால் புகழின் பரப்பே கிடையாது.

இரப்பவனுக்கு எந்தச் சூழ்நிலையிலும் சினம் வரக் கூடாது; மறுத்தால் எரிச்சல் காட்டக்கூடாது; அவனுடைய வறுமைத் துன்பம் அவனுக்கு அறிவு புகட்டும் ஆசானாக அமையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/106&oldid=1107101" இலிருந்து மீள்விக்கப்பட்டது