திருக்குறள் செய்திகள்/32
‘வாழ்க, வாழ விடுக” இதுதான் வாழும் முறை: காட்டு விலங்குகள் பிற எளிய விலங்குகளை அடித்துத் தின்றால்தான் அவை உயிர் வாழமுடியும்; அது காட்டு நெறி. மனிதன் மிருக நிலையைக் கடந்து அறிவுடன் வாழக் கற்றிருக்கிறான். அவன் மற்றவர்களைக் கெடுத்துத் தான் வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; அடுத்தவனைக் கெடுக்காமல் அழகாக வாழ முடியும். அதுதான் அறநெறி.
பதவி வருகிறது என்றால் மற்றவனைக் கீழே தள்ளி விட்டு நீ மேலே உயரலாம் என்று ஆசைப்படுவது அநாகரிகம்; பொறுத்திருந்து நீ உயர முயற்சி செய்; அது நிலையானது. சிறப்பும் செல்வமும் கிடைக்கும். பிறர்க்குக் கெடுதி செய்யாதிருப்பது மாசு நீங்கிய மனத் தினரின் கொள்கையாகும்.
மற்றவன் உனக்குக் கெடுதி செய்தான் என்பதற்காக அவனுக்கு நீ திருப்பிக் கெடுதி செய்தால்தான் பதிலுக்குப் பதிலாக அமையும் என்று நினைக்கலாம். நன்மை செய்து விடு; அதுதான் தக்க பதிலாக அமையும். “அவனுக்குத்தான் புத்தி கெட்டுவிட்டது; உனக்கு அறிவு எங்கே போயிற்று?” என்று உன்னை உனக்கு வேண்டியவர்கள் கேட்பார்கள்; யோசித்துச் செயல்படு.
“எதிரி தவறு செய்துகொண்டே போனால் அவனை விட்டுவிடுவதா? இது கோழைத்தனம்” என்று வாதாடலாம். அவனை வெல்வதற்கு ஒரு வழி இருக்கிறது. அவனுக்கு நன்மை செய்துகொண்டே இரு நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது; தண்ணீர்தான் நெருப்பை அணைக்க முடியும்.
துன்பம் என்பது யாரையும் தாக்கும்; ஒரு கஷ்டம் வந்தால் அதனால் நீ எவ்வளவு வேதனைப்படுகிறாய்? அந்த வேதனை எதிரியும் படவேண்டுமா? அதனால் உனக்கு என்ன நன்மை? மற்றவர்கள் கஷ்டப்படுவதைக் கண்டு நீ ரசிக்கக் கூடாது.
“அது பிறர் வருத்தத்தில் கொள்ளும் மகிழ்ச்சி” என்று எடுத்துக் காட்ட வேண்டிவரும். சிலர் பிறரை வருத்துவதிலேயே மகிழ்ச்சி காண்பர். இது மிருகத்தனமானது: அறிவுடையவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தவறு செய்தவர்களைத் தண்டிப்பதற்கு ஒரே வழி இருக்கிறது. அஃது அவர்கள் நாணும்படி நன்மை செய்தல் ஆகும்.
மற்றவர் நோயையும் சிந்தித்து அவர்களுக்கு ஊறு செய்யக்கூடாது என்பதைக்கூடப் பின்பற்றாமல் இருந்தால் தான் பெற்ற அறிவினால் என்ன பயன்? அறிவாளிக்கும் முட்டாளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.
துன்பம் என்று தெரிந்தால் எந்த அளவும் யாருக்கும் மனமறிந்து செய்யாமல் இருப்பதுதான் சிறந்ததாகும்.
பிறர்க்குக் கெடுதி நாம் முன் ஒருநாள் செய்தால், பின் ஒருநாள் நமக்கு அத் துன்பம் தானே வரும்; தப்பித்துக் கொள்ள முடியாது.
நீ ஒருவருக்கும் துன்பம் செய்யாமல் இரு. யாரும் உனக்குப் பகை என்று தோன்றமாட்டார்கள். உனக்கு எந்தத் துன்பமும் வாராது. நீ யாரையும் கெடுக்காதே; உன்னை யாரும் கெடுக்க நினைக்கமாட்டார்கள். நல்லது செய்ய இயலவில்லை என்றாலும் தீயது செய்வதைத் தவிர்க்கவும்.