திருக்குறள் செய்திகள்/28

விக்கிமூலம் இலிருந்து

28. கூடா ஒழுக்கம்

காவி உடுத்திக்கொண்டு கம்பீரமான வாழ்க்கை வாழத் துணிந்துவிட்டு வஞ்சியர் சிலரிடம் கொஞ்சிக் குலவுவது தவநிலைக்கு இழுக்காகும். அவனுடைய மனச் சான்றே அவனுக்கு அதனைத் தவறு என்பதை இடித்து உரைக்கும்.

துறவி என்று கூறிக்கொண்டு அவன் தகாத உறவுகளை வைத்துக்கொள்வது முரண்பாடாகும். பிறர் கண்ணுக்கு நல்லவனைப்போல நடித்துத் தீயன செய்கிறான். அவன் செயல்கள் புலித்தோல் போர்த்த பசுவின் கதை ஆகிறது. அது நெற்பயிர் மேய்வதை யாரும் தடுப்பதில்லை; புலி புல்லைத் தின்னாது என்பதால் யாரும் அதனைச் சந்தேகிப்பதில்லை.

வேடுவன் வலை வீசிப் பறவைகளைப் பிடிக்கிறான். அவன் புதரில் மறைந்து இருப்பதை அப் பறவைகள் கவனிக்க இயல்வதில்லை. அதேபோல் மிருகத்தன்மை கொண்ட தவசி தவக்கோலத்தில் மறைந்துகொண்டு அவக்கேடான செயல்களைச் செய்வதை யாரும் கவனிப்ப தில்லை. இவர்களைப் போன்ற கொடியவர்கள் வேறு யாரும் இருக்கமுடியாது.

குன்றிமணி சிவப்பு; அதன் கருமணி பிறர் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. அவன் உடுத்துவது காவி உடை, நினைவுகள் மகளிரைச் சுற்றி வட்டமிடுகின்றன. அவன் வாழ்க்கை களங்கமுடையது என்பதைப் பிறர் அறியாமல் மறைத்து வாழ்கிறான். அவன் போலி வாழ்க்கையை யாரும் அறிய இயல்வதில்லை. நேம நிஷ்டைகளில் அவன் தவறுவதே இல்லை; என்ன பயன்? இஷ்ட தேவதைகளை வழிபடுகிறான். அதனை நிறுத்துவதில்லை. கஷ்டம் கஷ்டம்; கசடர்கள் இவர்கள்.

அம்பு நேராகத்தான் இருக்கிறது; அஃது உண்மையில் கொலைக்கருவி. யாழ் வளைந்து இருக்கிறது; ஆனால் அஃது இசைக்கருவி. தோற்றத்தைக் கண்டு எதனையும் முடிவு செய்ய முடியாது. செயலிலும் இவர்கள் தூயராக மாறினால்தான் மதிப்பும் உயர்வும் பெறுவர்.

தாடியும் மொட்டையும் அடித்துக்கொண்டு ஆசை அற்றவன்போல் இவர்கள் நடிக்கிறார்கள்; இவை வெறுங் கோலம்; செயல்கள் அனைத்தும் அலங்கோலம்; இவர்கள் புறஞ்சுவர் கோலம் செய்பவர்கள்; அகம் கருகி வாழ்பவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/28&oldid=1106317" இலிருந்து மீள்விக்கப்பட்டது