திருக்குறள் செய்திகள்/45
அறன் அறிந்தவர், முதிர்ந்த அறிவு உடையவர் இவர்களையே பெரியவர்கள் என்று கூறுவார்கள். அவர்கள் நட்பு மிகவும் அவசியம்; அவர்கள் எவ்வாறு நமக்குப் பயன்படுவார்கள் என்பதை ஆராய்ந்து பின் அவர்களைத் தழுவிக் கொள்க; அவர்களோடு உறவு கொள்க.
துன்பங்கள் இரண்டு வகைப்படும். நாம் தற்போது படும் அவதிகள்; இனி வரக்கூடிய கெடுதல்கள். இப்பொழுதைய துன்பங்களை நீக்க வல்லவரும், வரப்போகும் துன்பங்களை முன்கூட்டிப் போக்கத் துணையாக அமைபவரும் இத்தகைய பெரியார்களே! இப் பெரியோர்களைப் போற்றி அவர்கள் உதவிகளைப் பெறுக.
அரியவற்றுள் அரிது ஒன்று இருக்கிறது என்றால், பெரியவர்களைப் போற்றி அவர்களை உறவு ஆக்கிக் கொள்ளுதல் எனலாம்; இஃது ஒர் அரிய கலை ஆகும்.
நம்மைவிட எல்லாவகையிலும் பெருமை உடையவர்களை நம் துணைவராகக் கொள்வது வலிமைகளுள் சிறந்தது ஆகும். அஃது ஆற்றலையும் வலிமையையும் தரும்; அஃது ஒரு பெரிய வாய்ப்பு ஆகும்.
எது நல்லது? எது கெட்டது? எது செய்யத் தக்கது? எது செய்யத் தகாதது? என்று காரண காரியங்களைக் கொண்டு ஆராய்ந்து அறிவிப்பவர் நமக்கு ஒளி தரும் கண்கள் போன்றவர்; அவர்களுள் யார் தக்கவர் என்பதை அறிந்து அவர்களைத் துணையாகக் கொள்க.
தக்க துணைகள் ஒருவருக்கு வாய்த்தால் அவர்கள் எதனையும் எளிதில் சாதிக்க முடியும்; வெற்றி காண்பர்.
இடித்து அறிவுறுத்தும் துணைவர்களை ஆள்பவர்களை யாரும் கெடுக்க முடியாது; இப் பெரியவர்கள் அஞ்சாமல் தாம் கருதியதை அவர்களுக்கு அறிவுறுத்துவர்.
இடித்துச் சொல்லித் திருத்தக்கூடிய அறிஞர்களைத் துணைவராகப் பெறாவிட்டால் அரசன் தன்னைக் கெடுப்பவர் இல்லாவிட்டாலும் தானே கெட்டு அழிவான்.
முதற்பணம் போடாமல் இலாபமே இல்லை; அதனைப் போலத் தக்க சார்பு இல்லாதார்க்கு நிலைபேறு இல்லாமல் போய்விடும்.
பலபேர் பகை ஏற்படலாம்; அதனைவிடத் தீமை தருவது நல்லார்தம் தொடர்பைக் கைவிடுவது, பத்து மடங்கு தீயதும் ஆகும். இவர்கள் துணை தற்காப்பைத் தருவது ஆகும். இவர்கள் துணை நமக்கு இல்லை என்று தெரிந்தால் எதிரிகள் எளிதில் நம்மை அழித்துவிடுவர்.