திருக்குறள் செய்திகள்/110

விக்கிமூலம் இலிருந்து

110. குறிப்பு அறிதல்

தலைவன் கூற்று

“காதல் நோயை உண்டாக்கியதும் அவள் பார்வை தான்; வேதனைப்படுத்தியதும் அதன் விளைவுதான். பின் காதலைத் தொடர்ந்து செய்ய உதவியதும் மீண்டும் அவள் பார்த்த பார்வையே. இருநோக்கு இவள்கண் உள்ளது. ஒன்று நோய் நோக்கு மற்றொன்று அது தீர்க்கும் மருந்து.”

“அவள் என்னைப் பார்த்த பார்வை கள்ளப் பார்வை; அஃது என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது. அவள் என்னைத் தொடர்ந்து பார்க்கவில்லை; மின்வெட்டு தான். அதற்கே என் நெஞ்சு கட்டு அவிழ்ந்துவிட்டது; அது காமத்தின் சரிபாகம் அன்று; பாதிக்குமேல் அவள் சாதித்து விட்டாள்.”

“அவள் என்னை நோக்கினாள்; நோக்கித் தலை குனிந்தாள், அஃது அவள் வளர்க்கின்ற காதற்பயிருக்கு வார்த்த தண்ணிராகும்”.

“யான் அவளைப் பார்க்கும்போது அவள் நிலத்தைப் பார்த்தாள்; யான் நோக்காதபோது அவள் தான் நோக்கி மெல்லச் சிரித்தாள்”.

“என்னைக் குறிக்கொண்டு நேரே நோக்குவாள் என்று எதிர்பார்த்தேன். அவள் ஒரு கண் சிறக்கணித்தாற் போலக் கோணல் பார்வையோடு என்னைப் பார்த்துச் சிரித்தாள்.”

“அவள் பேசியது கடுஞ்சொல்தான்; அன்பு இல்லாதவள் போல் பேசினாள்; ஆனால் அது சுடு சொல்லாகப் படவில்லை. எனக்கு அஃது இதமே தந்தது.”

“நடிப்பில் வல்லவளாக இருந்தாள்; கோபத்தில் துடிப்புக் காணப்பட்டது; ஆனால் அடிப்படையில் அவள் உள்ளத்தில் சினமே இல்லை; நெஞ்சில் கனமே இல்லை. பகைத்தவர் போலப் பார்த்த அவள் பார்வை நகைத்தது; என்னோடு உறவாடியது. அவள் அசைந்து நடப்பதிலே ஓர் அழகு இருந்தது; அதனோடு புன்முறுவலும் சேர்ந்து புதுமுருகு தந்தது; என் நெஞ்சை உருகச் செய்தது.”

“முன்பின் அறியாதவள்போல் அன்பின் உளத்தினள்; என்னைப் பொதுநோக்கில் பார்த்தாள்; மற்றவர் அவள் உள்ளக் குறிப்பை அறியமுடியாதபடி மறைத்துக் கொண்டாள். ஏதிலார்போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலரிடத்தே உள்ளது.”

“கண்ணோடு கண்ணிணை நோக்கு ஒத்துப் போனால் வாய்ச்சொற்களுக்கே வேலை இல்லை; மவுனகீதம் பாடின அவள் கண்கள்; அவள் மனக்குறிப்பை விழியாலேயே உணர்த்திவிட்டாள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/110&oldid=1107108" இலிருந்து மீள்விக்கப்பட்டது