திருக்குறள் செய்திகள்/13

விக்கிமூலம் இலிருந்து

13. அடக்கம் உடைமை

அடக்கம் உன்னிடம் அடங்கி இருந்தால், நீ உயர்ந்து காணப்படுவாய். மரிக்காமலேயே உன்னை அமரன் என்று பாராட்டுவர்; அடங்காது இருப்பது உன்னை நிறை இருளில் ஆழ்த்திவிடும்.

காத்துப் பழகிய நீ அடக்கத்தையும் உன் உள்ளடக்கத்தில் சேர்த்து வைக்கவும்; அதனைவிட உன் உயிருக்கு ஆக்கம் தருவது வேறு எதுவும் இருக்க முடியாது.

வாயை மூடிவை; செவிகளைத் திறந்துவை; அறிய வேண்டியவற்றை அமைதியாக அறிய முயற்சி செய். காற்றும் வெளிச்சமும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம். அவசரப்பட்டு முத்துகளை உதிர்க்காதே; தேவைப்படும் போது அவற்றுக்குத் தக்க விலை கிடைக்கும்.

மலை என்ற பெயரே அஃது எதற்கும் குலையாமல் இருப்பதால்தான். நீ உன் நிலையில் திரியாதே; அடங்கி இரு; எளிதில் அசைக்க எந்தச் சூறாவளியாலும் முடியாது. அடங்கி அமைதியாக இருப்பவனின் தோற்றம் மலையினும் மாட்சி உடையது; மதிக்கத் தக்கது.

பேதமற்ற நிலை என்ற ஒன்றைக் கூறினால் அனைவருக்கும் உரியது அடக்கம். இதில் ஏழை, செல்வன் என்ற வேறுபாடு இருக்காது. எனினும் பணிவு என்பது செல்வர்க்கே அழகை மிகுதியாகச் சேர்க்கும்.

ஆமை என்பது பிறருக்குப் புலப்படாமை உடையது. கனத்த ஓடு அஃது உறையும் கூடு; கடன்காரனைப் போல அஃது அடிக்கடி தலைகாட்டாது; மானம் உள்ளவனாக உள்ளே ஒடுங்கி இருக்கும். அஃது உன்னால் இயலாமை தான்; என்றாலும் அடக்கம் தற்காப்பு அளிக்கும்; ஏழு பிறப்புக்கும் நன்மை விளைவிக்கும்; உன்னை யாரும் தொட இயலாது; உன் வாழ்வு கெட வாய்ப்பு நேராது.

நா அடிக்கடி வெளியே நீட்டுகிறது. அதைக் கட்டிப் போடு. இல்லாவிட்டால் வீண்வம்பை விலைக்கு வாங்கி வந்துவிடும்; பிறகு வருந்துவாய்; அதனால் நாவினைக் காப்பாயாக.

உன் நண்பன் மானமுள்ளவன்; கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும்; நீ நன்மைகள் பல செய்திருக்கிறாய்; என்றாலும் அசதியில் வசவு உன் சொற்களில் ஏற்பட்டு விடுகிறது. அவன் மானமுள்ளவன்; நிதானம் இழந்து விடுகிறான்; நல்லதை எல்லாம் மறந்துவிடுவான்; ஒன்றை வைத்தே ஓயாமல் பகைமையை வளர்ப்பான்; அவன் உன் நண்பன்தான்.

தீ சுட்டுவிட்டது; மருந்து போட்டதால் புண் ஆறி விட்டது; வடு மட்டும் தெரிகிறது; அதனைப்பற்றி நீ கவலைப்படுவதே இல்லை.

உன் நண்பன்தான். அவன் சுடுசொல் உன் நெஞ்சில் வடு உண்டாக்கிவிட்டது. அஃது ஆறவே இல்லை; அஃது ஏன்? சொல்; அஃது ஆறாது.

பத்திரப்படுத்திவை; உன் சினத்தை வெளிக்காட்டாதே; சிரமமான காரியந்தான்; நீ கிரமமாகப் படித்திருக்கிறாய்; பக்குவப்பட முடியும்; பழகிக் கொள்; பண்புடையவன் ஆகி விடுவாய்; சினம் அடக்கு; அறம் உனக்கு நண்பன் ஆகி விடும். அறம் உன்னைவிட்டு விலகாது; பிறகு நீ தவறே செய்யமாட்டாய்; சினத்தை அடக்குவது அடக்கத்தில் தலையாயது; முதன்மையானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/13&oldid=1106263" இலிருந்து மீள்விக்கப்பட்டது