உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் செய்திகள்/27

விக்கிமூலம் இலிருந்து

27. தவம்

தனக்கு உற்ற துன்பத்தைத் தாங்கிக்கொள்வதும், பிறர்க்குத் தீமை செய்யாமல் இருப்பதுமே தவமாகும்.

தவம் அதனைச் செய்பவர்க்கே பொருந்துவது ஆகும்; அதில் நாட்டம் இல்லாதவர் தவத்தை மேற்கொள்வது வீணாகும்.

துறவிகளுக்கு உணவு தருவதை அறமாகக் கொண்டு இல்வாழ்க்கையில் இருப்பவர், அதுதான் தம் கடமை என்று தவத்தை மறந்துவிட்டார்கள் போலும்; தவம் என்பது அனைவரும் செய்யத்தக்கது ஆகும்.

தவம் என்பது விடாமுயற்சி, பகைவரை வெல்லவும் தவம் வேண்டும்; உறவினரை வாழ வைக்கவும் அது தேவைப்படுகிறது.

விரும்பியதைத் தவத்தைக்கொண்டு அடைய முடிகிறது; அதனால் தவம் தொடர்ந்து தொடரப்படும்.

தவம் செய்பவர் தம் தொழிலிலும் முழுக் கவனம் செலுத்துவர்; மற்றவர்கள் எத்தொழிலிலும் சரியாக ஈடுபாடு கொள்ள மாட்டார்கள்; அவர்கள் காலத்தை வீண்படுத்துவர்.

பொன் சுடச்சுட ஒளிரும்; துன்பமும் தொடர்ந்து தாக்க நோற்பவர் தம் உள்ளம் உறுதிபெறுவர்.

தன்னைத்தான் கட்டுப்படுத்திக்கொண்டு செயல் ஆற்ற வல்லவனை மற்றவர்கள் தொழுது மரியாதை செலுத்துவர்.

தவத்தால் ஆற்றல் பெறும் சிறப்பினை உடையவரைக் கண்டு எமனும் சற்று விலகியே நிற்பான்.

சிலரே வாழ்க்கையில் முன்னேறுகின்றனர்; காரணம் தொடர்ந்து தவம் செய்து முன்னேறுகின்றனர். பலர் வீணராக வாழ்ந்து வருவது அவர்களிடம் எந்த நன்முயற்சியும் இல்லாமையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/27&oldid=1106316" இலிருந்து மீள்விக்கப்பட்டது