திருக்குறள் செய்திகள்/46
பெருமைக்கு உரிய நல்லோர்கள் சிந்தித்துச் செயல்படுவர்; அவசரப்பட்டுக் கண்டவரோடு சிநேகம் கொள்ளமாட்டார்கள்; சிறியவர்கள் முன்பின் யோசிக்காமல் கண்டவர்களோடு சகவாசம் கொள்வர்.
தண்ணிருக்குத் தன் இயல்பு உண்டு; எனினும் அது சாரும் நிலைக்கு ஏற்ப நிறம் மாறும்; தன்மையும் கெடும்; மாந்தரும் இயல்பாக நல்லர்களாக இருக்கலாம் என்றாலும் சேருவாரோடு சேர்ந்து சீர் அழிதலும் உண்டு.
ஒரு பழமொழி இருக்கிறது. “நீ உன் நண்பனைச் சொல்லுக நீ யார் என்பதைத் தெரிவிக்கிறேன்” என்பது அந்தப் பழமொழி.
நல்லவனா கெட்டவனா என்பது அவர் நண்பர்களைக் கொண்டு கூறிவிட முடியும். தீயவர்களோடு சேர்ந்தால் ஆக்கம் கெடுத்துச் குட்டிச்சுவர் ஆக்கிவிடுவர்.
அப்பாவும் அம்மாவும் நல்லவர்களாக வாழ்ந்தால் அவர்கள் பிள்ளைகளும் ஒழுங்காக வாழ்வார்கள்; சந்ததியாரும் நல்லவர்களாக வாழ்வர்.
நண்பர்கள் சகாயம் மிகவும் அவசியம்; அவர்கள் எதனையும் சாதித்துத் தருவார்கள்; தக்கவர்களைத் தேடிக் கொள்க.
மனநலம் உயிரோடு தொடர்பு உடையது; செயற்பாடு அவன் சார்பை ஒட்டியது; இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் நண்பர்களே காரணம் ஆகி நிற்பர்.
இப் பிறவிக்கு மட்டும் அன்று; தொடரும் பிறவிகளிலும் மனநலமும் இனநலமும் தூயதாக இருப்பது நல்லது.
நல்லவர்களோடு சேர்க; அஃது உனக்கு எல்லா நன்மை களையும் தரும்; தீயவர்களைவிட்டு விலகிவிடு; அவர்கள் உன்னைச் சிக்கலில் மாட்டிவிட்டு அவர்கள் தப்பித்துக் கொள்வர்; நீ மீளவே முடியாது.