திருக்குறள் செய்திகள்/128
தலைவி கூற்று
“நீ பேசத் தேவை இல்லை; கண்கள் உன் மனக் கருத்தை உரைக்கும்.”
தலைவன் கூற்று
“கண்ணுக்கு இனியவள்; மூங்கில் போன்ற தோளை உடையவள்; இளநங்கை; அவள் பெண்மை என்னைக் கவர்கிறது.”
“மணிக்கு உள்ளே நூல் இழை ஓடுகிறது; அவள் அழகில் கவர்ச்சிக் குறிப்பு ஒன்று உண்டு.”
“அரும்பாத முகைக்குள் நாற்றம் அடங்கி இருக்கிறது; நகைக்காத முறுவலில் ஒரு மனக்குறிப்பு உண்டு; அஃது அவள் காதற் குறிப்பு ஆகும்.”
“அவள் காட்டிய கள்ளக் குறிப்பு என் காதல் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது.”
தலைவி கூற்று
“இனியது பேசி ஆறுதல் கூறி அணைத்து மகிழ்ந்தார்; பிரிவுப் பயணத்துக்கு அஃது அச்சாரம் ஆகும்.”
“மலைநாட்டுத் தலைவன் நம்மை அறிவுறுத்திப் பிரிய நினைப்பதனை என்னைவிட என் வளையல்கள் அறிந்துகொண்டன; அவை நிலைகொள்ள மறுக்கின்றன.”
“நேற்றுதான் அவர் என்னைவிட்டுப் பிரிந்தார். ஏழு நாள் ஆகிவிட்டது போல் ஆகிவிட்டது; பசலையும் மேனியில் இடம் பெற்றுவிட்டது.”
தலைவன் கூற்று
“கைவளையல்களை நோக்கினாள்; தன் மெல்லிய தோளைக் குறிப்பாகக் காட்டினாள்: கால் அடி நோக்கினாள். அவள் உணர்த்தும் செய்தி யாது? பிரிவு தாங்க இயலாது; செலவுதவிர்ப்புதான் வழி என்பதனை உணர்த்திவிட்டாள்.”
கவிஞன் கூற்று
“தான் உற்ற காம நோயை யாருக்கும் எடுத்து உரையாத மனநிலை பெண்மைக்கே உரியது; அது பெண்மைக்குச் சிறப்புச் சேர்க்கிறது; கண்ணினால் தான் கருதியதைக் காதலனுக்கு உணர்த்தும் குறிப்பு அவளுக்கு உண்டு; அஃது அவளுக்குப் பெருமை சேர்க்கிறது.”