திருக்குறள் செய்திகள்/42

விக்கிமூலம் இலிருந்து

42. கேள்வி

முறையாக ஆசானை அடுத்தும் நூல் பல கற்று அறிவு பெறுவது கல்வி எனப்பட்டது; அதனை மேலும் விருத்தி செய்யாமல் இருப்பது அறிவை மங்கச் செய்துவிடும்; இது கல்லாமை எனக் கூறப்பட்டது; கேள்வி என்பது அறிவுடையோர் பேசக் கேட்டுப் பயன் அடைதல் என்ப தாகும். அரசர்களுக்கு நூல்கள் பல கற்க நேரம் இருக்காது; அதனால் கேள்விஞானம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

அது பெரும்பாலும் அறிவுரையாகும்; அறிவு மிக்கவர்கள் எடுத்துக் கூறுவதைக் கேட்டுவைத்தால் அது தக்க சமயத்தில் பயன்படும். வழுக்கும்போது ஊன்றுகோல் பயன்படுவது போல அவ் அறிவுரைகள் பயன்படும்.

கேட்பது என்றால் எதனைக் கேட்பது? கல்வி என்பது நூல் பல கற்றல்; கேள்வி என்பது நல்லவை சில கேட்டல் ஆகும். எந்தச் சிறிய அளவானாலும் அறிவுமிக்க விஷயங்களைக் கேட்பது அறிவைத் தரும்; கேட்பவனை உயர்த்தி அறிவுச் செல்வம் உடையவர் பக்குவப்படுத்துகின்றனர். தவறியும் கீழ்த்தரமான சொற்கள் அவர்கள் வாயினின்று வாரா; பண்பாடு உடையவராகத் திகழ்வர் நுட்பமான அறிவு பெறுதற்குக் காரணமான கேள்விஞானம் உடையவர்கள் பணிவும் அடக்கமும் கற்றுக்கொள்கின்றனர்.

எனவே கேள்விச் செல்வம் பயன் உடையதாகும்; அது மதிக்கத் தக்க செல்வமாகிறது. வாய்ச் சுவைக்கே அடிமையாவதை விட்டு அறிவுப்பசிக்கு இடம் கொடுப்பவன் அறிவாளி; செவிச்சுவை பயன் உடையது. அவர்கள் சால்பு பெருகுகிறது. நிலத்தில் வாழ்ந்தாலும் தேவர்களைப்போல் பெருமையும் பெறுகின்றனர். செவிப்புலன் கண்களைப் போலவே அறிவு பெறுவதற்கு நுழைவாயிலாக உள்ளது. நூல்கள் பல கற்றுப் பெறும் அறிவை, அறிஞர் பேச்சுத் தருகிறது; சில ஆயினும் அவை சாரம் மிக்கவையாக அமையும். கண்வழிக் கல்வி கற்கும் காலம் மாறி விண் வழி வரும் தொலைக்காட்சி செவிச் செல்வத்தையும் தருகிறது. செவிவழிக் கல்வியை வானொலியும் தருகிறது. ஒளியும் ஒலியும் மக்களால் விரும்பி வரவேற்கப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/42&oldid=1106350" இலிருந்து மீள்விக்கப்பட்டது