உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் செய்திகள்/31

விக்கிமூலம் இலிருந்து

31. வெகுளாமை

வெகுளுதல் என்றால் அருவருத்துக் கோபித்தல். பிறரை வெறுப்பதாலேயே சினம் தோன்றுகிறது. வெறுப்பே சினத்துக்குக் காரணம் ஆகிறது.

சினம் பொல்லாதது; அது நம் சீர்மையைக் கெடுக்கும். நம்மைவிட எளியவரிடத்துக் கோபம் கொள்கிறோம்; நம்மைவிட வலியவரிடத்து அடங்கி இருக்கிறோம். கோபமும் அது செல்லும் இடம், செல்லா இடம் தெரிந்து தன்னைக் காட்டிக்கொள்கிறது. எந்த இடத்திலும் கோபம் காட்டாமல் இருப்பதுதான் மனிதத் தன்மை; அதனால் பல நன்மைகள் உண்டாகும்.

நேற்றுவரை சிரித்துப் பழகிய நண்பர்கள் நம்மை விட்டுப் பிரிகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் கோபமாகச் சில வார்த்தைகளைப் பேசியதுதான். கடுகடுப்பாக நடந்துகொண்டால் யாரும் மகிழ்ச்சியாகப் பழக மாட்டார்கள்; சுடுமூஞ்சி என்று கூறிவிடுவார்கள். பகை உண்டாவதற்குப் பெரிய காரணங்கள் தேவை இல்லை; சொல்வதனையும் பிறர்மனம் புண்படாமல் சொல்ல வேண்டும்.

அவசரம், ஆவேசம், ஆக்கிரமிப்பு அதனால் கோபம் மிக்கு வருகிறது. கோபத்தில் பேசும் வார்த்தைகள் மற்றவர்களைச் சுட்டுவிடுகின்றன; அவர்கள் அண்ட அஞ்சுகிறார்கள்; பிறகு அது பகையாக முடிகிறது. கோபத்தைக் கொன்றுவிடு; இல்லாவிட்டால் அஃது உன்னை அழித்து விடும். உன்னைமட்டும் அன்று; உன் குடும்பத்தையே அழித்துவிடும்; அது சிறு பொறிதான்; பரவினால் பெரு நெருப்பு ஆகிவிடுகிறது.

நிலத்தைக் கைகொண்டு அறைந்தால் உன் கைதான் வடுப்படும்; அந்த நோயினின்று தப்ப முடியாது. நிலத்தை அறைவானேன்? கையில் இரத்தம் உறைவானேன்?

பழகிய பிறகு கோபத்தால் மனம் மாறுபட்டுப் பிரிதல் அறிவுடைமை ஆகாது; அவர்கள் எரிச்சல் ஊட்டும்படி நடந்துகொண்டாலும் பொறுமையைக் காட்டுவதுதான் நட்பை வளர்க்கும். அவசரப்பட்டு ஆவேசம் காட்டித் துவேஷத்தை உண்டாக்கக் கூடாது.

கோபம் சண்டாளம் என்பர்; கோபம் இருந்தால் எதனையும் சாதிக்க முடியாது. அதனை விட்டுவிட்டால் நினைத்த எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும்.

கோபத்துக்கு இரையானால் யாரும் உன்னை மதிக்க மாட்டார்கள்; பழகமாட்டார்கள்; ஒதுக்கிவிடுவார்கள். ஏன்? செத்தவனுக்குச் சமானமாகிவிடுவாய்.

சினத்தைத் துறந்துவிட்டால் நீ துறவிக்குச் சமானம் ஆவாய்; எந்தத் துன்பமும் உன்னைப் பாதிக்காது; உன்னால் எந்தத் தீமையும் நேராது என்று அனைவரும் பழகுவர்; பயன் உண்டாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/31&oldid=1106325" இலிருந்து மீள்விக்கப்பட்டது