திருக்குறள் செய்திகள்/23
ஒப்புரவு என்பது ஒத்த நிலையில் இருப்பவர்க்கு உதவுவது; ஈகை என்பது வறியவர்க்குத் தருவது ஆகும். செல்வர்க்குத் தருவது அவரிடமிருந்து நன்மைகளை எதிர்பார்த்துத் தருவது ஆகும்.
பிறரிடமிருந்து பொருள் பெறுதல் அறநெறிச் செயல்களுக்கே என்றாலும் ஏற்பது இகழ்ச்சியே; கொடுத்தால் மேல் உலகம் வாய்க்காது என்று மருட்டினாலும் அதனைப் பொருட்படுத்தாமல் வறியவர்க்குக் கொடுப்பதே நன்மையாகும்.
‘இல்லை’ என்று கூறும் சொல் ஈயும் குடிப்பிறந்த வனிடத்துத் தோன்றாது. தரப் பொருள் இல்லை என்று கூற அவன் நா இடம் தாராது; எப்படியும் கொடுத்து உதவுவான்.
பிறர் பசி தீர்க்கும் வள்ளன்மை உடையவன் தவசியை விட மேலானவன் ஆவான்; தவசி தன் பசியை மட்டும் தாங்கிக்கொள்கிறான். பசியை அவனால் அடக்க முடிகிறது: இவர்கள் பிறர் பசியை அடக்கித் தீர்த்தும்விடுகிறார்கள்.
பொருள் பெற்றவன் வறியவரின் கடும்பசியைப் போக்க வேண்டும். அப்பொழுதே அப் பொருளுக்கும் பெருமை உண்டாகும்.
பிறர் பசி போக்குவதற்குத் தம் கைப்பொருளைப் பங்கிட்டுத் தரும் கொடையாளி வறுமையால் வாடுவான் என்று கூற முடியாது; அத்தகைய நல்லோன் என்றும் எதற்கும் துன்பப்பட மாட்டான்; அவன் செல்வம் பெருகுமேயன்றிக் குறையாது.
பிறருக்குத் தந்து அவர் துயர் தீர்க்கும் போது உண்டாகும் மகிழ்ச்சியை ஈயாதவர் அறியமாட்டார்கள். அவர்கள் தேடி வைத்த பொருளைத் தீயவர்கள் அனுபவிப்பர். அவர்கள் நல்லதுக்குத் தரமாட்டார்கள்.
தட்டு நிறையச் சோற்றைப் போட்டுக்கொண்டு மிச்சம் வைக்காமல் தனித்து உண்பவன் பிச்சை எடுத்து உண்பவனைவிட இழிந்தவன் ஆவான்; பிச்சைக்காரர் உள்ளம் வஞ்சமற்றது; பிறருக்குத் தரக்கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை.
சாவது கசப்புதான்; அதுவும் சில சமயம் இனிப்பாக மாறுகிறது. எப்பொழுது பிறர்க்கு ஈய முடியாத இழிநிலை ஏற்படுகிறதோ அப்பொழுதே அவன் உலகுக்குப் பயன் படாதவன் ஆகிறான்; மண்ணுக்கு வீண் சுமையாகி விடுகிறான்.