திருக்குறள் செய்திகள்/129
கவிஞன் கூற்று
“நினைத்தாலே இன்பம் தருவது; காண மகிழ்வு தருவது காமம்; அந்த இயல்பு கள்ளுக்கு இல்லை."
தலைவி கூற்று
“பனை அளவு காமம் உடையவர் தினை அளவும் ஊடுதல் செய்யார்.”
“காதலர் புறக்கணித்தாலும் என் கண்கள் அவரையே கணிக்கின்றன. அவரைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது.”
“ஊடுதற்கு என்று சென்றேன்; தோழி! அது மறந்து கூடற்கண் சென்றுவிட்டது என் நெஞ்சு.”
“எழுதும்போது எழுதுகோல் கண்ணுக்குத் தெரிவது இல்லை; தலைவனின் பழிகள் அவரைக் காணும்போது என்முன் நிற்பது இல்லை; மறைந்துவிடுகின்றன.”
“நேரில் பார்க்கும்போது தவறுகளே தெரிவது இல்லை; அவர் என்னைவிட்டு விலகி இருக்கும்போது அவர் தவறுகள்தாம் வந்து முன் நிற்கின்றன.”
“ஆற்று வெள்ளத்தில் கால் வைத்தால் அஃது எங்கே அடித்துக்கொண்டு போய்விடும் என்பதைக் கூற முடியாது; ஊடலில் இறங்கி இனிய நேரத்தைப் பாழ் படுத்திக்கொள்ள யான் விரும்பவில்லை.”
“கள்வா! நீ என்னை வருத்தி வாட்டினாலும் களித்த என் கண்களுக்கு உன் மார்பு கள் போன்றது; நீ என்னை மயக்கிக்கொண்டே இருக்கிறாய்.”
தலைவன் கூற்று
“மலரைவிட மென்மையானது காமம்! சிலரே அதன் மென்மை கெடாமல் நுகர வல்லவர்."
“கண்களால் சிறிது ஊடிவிட்டு உடனே கூடுவதில் என்னை அவள் முந்திக்கொண்டாள்.”