திருக்குறள் செய்திகள்/44
அறிவு அழிவினைத் தடுக்கும் கருவி என்றார். நாம் அழிவதற்குக் காரணமாக இருப்பவை நம்மிடம் நிகழத்தக்க குறைபாடுகளே. அக் குற்றங்களில் குறிப்பிடத் தக்கவை செருக்கு, சினம், காமம் என்று கூறுவர். இவை மூன்றும் நீங்கியவர் பெருமை பெறுவர்.
அரசர்கள் முக்கியமாகத் தவிர்க்க வேண்டியவை ஈயாத உலோபத்தனமும், பொய்யான மான உணர்வும், தேவை இல்லாத மகிழ்ச்சியும் என்று கூறலாம். மகிழ்வு கொள்வது அளவாக இருக்கவேண்டும். மகிழ்ச்சியில் கடமைகளை மறக்க வாய்ப்பு நேர்கிறது.
பழிக்கு நாணுபவர் தினை அளவு குற்றம் நேரும் என்றாலும் அதனைப் பனையளவாகக் கொண்டு தவிர்ப்பர்.
குற்றம் வாராமல் காத்துக்கொள்க; குற்றமே அழிவைத் தரும் பகையாகும். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன் வைத்த வைக்கோல் போலக் கெடும்.
முதலில் தன் குற்றத்தை ஆராய்ந்து நீக்குக; பின் பிறர் குற்றம் காண்க. அரசன் இவ்வாறு தன்னை முதலில் தூயனாக வைத்துக்கொள்வது அவசியமாகும்; அவனுக்கு எந்தத் தீமையும் வாராது.
செலவு செய்ய வேண்டியது அவசியம் என்றால் அதனை மிச்சப்படுத்துவது அறிவீனம். அத்தகையவன் செல்வம் அழிந்து நீங்கிவிடும்; அதன் அழிவை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. பொருள் தாராவிட்டால் யாரும் அவனுக்கு உதவமாட்டார்கள்.
எக்காலத்திலும் தன்னைத் தான் புகழ்ந்து பேசுவதைத் தவிர்க்கவும்; நமக்கு நன்மை தாராத செயல்களை எப்பொழுதும் செய்யக்கூடாது. சில இன்பங்களைத் துய்ப்பதிலிருந்து தப்பமுடியாது என்றால், அதனை ரகசியமாக அனுபவித்துக் கொள்வது அறிவுடைமையாகும்; விளம்பரப்படுத்திக் கொள்ளக் கூடாது. விளம்பரம் விநாசத்தை உண்டுபண்ணும்; தம் குறைபாடுகளைப் பகைவர் அறியாதபடி நடந்துகொள்வது அழிவு வாராமல் காக்கும்.
உனக்கு உள்ள குறைபாடுகளைத் தற்பெருமைக்காகக் கூடப் பறைசாற்றாதே. எதனையும் வெளிப்படையாகச் சொல்பவன் ஏமாளி; மற்றவர் சிரிப்பதற்கு இடம் தருபவன் கோமாளி; குற்றங்களை மறைத்து வெளிப்படுத்தாதவனே அறிவாளி.