திருக்குறள் செய்திகள்/68
முதலில் நீ செய்யும் தொழிலைப்பற்றி நன்கு ஆராய்ந்து முடிவு செய்க, தீர்மானித்தபின் செயற் படுத்துக; காலதாமதம் செய்யவேண்டா.
அவசரப்படக் கூடாது என்று பட்டால் நிதானிக்கவும்: அவசரமாகச் செய்யவேண்டியதனை உடனே செய்து முடிக்கவும்; எங்கே நம் ஆதிக்கம் செல்லுமோ அங்குத் துணிந்து முன்னேறுக; அடங்கி இருந்தால் நல்லது என்று பட்டால் அங்கு அடங்கி இருக்கவும்.
எடுத்த தொழிலை எப்படியும் முடிக்க வழிவகைகளைத் தேடிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு தொழிலைத் தொடங்கிவிட்டு முடிக்காமல் இருக்காதே; அதே போலப் பகை என்று வந்த பிறகு அதனை முடிக்கும் வரை ஒய்வு கொள்ளக் கூடாது; எடுக்கும் எந்தத் தொழிலும் முடித்தே தீரவேண்டும்.
எடுத்துக்கொண்ட பொருள், கருவி, காலம், வினை, இடம் ஐந்தும் சாதகமாக இருக்கின்றனவா என்று எண்ணிப் பார்த்துச் செயல்படுக.
ஒரு காரியத்தின் முடிவு என்ன? வரக்கூடிய இடையூறுகள் யாவை? இவற்றை எல்லாம் வென்று நாம் சாதிப்பதன் பயன் யாது? இவை தீரக் கணக்கிட்டு ஒரு செயலில் இறங்குக.
செய்யும் தொழில், செய்பவன், செய்யும் முறை இம் மூன்றையும் பொருத்திப் பார்த்து நன்மை விளையும் என்றால் செயலில் இறங்குக.
ஒரு செயல் செய்யும்போதே அதனை அடுத்த வினைக்குப் பயன்படுத்திக் கொள்க; ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குத் தொடர்புபடுத்திக் கொள்க. இது கட்டுக்கு அகப்பட்டுப் பழகிய யானையைக் காட்டி மற்றொரு மதம் பிடித்த யானையைப் பிடிப்பது போன்றது.
நம் நண்பர்களுக்கு நல்லது செய்து அவர்களை மேலும் வசப்படுத்த நினைப்பதைவிட, பகைவரை ஏதாவது தந்து நம் பக்கம் சேர்த்துக்கொள்வது மிக்க பயனைத் தருவது ஆகும்.
மற்றும் தம் நாட்டுக் குடிமக்கள் பகைவர்க்குத் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டால், வீண் பெருமை பாராட்டிக்கொண்டு எதிர்த்துக் கொண்டிருந்தால் பயன் இல்லை; குடிமக்கள் அழியத் தேவை இல்லை. நல்லது கருதிச் சமாதானமாகப் போவதுதான் புத்திசாலித் தனமாகும். தோல்வியைத் துணிந்து ஏற்க வேண்டும்; அதற்காக வெட்கப்படத் தேவை இல்லை.