திருக்குறள் செய்திகள்/5
குடும்ப வாழ்க்கை என்பது பிறர் இடும்பை தீர்ப்ப தாகும்; சொந்தத் தொழில் இல்லாத துறவிகள், சோற்றுக்கு வழி இல்லாத வறியவர்கள், ஆதரவு அற்ற அநாதைகள் இவர்களுக்கு இல்வாழ்க்கையர் சுமைதாங்கிகள் ஆவர்.
பெற்ற தாயும் உற்ற தந்தையும், மதிக்கத்தக்கவர்கள்; முன்னோர்கள் உழைப்பால்தான் அவர்தம் சந்ததியர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர். செத்தவர்களை மதித்துப் பிதிர்க்கடன் செய்வதும், கடவுளை வழிபடுவதும் குடும்புத் தலைவனின் கடமைகள் ஆகும்.
காசு பணம் இல்லை என்றால், குடும்ப வாழ்வு மாசு பட்டுவிடும். அடுப்பு எரிய வேண்டுமென்றால் துடுப்புக் கொண்டு படகைச் செலுத்தித்தான் ஆக வேண்டும். பொருள் ஈட்டுவது குடும்பத் தலைவனின் கடமையாகும்; அதற்காக ஊரை அடித்து உலையில் போடுவது அடுக்காது. நேர் வழியில் பொருள் ஈட்டுக; வாழ்க்கையைச் சீராக நடத்துக.
அன்பும் அறமும் குடும்ப வாழ்வின் இருகோடுகள்; அவை இல்வாழ்வின் இயல்புகள்; அதன் விளைவும் அவை யாகும். அன்பும் அறமும் இயைந்த வழியில் இயங்குக; உன் இயக்கமும் அதன் முடிவும் அவையேயாகும். அதனால் இவற்றைப் பண்பும் பயனும் ஆகும் என்று கூறுவர்; இவை இல்வாழ்க்கையின் தொடக்கமும் முடிவும் ஆகும்.
இல்லறத்தின் இனிய சுகத்தை, அறியாதவர்கள் பொறுப்பைத் தட்டிக் கழிப்பவர்கள்; இவர்களே துறவு வாழ்க்கையை மேற்கொள்வர். அறம் வழுவாமல் பிறருக்கு உதவியாக இயங்கி அன்பும் அறமும் வளர்த்து இன்ப வாழ்வு அடைவது குடும்ப வாழ்க்கை; சுமைகளுக்கு அஞ்சி வாழ்வின் சுவைகளை இழப்பவர்கள் துறவிகள்.
அறநூற்படி செம்மையான வாழ்வு நடத்தி வெற்றி பெறுவது அரிய சாதனையேயாகும். மறுமை வாழ்வில் அடையும் சுவர்க்க இன்பங்களை இம் மண்ணுலகில் வாழ்ந்தே பெறமுடியும். துறக்க வாழ்வுக்கு இஃது ஒரு திறவுகோல் என்றும் கூறலாம். துறவைவிட உறவே மேலானது என அறிக.