திருக்குறள் செய்திகள்/16

விக்கிமூலம் இலிருந்து

16. பொறை உடைமை

கையிலே கடப்பாரை; பக்கத்திலே மண்வெட்டி: நிலத்தைக் குழிப்படுத்துகிறான். அவனை அந்தக் குழியிலேயே போட்டு மிதிக்க நினைக்கலாம்; நிலம் என்னும் தங்கை வெட்டினாலும் தட்டிக் கேட்பது இல்லை; அவனைத் தாங்கிக் கொண்டுதான் இருக்கிறது; தன்மீது நிற்பவனைச் சாய்த்துவிடுவதில்லை.

பொறுமையும் அப்படித்தான்; எதிரி எவ்வளவு தீமைகள் தொடர்ந்து செய்தாலும் அவற்றைத் தாங்கும் சக்தி ஒருவனுக்கு வேண்டும்; நிலம் அவனுக்குச் சொல்லித்தரும் பாடம் இது.

பிறர் செய்யும் தவறுகளை எப்படிப் பொறுத்துக் கொள்வது என்று கேட்கலாம்; எளிய வழி இருக்கிறது; அவற்றை உடனே மறந்துவிடு; பெரிய சுமை உன்னை விட்டு நீங்கிவிடும்; தூக்கி எறிந்துவிடு; பொறுப்பதே, தக்கது. அதனைவிட மறப்பது அதனினும் மேலானது ஆகும்.

பொருள் இருந்தும் விருந்தினரைப் போற்றாவிட்டால் அவன் வறியவனே ஆகிறான். அதேபோல அறிவுஇருந்தும் பிறர் தவறுகளை மன்னிக்காவிட்டால் அவன் சிறியவனே. அதற்குத் தக்க மனவலிமை வேண்டும்; அதனை ஒருவன் உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒறுத்துப்பார்; அதனால் வெறுப்புகள்தாம் மிஞ்சும்; பொறுத்துப்பார்; அதனால் உன் புகழ் எஞ்சும்; உன்னைத் தங்கமான மனிதன் என்று எங்கும் எப்பொழுதும் போற்றுவர். பதிலுக்குப் பதில் தீமை செய்துவிடலாம். அஃது ஒரு நாளைக்குத்தான் மனநிறைவைத் தரும். பொறுத்தால் பொன்போல் ஒளிவிடுவாய்; பொன்றும் துணையும் புகழ் நிற்கும்.

அவன்தான் மடையன்; தவறு செய்கிறான்; அதற்கு நீயுமா திருப்பித் தீமை செய்ய வேண்டும்? அவனைவிட நீ உயர வாய்ப்பு உள்ளது. பயன்படுத்திக்கொள்; நல்லதே செய்க.

செல்வச் செருக்கால் அல்லல் விளைவிக்கும் செயலை மற்றொருவன் உனக்குச் செய்கிறான். அவனுக்குத் திருப்பி நன்மையே செய்துபார்; திருந்திவிடுவான்.

பொறுமை என்பது எளிய செயல் அன்று; பிறர் தரும் துன்பங்களையும் தீமைகளையும் தாங்கிக்கொள்ள வேண்டும். அந்த வகையில் அஃது ஒரு தவமே; துறவு உள்ளம் இருந்தால்தான் இந்தத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள முடியும். விரதங்களை ஏற்றுத் தவம் புரியும் துறவிகளைவிடச் சந்ததமும் பிறர் செய்யும் தீமைகளைத் தாங்கிக்கொள்ளும் பொறுமைசாலிகள் உயர்ந்தோர் என்று மதிக்கப்படுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/16&oldid=1106296" இலிருந்து மீள்விக்கப்பட்டது