திருக்குறள் செய்திகள்/4
அறத்தின் காவலர்கள் துறவிகள்; சான்றோர் காட்டும் நெறியில் வாழ்வதே அறமும் ஆகும்.
உயிர்க்கு ஆக்கம் தருவது அறம்; அதனால் உயர் சிறப்புகள் சேர்கின்றன. செல்வமும் சேர்கிறது; இதனை விட நன்மை தருவது வேறு ஒன்றும் இருக்க முடியாது; அறமே எல்லா நன்மைகளுக்கும் காரணம் ஆகிறது.
அறத்தைக் கடைப்பிடி; ஆக்கம் உண்டாகும். அதனைக் கைவிட்டால் வாழ்க்கையில் தேக்கமே ஏற்படும். நன்மைகளின் நீக்கம் தொடரும்; கேடுகள் உன்னைத் தேடி வரும்.
இயன்றவரை அறம் செய்க; வாய்ப்புகளைத் தவற விடாதே; விடாது அறம் செய்க.
அறம் என்பது யாது? அது புறத்தில் இல்லை; உன் அகத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்; மனத்துக்கண் மாசு இல்லாமல் தூயதாக வைத்துக்கொள்; அதுவே அறம் ஆகும். ஏனைய செயல்கள் வீண் ஆரவாரம் ஆகும்.
மாசு என்று குறிப்பிட்ட குற்றங்கள் யாவை? பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் இவை நான்கும் தவிர்ப்பதே அறச்செய்கையாகும். இவையே மனத்தில் எழும் குற்றங்கள் ஆகும்.
நாளைக்கு என்று அறம் செய்வதைத் தள்ளிப் போடாதே; இன்றே தொடங்குக; அது பெருகும் பல மடங்கு அஃது இறுதிக்காலத்தில் உறுதிகளைத் தரும். காலன் அழைக்கும்போது அவனைத் தடுத்து நிறுத்தும்.
பல்லக்குச் சுமக்கிறவன் ஒருவன்; அதில் சுகவாசி ஏறிச் செல்கிறான்; இருவரும் வாழ்க்கையின் இரு எல்லைகள்; இவர்கள் நாம் கூறும் அறத்தைக் கேட்கும் நிலையில் இருக்கமாட்டார்கள். ஒருவருக்குப் பசி; மற்றவருக்குச் செல்வ மயக்கம்; இருவரும் செவி கொடுத்துக் கேட்கும் நிலைக்கு வரமாட்டார்கள். அற வேட்கை உடையவர்க்கே கேட்கையும் நிகழும்.
வாழும் நாள் சிலவே. அதனை வீழும் நாளாக மாற்றாதே அறம் செய்க, அஃது உன் பிறப்பு அறுக்கும் முயற்சிகளில் முதன்மையானது; துஞ்சிய நாள் போக எஞ்சிய நாள் சிலவே உள்ளன; பிறப்பு வாராமல் தடுக்க அறம் செய்க.
இன்பம் தேவைதான்: அறத்தின்வழி அஃது அமை யட்டும்; அது புகழைத் தரும்; ஏனைய வழிகளில் இன்பம் வரலாம்; அதனால் புகழ் கிடைக்காது.
தக்கது இது, தகாதது இது என்று மிக்கது கூற வேண்டுமென்றால் அறம் செய்வதே தக்கது; தகாதது பழி விளைவிக்கும் செயல்; பழி நீக்குக, அறம் வளர்க்க.