திருக்குறள் செய்திகள்/116
தலைவி கூற்று
“பிரித்து செல்லவில்லை என்றால் அஃது எனக்கு உரை; சென்று திரும்புகிறேன் என்றால் வேறு எவளாவது ஒருத்தி காத்திருப்பாள்; அவளுக்குக் கூறிச் செல்க.”
“முன்பு அவர் பார்வை இனிமையைச் செய்தது; அவர் அணைப்பு எனக்கு இப்பொழுது அதிர்ச்சியைத் தருகிறது.”
“பிரியேன் என்று கூறிய சொற்கள் அவற்றை அவர் காப்பாற்றவில்லை; அவர் எது பேசினாலும் என்னால் இனி நம்பவே முடியாது.”
“நம்பியது என் தவறு; அதற்கு உரிய தண்டனையை அனுபவிக்கிறேன்.”
“புத்திசாலிகள் பிரிவுக்கு ஒப்புக்கொள்ளக் கூடாது; பிரிந்தபின் அவர் வருவார் என்று காத்திருப்பது மடமை யாகும்.”
“பிரிவு உரைக்கும் கொடுமை அவரிடம் இருக்கிறது என்றால் அவர் எங்கே எனக்காக இரக்கம் காட்டி வரப் போகிறார்?”
“அவர் பிரிவை என் கைவளையல்கள் நெகிழ்ந்து பிறருக்கு அறிவிக்கின்றன. அவற்றை எப்படித் தடுக்க முடியும்?"
“சொந்தக்காரர் இல்லாத புதிய ஊரில் குடி இருப்பது வெறுமையாகும்; தலைவன் இல்லாமல் இங்கே வாழ்வது சிறுமையாகும்.”
“நெருப்புத் தொட்டால்தான் சுடுகிறது; காமம் விரும்பினாலே சுடுகிறது.”
“என் நிலைமைதான் இப்படியோ என்னைப் போல் பிறரும் இவ்வாறு வேதனைப்படுகின்றனரோ? பிரிவு என்னைத்தான் வாட்டுகிறதா? பெண்களையே இவ்வாறு இது வருத்துகிறதா?”