திருக்குறள் செய்திகள்/111

விக்கிமூலம் இலிருந்து

111. புணர்ச்சி மகிழ்தல்

தலைவன் கூற்று

“இஃது அவள் முதற் சந்திப்பு: அவளைப் பார்ப்பதே இன்பம்; அவள் பேசுவதைக் கேட்பதில் இன்பம்; அவள் இதழ்ச்சுவை தேன்; சுவைத்தேன். முகர்வதற்கு அவள் பூ மணம்; தொட்டால் துவள்கிறாள்; அணைத்துக் கொண்டாள்; அடடா இன்பத்தின் எல்லை. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புல இன்பமும் என் பேரழகியிடம் காண்கிறேன். புலனை அடக்கினால் புத்தி தெளியும் என்பர்; அதனை முடக்காமல் அவளை அடைந்தால் ஐந்து புலன்களுக்கும் இன்பம் கிடைக்கிறது. இங்கே புலன்கள் ஒருமுகமாக அடங்கிப் புகுமுகம் புரிந்து புது இன்பம் பெறுகிறது. புலன்கள் அவளிடத்தில் அடங்கிவிடுகின்றன. அவள் தரும் நலன்கள் இன்பப் பேறாக அமைகின்றன.”

“கிள்ளியும் விடுகிறாள்; தொட்டிலை ஆட்டித் தூங்கவும் வைக்கிறாள். என்னைத் தூண்டியதும் அவளே: யான் வேண்டியது தருபவளும் அவளே.

“தாமரைக்கண்ணாள் அவள் தோளில் துயில இடம் தந்தாள்; தாமரைக் கண்ணான் உலகு சுவர்க்க பூமி என்பார்கள்; இவள் தோள் தரும் இன்பத்திற்கு அஃது இணையாகாது.”

“அவள் அருகில் இருந்தால் குளிர்கிறாள்; விலகி நின்றால் சுடுகிறாள்; இந்தத் தீ புதுமையானது. இந்தத் தீயை இவள் எப்படித்தான் பெற்றாளோ?”

“வேட்கை உறும்போது எல்லாம் அவள் தோள்கள் தழுவ இடம் அளிக்கின்றன.”

“அமிழ்தில் இயன்றவையோ என்று கூறும் படி என் உயிர் தளிர்க்கச் செய்கிறாள்; தோளைத் தொடும்போது எல்லாம் அவள் இனிமை தருகிறாள்.”

“அவள் முயக்கு என்னை மயக்கும். ஒருவன் தன் வீட்டில் இருந்துகொண்டு தன் உழைப்பில் சாப்பிட்டுப் பிறர்க்கும் பகிர்ந்து உண்டு வாழும் மனநிறைவை இவள் மயக்கில் அடைகிறேன். அவர் தம் வீட்டில் இருந்து அவரவர் உழைப்பில் உண்பது அந்தச் சுகத்துக்கு எதுவும் நிகராகாது என்று நினைத்து வந்தேன்; அதே சுகத்தை அவள் தழுவலில் காண்கிறேன்.”

“விரும்பும் இருவர் முயக்கில் காற்று இடை புகுதல் அதற்குத் தடையாகிறது. காற்றுப் புகும் இடை வெளியும் அவள் அணைப்பில் அமையாதபடி இணைந்து இன்பு எய்தினேன்.”

“காதல் அணைப்பில் என்ன சுகம் காண்கிறாய்? இந்த வினாவுக்கு விடை இதுதான்; ஊடல்; அது மாறினால் கூடல்; இவை அல்லது வேறு சுகம் காதலின்பத்தில் காண்பது இல்லை."

“நூல்களைக் கற்கும் தோறும் புதிய செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். புதிய சுவையும் தந்துகொண்டே இருக்கும். காமமும் அறியும்தோறும் புதுமை தருகிறது; அறிவதற்கு நிறைய உள்ளது என்று விருப்புத் தோன்றிக்கொண்டே இருக்கிறது. விழைவும் வேட்கையும் காதலுக்கு நுழை வாயில்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/111&oldid=1107112" இலிருந்து மீள்விக்கப்பட்டது