உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் செய்திகள்/75

விக்கிமூலம் இலிருந்து

75. அரண்
(பாதுகாப்பு)

அரண் இல்லாத நாடு பிறருக்குச் சரண் அடைய வேண்டியதுதான்; போர்மேற் செல்ல வேண்டுமானாலும் அரண் தேவை; அதனைவிடத் தற்காப்புக்கும் அரண் அடிப்படையாகும்.

நீர்நிறைந்த அகழியும், அதனை அடுத்துப் பரந்த வெற்று நிலமும், மலைகளும், செறிவு மிக்க காடுகளும் உடையதே அரண் உடையது என்று கூறப்படும்.

பிறர் ஏற முடியாத அளவு உயரமும், கடக்க முடியாத படி திண்மையும், அணுகுவதற்கு முடியாத அருமையும் பெற்று இருக்கும் மதில்களைக் கொண்டு விளங்க வேண்டும். அதுவே அரண் எனப்படும்.

காவல் இடம் சிறியதாக இருக்க வேண்டும்; அப்பொழுது பிறர் புக முடியாதபடி தடுக்க இயலும்; வாழும் உள்ளிடம் பெரிதாக இருக்க வேண்டும்; பகைவர்கள் ஊக்கத்தை அழிப்பதாக இருக்கும் மதில்களைப் பெற்றிருக்க வேண்டும்.

பகைவர் எளிதில் கொள்ள முடியாததாக நாடு இருக்க வேண்டும்; தாக்குப் பிடிக்கும் அளவுக்கு உணவுப் பொருளின் சேமிப்பு இருக்க வேண்டும்; உள்ளிருக்கும் வீரர்கள் வரப் போக வழிகள் தக்க வகையில் பெற்றிருக்க வேண்டும்.

எல்லாப் பொருளும் உடையதாக இருக்க வேண்டும். போர்க் காலங்களில் வீரர்களுக்கு உடன் இருந்து உதவ ஆள்களும் மிக்க அளவில் இருக்க வேண்டும்.

நாட்டு அமைச்சர்களும், காட்டிக் கொடுக்கும் கயவர்களும் எதிரிக்கு உளவுகள் சொல்லி அழிவுக்கு வழி தேடினாலும் தாக்குப் பிடிக்கக்கூடிய போக்குகளையும், தற்காப்பு இடங்களையும் உடையதாக இருக்க வேண்டும்; எதிரிகள் எளிதில் கைப்பற்றக் கூடாததாக இருக்க வேண்டும்.

பெரிய படை வந்து முற்றுகையிட்டாலும் உள்ளிருந்து சிறு படையைக்கொண்டே எதிர்த்துப் போரிட்டுத் தாக்கும் தகுதியை அரண் உண்டாக்கித் தரவேண்டும்.

வீரர்கள் தக்க இடத்தில் மறைந்திருந்து தாக்கும் பொறிவகைகளைப் பெற்று வீறுகொண்டு விளங்குவது சிறந்த அரண் ஆகும்.

எத்தகைய அமைப்புகள் நிரம்ப இருந்தாலும் போர் முனையில் மாட்சி உடைய வீரர்கள் இல்லை என்றால் அரண்கள் பயன்படா. வீரம் மிக்க போர்வீரர்கள் நாட்டின் அரண் எனவே மதிக்கப்படுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/75&oldid=1106457" இலிருந்து மீள்விக்கப்பட்டது