திருக்குறள் செய்திகள்/43
அறிவு என்பது தற்காப்புக்குப் பயன்படுகிறது. அது நுட்பமானது; அதே சமயம் கூர்மையானது; வலிமை மிக்கது; எதிரிகள் அதனைக் கொள்ளைகொண்டு போக முடியாது; அஃது ஒருவன் உடைமையாகும்.
அறிவு சிதறக் கூடாது; நன்மையில் அதனை நிறுத்த வேண்டும். தீயதன்கண் நாட்டம் சென்றால் அதனைக் கட்டுப்படுத்துவது அறிவு. அறிவு என்பது நூல்பல கற்பதால் வரும் என்று சொல்வதைவிடக் கேள்விகள் சில கேட்பதாலும் வருகிறது. அது யார் சொன்னாலும் எத்தகையதாக இருந்தாலும் அதன் உண்மையை அறிந்துகொள்ள முயலவேண்டும்.
நாம் பிறரிடம் எடுத்துச் சொல்லும்போது புரியும்படி பேச வேண்டும்; பிறரும் அவ்வாறே நம்மிடம் பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் கூறுவது தெளிவாக இல்லாமல் இருக்கலாம்; அதனை விளங்கிக்கொள்வது நம் கடமையாகும். எப்பொழுதும் நாம் எளிய சொற்களைக் கொண்டு சுருக்கமாகக் கூறி எதனையும் விளக்க முயல வேண்டும்.
நாம் நினைப்பதே சரி என்று நம் விருப்பப்படி நடந்து கொள்வது அறிவு அற்ற செயலாகும். உலகம் எது தக்கது என்று நினைக்கிறதோ அதனை அறிந்து தெளிந்து அதன்படி நடந்துகொள்வதுதான் அறிவுடைமைக்கு அறிகுறியாகும். அறிவுடையவர்கள் எதிர்காலத்தில் வரப்போகும் நன்மை தீமைகளை அறிந்துகொண்டு அதற்கு ஏற்பத் தம்மைத் தகுதி ஆக்கிக்கொள்வர்; சுற்றுப்புறத்தையும் திருத்திக்கொள்வர்; அறிவற்றவர்கள் வருவதை அறிந்து தீமைகளைக் குறைக்கத் திறம் இல்லாதவர்களாக விளங்குவர்.
அஞ்சத்தக்கனவற்றுக்கு அஞ்சித்தான் ஆகவேண்டும்; “எது வந்தாலும் கவலைப்படமாட்டேன்” என்று மிகைபடப் பேசுவது கவைக்கு உதவாது. வருமுன் காப்பவனே அறிவாளி. வந்த பின் சிந்திப்பவன் ஏமாளி. அறிவுடையவன் முன்கூட்டிச் சிந்தித்து அதிர்ச்சிகளைத் தாங்க வழிவகுத்துக் கொள்வான். மற்றவர்கள் வழிவகை தெரியாமல் இருளில் ஆழ்வார்கள்.
அறிவுடையவர் பொருள் இலராயினும் அவர்கள், கலங்காமல் வாழ்வர்; வழிவகை தெரிந்து வாழ அவர்களால் இயலும். அறிவற்றவர்கள் செல்வம் மிக்கு உடையவராயினும் அதனைச் சீராக வைத்துக்கொண்டு வாழமாட்டார்கள்.