திருக்குறள் செய்திகள்/21
தீயவர்கள் தீமை செய்யத் தயங்குவது இல்லை; சொல்லி முடிப்பதற்குமுன் தீமைகளைச் செய்து முடித்து விடுவார்கள். நல்லவர்கள் தீமை செய்ய அஞ்சுவர்; அந்த நினைப்பே அவர்களை அச்சுறுத்தும்.
ஒரு தீமை மற்றைய தீமைகளுக்குக் காரணம் ஆகிவிடுகிறது; சிறு பொறி பெரு நெருப்பாகிவிடுகிறது. அதனால் தீமையை நெருப்பு எனக் கருதி விலக்குக.
பகைவன் என்றாலும் அவனுக்குத் தீமை கருதாதே. அழிவு அழிவுதான் பொருள் நஷ்டம் உலகத்துக்கு இழப்பு.
மறந்தும் பிறருக்குக் கேடு செய்ய நினைக்காதே; அறம் உனக்கு அழிவை உண்டாக்கிவிடும்; கெடுவான் கேடு நினைப்பான்.
காசு இல்லை; தீமை செய்தால் தன் வறுமை தீரும் என்று கருதாதே. காசும் வாராது; வறுமை முன்னைவிட அதிகமாகும்.
நீ நிம்மதியாக வாழ வேண்டும் என நினைத்தால் வீண் வம்புகளை விலைக்கு வாங்காதே; மற்றவர்களுக்குத் தீமை செய்யாதே.
நீ மற்றவருக்குத் தெரிந்து தீமை செய்யாதே; அவர்கள் வஞ்சம் வைத்துப் பழிதீர்ப்பர்.
உன் நிழல் உன்னைத் தொடராமல் விடாது; நீ செய்த தீமையின் விளைவும் உன்னைத் தொடராமல் இருக்காது.
உன்னை நீ நேசித்தால், நீ தொல்லை இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தால், பிறர் உனக்குத் தீமை செய்யக் கூடாது என்று கருதினால் தீய செயல்களைச் செய்ய நினைக்காதே.
நீயாகச் சென்று தீமைகளைத் தேடிக்கொண்டால் அதற்கு நீதான் பொறுப்பு; தீயது நாடாதே; தெரிந்து அழிவைத் தேடாதே.