உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் செய்திகள்/118

விக்கிமூலம் இலிருந்து

118. கண் விதுப்பழிதல்
(கண்ணீர்விட்டு வருந்துதல்)


“கண்களே காதலரைச் சுட்டிக் காட்டியது; முதல் குற்றவாளி கண்கள்; அவை துன்பப்படட்டும், கண்ணிர் வடிக்கட்டும்.”

‘பின்விளைவை நோக்காது அவசரப்பட்டு அவரைப் பார்க்க முனைந்தன; இப்பொழுது அவரைப் பார்க்க இயலாமல் வருந்துகின்றன”.

“கண் அவசரப்பட்டன; இன்று எள்ளல் பொருளாக மாறிவிட்டன; பிறர் நகைக்க இடம் தந்துவிட்டன.“

“கண்கள் நீர் வற்றிவிட்டன; அழவும் முடியாமல் அவதிப்படுகின்றன.”

“உறக்கம் இன்றி என் கண்கள் துயர் உழக்கின்றன; இரக்கப்பட்டு என்ன பயன்?”

“கண்கள் எனக்குத் துன்பம் விளைவித்தன. அவை இப்பொழுது வேதனைப்படுகின்றன; எனக்குத் துன்பம் செய்த கண்கள் வருந்துவதில் எனக்கு மகிழ்ச்சியே.”

“விரும்பி அவரைக் காணச் சென்றன; இன்று உறக்க மின்றி வருந்துகின்றன; வருந்தட்டும்.”

“சொல்வேறு அவர் செயல்வேறு; அப்படி இருந்தும் அவரைப் பார்க்க விழைகின்றன; அமைதி இன்றித் தவிக்கின்றன என் கண்கள்.”

“அவர் வராவிட்டாலும் தூங்குவது இல்லை; அவர் வந்துவிட்டாலும் உறங்குவது இல்லை; என் செய்வது?”

“கண்கள் துன்பத்தை வெளிப்படுத்தி என்னை ஊரவர்க்குக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன. அவற்றை நான் திருத்தவா முடியும்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/118&oldid=1107141" இலிருந்து மீள்விக்கப்பட்டது