திருக்குறள் செய்திகள்/117
“என் துன்பத்தை மறைக்க முயல்கிறேன்; என் கண்ணீர் அதனை உரைப்பதற்கு முந்திக்கொள்கிறது.”
“இதனை மறைக்கவும் முடியவில்லை; அவருக்கு எடுத்து உரைக்கவும் நாண வேண்டி இருக்கிறது.”
“காமம் ஒரு பக்கம்; நாணம் மறுபக்கம்; இருபக்கம் தனித்தனியே இழுக்க நடுவில் யான் காவடித் தண்டுபோல் சுமக்க முடியாமல் நசுங்கிப் போகிறேன்.”
“காமம் ஒரு கடல் என்றால் அதனைக் கடக்கும் தெப்பம் எதுவும் கிடைக்கவில்லை.”
“காதலர் என் நண்பர்; நட்பாக இருக்கும்போது துயர் செய்கிறார் என்றால் பகையாக மாறினால் அவர் தரும் வேதனைக்கு அளவு உண்டோ?”
“காமம் மகிழ்விக்கும்போது கடல் போன்றது; துயர் உறுத்தும்போதும் அது கடலைவிட மிக்கது.”
“காமக்கடலைக் கடக்க வழி அறியேன்; யாமத்தும் ஏமம் இன்றித் துயில் இழந்து வருந்துகிறேன்.”
“இரவு, அனைவரையும் துயிலச் செய்துவிட்டது; அதற்குத் துணை வேண்டுமே! அஃது என்னைத் தேடிக் கொள்கிறது.”
“இரவு நீள்கிறது; என உயிர் மாள்கிறது. பிரிவு என்னை ஆள்கிறது.”
“என் உள்ளம் காதலர் இருக்கும் இடம் தேடிச் சென்றுவிடுகிறது: கண்கள் என்னைவிட்டு நீங்காமல் தனியே வருந்திக் கண்ணிர் விட்டுக்கொண்டு இருக்கின்றன. மனத்தின் வாய்ப்புக் கண்களுக்கு இல்லை; தனிமை துயர் தருகிறது.”