திருக்குறள் செய்திகள்/69

விக்கிமூலம் இலிருந்து

69. தூது

அந்நிய நாட்டுக்குத் தூதுவராக அனுப்பப்படுபவர்கள் எத்தகையவர்களாக இருக்க வேண்டும்?

நாட்டுப் பற்று, நற்குடிப் பிறப்பு, அரசன் விரும்பும் நற்பண்புகள் ஆகிய இவை இருக்க வேண்டும்.

இவையேயன்றி அவனிடம் மற்றும் இந்த மூன்று சிறப்புகள் உள்ளனவா என்பதை ஆராய்க.

அரசனிடம் அன்பு, அவனுக்கு எது நல்லது என்று அறியும் அறிவு, பேச்சுத் திறமை இம் மூன்றும் சிறப்பாக இருத்தல் வேண்டும். நூற் புலமையும் அமைந்திருக்க வேண்டும்.

இயற்கையான அறிவு, காண்பவர் மதிக்கும் தோற்றம், விஷயம் அறிந்த ஞானம் இம் மூன்றும் மேலும் அவனிடம் எதிர்பார்க்கப்படுகின்றன.

பேசும்போது வகுப்பறை என்று விரிவுரை நிகழ்த்தக் கூடாது; தொகுத்துக் கூற வேண்டும். வெறுக்கத்தக்க செய்திகளைத் தவிர்க்க வேண்டும்; மாற்றரசனை மகிழ வைக்கும்படி சிரிக்க வைத்துப் பேசித் தன் அரசனுக்குச் சீர்மைகளைத் தேடித் தரவேண்டும்.

நூல்கள் பல கற்று அவற்றைச் சான்றாக எடுத்துக் கூறும் புத்திசாதுரியம் தேவைப்படும்; அரச அவையைக் கண்டு அஞ்சக் கூடாது; மாற்று அரசன் என்ன செய்வானோ என்ற அச்சம் இருக்கக் கூடாது.

அங்கே சில விதிமுறைகள் இருக்கலாம்; எப்படிப் பேசுவது? யாரிடம் சொல்லி அனுப்புவது? எப்பொழுது பேசுவது? என்பன போன்ற விதிமுறைகள் இருக்கலாம். அவற்றை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்; கண்டபடி கண்ட நேரத்தில் பேசக்கூடாது; அங்கு வந்து இருப்பவர்கள் யார் யார்? அந்தச் சூழ்நிலையில் இதைப் பேசலாமா என்பது எல்லாம் ஆராய்ந்து பேச வேண்டும். அவ் வரசன் மனநிலை எத்தகையது என்பதையும் அறிந்து அவன் ஏற்றுக்கொள்ளத்தக்க சூழ்நிலையில் பேச வேண்டும். காலம், இடம் அறிந்து பேசும் திறமை வேண்டும்; எதனைப் பேச வேண்டுமோ அதனை முன் கூட்டி எண்ணிப் பார்த்தபின்னரே பேசவேண்டும்.

சொந்த நலன் எதுவும் தனக்கு இருக்கக் கூடாது; மாற்றரசன் தன்னை விலைக்கு வாங்கத் தான் இடம் தரக்கூடாது; இதனைச் செயல்துய்மை என்று கூறலாம். தன் கருத்துக்கு அரசனின் அமைச்சர் துணையாகக் கூடிய அளவில் அவர்களையும் தழுவிக்கொண்டு பேசுவது தேவை; அதே சமயத்தில் பகைவர் மருட்டலுக்கு அஞ்சாமல் துணிந்து எடுத்துக் கூறவேண்டும்.

வேற்று நாட்டு அரசனிடம் பேசும்போது நம்பும் வகையில் செய்திகளில் நம்பிக்கை தோன்ற எடுத்து உரைக்க வேண்டும். அதில் உண்மை இருக்க வேண்டும்.

பேச்சில் நெகிழ்வும், வழவழப்பும், நெளிந்து பிறழும் போக்கும் இருக்கக்கூடாது; எதனையும் தெளிவாக உரைக்க வேண்டும்.

தனக்கு ஏதாவது கெடுதி உண்டாகிவிடுமோ என்று அஞ்சி வாய் தவறியும் தன் நாட்டுக்கும், அரசனுக்கும் துரோகம் உண்டாகும் நிலையில் பாதகமாகப் பேசிவிடக் கூடாது; தன் அரசனைத் தாழ்த்திப் பேசக் கூடாது. ஏந்திய கொடி அதனைத் தாழ்த்தத் தான் காரணமாக இருக்கக் கூடாது.

தன் அரசனுக்கு உறுதி பயப்பனவற்றைத் துணிந்து பேசவேண்டும். அதனால் தன் உயிருக்கு இறுதி ஏற்பட்டாலும் அதற்குக் கவலைப்படக் கூடாது. அஞ்சாமை, துணிவு, வீரம், சொல்திறம், சூழ்நிலைக் கேற்பப் பேசும் நிலை, கல்விநலம், கூர்த்த அறிவு அனைத்தும் தூதுவனிடம் இருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/69&oldid=1106434" இலிருந்து மீள்விக்கப்பட்டது