திருக்குறள் செய்திகள்/15
அறநூல் அறிந்தவர்கள் பிறன் மனைவியை நயத்தலை ஒழித்து ஒதுக்குவர். ஒருவன் எந்தத் தவறு செய்தாலும் அவனை மன்னிக்க முற்படுவார்கள்; பிறன் ஒருவன் வாசற்கடையில் நின்று ஏசப்படும் நிலையில் நடந்து கொள்வானானால் அவனை மன்னிக்கமாட்டார்கள். நல் உணர்வு அற்றவனைச் செத்தவனாகவே மதிப்பர்.
ஒருசிலர் தம்மைப் பெரிய மனிதன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஒருவன் பின்விளைவு பாராமல் ஒருத்தியை விழைந்தால் அவன் மதிப்பு இழந்தவன் ஆகிறான். அவன் எத்தகையவனாக இருந்தாலும் அவன் இத்தகைய செயலைச் செய்தால் வெறுப்புக்கு ஆளாவது உறுதி; எதிர்ப்புக்கு உரியவன் ஆவான்.
வாசற்கதவைக் கடந்து மற்றொருத்தியோடு உறவு கொள்ள நினைப்பது தவறு. அப்படி ஒருவன் நடந்து கொண்டால் அவனுக்கு அப்பொழுது எந்தத் தீமையும் நேராமல் இருக்கலாம்; தெரிந்தால் என்ன ஆகும்? அழியாப் பழி அவனை அழித்துவிடும்.
இதனால் என்னதான் ஆகிவிடும்? குடி முழுகியா போய்விடும் என்று தடித்தனமான வினாவை எழுப்பலாம்; அவனைச் சார்ந்தோருக்கு முதலில் தெரிந்தால் பகை உண்டாகும். குத்துவெட்டு ஏற்படாமல் இருந்தால் புண்ணியந்தான். கொண்டவன் இதனைக் கண்டுகொண்டு மண்டாகவா இருப்பான்? தண்டுகொண்டு தாக்க மாட்டானா? தப்பித்துக்கொள்ளலாம்; ஆனால் அந்தப் பகை என்றும் நிலைத்து இருக்கும்.
யாரும் இதனைக் கவனிக்கவில்லை; எந்தக் கேடும் நிகழவில்லை என்று நினைக்கலாம். ஆனால் அறநூல்கள் இதனைப் பாவமான செயல் என்று காண்பிக்கத்தான் செய்யும். உன் மனச்சான்று இடித்து உரைக்கும்; நீ செய்வது அறத்துக்கு மாறுபட்ட செயல் என்பதை அது சொல்லிக் கொண்டே இருக்கும்.
இதில் நீ கண்டது என்ன? அச்சம்தான் மிச்சம். நடுங்கி நடுங்கிச் சாகவேண்டியதுதான். இதற்கு விளக்கம் தேவையில்லை; அஞ்சி அஞ்சிச் சாவார்கள் இந்த அவதியிலே.
இம் மூன்றுமே அல்லாமல் பழி என்பது உச்சகட்டமாக அமையும்; அக்குடும்பத்தின் இன்ப வாழ்வை அன்பு உறவைச் சிதைத்தான் என்ற பழி என்றும் நிலைத்து நிற்கும்.
பிறர்க்கு ஏற்படும் பாதிப்புகள் இருக்க அவனுக்கே ஏற்படும் பரிதவிப்பும் உள்ளது. பேராண்மை என்பது பிறன் மனைவியை விரும்பாத நல்லொழுக்கம்; ஒருத்தியோடு வாழ்ந்து இல்வாழ்க்கையைச் சிறப்பித்து மனநிறைவோடு வாழ்ந்தால் அவனுக்கு அது வெற்றியாகும். வாய்ப்புகள் வரலாம்; அந்தத் தளைகளுள் அகப்படாமல் இருப்பதுதான் ஆண்மைக்கு அழகு; அவன் மனைவியும் அவனை மதிப்பாள். அன்பு வளரும்; அறம் அவனை வாழ்த்தும்.
தன்னால் சில பழக்கங்களை விடமுடியாது என்று பிதற்றுபவரும் உளர். குடிப்பது தமக்குப் பழக்கம் அதனை விடமுடியவில்லை என்பார்கள். திருடுவது தேவை என்று ஒருசிலர் அநியாயத்தை நிறுவி நியாயம் பேசுவார்கள், முரடன், வீணன், கொடியவன், கீழ்மையன், கயவன் என்று பெயரெடுத்தாலும் அவன் தீய செயல்களைப் பொருட்படுத்தமாட்டார்கள். அற்பத்தனமாகப் பிறன் மனைவியை விரும்புதல் ஆகிய இக்கீழ்மையை மேற்கொள்பவனை யாரும் மதிக்கமாட்டார்கள். அவனுக்கே தற்காப்பு, இந்த ஒரு குற்றம் மட்டும் செய்யாதிருப்பது.